உலகில் கற்றவர்களுக்கு என்றும் மதிப்பு அதிகம். உலகம் கற்றவர்களை எப்போதும் மதிக்கின்றது. ஆனால் கல்லாத மனிதர்களை உலகம் மதிப்பதில்லை. சரி கற்றவர், கல்லாதவர் என்று ஒருவரை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? அதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? இக்கேள்வி நம் அனைவருடைய உள்ளத்திலும் எழுந்த வண்ணம் உள்ளது.

கிராமப்புறங்களில் ஏதேனும் ஒருவருக்கொருவர் சண்டை ஏற்பட்டாலோ அல்லது யாரேனும் ஒருவர் தவறான செயலைச் செய்து விட்டாலோ அவரைப் பார்த்து, "உனக்கெல்லாம் அறிவிருக்கா? நீ எல்லாம் படிச்சவனா?" என்று கேட்பர். ஏன் இவ்வாறு கேட்கின்றார்கள்? பள்ளி, கல்லூரி இவற்றிற்கெல்லாம் சென்று கடுமையாகப் படித்துப் பட்டம் பெற்றவரைப் பார்த்து இவ்வாறு ஒருவர் கேட்கிறார் என்றால் நமக்கு மேலும் குழப்பம் ஏற்படுகின்றது.

valluvar 229உண்மையில் யார் கற்ற மனிதர்கள்? யார் கல்லா மனிதர்கள்? இவ்வினா நம்மை மென்மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. இராவணன் சிறந்த சிவபக்தன். நான்கு வேதங்களையும் கற்றவன். அவனது வீரத்தைப் பற்றி,

"வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
நாரதர் முனிவர்கேற்ப
நயம்பட உரைத்த நாவும்"

என்று கம்பர் எடுத்துரைக்கின்றார். இப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஏன் வீழ்ந்தான்? தன்னுடைய சாமகீதத்தால் சிவபெருமானையே மயக்கியவன். அப்படிப்பட்டவனை ஏன் அனைவரும் பழிக்கின்றனர்? காரணம் அவனது ஒழுக்கமற்ற செயலே ஆகும்.

சூர்ப்பனகை இராவணனைச் சந்திக்க அவனது அவைக்கு மூக்கு அறுபட்டதுடன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகின்றாள். அப்படி ஓடிவரும் தங்கையைப் பார்த்து, "என்ன நடந்தது?" என்று கேட்கிறான். அதற்குச் சூர்ப்பனகை, "அண்ணா எனது மூக்கை மானிடன் ஒருவன் அரிந்து அவமானப்படுத்திவிட்டான்" என்று கூறி அரற்றுகின்றாள். அதைக் கேட்ட இராவணன் கொதித்து எழவில்லை. பொறுமையாகத் தன் தங்கையைப் பார்த்து, "என் செய்தனை" என்று கேட்கிறான். ஏனெனில் தன் தங்கை ஏதாவது குற்றம் இழைத்திருப்பாள், அதனால்தான் அவளுக்கு இத்தகைய துன்பம் நேரிட்டுள்ளது என்று இராவணன் உணர்ந்தே இவ்வாறு கேட்கிறான்.

தன் தங்கையாக இருந்தாலும் அவளைப் புரிந்து வைத்திருக்கின்றான். இப்படிப்பட்ட இராவணன் தான் ஒழுக்கம் தவறியதால் அவன் கற்றும் கல்லாதவனான். இத்தகைய மனிதர்கள் பலர் இன்றைய சமுதாயத்தில் நிறைந்திருக்கின்றார்கள்.

பல நூல்களைக் கற்றிருந்தாலும் அவர்கள் ஒழுக்கமின்றி இருக்கின்றார்கள். அத்தகையவர்களைத்தான் வள்ளுவர்,

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவில்லா தார்" (குறள் எண், 140)

என்று அடையாளங் காட்டுகின்றார். இதற்கு, "உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான், அவையும் அடங்க உலகத்தோடு ஒட்ட என்றும் கல்விக்குப் பயன் அறிவும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின் அவ்வொழுகுதலைக் கல்லாதார் பல கற்றும் அறிவிலாதார் என்றும் கூறினார்" என்று பரிமேலழகர் உரை (திருக்குறள், பரிமேலழகர் உரை, ப., 62) வகுக்கின்றார்.

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவர்களே ஆவார். கல்வியானது ஒழுக்கத்தைக் கற்றுத் தருதல் வேண்டும். கல்வி கற்றவன் அறநூல்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ்தல் வேண்டும். அவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ்பவனே உண்மையில் கற்றவன் ஆவான். இல்லையெனில் அவன் கற்றிருந்தாலும் கல்லாதவனே ஆவான்.

இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருந்தபோது கும்பகர்ணன் இராவணனுக்கு எவ்வளவோ அறவுரைகளை எடுத்துரைத்து சீதையைச் சிறைவிடுக்குமாறு கூறுகிறான். ஆனால் இராவணன் மறுக்கின்றான். அப்போது கும்பகர்ணன், "பேசுவது சாமம், இடைப் பேணுவது காமம், நனி நின் கொற்றம்" என்று இடித்துரைக்கின்றான். இராவணன் கற்றவனே ஆனாலும் ஒழுக்கம் தவறியதால் அவன் கல்லாதவன் ஆகிறான்.

இன்று கற்றவர்களே பல ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். பல ஊழல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பண்பாட்டினைக் கைவிட்டு நடந்து கொள்கின்றனர். பண்பாடு தவறி, ஒழுக்கம் தவறி நடக்கும் கற்றவர்கள் கற்றவர்களே அல்லர். அவர்கள் கல்லாத மூடர்களாவர்.

இதனைப் பின்வரும் அக்பர் பீர்பால் கதை தெளிவாக விளக்குகின்றது. அக்பருடைய அவையில் பீர்பால் என்ற அறிஞர் இருந்தார். அக்பரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். அக்பருக்கு ஏதேனும் சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அதைப் பீர்பாலிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார்.

ஒருமுறை அக்பர் அவையில் தீவிரமாக ஒரு கருத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். நாட்டில் பார்வையற்றோர் பற்றிய கருத்துத்தான் அது. அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அக்பருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அக்பர் பீர்பாலைப் பார்த்து, "பீர்பால் அவர்களே நமது நாட்டில் பார்வை உடையவர்கள் அதிகமா? பார்வையற்றவர்கள் அதிகமா?" இக்கேள்வி என் மனதுள் எழுந்துகொண்டே இருக்கிறது. இதற்குச் சரியான புள்ளி விவரத்துடன் தாங்கள் எனக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பீர்பால், "அரசே நாடு முழுவதும் பார்வையற்றவர்களே அதிகம் இருக்கின்றார்கள். இதனை நாளையே நான் தங்களுக்குப் புள்ளிவிவரத்துடன் நிரூபித்துக் காட்டுகின்றேன். ஆனால் நான் என்ன செய்தாலும் தாங்களோ வேறு யாரோ என்னவென்று என்னைக் கேட்கக் கூடாது. இதற்குச் சம்மதம் என்றால் தாங்கள் எழுப்பிய சந்தேகத்திற்குச் சரியான பதிலைக் கூறுவேன்" என்று கூறினார்.

மன்னர் அக்பரும் சரி என்று அதற்கு ஒப்புக் கொண்டார். அவையில் இருந்த பீர்பாலைப் பிடிக்காதவர்கள், "ம்ம்ம் பீர்பால் வசமாக அரசரிடம் சிக்கிக் கொண்டார். இனி பீர்பாலின் கதை முடிந்துவிடும்" என்று மனதிற்குள் கூறி மகிழ்ச்சியடைந்தார்கள். அதனை அவர்கள் வெளிக்காட்டவில்லை.

மறுநாள் அதிகாலையில் பீர்பால் ஈச்சங் குச்சிகளுடன் அரண்மனையின் வாயிலில் கூடை முடைவதற்காக அமர்ந்தார். அவரது பக்கத்தில் எழுதுகோலும் எழுதுவதற்குரிய துணியும் இருந்தது. பீர்பால் வசதியாக அமர்ந்துகொண்டு கூடை முடையத் தொடங்கினார்.

அரண்மனையின் வெளியிலே பீர்பால் அமர்ந்திருப்பதைப் பார்த்த அரசர் வேகமாக ஓடிவந்து, "என்ன பீர்பால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். பீர்பால் அரசர் கேட்ட கேள்விக்கு ஒன்றும் பதிலளிக்காமல் தனது பக்கத்தில் இருந்த குறிப்பேட்டில் ஒன்று என்று எழுதி, அரசரின் பெயரை எழுதிக் கொண்டார்.

இவ்வாறே அமைச்சர்கள், படைத் தலைவர்கள், வீரர்கள், நகரின் முக்கியமானவர்கள் என அனைவரும் அரண்மனைக்கு வெளியில் இருந்து கூடை முடைந்து கொண்டிருந்த பீர்பாலைப் பார்த்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" கேட்ட வண்ணம் அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அரசவை கூடும் நேரம். பீர்பால் கூடை முடைவதை நிறுத்திவிட்டுத் தான் எழுதி வைத்திருந்த பெயர்ப்பட்டியலை எடுத்துக் கொண்டு அரசவைக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட அக்பர், "என்ன பீர்பால் அதற்குள் பட்டியலைத் தயார் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு, "ஆம் மன்னா பட்டியலைத் தயார் செய்துவிட்டேன். வாசித்துக் காட்டவா" என்று பீர்பால் அரசரைப் பார்த்துக் கேட்டார்.

அரசரும் அனுமதியளிக்கவே பீர்பால், "அக்பர்…." என்று வரிசையாக அவையில் இருந்தோரின் பெயர்களை வாசித்தார். அரசருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அரசர் பீர்பாலைப் பார்த்து, "என்ன இது பீர்பால் கண் தெரியாதவர்களின் பெயர்களை வாசிக்கச் சொன்னால் நீங்கள் இங்குள்ளவர்களின் பெயர்களை எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு என்ன புத்தி மழுங்கிப் போய்விட்டதா?" என்று கேட்டார்.

அதற்கு பீர்பால், "அரசே நான் கூடை முடைந்து கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். நீங்கள் உள்பட அனைவரும் கண்களால் பார்த்தீர்கள். அப்படிப் பார்த்தும் என்னைப் பார்த்து, பீர்பால் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேள்வி கேட்டீர்கள். கண்ணெதிரே நடப்பதைப் பார்த்தும் பாராததுபோல் கேள்வி கேட்கின்றீர்கள்? அப்படி யார் கேள்வி கேட்பர். கண்தெரியாதவர்கள், எதையும் பாராதவர்கள் கேள்விகள் கேட்பர். ஆனால் உங்கள் அனைவருக்கும் கண் நன்கு தெரியும். அவ்வாறு கண் பார்வை தெரிந்தும் எதுவுமே தெரியாதவர்கள் போன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேள்வி வேறு கேட்கின்றீர்கள். அரசே இவ்வாறுதான் நமது நாட்டில் கண்ணுக் கெதிரே பல கொடுமைகள் நடந்தும் அவற்றைப் பார்த்தும் பாராமல் பலரும் நடந்து கொள்கின்றார்கள். தங்கள் எதிரே எந்தக் கொடுமை நடந்தாலும் அதைப் பார்த்துவிட்டு, அதுகுறித்த நிகழ்வுகளை யாரும் அவரிடம் விசாரித்தால் தங்களுக்கு எதுவும் தெரியாது, தாங்கள் எதையும் பார்க்கவில்லை என்றே கூறுவார்கள். இவர்களுக்கு கண் பார்வை இருந்தாலும் ஒன்றுதான் பார்வை இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இவர்கள் அனைவரும் உண்மையில் பார்வையற்றவர்கள்தான். அதனால்தான் இவ்வாறு செய்தேன்" என்றார்.

இதனைக் கேட்ட அரசர் பெரிதும் மகிழ்ந்து அவர்தம் அறிவுத்திறத்தைப் போற்றினார். இது கதையாக இருக்கலாம். ஆனால் இதில் உணர்த்தப்படும் கருத்து இன்றைக்கும் பொருந்தும். இன்று படித்திருந்தும் பண்பில்லாமல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களிலும், பல்வேறுவகையான மோசடிகளிலும் படித்தவர்கள் ஈடுபட்டு இவ்வுலகைப் பாழ்படுத்துகின்றனர். இவ்வாறு அறநூல்களும் உயர்ந்தோரும் கூறும் வாழ்க்கை நெறிமுறையைப் படித்துவிட்டு ஒழுக்கமின்றி நடப்பவர்கள் கற்றிருந்தும் கல்லாத மனிதர்களே ஆவார்.

அதனால் இத்தகையோரை நாம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ஒழுக்கத்துடன் வாழுகின்ற நல்லோரைப் போற்றுதல் வேண்டும். அப்போதுதான் இவ்வுலகம் உய்யும். வள்ளுவர் காட்டும் இத்தகைய கற்றிருந்தும் கல்லா மனிதர்களை அடையாளம் கண்டு வாழ்வோம். வள்ளுவர் வழி நடப்போம்.

(தொடரும்)

- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை