உயிர் இருக்கும் வரை மனிதன். அவன் இறந்து விட்டால் அவன் அதுவாகி, பிணம் என்று அழைக்கப்படுகின்றான். பிணத்துடன் யாரும் வாழ மாட்டார்கள், பழக மாட்டார்கள், பேசமாட்டார்கள். மாறாக அப்பிணத்தை எப்போது வீட்டை விட்டுக் கிளப்புவோம் என்று நினைப்பர். அந்தப் பிணத்தைப் போன்று சிலர் உலகில் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

thiruvalluvarஎப்போதும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது, அடாத செயலைச் செய்து பிறருக்கு உதவாமல் துன்புறுத்துபவர்களைப் பார்த்து, "நீ எல்லாம் ஏண்டா பிணம் மாதிரி பூமிக்குப் பாராமாக அலைகின்றாய்?" என்று கேட்பதுண்டு.

பிணத்திற்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. யாரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்காது. மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ளாது போட்டது போட்டபடி பிணம் கிடக்கும். அந்தப் பிணத்தைப் போன்று சில மனிதர்கள் இருக்கின்றார்கள்.

மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன? என்று சமுதாய அக்கறையே இல்லாமல் உலக நடைமுறையினை அறிந்தும் அறியாதவர் போன்று அவர்கள் மனம் போனபடி நடப்பர். பெரிய பூகம்பமே நேர்ந்தாலும் அவர் ஏதுமறியாதவர் போன்று இருப்பர். தங்களுக்கு எது தேவையோ அது கிடைத்தால் போதும் என்று இருப்பர். மற்றவர்களைப் பற்றி இவர்கள் சிறிதும் கவலைப் படமாட்டார்கள். அத்தகைய தன்மை வாய்ந்தவர்களை வள்ளுவர் உயிர் இருந்து அவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் உண்மையில் மனிதர்கள் அல்லர். அவர்கள் உயிருள்ளபோதே இறந்து போன மனிதர்களாவர் என்று குறிப்பிடுகின்றார். இதனை,

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்"(கு.எ.,214)

என்ற திருக்குறள் தெளிவுறுத்துகிறது.

இதற்கு உரை வகுக்கும் பரிமேலழகர், "உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான். அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே ஆயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும். உயிரின் அறிவும், செயலும் காணாமையின் செத்தாருள் வைக்கப்படும் என்றார். இதனால் உலக நடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது"(பரி.உரை, பக்.,86-87)

என்று நயம்பட எடுத்துரைக்கின்றார்.

உலக நடைமுறையினை அறிந்து எந்தச் செயலையும் செய்யாதவன் செத்தவருள் ஒருவனாகவே கருதுவான். பிணத்திற்கு உயிருடைய அறிவும், செயலும் இல்லாமல் இருத்தலால் உலக நடைமுறைக்கு மாறாக வாழ்பவர் இருந்தும் இறந்தவராவார். உலக நடைமுறை என்றால் என்ன? மற்றவர்க்கு உதவுதல், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடத்தல் உள்ளிட்டவையே ஆகும்.

ஒருவர் அலுவலகத்தில் கைநிறையச் சம்பளம் கிடைக்கின்ற பதவியில் இருக்கின்றார். அந்த அலுவலகம் சரியாக 10 மணிக்கு இயங்கும். அங்கு 200 பேர் பணிபுரிகின்றனர். அனைவரும் ஒன்பது நாற்பத்தைக்குள் வருகை புரிந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும். அவ்வாறு ஊழியர்கள் வருவதை அங்குள்ள தலைமை அதிகாரி கண்காணித்து அந்த வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு மூடிவைத்தல் வேண்டும்.

அங்கு பணிபுரிவோர் யாரும் தாமதமாக வரவே மாட்டார்கள். சரியான நேரத்திற்கு வந்து சரியான நேரத்திற்குச் செல்வர். இது அந்த அலுவலகத்தின் நடைமுறையாக இருந்தது. அந்த அலுவலகத்திற்கு வேறொரு ஊரிலிருந்து புதிதாக வந்து பணியில் சேர்ந்தார் ஒருவர்.

முதல் நாள் வந்து சரியாக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டவர் அடுத்தடுத்த நாளில் பத்து நிமிடம், இருபது நிமிடம் என்று தாமதமாக வருகை தரத் தொடங்கினார். தாமதமாக வருவது மட்டுமல்லாமல் எல்லாப் பணிகளையும் தாமதமாகவே செய்யத் தொடங்கினார்.

அதனால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தலைமை அதிகாரி அவரை ஒவ்வொரு நாளும் சரியாக வந்து சரியான நேரத்தில் பணிகளை முடியுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அந்தப் பணியாளரும் சரி என்று சொன்னாரே தவிர ஒரு நாளும் சரியான நேரத்திற்கு வருவதோ பணிகளைச் செய்து முடிப்பதோ கிடையாது.

அலுவலகத்தில் உள்ளவர்கள் அவரை எல்லோரும் லேட் என்று அழைக்கத் தொடங்கினர். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவேயில்லை. அவருக்கு மேலுள்ள அதிகாரிகளும் எவ்வளவோ கூறிப் பார்த்தனர். அவர் தனது வழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை. நாளடைவில் அவரது இயற்பெயர் மாறி லேட் என்பதே நிலைபெற்று விட்டது.

இறந்தவர்களை ஆங்கிலத்தில் ‘லேட்’ என்றே குறிப்பிடுவர். அவர் உயிரோடு இருக்கிறார். ஆனால் உலக நடைமுறையை மீறி முரண்பாடகச் செயல்படுவதால் அவர் இருந்தும் இறந்தவரானார். இதனையே வள்ளுவர் அழகுற, ‘செத்தாருள்’ என்று குறிப்பிடுகின்றார்.

நாம் உலக நடைமுறைக்கு மாறாக நடந்து நமது செயல்களைச் செய்தால் இருந்தும் இறந்தவர்களாக ஆகிவிடுவோம். மற்றவர்களைப் போன்று நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருந்தால் நாம் இறந்தவர்களாக மற்றவர்களால் கருதப்படுவோம். நமது பணிகளைச் சரியாகச் செய்தால் மட்டுமே நாம் வாழ்ந்தவர்களாவோம். நமக்குரிய பணிகளைப் புறக்கணித்துச் செய்யாது புறந்தள்ளினால் அவரும் பிணத்திற்குச் சமமாவார் என்பதையே இத்திருக்குறள் வாயிலாக வள்ளுவர் தெளிவுறுத்துகிறார்.

யாராவது பிணமாக வாழ்வதற்குச் சம்மதிப்பார்களா என்றால் இல்லை என்றே கூறலாம். அதனால் நாம் உலக நடைமுறை அறிந்து நமது பணிகளைச் செய்து உயிர் உள்ளவர்களாக வாழ்வோம். உலக நடைமுறையை அறிந்து செய்யாதவர்கள் என்றும் நடமாடும் பிண மனிதர்களாகவே இந்தப் பூமியில் வலம் வரட்டும். அத்தகைய பிண மனிதர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு அதற்கேற்ப நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இக்குறள் வழி வள்ளுவர் மிகச் சரியாக அறிவுத்துகிறார். இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் பிண மனிதர்களா? அல்லது உலக நடைமுறையை அறிந்து வாழும் நல்ல மனிதர்களா?

(தொடரும்)

- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.), புதுக்கோட்டை.