தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்வது என்பது அன்றாட செய்தியாகி வ‌ருகின்றது. பல மைல்தூரம் நடந்தே சென்று, குடிப்பதற்குத் தகுதியற்ற, குளம் குட்டைகளில் தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரை எடுத்து வந்து அதைக் குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். குடிநீர்ப் பிரச்சினை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது. வீட்டில் குழந்தைகள், கணவன் என அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்வது மட்டுமே பெண்களின் பணியாக பணிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக தண்ணீர் பிடிக்கும் பணி, பெண்கள் மீதே சுமத்தப்பட்டு வருகின்றது.

girija and edappadiகோடை காலங்களில் பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தரும் பிரச்சினை என்றால், அது தண்ணீர்ப் பிரச்சினைதான். கடும் வெய்யிலில் கால்கடுக்க பல மணி நேரம் நடந்து சென்று, காத்திருந்து, பிடித்த தண்ணீரை வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொடுமை மட்டும் மாறுவதே கிடையாது.

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த உருப்படியான திட்டமும் இந்த அரசிடம் இல்லை. குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று கமிஷன் அடிப்பதில் இருக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பகுதி கூட குடிநீர்ப் பிரச்சினையில் இருந்து பெண்களை விடுவிப்பதில் இருப்பதில்லை. ஆனால் இந்த அரசின் அக்கறை எல்லாம் எப்படி தன்னை கலாச்சாரக் காவலராக காட்டிக் கொள்வது என்பதில்தான் இருக்கின்றது. நாட்டில் நடக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் காரணம் பெண்கள் தங்கள் மார்புகளை துப்பட்டாவால் மறைக்காததே என்று தற்போது கண்டறிந்து இருக்கின்றது இந்த அரசு. இனி அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள அரசாணையில், "சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும். ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக் கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும். அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலை தவிர மற்ற உடைகளை அணிந்து வரும்போது கண்டிப்பாக துப்பட்டா அணிவது கட்டாயம் என்று கூறும் கிரிஜா மாமி அதற்கான காரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அவர் சொல்லவில்லை என்றாலும், சேலை கட்டி வரும் பெண்களை ஆபாசமாகப் பார்க்க மாட்டார்கள் என்றும், மற்ற சுடிதார், சல்வார் கமிஸ் போன்றவற்றை அணிந்து வந்தால் ஆண்கள் ஆபாசமாகப் பார்ப்பார்கள் என்றும் அதற்காகவே துப்பட்டா போடச் சொல்வதாகவுமே தலைமைச் செயலாளரின் இந்த அறிவிப்பை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்று பெரும்பாலானவர்களுக்கு குழப்பம் வரலாம். தலைமைச் செயலாள‌ராக கிரிஜா அவர்கள் இருந்தாலும், அவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும் அல்லவா? அந்த அரசியல் சார்புதான் அவரை இது போன்ற கலாச்சாரக் காவலர் வேடம் எடுக்க வைப்பது. “வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் படுத்துதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பன நச்சுக் கிருமி சொல்லிவிட்டு அரசுப் பாதுகாப்புடன் சுற்றி வந்தது நமக்குத் தெரியும். அந்த வேலைக்குப் போகும் பெண்களின் வரிசையில் கிரிஜா போன்றவர்க‌ளும் இருந்தாலும், கிரிஜா ஏற்றுக்கொண்ட அரசியல் அதை அமோதிக்கும் அரசியலாக இருந்ததாலும், கருத்து சொன்ன நச்சுக் கிருமி தன்னுடைய சொந்தமாக இருந்ததாலும் அந்தக்க் கிருமியை கைதில் இருந்து காப்பாற்றினார் கிரிஜா.

அப்படிப்பட்டவர்தான் இன்று சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும் என்றும், சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம் என்றும் உத்தரவு போட்டு இருக்கின்றார். இந்த உத்தரவு நாளை அரசு அலுவலகத்தைத் தாண்டி பொதுச் சமூகத்துக்கும் விரிவடைய எல்லாவித வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக மட்டுமல்லாமல், அரசு இயந்திரமும் முற்றிலும் காவிமயப்படுத்தப் பட்டிருக்கும்போது இது போன்ற அறிவிப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் மோசமான பிற்போக்கான பார்ப்பனிய திணிப்பு எல்லாம் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சாமானிய உழைக்கும் பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க துப்பற்ற அரசு, துப்பட்டாவைப் போடுவதால் எதைத் தீர்க்க முயற்சிக்கின்றது என்று தெரியவில்லை. ஆணாதிக்க வக்கிரம் பிடித்த பொறுக்கி ஆண்கள் துப்பட்டா போட்டு வந்தால் மட்டும் யோக்கியமாகப் பார்ப்பார்கள் என்று சிந்திப்பது ஆணாதிக்க பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்களின் சிந்தனைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை.

பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலையில், அதை ஒரு அரசு என்ற முறையில் தடுப்பதற்கான எந்த முன்னெடுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஆண்கள் மத்தியில் செய்யத் துப்பில்லாமல், பாதிப்புக்குள்ளாகும் பெண்களிடமே குற்றத்தைக் கண்டுபிடிப்பது கீழ்த்தரமான ஆணாதிக்கப் பிற்போக்கு சிந்தனையாகும். பெண்களின் உடல் மீது ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலையே பொறுப்பாக்குவது, தொடர்ச்சியாக பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்கள் செய்யும் குற்றத்திற்கு ஒப்புதல் கொடுத்தது போல ஆகிவிடும். இது எல்லாம் கிரிஜாக்களுக்குத் தெரியாதது அல்ல‌. ஆனால் கிரிஜாக்களின் சித்தாந்தம் “வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் வேறு வழிகளில்தான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்பதை ஆதரிக்கும் சித்தாந்தமாகும்.

கிரிஜா அரசுப் பதவியில் இருப்பதால் அதை வெளிப்படையாக சொல்லாமல் மாற்று வடிவத்தில் சொல்கின்றார். வேலைக்குப் போகும் பெண்கள் துப்பட்டா அணிந்து செல்லாததால் அங்கு பணிபுரியும் ஆண்கள் மனதளவில் சஞ்சலத்திற்கு ஆளாகின்றார்கள், அவர்கள் வேலை செய்யும் நேரத்தில் கோப்புகளைப் பார்ப்பதைவிட தன்னோடு பணிபுரியும் பெண்களின் மார்புகளைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள், இதனால் அரசுப் பணிகள் தேங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டு விடுகின்றது, எனவே உத்தம ஆண்களின் மனங்களைக் கிளர்ச்சி அடையச் செய்யாமல் இருக்க, தங்களது மார்புகளுக்கு திரையிடாமல் அதை வெளிக்காட்டும் நடத்தை குறைந்த பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா போட்டு வரவேண்டும் என்பதுதான் கிரிஜா பிறப்பித்துள்ள அரசாணையின் சாரமான செய்தியாகும். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் எஸ்.வி.சேகரும், கிரிஜா மாமியும் ஒரு புள்ளியில் ஒன்றுபடுவதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நமக்கு என்ன கோபம் என்றால் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் துப்பட்டா அணிந்து வந்து தன்னுடைய அக்மார்க் பத்தினி தனத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆணையிட்ட கிரிஜா, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பணிபுரியும், குறிப்பாக பூசை செய்யும் பூசாரிகள் கண்டிப்பாக சட்டை அணிய வேண்டும் என்று அரசாணை வெளியிடத் தயாரா என்பதுதான். கோயிலுக்கு வரும் பெண்கள் முன் வெட்க மானமே இல்லாமல் முண்டக் கட்டையாக தொந்தியையும் பூணூலையும் காட்டித் திரியும் இந்தக் கும்பலின் கொட்டத்தை அடக்குவதற்கும் ஓர் அரசாணையை கிரிஜா வெளியிட்டால் நன்றாகத்தானே இருக்கும்!

குடும்ப அமைப்பிற்குள்ளும், பணி இடங்களிலும், பொது சமூகத்திற்குள்ளும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலில் இருந்தும், பாலியல் வன்முறைகளில் இருந்தும், பாலின ஏற்றத்தாழ்வுகளில் இருந்தும் விடுவிக்கவும், பண்பாட்டு ரீதியாக ஆண்கள் மத்தியில் கட்டமைக்கப்பட வேண்டிய சமத்துவ உணர்வுகளை வளர்க்கவும் முற்போக்குவாதிகள் களமாடிக் கொண்டு இருக்கும்போது, பிற்போக்குவாதிகள் பெண்களின் பிரச்சினைகளுக்கு முதன்மைக் காரணமாக துப்பட்டாவைக் கண்டுபிடிக்கின்றார்கள். பெண்களின் ஆடைக‌ளுக்குள் கலாச்சாரத்தை தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

- செ.கார்கி