நந்தமிழர்கள் வாதுபோர், சூதுபோர் (மற்போர்), மோதுபோர் என்ற போர் முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர்.

agananooru“வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தை

வட்கார்மேல் செல்வது வஞ்சி

உட்காந்தெதிரூன்றல் காஞ்சி

எயில் காத்தல் நொச்சி அது வளைத்தலாகும் உழிஞை

அதிரப் பொருவது தும்பை – போரில்

மிக்காரைச் செரு வென்றது வாகை” என்றதோர் பழம்பாடல் போரின் திணைகளை நமக்கு நினைவூட்டும். புலவர் ஐயனாரி தனார் “புறப்பொருள் வெண்பாமாலை என்றதோர் அரிய நூலைத் தமிழ் உலகுக்கு ஆக்கித் தந்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, கோழிவென்றி (கோழிகளை மோதவிடும் போர்) தகர் வென்றி (கிடாய்களை மோதவிடுதல்), ஆனைவென்றி (யானைப்போர்), பூழ்வென்றி (புலவர்களின் சொற்போர்), சீவல்வென்றி (கவுதாரிகளைப் போரிடச் செய்வது), கிளிவென்றி (கிளிகளைப் போரிடச் செய்வது) பூவை வென்றி(கிளியை நாகணவாய்ப் பறவையோடு போரிடச் செய்வது), குதிரைவென்றி (குதிரைப்போர்), தேர்வென்றி (தேரில் அமர்ந்து போர்செய்வது), யாழ்வென்றி (யாழ் வாசித்தலில் போர்), சூதுவென்றி (சூதாடுபோர்), பாடல் வென்றி, இசைவென்றி (கூத்தாடுதல், சதுராடுதல் போர்) பாடல் வென்றி (இசைபாடுதலில் போர்), பிடிவென்றி (அபிநயப்போர்), “பாணியும் தூக்கும் நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி” என்பது புறப்பொருள் வெண்பா மாலைப் பாடல்.

இவ்வாறு, போர்கள் பல இருக்க “சேற்றிலே நடந்த போர்” பற்றிய குறிப்பைத் தெளிவுறத் தருகின்றது அகநானூறு 366-ம் பாடல்.

“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய

 நீர்சூழ் வியன்களம் பொலியப் போர் பழித்து

 கள்ளார் களமர் பகடுதளை மாற்றிக்

கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்

காயற்சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்

இருநீர்ப்பரப்பின் பனித்துறைப் பரதவர்

தீம்பொழி வெள்ளுப்பு சிதைதலின் சினைஇக்

கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி

இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு

நரைமூதாளர் கைபிணி விடுத்து

நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்      

பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன

நலம்பெறு பணைத் தோள் நன்னுதல் அரிவையொடு

மணங்கமழ் தண் பொழில் அல்கி நெருநை

நீதற் பிழைத்தமை அறிந்து

கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னாளே !”

                                                                                          (அகம்:366)

இப்பாடலின் விளக்கமானது,

தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரங்கள் சூழ்ந்தவனப்புடைய ஊர்(நீர் சூழ் வியன்களம்) இன்றைய நாளில் இவ்வூர் நீர்வளங்குளம். இங்குள்ள உழவர்கள் போரினைப் பிரித்து கடாவிட்டுப்பின் கள்ளருந்தி, கடாய்ப் பிணையலை அவிழ்த்து விட்டோட்டி கடுங்காற்று வீசுகிறபோது நெல்லைத் தூற்றினர். நெற்பொலியினின்று நீங்கிய சண்டு, கருக்காய் தூசி, துரும்புகள் உப்பங்களிகளிலே சென்று உப்புப் பாத்திகளில் படிந்தன. அவ்வாறு வெள்ளுப்புச் சிதைவது கண்ட இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்கள், உழவர்களோடு சினங்கொண்டு, சேற்றை அள்ளி எறிந்து ஒருவருக்கொருவர் கைகளைப் பிணித்துச் சேற்றிலே கிடந்து புரண்டு போர் செய்தார்கள். அது கண்ட, பொலம்பூண் எவ்வியின் நீழலூர் (நிலையூர்) நரை மூதாளர் சென்று சேற்றுப் போர் புரிவோர்தம் கைகளை விடுத்து, அவர்களது போரைக் கைவிடச் செய்துச் சமாதானம் செய்துப் பின்னர் அவர்கள் உண்டு மகிழ்ந்து சண்டையை மறக்குமாறு இனிய கள்ளை உண்ணக் கொடுத்தனர்.

தலைவனே! இவ்வாறு நடுநிலையுள்ள ஊரில் தலைவியைக் கூடாது விடுத்து பரத்தமை கொண்டது. அழுத கண்களும் ஆராத் துயரும் உடைய தலைவி நினக்கு எவ்வாறு இசைவாள்? என்பதாம்.

மலையின் மீது நின்று யானைப்போர் கண்டதாகத் திருவள்ளுவர் திருக்குறளிலே பதிவு செய்கிறார்.

குடவாயிற் கீரத்தனார் எனும் புலவர் சேற்றுப் போரைக் கண்டதாக உள்ள பதிவை அகநானூறு -366-இல் காண்கிறோம்.

மதவாதிகள் நடத்திய அனல்வாதப்போர், புனல்வாதப்போர், இன்னும் உலகப்போர், அணுஆயுதப்போர், மொழிப்போர் எந்த அக்கப் போரும் வேண்டாம் நமக்கு! அஃக ! அஃகப்போர் !

இந்நாளில் (அஃகப்போர் = போர்கெட, போர்நீங்க) சாந்தியும் சமாதானமும் காண்போம்!

- பனையவயல் முனைவர் கா.காளிதாஸ்