நாயைக் குளுப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது திரும்ப குப்பை மேட்டுக்குத்தான் போகும் என்பார்கள் விபரம் தெரிந்தவர்கள். இது தெரு நாய்களுக்கு மட்டுமல்ல, சாதி வெறி தலைக்கேறிய சில இரண்டு கால் நாய்களுக்கும் பொருந்தும். இது போன்ற நாய்களிடம் நீங்கள் என்னதான் ஜனநாயக விழுமியங்களைப் பற்றியும், சமத்துவத்தைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும் நீதி போதனை வகுப்பெடுத்தாலும், அது போன்ற நாய்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாக சொல்லி தேர்தலில் பங்கெடுத்தாலும் அதனால் எந்த ஒரு பயனுமில்லை.

வெறி பிடித்த நாய்களை விச ஊசி போட்டுக் கொல்வதுதான் ஒரே வழி. இல்லை என்றால் அது ஊரில் இருக்கும் அனைவரையும் கடிப்பதோடு ஒரு பாதுகாப்பற்ற அச்ச உணர்வை சமூகத்தில் ஏற்படுத்திவிடும். தற்போதைக்கு வெறி நாய்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு நாம் பிரச்சினைக்கு வருவோம்.

நம்மை யார் ஆட்சி செய்வது என்பதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பக்கம் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும்போதே, ஜனநாயகத்தை சிலர் கூட்டாக சேர்ந்து வன்புணர்வு செய்திருக்கின்றார்கள். சக மனிதனுக்கு அவனுடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், உரிமையையும் கொடுக்கத் துப்பில்லாத நாட்டில் அதை உத்திரவாதப்படுத்தப் போவதாய் சொல்லி தேர்தல் நடத்துவது வெட்கக்கேடான‌து ஆகும். இதை ஏன் போலி ஜனநாயகம் என்று சொல்கின்றோம் என்பதற்கான தரவுகளை, அப்படி சொல்பவர்கள் தேடிக் கொண்டு இருக்கும்போதே அந்த ஜனநாயகமே முச்சந்தியில் வந்து அம்மணமாய் நின்று கொண்டு சிரிக்கின்றது.

நேற்று சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பாமக வன்னிய சாதி வெறியர்கள் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கியும், வாகனங்களுக்குத் தீ வைத்தும் வெறியாட்டம் ஆடி இருக்கின்றார்கள். இவை அனைத்தும் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும்போதே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்தக் கலவரத்தின் தனிச்சிறப்பு. எப்போதெல்லாம் சூத்திர சாதி வெறியர்களின் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் சூத்திர சாதி வெறியர்கள் வலியச் சென்று வம்பிழுத்து தலித் மக்களைத் தாக்குவதை வாடிக்கையான ஒன்றாகவே கடைப்பிடித்து வருகின்றார்கள்.

சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்தத் தொகுதியில் இருக்கும் தலித் மக்களைத் தவிர, நேர்மையான வன்னிய சாதி மக்களில் பெரும்பாலானவர்கள் தோழர் திருமாவளவனை ஆதரிப்பது பாமக வன்னிய சாதி வெறியர்களை எரிச்சலடைய வைத்திருக்கின்றது. எங்கே இத்தனை ஆண்டுகளாக தாம் கட்டமைத்து வந்திருந்த தலித் எதிர் சூத்திர முரண்பாடு உடைந்து விடுமோ என்ற அச்சமும், பீதியும் பாமக சாதிவெறியர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் எப்படியாவது திட்டமிட்டு கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாமகவைச் சேர்ந்த சுப்பிரமணியன், ராசு, கண்ணன் என்ற மூன்று பேர் டீக்கடையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானையை உடைத்திருக்கின்றார்கள். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குணசேகரன், லட்சுமணன் உட்பட ஐந்து பேர் தட்டிக் கேட்டிருக்கின்றார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பாமக வன்னிய சாதி வெறியர்கள் 100க்கும் மேற்பட்ட வன்னிய சாதி வெறியர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொன்பரப்பி கிராமத்தை மிகக் கொடூரமாகத் தாக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி இருக்கின்றார்கள்.

தன்னுடைய பிழைப்புவாதத்தாலும், 'மாற்றம் முன்னேற்றம்' என்று சொல்லிவிட்டு டயர் நக்கிகளுக்கு விலை போனதாலும் வன்னிய சாதி மக்களிடம் அம்பலப்பட்டு, தனிமைப்பட்டு அநாதையாய் நிற்கும் ராமதாசும், அன்புமணியும் அதை மீட்டெடுக்க திரும்ப தங்களுடைய வழமையான சாதிவெறியைக் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

dalit woman at ponparappiஏற்கெனவே இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்தில் நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனி, அண்ணாநகர் போன்ற ஊர்களைத் தீக்கிரையாக்கி பல லட்சம் மதிப்பிலான தலித்துகளின் சொத்துக்களை நாசப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை வன்னிய சாதி வெறியர்கள் சிதைத்தார்கள், இளவரசனின் மரணத்திற்கும் காரணமானார்கள்.

அதே போல விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள சேஷசமுத்திரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருவிழாவின் போது சாமி ஊர்வலமும், தேரோட்டமும் பொதுப்பாதை வழியே செல்வதற்கு அங்குள்ள வன்னிய சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிரச்சினை நடந்துகொண்டு இருக்கும்போது திருவிழாவுக்கு முந்தைய தினம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பல வீடுகள் கொளுத்தப்பட்டன; தலித் மக்கள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டனர்; சாமி தேரும் கொளுத்தப்பட்டது. திட்டமிட்டு முன்தயாரிப்போடு இந்த வன்முறையை அரங்கேற்றினர். முதலில் மின்மாற்றியை உடைத்து மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு பின்பு பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு வீடுகளைக் கொளுத்தினர். தர்மபுரியில் அரங்கேற்றப்பட்டது போலவே இங்கும் திட்டமிட்டு அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

ராமதாசும், அன்புமணியும், பாமக என்ற கட்சியும் அரசியல் சமூகக் களத்தில் இருந்து ஒழித்துக் கட்டப்படும்வரை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்பது தமிழ் மண்ணில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். தங்களுடைய அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் மிகக் கொடிய குற்றக்கும்பலாக இவர்கள் தமிழ்நாட்டில் மாறியிருக்கின்றார்கள். இயல்பான சமூக மாற்றத்தின் ஊடாக சரிந்து வரும் சாதிய விழுமியங்களை மிக இறுக்கமாகக் கட்டமைக்கும் பிற்போக்கு அரசியலை மிகத் தீவிரமாக தமிழ்ச் சமூகத்தில் இருவரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதனால்தான் இயல்பாகவே பிற்போக்குவாத அதிமுகவும், மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் கூட்டணி வைத்துள்ளன. தற்போது பொன்பரப்பி கிராமத்தில் பாமக வன்னிய சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கையை ஆளும் அதிமுக அரசு எடுக்கும் என்று நம்பிக்கை நமக்கு இல்லை. இந்தத் தாக்குதலுக்குக் கூட உத்வேகமாக இருந்தது ஆளுங்கட்சியுடனான பாமகவின் தற்போதைய உறவாகவே இருக்கும் என்பது யாருக்கும் புரியாதது அல்ல. இனி இதுபோன்று தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தமிழகம் முழுக்க பாமக மற்றும் அது ஒருங்கிணைத்து வைத்திருக்கும் சாதிச் சங்கங்கள் மூலம் நடக்கவே வாய்ப்பு அதிகம்.

திருமாவளவன் போன்றவர்கள் இப்படி ஒவ்வொரு முறையும் தலித் மக்கள் தாக்கப்படும்போதும் தலித்துகளை சட்டவாத முறைக்குள் நின்று போராடவே பயிற்றுவிக்கின்றார்கள். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் அதை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அடிவாங்கிக் கொண்டே இருப்பது? இழப்பதற்கு ஏதும் அற்ற வர்க்கமாக அது இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் திட்டமிட்டு அவர்கள் இந்தச் சமூகத்தில் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

ஒவ்வொரு முறையும் தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடக்கும்போதும் மார்க்சிய இயக்கத் தோழர்களும், பெரியாரிய இயக்கத் தோழர்களும், அம்பேத்கரிய இயக்கத் தோழர்களும் மட்டுமே களத்தில் இறங்கிப் போராடுகின்றார்கள். வழக்கம் போல தமிழரின் ஒற்றுமையைப் பேசும் புரட்டர்கள் ஐம்புலன்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டு வேறு வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இது ரொம்ப நாளைக்கு முடியாது என்பதை அவர்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

- செ.கார்கி