தமிழகத்தில், நாளை பதினேழாவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோல இந்தியா முழுமைக்கும் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் நமது வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது? கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இதுவரை ஆட்சி புரிந்த எல்லாக் கட்சிகளின் ஆட்சிகளும் சின்னச் சின்ன வேறுபாடுகள் தவிர்த்து ஒரே மாதிரிதானே அமைகிறது? பிறகு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதே அரசியல் கட்சி உறுப்பினர்கள் தவிர்த்த, இதர குடிமக்களின் பரவலான மனநிலையாக உள்ளது.

இப்படியாக ஆண்டுக்கணக்காய் மனதிற்குள்ளேயே வெம்பிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், சமீப காலமாக அதற்கு மாற்றாக முன் வைக்கப்படுவது None Of The Above (NOTA) “நோட்டா”. அதாவது, “எனது தொகுதியில் போட்டியிடும் வாக்காளர்கள் எவருக்கும் எனது வாக்கு இல்லை” என்பதனை அறிவிக்கும் முறை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட “தேர்தல் நடத்தை விதிகள்” 1961ன் பிரிவு “49 ஓ” “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் உரிமை அனைத்து வாக்காளர்களுக்கும் உள்ளது” என்று கூறுகிறது. அந்த “49 ஓ” பிரிவின் அடிப்படையில் வாக்களிக்க விரும்புவர்களின் வாக்கானது, வாக்குச் சாவடிகளில் தனியே அதற்காக பராமரிக்கப்படும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது.

nota“தேர்தலின்போது வாக்காளர், வாக்குச் சாவடிக்குச் சென்று தனது பெயரைப் பதிவு செய்துவிட்டு, தனது விரலில் மை வைத்துக் கொண்டவுடன், வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரியிடம், தான் இங்கே போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனக் கூறி, அதை அப்படியே வாக்குச்சாவடியில் அதற்கென வைக்கப் பட்டிருக்கும் “17அ” என்ற படிவத்தில் பதிவு செய்து, அதை உறுதி செய்யும் வகையில் அதன் கீழ் கையெழுத்தோ, கைவிரல் ரேகை பதிவோ செய்துவிட்டுப் போகலாம்” என “தேர்தல் நடத்தை விதிகள்” 1961ன் பிரிவு “49 எல்” கூறுகிறது.

அவ்வாறு வாக்களிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததை சமூகத்தின் பல்வேறு தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் நோட்டாவை தனியே இணைப்பதற்கு ஆதரவாக 2௦௦9ம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் கருத்து வெளியிட்டது. ஆயினும் அப்போதைய அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாததால், அது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பல்வேறு பகுதிகளிலும் “49 ஓ” குறித்து பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யத் துவங்கின.

இந்நிலையில், அம்முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த 2௦௦4ம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் சிவில் உரிமைக் கழகம் எதிர் இந்திய அரசு எனும் அந்த வழக்கில் கடந்த 27.௦9.2௦13 அன்று, வாக்களிக்கும் இயந்திரத்தில் தனியே “நோட்டா”வும் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவினைத் தொடர்ந்து, கடந்த 2௦14ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில், வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்குப் பின்னர், கடைசியாக “நோட்டா” தனியே இணைக்கப்பட்டது. 100 விழுக்காடு வாக்குகள் பதிவாகிட வேண்டும் என்ற இலக்கினை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகளில், ஒரு குறிப்பிட்ட ஏற்பாடே நோட்டா.

உலகில் இந்தியா தவிர்த்து, கிரிஸ், கொலம்பியா, உக்ரைன், வடக்கு கொரியா, ஸ்பெயின் நாட்டில் பெலராஸ் மாகாணம், அமெரிக்காவில் நெவாடா மாகாணம் போன்ற பகுதிகளில் “நோட்டா” வை ஒத்த, “எனது வாக்கு எவருக்குமில்லை” என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இந்தியாவில், நோட்டா அறிமுகமான 2௦14ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தலிலேயே நாடு முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்றது. அதாவது சுமார் அறுபது இலட்சம் வாக்குகள் நோட்டாவில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு நடந்த அனைத்து பொதுத் தேர்தல்களிலும் நோட்டா தவறாமல் இடம் பிடித்து வருகிறது. அதே வேளையில், நோட்டா-வைப் பயன்படுத்துவது, தேர்தல் புறக்கணிப்பு என்பதாகாது. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வாக்கை முறையாகப் பதிவு செய்வதுடன், நமது வாக்கு பிறரால் கள்ள வாக்காக பதிவாகாமல் நம்மால் தடுக்கப்படும். நோட்டாவில் வாக்களிப்பதன் வாயிலாக அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தங்கள் எதிர்ப்பினைக் காட்டமுடியும். அதனைத் தவிர அதில் ஒன்றும் இல்லை.

ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்கு நோட்டா-வில் பதிவானாலும் அதன் காரணமாக அந்தத் தொகுதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. அப்போது பதிவான வாக்குகளில், அதிக வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். நோட்டாவுக்கு அதிகமாக வாக்குகள் விழும் பட்சத்தில் அந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் அடுத்த தேர்தலில் நிற்க முடியாது, வெற்றி பெற்றது செல்லாது என்று வரும் செய்திகள் அனைத்தும் துளியும் உண்மைத் தன்மை இல்லாத தவறான கருத்துகள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூறப்படுபவைகள்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது, நோட்டா நம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு கூர்மையான ஆயுதம் இல்லை என்பதும், துளியும் அதிகாரமே இல்லாத ஒரு வழிமுறை என்பதும் எளிதில் புலனாகும். மேலும், நோட்டா-வை விடவும் குறைவாக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சியையும், அதன் வேட்பாளரையும் சில காலம் கேலி செய்ய மட்டுமே அது உபயோகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோட்டா, அரசியலில் மாற்றம் கொண்டு வரும் அளவுக்கு அதிகாரம் பெற்றதா என்றால், சர்வ நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.

தேர்தலின் போது, சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஏழை, எளிய மக்களே அதிக அளவில் வாக்குப் பதிவு செய்கின்றனர். நடுத்தர வர்க்கத்தில் பாதியும், செல்வந்தர்களில் பெரும்பாலானோரது வாக்குகளுமே பொதுவாக குறைவாகப் பதிவாகி வருகிறது. தங்களது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாத வாக்காளர்கள், மறைமுகமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

தற்போது நமது நாட்டில் நடப்பிலுள்ள தேர்தல் முறையில், பெருவாரியான அதாவது 51 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறாரா என்றால் இல்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில், அதிக வாக்குகளைப்பெற்ற வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். தற்போது 324 மக்களவை உறுப்பினர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களே. சராசரியாக ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் நாட்டில் 50 முதல் 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி வருகிறது. இதன் காரணமாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவான ஒரு தொகுதியில் முறையான மற்றும் கள்ள வாக்குகளின் மூலமாக 30 முதல் 35 விழுக்காடு வரையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

அதோடு தங்களது வாக்கைப் பதிவே செய்யாத 40 விழுக்காடு வாக்காளர்கள், எதிராக வாக்களித்த 25 விழுக்காடு வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாத குழந்தைகள் உட்பட பெருவாரியான வாக்காளர்கள் வேண்டாமெனக் கருதுகிற வேட்பாளர்களே பெரும்பாலும் தேர்தலில் வெற்றியடைந்து அனைவருக்குமான பிரதிநிதியாக அறிவிக்கப்படுகிறார். தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் 40 விழுக்காடுக்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதேயில்லை. இப்படியாக, 30 முதல் 35 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெறும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வருவதால் அது முழுமையாக மக்கள் உணர்வை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை. அனைவரும் வாக்களிப்பதன் வாயிலாக, பெருவாரியான வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுபவர் மட்டுமே வெற்றிபெற முடியும்.

இருப்பினும் நோட்டாவிற்கு வாக்களிக்கும் மனநிலை மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் உள்ளதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை ஆட்சியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலை அதிகரிக்குமானால் அது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவே அமையும். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையில் அமலில் இருக்கும் நடைமுறைக்கு மாற்றாக இன்னொரு வடிவம் சட்டப்படி கொண்டு வரப்படாத வரையிலும், எவ்வளவு குறைபாடு இருந்தாலும் தற்போதைய தேர்தல் நடைமுறையை மறுதலிக்க முடியாது. போட்டியிடுபவர்களில் எவரையேனும் ஒருவரை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. நாம் பங்கேற்பு செய்யாவிட்டாலும், பங்கேற்பு செய்தவர்களில் பெருவாரியானவர்களின் வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஆகவே, துளியும் மதிப்பே இல்லாத “நோட்டா”விற்கு வாக்களித்து, விலை மதிப்பில்லாத நமது வாக்கினை செல்லாத வாக்குகளின் எண்ணிக்கையில் இணைத்து வீணடிக்காமல், நமது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரியானவர் என நாம் கருதும் எவருக்கேனும் ஒருவருக்கு வாக்களிப்பது மட்டுமே சிறந்த முடிவாக இருக்க முடியும்.