ஆறு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொலைச் செய்தி கேட்டவுடன் மனது பதைபதைக்கிறது, வேதனை பெருக்கெடுக்கிறது. ஆனாலும் கொடூரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அரூர் ஒன்றியம் சிட்லிங் கிராமத்தில் 17 வயது பழங்குடியின மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மரணம். திருச்சியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை. திருப்பூரில் 4 வயதுக் குழந்தை பாலியல் வல்லுறவு. தஞ்சை திருபுவனத்தில் 21 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு. புதுக்கோட்டையில் 19 வயதுப் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், அதில் 3 கொலைக்குற்றங்களும் நடந்துள்ளன எனத் தகவல்கள் கூறுகின்றன.

AgapPuram 8கொடுமையின் உச்சமாக டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் 8 மாதப் பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. என்ன கொடுமை? வெறும் எட்டு மாதமேயான பெண் குழந்தை. என்னவொரு அடங்காக் குரூரம்? கொடூரம்? ஆக, பாரத மணித் திருநாட்டில் 4 மாதச் சிசுவிலிருந்து 64 வயது மூதாட்டி வரை இங்கு பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள், சிதைக்கப்படுகிறார்கள். என்னவொரு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம்? உயர்ந்ததொரு நாகரிகச் சமூகத்தில் வாழ்வதாக வேறு சொல்லிக் கொள்கிறோம். பெருமிதம் கொள்கிறோம்.

அறிவு மற்றும் பண்பாடு எனத் துவக்க நிலையில் இருந்த அந்த ஆதிகால காட்டு விலங்காண்டிச் சமூகத்தை விட, மிக மோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன இங்கு பிரச்சனை? எதில் இங்கு பிரச்சனை? நாம் கொஞ்சம் தீவிரமாகப் பேசுவோம். நிகழ்த்தப்படுகிற பாலியல் குற்றங்களுக்கு எது காரணம்? என்ன காரணம்? பிரச்சனையின் அகப் புறம் நோக்கினோமென்றால்...

இங்கு பாலியல் குற்றச் செயல்களை விட குற்ற மனமே அடிப்படை. குற்ற மனமே இங்கு எல்லோர் மனத்திலும் சமைக்கப்பட்டிருக்கிறது. பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆணாதிக்கம் வலுவாக நிலவி வருகிறதொரு இந்தச் சமூக அமைப்பில், சமூகப் பண்பாட்டுப் பொதுப் புத்திச் சூழலில், வடிக்கப்பட்ட, வனையப்பட்ட ஒரு மனித உயிரி, சதா சர்வகாலமும் பாலியல் விடாய் கொண்டு, வேட்கை கொண்டு அலையும் மாந்த உயிரியாகத்தான் சமூகம் வனைந்திருக்கிறது.

நாம் நவீன விஞ்ஞான அறிவு மற்றும் சமூகப் பொதுப் புத்தி உளவியல் கண்கொண்டு பேசுவோம். நவீன விஞ்ஞான மருத்துவம் என்ன சொல்கிறது? குழந்தைகள் மீது வரும் செக்ஸ் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயராம். இந்த பீடோபிலியா என்பது 13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு முன் உள்ள குழந்தைகள்மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையாகும் என்று வரையறுக்கிறது. இந்நோய் வருவதற்கான அல்லது எழுவதற்கான சரியான காரணம் இன்னும் மருத்துவத் துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குடும்ப பாரம்பரிய நோயா? ஜீன்களால் வருவதா? என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, வரையறுக்க இயலவில்லை என்று நவீன விஞ்ஞான மருத்துவம் சொல்கிறது.

ஆனால் சில மன மருத்துவர்கள் இது நோயல்ல. இது சுய இன்பம், ஓரினச் சேர்க்கை போன்றதொரு பழக்க வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது கற்றுத் தேர்வதோ அல்ல. இயல்பாகச் சில மனிதர்களில் காணப்படுவது என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நோயாளிகளைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். எதனால் இப்படியான மனநிலைக்கு எட்டுகின்றனர் என்பதைப் பற்றி இன்னும் சரியான ஆய்வு வரவில்லை.

எப்படி என்றாலும் பீடோபிலியா என்பதை நாம் ஒரு பிறழ் பாலியல் தேர்வாக, நோக்கமாக வரையறுக்கலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எனவும், உலக மக்கள் தொகையில் ஐந்து குழந்தைகள் இருக்கிறது என்றால் அதில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தையாக உள்ளது எனவும், அதே நேரத்தில் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகமாக நடக்கும் நாடாகவும் இந்தியா இருந்து வருகின்றது என்று அரசுத் தகவல்கள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கான தேசியச் செயல்திட்டம் 2005 என்கிறதொரு அறிக்கை ஒவ்வொரு 155 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாகக் கூறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசியக் குற்றப்பதிவுத் துறையின் கணக்கின்படி 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக 48,338 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் தமிழகத்தின் பங்கு 1,486 என்றும் சொல்கிறது.

இந்த இடத்தில் இந்தியா என்று சொல்வதைவிட பாரதம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பெருமைமிக்க இந்தப் பாரத பூமியில் கடந்த ஐந்து வருடங்களில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகள் 151% அதிகரித்துள்ளது என்றும் வழக்குகள் குறித்த தரவுகள் சொல்கிறது. கவனிக்கவும். இந்தத் தரவுகள் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதே அன்றி, உண்மை நிலை அன்று. இங்கு தொடுக்கப்படும், நிகழ்த்தப்படும் எல்லாக் குற்றங்களும் வன்கொடுமைகளும் பெரும்பாலும் வழக்குகளாகப் பதியப்படுவதே இல்லை. இவைகள் மீறி பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளிவிவரந்தானேயொழிய இதுவே உண்மை நிலை அல்ல. உண்மையில், யதார்த்தத்தில் கொடுமைகள், குற்றங்கள் இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.

பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடும் பாரதப் புண்ணிய பூமியில் நிகழ்த்தப்படும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தனியாக போக்சோ என்கிற பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) கொண்டுவரப்பட்டு, அதில் 8,904 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன.

பொதுவாக உலகம் முழுவதிலும் இந்தப் பாலியல் குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டு வருகின்றன என்றாலும், இதில் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்கிற வித்தியாசமில்லை. என்றாலும் பெரும்பாலும் அக் குற்றங்கள் பெண் குழந்தைகள் மீதுதான் தொடுக்கப்படுகின்றன. ஆண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சிற்சிலவாகவே ஆங்காங்கே அரிதாகத்தான் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், மேற்குவங்கம் அடுத்த இடத்திலும், நமது தாய்த்திரு தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாம். இது நோயின் புறம் என்றால்... அகம் என்ன? நமது சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்பில் இருக்கிறது அது.

மனித உயிரியின் அடிப்படைத் தேவையில் ஒன்று பாலுறவு. உடற்தேவைகளுள் ஒன்று. உடற்வளர்ச்சிப்போக்கில் தகுந்த பருவம் முகிழ்த்தவுடன் இயல்பாக எழும் தேவை அது. ஆதியில் அது யாரும் யாரோடும் என்கிற வரன்முறையற்ற பாலியல் தேர்வாகத்தான் இருந்தது. அதற்கு ஆண், பெண் என்கிற எதிரெதிர்ப் பாலின ஈர்ப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது.

உணவுத் தேவைக்கான மனித குல நகர்வுப் போக்கில், ஆதியில் புறத்தில் கிடைத்த காய் கனிகளைச் சேகரித்து உண்ணும் சேகரிப்புச் சமூகத்திலிருந்து... எதிர்ப்படும் விலங்குகளை எதிர்த்துப் போராடி, அதனிடமிருந்து தற்காத்துக் கொண்டும், கொன்றழித்தும், கொன்றழித்ததைப் புசிக்கும் வேட்டைச் சமூகத்திலிருந்து... கிழங்குகளை அகழ்ந்தெடுத்ததிலிருந்து வேளாண் நுட்பம் கண்டறிந்து, வேளாண்மை செய்து, வேளாண்மைக்கான நீர்தேடி நதிக்கரை நாகரிகம் கண்டு, நிலைத்ததொரு வேளாண் சமூகமாகிட... அதுவரை தனி மனிதனின், மனிதியின் உடல் வலு மற்றும் எதிர்த்துத் தாக்கும் திறன், விலங்குகளிடமிருந்து தற்காத்துத் தாக்கும் உத்தி, இதன் அடிப்படையில் தனி உழைப்பாய் இருந்த உழைப்பின்போக்கு, நிலைத்த வேளாண் சமூகத்தில் கூட்டு உழைப்பாய் மாறியது.

மனிதகுலக் கூட்டுழைப்பின் தொடர் வளர்ச்சிப் போக்கில், வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட, பயன்படுத்தப்பட, அதிக அளவில் உற்பத்தியை, விளைச்சலைக் கண்டடைந்தார்கள். இப்போது தேவைக்கும் அதிகமான கூடுதல் உற்பத்தி கிடைக்க, தேவைகளுக்குப் போக மீந்து கிடக்கும் ‘உபரி உற்பத்தி’யை யார் கைப்பற்றிக் கொள்வது? என்பதற்கான போட்டியில், ஆதிக்கம், அடக்கி ஆளுதல், தனிச் சொத்து என்ற தோற்றம் கண்டிட, அதுநாள்வரை தாய்வழித் தலைமையும், வரன்முறையற்ற பெண்வழிச் சேரலையும் கொண்டிருந்த ஆண் இனம், மெல்ல மெல்ல தாய்வழித் தலைமையை நீக்கி, ஆண்மையத் தலைமையாகி, உபரி அபகரிப்பில் 'தான்' 'தனது' 'தனக்கானது' என்கிற நிலைநிறுத்தலில், அதுவரை நிலவியிருந்த வரன்முறையற்ற பெண்வழிச் சேரலைக் கட்டுப்படுத்தி, கட்டுக்குள் கொண்டுவந்து, நிலம், உபரி உற்பத்தி கையகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒன்றாகப் பெண்ணைத் தனக்கு மட்டுமேயான தனிப் பொருளாக்கி, தனிச் சொத்துடைமையாக்கி, தனக்கான அடிமையாக்கி, போகப் பொருளாக்கி, தன் வாரிசை ஈன்று தருகிற பிள்ளை பெறும் இயந்திரமாக்கி, ஆகக் கடைசியில்... பெண் என்பவளைத் தன் 'சக உயிரி' என்று கருதாமல், வெறும் உடல். சதைக் குவியல். தொப்புள், மார்பு, யோனி என்பதாக தனது நுகர்வுப் பண்டமாக, அடிமையாக தனக்குத் தக மாற்றிக் கொண்டது ஆணியம்.

தன் தனிச் சொத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் தொடர் போக்கில், 'பெண் என்றால் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்'. 'கல்லானாலும் கணவன்'. 'புல்லானாலும் புருஷன்'. இங்கு ஒருவன் தாராளமாகப் பிறன்மனை நோக்கலாம். சுகிக்கலாம். களவு மணம் புரியலாம். புணர்ச்சிக்கலாம் அது ஆண்மை. ஆனால், பெண் என்பவள் பிறன் மனை நோக்கக்கூடாது. பிறர்வழிச் சேரல் கூடாது.

பொதுவில் இங்கு சொல்லப்படும், பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிற 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற கருத்தியல், உண்மையில் ஒருவனுக்கு ஒருத்தி அல்ல. மாறாக 'ஒருத்திக்கு மட்டுமே ஒருவன்' என்பதுதான் சரி. ஏனென்றால் இங்கு ஒருவன் ஒருத்தியோடு மட்டும் இருப்பவனல்ல. பலரோடும் இருப்பவன். இருக்கச் சுதந்திரம் கொடுக்கப்பட்டவன். ஆனால் பெண் என்கிற ஒருத்திக்கு ஒருவன் மட்டுந்தான். எனவே, பிறன் மனை நோக்கக்கூடாது. பிறர்வழிச் சேரல் கூடாது. கற்பு. பெய்யெனப் பெய்யும் மழை. பெண்ணின் பெருந்தக்க யாவுள என்றெல்லாம் கருத்தியல் அதிகாரங்களைப் பொதுப்புத்தியாக்கி, அதைப் பெண்களின் கருவிலிருந்தே புகட்டிவைத்தது ஆணியம்.

பின்னர் தனிச் சொத்து, ஆதிக்கம், அதிகாரம் என விரிவுபடுத்தும் நோக்கில் தொடுக்கப்பட்ட நாடு பிடிக்கும் போர்கள், போர்களின்போது படையணிகளால் எதிரி நாட்டுப் பெண்களின் மீது தொடுக்கப்படும் வல்லுறவு, வன் கவர்வு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய நாகரிக நாட்கள் வரை அது மறையவில்லை. மறைந்திடவில்லை.

நேற்று ஈழத்தில்... காஷ்மீரத்தில்... இன்றோ... சமீபத்தில் நடந்த மனித குல அநீதியான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பின்போது (?) இனச் சுத்திகரிப்பு என்கிற பைத்தியக்காரத்தனமான வன்கொடுமையின்போது, ரோஹிங்யா பெண்கள் மற்றும் சிறுமிகள் பர்மிய காவல் படைகளால் பரவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வாதனைகளை, வேதனைகளை, 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளையெல்லாம் நாம் நெஞ்சு பதைக்கப் பதைக்கப் படித்ததுதானே.

இதன் தொடர்சிதான் பழங்குடியினப் பெண்கள் மீதான கர்நாடக மற்றும் தமிழகக் காவல்துறையின் கொடூர கூட்டு வன்புணர்ச்சி. அந்தப் பழங்குடியினப் பெண்களின் வன்புணர்வில் வெளிப்பட்ட விந்தும், பெண்குறிகளிலிருந்து பெருக்கெடுத்தோடிய ரத்தமும், கலந்த வீச்சமும் நிணமும் இன்னும் நாறித் தொலைக்கிறதே.

அடுத்த எளிய தீண்டல், தொடுதல், சீண்டல், வன்புணர்தல் என்பது தலித் பெண்கள் மீதானது. வாச்சாத்தி அரியலூர் சிறுமி நந்தினி, பொள்ளாச்சி தலித் சிறுமிகள், கையர்லாஞ்சி தலித் பெண்கள், உத்திரப் பிரதேசத்தில் கடும் கொடும் வல்லுறவு செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட தலித் சிறுமிகள், அய்யய்யோ... போதும். போதும். யோசிக்க யோசிக்க நீண்டு கொண்டே இருக்கிறது.

ஆனால் ஒன்று தோழர்களே. அதெப்படியோ? இந்த ஆண்குறிக்கு மட்டும் சாதி தெரிவதில்லை. மதம் தெரிவதில்லை. இனம் தெரிவதில்லை. ஆக, பெண் என்பது சக உயிரி அல்ல. சக மனிதி அல்ல. மாறாக, எனது அடிமை. எனது சொத்து. எனது உடைமை. எனதான மார்பு. எனக்கான யோனி. யாரும் எங்கும் எப்பொழுதும் கை வைக்கலாம். தீண்டலாம். தீவிரமானவர்கள் தன் இச்சைக்கு வல்லுறவாக்குகிறார்கள். தீவிரமாய் இல்லாதவர்கள், மென்மையாய் பாலுறவுச் சீண்டல்களில் ஈடுபட்டுத் தன்னைத் தணித்துக் கொள்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு? எப்படித்தான் இக் குரூரக் கொடுமைகளைக் களைவது? என்றால்... உடனே சட்டென்று நமது பொதுப்புத்தி, கடுமையான சட்டம் வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று முந்தி வந்து நின்று கொள்ளும். உண்மையில் இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்ல. உலவும் எந்தவொரு குற்றங்களுக்கும் தீர்வு சட்டங்களில் இல்லை. தண்டனைகளில் இல்லை.

உண்மையில் சட்டங்கள் என்பது, நமக்கான பாதுகாப்பே தவிர, பாதுகாப்பு வளையமே தவிர, தீர்வு அல்ல. அதேதான் தண்டனை என்பதுவும். இன்னும் சிலர் உச்சம் சென்று தூக்குத் தண்டனை கொடுங்கள், பொதுவெளியில் நிற்க வைத்துக் கொல்லுங்கள். அவனின் உறுப்பை அறுத்தெறியுங்கள் என்றெல்லாம் முழங்குகிறார்கள். உண்மையில், ஆணுறுப்பில் இல்லை பிரச்சனை. நாம் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம். இங்கு பாலியல் குற்றச் செயலை விட குற்ற மனமே பிரதானமாகியிருக்கிறது.

சட்டமும் தண்டனையும் குற்றச் செயலுக்கானதே தவிர, அதன் கிரியாஊக்கியாய் எல்லோரிலும் குடி கொண்டிருக்கும், வாய்ப்புக் கிடைக்கும்போது செயல்படுத்திடும், வெளிப்படுத்திடும் குற்ற மனத்தையே நாம் களைய வேண்டும். நீக்க வேண்டும். போக்க வேண்டும். போக்கிட வேண்டும். அதற்கு முதல் தேவை பாலியல் கல்விதான் முகாமை.

இங்கு பாலியல் கல்வி என்றவுடன், சட்டென்று நம் பொதுப் புத்தியில் வந்து நிற்பது புணர்வதும் புணர்ச்சிச் செயல்முறையும்தானே என்று தன் கோணல்புத்தியை முன்நிறுத்தும். நிறுத்திடும். அதுவல்ல பாலியல் கல்வி.

உண்மையில் பாலியல் கல்வி என்பது, உடற்கூறு அமைப்பினைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் வழிகளைச் சொல்லி, நம் உடல் மீது நமக்கிருக்கும் உரிமையைச் சொல்லி, இந்த உரிமைக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த அடிப்படைப் பாடம். இந்தப் பாடத்தினை நாம் பள்ளிகளிலிருந்து துவங்குவது அல்ல. ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் துவங்குவது ஆகும்.

ஒரு குழந்தைக்கு உடலின் பாகங்களைப் பற்றித் தெளிவாக, வெட்கப்படாமல், கூச்சப்படாமல் சொல்லித்தரவேண்டும். இது ஆண்குறி. இது பெண்குறி என்று அவரவர்கள் வீட்டு மொழியில், என்ன என்ன செல்லப்பெயர்களால் குறிப்பிடப்படுகிறதோ, அதற்கேற்ற மாதிரியான வார்த்தைகளை அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதையும் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த இந்தப் பாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் உறுப்பை யாரும் தொடக் கூடாது. அம்மா அல்லது பாட்டி மட்டுந்தான் தொடவேண்டும். அப்பாகூடத் தொடக்கூடாது. வேறு யாரும் தொடக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால் உடனே தாயிடம் அல்லது பாட்டியிடம் வந்து சொல்லவேண்டும் என்பதை ஒன்றரை வயதிலிருந்தே, நம் ஒவ்வொருவரின் வீட்டிலேயே சொல்லித் தரவேண்டும்.

குழந்தைகள் அறிவில், உணர்வில், உணர்வு அறிதலில் துவக்க நிலைகள் கொண்டவைகள். எனவே அவர்களுக்கு நாம் முறையாகச் சொல்லிக் கொடுத்திருந்தால், அவர்களும் யாராவது தொட்டால் உடனே நம்மிடம் வந்து சொல்லிடுவார்கள்.

பொதுவாக குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் என்பது வெளியில் இருந்து வருபவை சிற்சிலவேதான். பெரும்பாலும் அக் குழந்தைக்கு நெருங்கிய மற்றும் தெரிந்தவர்கள் மூலம்தான் பெரும்பாலும் நடக்கும். கணவனாகவே இருந்தாலும் தாய் மிக எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். ஏனென்றால், தந்தையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளையும் சூழலில் இங்கு நாம் பார்க்கிறோம். பார்த்துவருகிறோம்.

அதேபோல் நமது வீட்டின் புறத்திலும், சிறியவர்கள், பெரியவர்கள் குறிப்பாக வயதானவர்களின் தொடுகை என குழந்தைகளுக்குத் தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். எது நல்ல தொடுகை. எது கெட்ட தொடுகை எனச் சொல்லிக் கொடுத்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது வீட்டில்... பிறகு, பள்ளி சென்றபிறகு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பருவம் அடைவது அல்லது பூப்பெய்துவது அல்லது வயதுக்கு வருவது என்றால் என்ன? என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு, எட்டாம் வகுப்பு வருகிறபோது... வயது தொடர்பான ஹார்மோன்கள் செய்யும் விளைவுகள் பற்றியும், உதிரப்போக்கு நாளில் எதை எதை உண்ண வேண்டும்? எப்படி எப்படி வலியைச் சமாளிக்க வேண்டும்? எப்படிச் சுத்தமாக, சுகாதாரமாகச் செயல்பட வேண்டும்? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பிறகு, பத்தாம் வகுப்பு வருகையில்... ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறித்தும் பாலியல் உணர்வுகள் குறித்தும் முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். முக்கியமாக மீறல்கள் நடக்கும்போது, எப்படித் தைரியமாக எதிர்க்க வேண்டும் என்பதையும், எப்படி தைரியமாய்ச் சத்தம் போடவேண்டும் என்பதையும் கூடச் சேர்த்துச் சொல்லித் தரவேண்டும்.

இறுதியாய் இது என் உடல். அதன் மீதான சகல உரிமைகளும் எனக்கு மட்டுமே உண்டு என்பதையும், எதிர்ப்பையும் மீறி ஏதாவது நிகழ்ந்தால், நிகழ்ந்துவிட்டால் அதைத் தைரியமாய்ப் பொது வெளிக்குக் கொண்டுவரும் மனப்பாங்கை வளர்த்துவிட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோருக்கும் இருக்கிற உடற்பாகங்கள்தான் என்னிடமும் இருக்கின்றன. இதைப் படம்பிடித்துக் காட்டினாலோ, படம்பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினாலோ, அதற்கெல்லாம் கிஞ்சிற்றும் அஞ்சாது, என்ன பெரிய இல்லாத அதிசயத்தைக் காட்டிவிட்டான்? வெளியிட்டுவிட்டான்? எல்லோரிடமும் இருப்பதுதானே என்னிடமும் இருக்கிறது. இதில் மானம், அவமானம் கற்பு, புனிதம் என்றெல்லாம் எந்த மயிரும் இல்லை என்கிற உடற்கூற்று உளவியலோடு, விழிப்புணர்வு அறிவை ஊட்டிட வேண்டும்.

இறுதியாய்... இதெல்லாம் சரி எல்லாமுமே பெண்ணுக்கு மட்டுந்தானா? ஆணுக்கு இல்லையா? என்றால்... இதுவரை நாம் மொழிந்ததைவிட, சொல்லியதைவிட, இதில்தான் இருக்கிறது இறுதித் தீர்வு.

பொதுவாக வீட்டிலிருந்துதான் பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். வீட்டில் வளரும்போதே, ஆண் குழந்தை சிறப்பு. பெண்குழந்தை மட்டம். ஆண் குழந்தைக்குச் சிறப்பு உணவு. பெண்ணுக்கு அது மறுக்கப்படுவது என்பதுபோன்ற பேதங்களை விடுத்து, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம். சம உயிரி. அவள் உனக்கு அடிமை அல்ல. சொத்து அல்ல. பொருள் அல்ல. பண்டம் அல்ல. உயிரும் உணர்வும் கொண்ட உறுப்புகளைக் கொண்டவள். தன் உறவல்லாத வேறு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? புரிந்து கொள்ள வேண்டும்? கூடுதலாய் எப்படித் தன் இணையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்? என்பதுபோன்ற பாலியல் புரிதல் கல்வியை படிப்படியாக ஆண் குழந்தைகளுக்குப் போதித்து வளர்ப்பதன் மூலமே, வளர்த்தெடுப்பதின் மூலமே, இத்தகையதொரு கொடுமைக்கும் கொடூரத்திற்கும் முடிவு கட்ட முடியும்.

ஆக, இங்கு இறுதித் தீர்விற்கான தேவை என்பது... குற்றச் செயல்களுக்கெதிரான தகுந்த நடவடிக்கைகளோடு, குற்ற மனத்தினை அகற்றுவதில்தான் இறுதித் தீர்வு இருக்கிறது.

- பாட்டாளி