[சோர்வு, களைப்பு, எரிச்சல் ஆகியவற்றால் தலை விண் விண் என்று தெறித்ததற்குக் காரணமான அந்நிகழ்வுக்குப் பிறகு எழுதியது. அழகியலிலும், புனைவிலும்தான் மிகைப்படுத்தத் தெரியும் எனக்கு. கடுப்பேற்றும் உண்மைச் சம்பவங்களை அப்படியே எழுதித் தான் பழக்கம்.]

‘நேரம் : மாலை 5.30 மணி’ என்று அச்சிடப்பட்டிருந்த இலக்கியக் கூட்டத்திற்கான அழைப்பிதழை நம்பி பெரிய மனதோடு ‘6.15க்கே’ வந்து அமர்ந்திருக்கும் சிலரை ஊக்கப்படுத்தும் நோக்கில் 6.30க்கெல்லாம் கூட்டத்தைத் துவங்கி விடுவார்கள். ‘கூட்டம் ஆரம்பித்து அரைமணி நேரத்திற்குப் பிறகுதான் அரங்கம் நிரம்பும்’ என்பதை ஆத்திச்சூடியின் ககர வருக்கத்தில் சேர்த்தது எவ்வளவு வசதி? அது நூல் வெளியீட்டு விழா / நூல் விமர்சனக் கூட்டம் என்பதால் பெரிய மேடையாக இருந்தாலும் கூட அதன் ஓரங்களில் தொங்கலில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அளவிற்கு ஆட்களை அள்ளிப் போடுவார்கள்.

பேச்சாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது என்பதே ஓர் அருமையான(!) கலை, ‘நள பாகத்தைப்’ போல. கருத்துரை, மதிப்புரை, விளக்கவுரை, நூலுரை, ஆசிரியர் உரை, ஆக்க உரை, ஊக்க உரை, கோனார் உரை…. போன்றவை சமையலின் தேவையான பொருட்கள் பட்டியலில் இருக்கும் முதன்மைச் சாமான்களுக்கு ஒப்பவாம். இப்பிரிவுகளில் புத்தகத்தின் விமர்சனம் என்ற பெயரில் அதன் குறைகள் வண்டவாளங்கள் வெளிவரும் அபாயம் இருப்பதால் பெரும்பாலும் ‘சிங் சாங்’களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள நன்மைகளை அறிந்தவர்கள் ஏற்பாட்டாளர்கள். ஏதோ போகிற போக்கில் மண்டையில் மின்னல் வெட்டி அதை எழுத்தில் வடித்து வெளியிடும் பிழைக்கத் தெரியாதவர்களுக்கு மத்தியில் வெளியிடுவதற்காகவே எழுதித் தள்ளுபவர்கள் கொஞ்சம் விவரமானவர்களாக இருப்பார்களாயின், ரொம்பச் சுமாராகப் பேசும் ஊடகவியலாளர்களையும் உரையாற்றுவோர் பட்டியலில் சேர்க்கும் உத்தியை அறிந்திருப்பர். தாம் எழுதுவது மகா மட்டமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் தம் பெயர் மக்கள் வாயில் துலங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே?

செய்தி சேகரிக்க என அவர்களை அழைத்தால் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து பத்திரிக்கையில் ஒரு பத்தியை ஒதுக்குவார்கள். அவர்களை உரையாற்றச் சொல்லி மேடைக்கு ஏற்றிக் குஷிப்படுத்தினால் அரைப் பக்க செய்தியாகுமே என்றெல்லாம் ஒரு நைப்பாசைதான். கொஞ்சம் விஷயம் தெரிந்த பத்திரிக்கையாளராக இருந்தால் இவர்களுக்கு ‘பெப்பே’ காட்டி விடுவார் என்பதால் அதிலும் கவனமான தேர்வு! தொகுப்பாளர்…. கடுப்பாளர் என்று பெயர் வைத்திருந்திருக்கலாம். பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவதோடு நிறுத்த மாட்டார்கள். பேச்சாளரைப் பற்றிய அருமை பெருமைகள் அடைமொழிகள் என நீட்டி முழக்குவதைப் பார்த்தால் வனவாசத்திற்குப் போன ராமர் கல்கியாக திரும்பி வந்தாலும் வியப்பில்லை. இந்த லட்சணத்தில் ஒவ்வொரு சொல்வீழ்ச்சிக்கும் (இதையெல்லாம் சொற்பொழிவு என்று சொல்ல முடியாது… போங்க சார்!) பிறகு அதை முக்கால்வாசி திரும்பச் சொல்லித்தான் ‘நன்றி’ சொல்வார்கள். பேச்சாளரையும் சும்மா சொல்லக்கூடாது.

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
முன்னிலை படர்க்கை குற்றுயிர் குலை உயிர் ஆக
எல்லா இடத்தும் ‘அவர்களே’ வழக்கொடு
வெளிப்படை குறிப்பின் விளிப்பது மரபே

என்னும் நன்னூற்பாவின் ‘உல்டா’வுக்கு இணங்க ஒவ்வொருத்தர் பெயரைச் சொல்லி ‘அவர்களே….’ ‘……ளே’ ‘….ளே’ என கூவிக் கூவி எல்லோரையும் விற்று விட்டுத்தான் தமது வீச்சுரையைத்(!) துவங்குவார். அவர் அந்த உரையை முடிக்கும் போது அவர் குரலும் முடிந்து விடும் என்று மருத்துவர் கூறியது காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்குமாதலால் இன்னும் கொஞ்ச நேரம் (கிருத யுகத்தில் ஆரம்பித்து திரேதா யுகம் வரை கூட நீளும்) இவ்வுலகத்திற்குத் தம் குரலைப் பெரிய மனதோடு ஒலிபரப்புவார்.

எல்லா உணவுப் பொருளுக்கும் அதிமுக்கியமான உப்பை தேவையான அளவு இட வேண்டும். ‘தேவையான அளவு’ – என்ன ஒரு சூசகமான அளவுகோல்? பிறரது பாராட்டுக்களையும் சிங்கிகளையும் எழுதியவர் (எழுதுபவரெல்லாம் எழுத்தாளர் அல்லவே?) விரும்பும் அளவிற்கு ஏற்ப தமது பக்த கோடிகள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து வாழ்த்துரை வழங்கச் சொல்லும் படலம். சிறு வயதில் முறுக்கு வாங்கித் தந்த முருகேஸ்வரி அக்கா, பள்ளிக்கு வெளியே தார்ப்பாயில் கடை விரித்திருந்த முதியவளிடம் இலந்தைப் பழக் கணக்கை அடைத்த இலட்சுமணன், (முதியவளையும் பேசச் சொல்லலாம்தான்… அவள் இப்போது இவ்வுலகில் இருக்கிறாளோ என்னவோ? பரவாயில்லை… அவ்வுலகில் தாம் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில் அவளுக்கு வாய்ப்பு அளித்துக் கொள்ளலாம் என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்வார் எழுதியவர்!) தாம் இயற்றித் தள்ளிய அந்த அமர காவியத்தை(!) முதன்முதலாகப் பாராட்டித் தள்ளிய படுபாவி பஜகோவிந்தன், அதைப் பதிப்பித்தே ஆக வேண்டும் என்று உசுப்பேற்றிய ஊமைக்குசும்பன் உப்பிலியப்பன்,……… நேற்று தம்முடன் அமர்ந்து காரவடை சாப்பிட்ட கார்மேகம் வரை அனைவரையும் பேச/துதி பாட வைத்துத் தமது நன்றியை வெளிப்படுத்துவார். மேடையில் இடித்துப் பிடித்து அமர்ந்திருக்கும் அனைவரையும் அன்று பேச வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அர்த்தமற்ற பயம்! விழா ஏற்பாட்டாளர்களுக்குத்தான் பார்வையாளர்கள் மீது எவ்வளவு கருணை?

மேடையில் வீற்றிருந்தவர்கள் போக ‘ஸ்லீப்பர் செல்’களைப் போல பார்வையாளர்கள் மத்தியிலும் சில பேச்சாளர்களை நட்டு வைத்திருந்தார்கள் (அதாங்க! Planting sleeper cells… ஹிஹிஹி!). தெரிந்தேதான் கேட்கிறேன், “உங்கள் பக்த கோடிகள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் – இவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து ஒரு நாள் முழுக்க உங்கள் நாமாவளியைப் பாடச் சொல்லிக் காது குளிரக் கேட்டு நீங்களும் மகிழ்ந்து, தடபுடலாக விருந்து கொடுத்து அவர்களையும் மகிழ்விப்பதை விட்டுவிட்டு இந்த அரங்கில் ஒவ்வொருவர் கையிலும் மைக்கை கொடுப்பது பார்வையாளர்களுக்கு இழைக்கும் கொடுமை என்பதை எப்போது உணர்வீர்கள்? வேறொரு சந்தர்ப்பத்தில் நீங்களே உங்கள் தலைமையில் பேச்சுப் போட்டி ஒன்று நடத்தி அவர்களுக்குத் தாராளமாய்ப் பயிற்சி கொடுங்கள். பாமரர்களாகிய எங்களை ஏன் அநியாயமாகச் சோதனை எலிகளாக்கி சாவடிக்கிறீர்கள்? சித்திர குப்தன் கணக்கு தப்பவே தப்பாது…. ஆமா !”

பாடாண் திணைக்கென இவர்களை எல்லாம் நேர்ந்து விட்டது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் விழாவை செய்தியாக மட்டுமல்லாமல் விளம்பரமாக மாற்றுவதற்கும் ஒரு உத்தியைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். தரம் வாய்ந்த இலக்கியவாதி ஒன்று அல்லது இரண்டு பேரை (மட்டுமே) அழைப்பது….. ஊறுகாயைப் போல. அதிலும் கண்டிப்பாக அவர்கள் கடைசியில்தான் பேச வைக்கப்படுவார்கள். பார்வையாளர்களை அவ்வளவு நேரம் அறுவை என்னும் அருவியில் நனைத்து அடித்து தோய்த்து சக்கையெனப் பிழிந்து தரமான பேச்சை ரசிக்கும் சக்தியற்றவர்களாக மாற்றிய பிறகு அந்த இரண்டு பேரை களம் இறக்குவார்கள். எல்லாவற்றையும் மீறி புத்துணர்வு பெற்று நல்ல பேச்சை ரசிக்கத் தெரிந்தவர்களை, மெனெக்கெட்டு விழாவிற்கு வந்து அரங்கத்தை நிறைக்க உதவிய பாவத்திற்காகப் பிழைத்துப் போகட்டும் என மன்னித்து விடுவார்கள். ‘முதலிலேயே அவர்களைப் பேச வைத்து விட்டால் பின்னர் கூட்டம் கலைந்து சென்று விடுமே?’ என்று வக்கணையாகக் கேட்கத் தெரிந்த ஆன்றோரே, ‘அப்படியெனில் தரமாகப் பேசுபவர்களை மட்டும் உரையாற்ற வைப்பதுதானே? ஏன், உங்கள் வட்டத்தில் அவ்வளவு சான்றோர்கள் இல்லையா? மன்னிக்க… கேள்வியை இப்படி மாற்றிக் கேட்கிறேன். சான்றோர் வட்டத்தில் நீங்கள் இல்லையா?’. ‘எல்லோருக்கும் அன்று வர இயலாத சூழ்நிலை’ என்று காரணம் சொல்வார்கள் என்றும் தெரியும். இலக்கியக் கூட்டங்களில் 10 பேருக்குக் குறையாமல் பேச வைக்க வேண்டும் என்று கீதையிலோ பைபிளிலோ குரானிலோ எந்த அதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் அதை ‘religious’ ஆகப் பின்பற்றுவானேன்? ஏனோ தானோ பேர்வழிகள் 10 பேரை பத்து பத்து நிமிடங்கள் பேச வைப்பதற்குப் பதில் ரசனையான 3 அல்லது 4 பேரை ஒவ்வொருவரையும் அரை மணி நேரம் உரையாற்றச் செய்ய வேண்டியதுதானே?

தரம், சான்றாண்மை போன்ற சொற்களைக் கண்டு நான் ஏதோ உயர்கல்வியாளர்களுக்கானதே மேடை என்று சொல்வதாகப் பொருள் கொள்ளும் அளவிற்கு நீங்கள் சாமானியர்கள் அல்லர். பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்ட மலர்வதி அக்கா பேசும் போது அரங்கமே எப்படிக் கட்டுண்டு கிடந்தது என்பதை அறிவேன். யதார்த்த வாழ்வியலைத் தெளிந்து தேர்ந்த சொற்களின் உதவியோடு அவ்வளவு உணர்வுப்பூர்வமானதாக மாற்றினார். நிரம்பிய நூலுடைமையே அரங்கத்திற்கானது என்பது வள்ளுவ வழி.

தொ.பரமசிவன், எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ச.தமிழ்ச்செல்வன், பாமரன், ராமானுஜன்(மருத்துவர்), வண்ணதாசன், மலர்வதி, ……………………………………….. இது ஒன்றும் முடிவிலியாகச் சென்று கொண்டிருக்கும் பட்டியல் அல்ல. அரைப் பக்கத்திற்குள் அடங்கிவிடக் கூடியதுதான். புள்ளிகளை வைத்து நீட்டி விட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இதில் நிஜமாகவே நான் குறிப்பிட மறந்த பெயர்களும் இருக்கும். ஆனால் சில அறுவையர்களை நேரில் காணுற நேரும் போது, ‘அய்யய்யோ! உங்கள எப்பிடி மறந்தேன்?’ என்று சொல்லி நழுவிக் கொள்ளலாம் அல்லவா? இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் தமது பேச்சிற்குப் பிறகு மனதில் ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்வார்கள். பேச்சும் ஒரு கலைதானே! ஓர் அழகிய கவிதையைக் கண்முன் வார்த்தைகளால் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டுவதைப் போன்று அவ்வளவு சுகமாகவும் ரசனையாகவும் கதைத்துப் பல உணர்வுகளை நம்மோடு விட்டுச் செல்வார்கள். அது அறிவுத் தேடலுக்கான பசி, நகைச்சுவை, துன்பியல், வலி, என எதுவாகவும் இருக்கலாம். இப்பெரிய ஜாம்பவான்களைச் சில சமயம் மனம் வெறுத்து தப்பித் தவறி ஒரு இலக்கியக் கூட்டத்திற்கோ அல்லது கல்வி நிறுவனங்களின் மாநாட்டிற்கோ அழைத்து விட்டார்கள் என்று கொள்ளுங்கள். அப்போது அவர்களைப் படுத்தும் பாடு இருக்கிறதே….. ஸ்ஸ்ஸ்ஸ்! அவர்களைக் கடைசியில் பேச வைப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்னும் அளவிற்குக் கூத்தடிப்பார்கள். ஏற்பாட்டாளர்கள் அந்த மடமைக்கு ‘உரையாடல்’ பகுதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்’ என்ற அபாயச் சங்கு ஒலித்தவுடன் வந்து விழும் பாருங்கள் கேள்விகள்…. (இதுவரை பேச்சாளர்களைப் போட்ட போடெல்லாம் சரி. ‘பார்வையாளர்கள் மட்டும் என்ன ரொக்கம்?’ என்று நீங்கள் நினைத்ததே காதில் விழுந்து தொலைத்தது ! இதோ…இதோ….)

பெயர் பெற்ற எழுத்தாளர்கள் என்றில்லை, பொதுவாகவே சிறந்த படைப்பாளிகள் அனைவரிடமும் கேட்கப்படும் கேள்விகள் சில உண்டு. ‘ஏன் எழுத்து/ஓவியம்/சினிமா துறையைத் தேர்வு செய்தீர்கள்?’, ‘இந்தத் துறையில் கால் பதிக்க என்ன செய்ய வேண்டும்?’, ‘எப்படி ஒரு படைப்பை உருவாக்க வேண்டும்?’……. ஏதோ மாணவர்கள்தான் இப்படிக் கேட்கிறார்கள் என்றால் ஏற்பாட்டாளர்களே சில அறிவுஜீவிகள் என நம்பப்படுபவர்களை அழைத்து வந்திருப்பார்கள் கேள்வி கேட்க. அவர்களது கேள்விகள் மாணவர்களின் கேள்விகளோடு போட்டி போடும். சில பல பிதற்றொலிகளை (jargons) அறிந்து வைத்துக் கொண்டு தங்கள் கேள்விகளின் மூலம் பார்வையாளர்களிடம் தமது அறிவுஜீவித்தனத்தை நிரூபிக்க முயல்வார்கள். ‘எழுத்தின் பாணியை எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்?’, ‘இந்தப் படைப்பில் ஏன் magic realism உத்தியைக் கையாண்டீர்கள்? Transcendentalism, Existentialism ஆகியவற்றை உபயோகிக்கும் எண்ணம் உள்ளதா?’, ….. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘வாயில நல்லா வருது’ என்ற euphemism தான் பதில். உயிரோட்டமான எழுத்தில் இந்த இசங்கள் தாமாக அமர்ந்து கொள்ளுமே ஒழிய, ஒரு எழுத்தாளர் (‘எழுத்தாளர்’ யுவர் ஆனர் !) திட்டம் போட்டுச் செயற்கையாக அவற்றைப் புகுத்துவதில்லை.

சிறந்த படைப்பாளிகளை அவர்கள் போக்கில் உரையாட விட்டுக் கேட்டாலே நமக்கு தானாக அவ்வளவு ரசனையான அறிவார்ந்த விஷயங்கள் கிடைக்கும். படைப்பாளிகள், மலைகளும் மரங்களும் நிறைந்த ஓர் அருமையான இயற்கைக் காட்சியில் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் வற்றாத நதியைப் போன்றவர்கள். ஆற்றை அதன் ஓட்டத்தில் ரசிக்கவும் வியக்கவும் தெரிந்தாலே பெரிய விஷயம். அதை விடுத்துப் பொத்தல் கேள்விகள் கடுப்ப (!) ஓட்டை வாளிகளைக் கொண்டு ஆற்றைக் கோரி பார்வையாளர்களுக்குத் தர முயல்வதெல்லாம் அப்பெரிய ஆளுமையைச் சுருக்கி அந்த உன்னதர்களுக்குச் செய்யும் அநியாயம். ‘சான்றோர்களிடம் படைப்பாளிகளிடம் கேள்வி கேட்கக் கூட ஒரு தரம் வேண்டும்’ என்று எங்களைப் போன்ற பாமரர்களுக்குச் சொல்லித் தர வேண்டியவர்களில் பெரும்பாலானோர் தமக்குத்தாமே அறிவுஜீவி என்னும் சாயத்தைப் பூசிக் கொண்டு அச்சான்றோர் உலகில் மிகவும் கவலைக்கிடமான இடத்தில் இருக்கிறார்கள்.

கலையின் எந்த ஒரு வடிவமும் மனிதத்தைத் தொட்டுச் செல்லும் போதோ மனிதத்தோடு இழையோடிச் செல்லும் போதோ அது மனதோடு கதைக்க வல்ல ஆற்றலைப் பெறுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் ஆயிரம் விஷயங்களில் ஏதோ ஒன்று நம்மை ரசிக்க வைக்கலாம்; சிரிக்க வைக்கலாம்; அழ வைக்கலாம்; அறச்சீற்றம் கொள்ள வைக்கலாம். அவ்வுணர்வுகளைப் பதிவு செய்யச் சொல்லி ஓர் உள்ளுணர்வு அரித்தெடுக்கும். உணர்வுகள் எந்தெந்த விகிதத்தில் எவ்வாறான வார்த்தைகளில் எந்தப் பாணியில் வெளிப்பட வேண்டும் என்பதையெல்லாம் படைப்பாளரின் மனநிலையும் படைப்பின் போக்கும்தான் தீர்மானிக்கும். இவ்வாறாக இயற்கையாக உருவெடுக்கும் ஒரு படைப்பு நிச்சயம் சிறந்ததாகத்தான் இருக்க முடியும். அதை விடுத்து ‘கவிதை/கட்டுரை/கதை/திரைக்கதை எழுதுவது எப்படி?’, ‘வித்தியாசமாக யோசிப்பது எப்படி?’, ‘படைப்புக்கான கருவைத் தேடிக் கண்டடைவது எப்படி?’ போன்ற முத்தான(!) கேள்விகளுக்கு விடை தேடி ஏதோ கணிதச் சூத்திரம் போல ஒன்றை வகுத்துப் பயிற்சிப் பட்டறை நடத்தி கலையைக் கொலையாக்காதீர்கள். ‘எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும் போது நீர்த்துப் போகும்’ என்று இந்திரா பார்த்தசாரதி கூறுவார். அதேபோல என் சிறிய மூளைக்கு எட்டிய ஒன்றைக் கூறுகிறேன். ‘மனதில் இருந்து பிறக்கும் கலைக்கு இலக்கணம் வகுக்க முயன்றால் அது உணர்வுகளற்றதாகி விடும்’. இந்தச் சூத்திரங்கள் இல்லாமல் படைக்கத் தெரியாதவர்கள் இன்னும் அதற்குத் தயாராகவில்லை அல்லது அவர்களுக்கு அது வரவே வராது என்று அர்த்தம். உலகத் தரம் வாய்ந்த படங்கள் தந்தவர்கள் அனேகமாக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் செல்லாதவர்கள். மனதின் தூரிகையைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு கட்டங்கள் போட்டு அதற்குள் ஓவியத்தை அடைக்கும் உத்தியைச் சொல்லித் தாராவிட்டால்தான் என்ன? “ஏனோதானோ புத்தகங்களால் உலக நூலகங்கள் தூங்கி வழிகின்றன; அவ்வாறான புத்தகங்களால் மேலும் நிரப்பாதீர்கள். உங்களை உடைத்துக் கொண்டு உங்களையும் மீறி வெளியே வரவில்லை எனில் எழுதாதீர்கள்” என்னும் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கூற்று உணர்வுப்பூர்வமானது.

‘இப்படி இவ்வளவு அவசியமாகக் கூட்டத்தைக் கூட்டி வெட்டிப் பெருமை தேடிக் கொள்வதன் அவசியம் என்ன?’ போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்றேன். ‘குறைகுடங்களின் அங்கீகாரத்திற்கான பசி’ என்பதை விடச் சிறந்த பதில் உங்களுக்குக் கிடைத்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நல்ல விஷயம் நம்மிடம் இருந்து வெளிப்படும் போது மக்கள் தாமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடி அங்கீகரிப்பார்கள். பிறவிப்பயனை அடைய அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. IT’S NOT A SIN TO LIVE AND DIE ANONYMOUSLY AS LONG AS YOU KEEP READING (ஏன் ஆங்கிலத்தில்? நிறைய பேருக்குக் கேட்கும் இல்லையா?) என்று உலகின் கூரையின் மீது நின்று கூக்குரலிட வேண்டும் போல இருக்கிறது. இதையெல்லாம் ஒரு எழுத்தாளர்தான் எழுத வேண்டும் என்பதில்லை; என்னைப் போன்ற ஒரு வாசகராய் இருந்தாலே போதும்!

- சோம.அழகு