தோப்பில் முகமது மீரான், இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டனம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் என்ற ஆறு நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் இவர் படைத்துள்ளார். இவை தவிர, மலையாளத் திலிருந்து ஐந்து படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவரது சாய்வு நாற்காலி என்ற நாவலுக்கு 1977 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

thoppil mohamed meeranதமிழ் எழுத்தாளர்களில் தோப்பிலார் ஒரு சுயம்புவான படைப்பாளி. புனைகதை உருவாக்கத்தில் இவர் முன்மாதிரிகள் அற்ற புதியதோர் பாணியை உருவாக்கினார். வட்டார வழக்கு நாவல்கள் என்ற அளவுகோலில் இவருடைய நாவல்கள் அடங்குவதில்லை. மலையாளம், அரபி, நாகர்கோவில் வட்டார வழக்கு, இசுலாமியர்களின் பேச்சு வழக்கு மற்றும் இசுலாமிய சமயத்தின் தொன்மக் குறியீடுகள் சார்ந்த மொழி இவற்றின் கலவையான மொழிநடையில் முகமது மீரான் தமது புனைகதைகளை அதிலும் குறிப்பாக நாவல்களை எழுதினார். பெரும்பாலான படைப்புகள் இசுலாமியக் கதா பாத்திரங்களோடும் அவர்களின் புழங்கு வெளியோடும் இயைந்தே உருவாக்கப்பட்டன.

தமிழக இசுலாமியர்களின் மதவழிப்பட்ட வாழ்வியல் முறைமைகளை தமிழ்ப் புனைகதைகளில் அதன் இயல்பான அம்சங்களோடு பதிவு செய்தவர் தோப்பிலார். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இதுவோர் புதிய – புதுமையான முயற்சி. இசுலாமிய வாழ்வியலைப் பொதுவெளியில் பதிவுசெய்தது மட்டுமின்றி அதனை ஒடுக்கப்படுகிற மக்களின் பக்கம் நின்று பேசியவர் முகமது மீரான். இசுலாமியச் சமூகங்களுக் கிடையே உள்ள உள்முரண்களைத் தமது புனைகதைகளில் எத்தகைய மனத்தடையும் இன்றி இயல்பாகவும் விமர்சன பூர்வமாகவும் அவர் எடுத்து வைத்தார். மத அடிப்படை வாதமும் ஒடுக்கு முறைகளும் இவர் கதைகளின் பேசுபொருளாயின.

தோப்பிலார் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர். அவரது நாவல் மற்றும் சிறுகதைகளின் ஊடுபாவாக நமக்குப் புலப்படுவன அன்பு, அருள், உயிர் இரக்கம், முதலான மாந்தநேயப் பண்புகளே. மனித வாழ்க்கையின் அவலங்களை மிகைப்படுத்தாத சொற்சித்திரங்களாக வாசகர்களின் மனத்திரையில் அழகாக எழுதிகாட்ட வல்லன மீரானின் படைப்புகள். ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற சிறுகதை மாமரம் மற்றும் பறவைகள் மீதான மீரானின் ஈர்ப்புக்கும் மனிதத்தையும் கடந்த அனைத்து உயிரினங்களின் நலம்நாடும் ஜீவகாருண்யத்தையும் நமக்கு வெளிப்படுத்துகின்றது. நடுநிலை என்ற போர்வைக்குள் தோப்பிலார் எப்பொழுதும் அடைபட்டதில்லை. மரணித்துப் போன மனிதநேயத்தை மீட்டெடுக்கும் நுண் அரசியலோடுதான் முகமது மீரானின் எழுத்துக்கள் படைக்கப்பட்டன என்பதை வாசகர்கள் மிக எளிதாக அடையாளம் காணமுடியும்.

மனிதநேயத்துக்கு எதிரான வகுப்புவாதமும் சாதிய மத முரண்களும் இந்தியச் சமூகத்தை, குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தம் படைப்புகளின் வழி வெளிச்சம் போட்டுக் காட்டினார் மீரான் அவர்கள். மேல்தட்டு மக்கள் தங்களது மேட்டிமை மனோபாவத்தால் தனித்தனித் தீவுகளாக முடங்கிபோகும் அவலத்தை தோப்பிலாரின் அனந்தசயனம் காலனி என்ற சிறுகதை மிக அழகாக விவரிக்கின்றது. அனந்தசயனம் என்ற காலனியின் பெயரே ஓர் அழகான அங்கதக் குறியீடு.

நவீன உலகின் இயற்கைச் சிதைவு, நகர மயமாக்கம், நுகர்வுக் கலாச்சாரம், போலிப் பகட்டு இவைகளுக்கு எதிரான மனநிலையை இவரின் அத்துணைப் படைப்புகளிலும் நாம் பார்க்க முடியும். தோப்பிலாரின் தங்கவயல் என்ற சிறுகதை ஒன்றே இதற்கு மிகச்சிறந்த சாட்சி. சுயநலமும் பொருளாசையும் குடும்ப உறவுகளைச் சிதைத்து வதைக்கும் கொடுமைகள் பரவலாக மீரானின் கதைகளில் பேசப்படுகின்றன. ஒரு சவ ஊர்தியின் நகர்வலம் என்ற சிறுகதை மரணித்துவிட்ட ஒரு பிணத்தின் புலம்பலாக சிதைவுற்ற குடும்ப உறவுகளின் சுயநலத்தைப் படம் பிடிக்கின்றது.

ஒரு எழுத்தாளனின் வருணனையில் கதை நிகழ்வுகளின் விவரிப்பில் கதாசிரியனின் கண்களும் காட்சியும் முக்கிய இடம் பிடிப்பதென்பது இயல்பானதே. தோப்பிலாரின் புனைகதைகளில் கண்களுக்கு இணையாக மூக்கும் நாக்கும் அதாவது வாசனைகளும் நாக்கின் அறுசுவை அனுபவங்களும் முக்கிய இடம்பெறுவது தனிச்சிறப்பு. இவரின் ஓமவல்லி சிறுகதையில் ஓமவல்லி இலைச்சாறு கலந்து காய்ச்சிய கூந்தல் எண்ணெயின் வாசனையை பாத்திரங்களின் நாசிக்கு மட்டுமல்லாமல் வாசகனின் நாசிக்கும் கடத்தும் அற்புதமான கதைசொல்லியாக தோப்பிலார் திகழ்கிறார்.

தோப்பில் முகமது மீரானின் நாவல், சிறுகதை என்ற இரண்டு புனைகதை வடிவங்களும் தனித்தனியான பருண்மை மற்றும் நுண்மை அம்சங்களோடு படைக்கப் பட்டிருப்பதை மிக எளிதாக நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இரண்டு வடிவங்களும் இசுலாமிய வெளியில் இசுலாமியப் பாத்திரங்களோடு இயங்கினாலும் நாவல்கள் முன்னெடுக்கும் கதைப் பின்னலுக்கும் சிறுகதைகளின் உள்ளடக்கங் களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. நாவல்களின் இறுக்கமான மொழிநடையைக் கட்டறுத்த இயல்பான தமிழ் மொழிநடையை இவரின் சிறுகதைகளில் பார்க்க முடியும். இந்த மொழிநடை வேறுபாட்டிற்கு நிறைய காரணங்கள் உண்டு. (விரிவஞ்சி இங்கே விவரிக்கவில்லை). நாவல்களைப் போலவே சிறுகதைகள் இசுலாமியப் பின்னணியில் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றின் பேசுபொருள்கள் மனித சமூகம் முழுமைக்குமானது. பழமை, பாரம்பரியம், மரபு இவற்றைச் சிதைத்து மாறிவரும் நவீன உலகத்தின் அகப்புற முரண்கள் எல்லாவற்றையும் தோப்பிலாரின் சிறுகதைகள் பேசுகின்றன. நிறைவாக ஒன்று சொல்வேன், தோப்பிலார் தமது நாவல்களை அதன் மையத்தில் இருந்து உள்முகமாகப் படைத்தார் ஆனால் சிறுகதைகளை அதன் புறத்தே நின்று வெளிமுகமாகப் படைத்தார். இரண்டின் சாதக பாதக அம்சங்களும் விரிவாகப் பேசத்தக்கன.

- முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி-8