அமெரிக்க படைப்புழு, அமெரிக்க துணைக் கண்டத்தின் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டது. புருடாபெர்சியர் என்று இதனை ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். புழு இனங்களில் இது மோசமானதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் புழுவின் தலைப்பகுதியில் Y என்ற ஆங்கில எழுத்தை தலைகீழாக எழுதியது போன்றும், வால் பகுதியில் சதுர வடிவில் நான்கு புள்ளிகள் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. வளர்ந்த ஒரே நாள் இரவில் 100 கி.மீ. கடக்கும் ஆற்றலை அது பெற்றிருக்கிறது. முப்பது நாட்கள் மட்டுமே வாழும் இந்தப் புழுவை கட்டுப்படுத்துவதும், அழிப்பதும் பெரும் சவால் மிகுந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

padaippuzhuஅமெரிக்க படைப்புழு மானாவாரிப் பயிர்களில் ஒன்றான மக்காச் சோளத்தையே அதிகம் தாக்குகிறது. அதற்கு அடுத்து கரும்பு, நெல், தக்காளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குகிறது. தனது பிறப்பிடமான அமெரிக்காவைத் தாண்டி முதன் முதலாக நைஜீரியாவில் 2016 ம் ஆண்டு அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளத்தைத் தாக்க ஆரம்பித்தது. பிறகு ஆப்பிரிக்க கண்டம் முழுக்கவே தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. இதனைக் கட்டுப்படுத்த இயலாமல் எல்லோரும் திண்டாடினர். இறுதியில் ஆப்பிரிக்காவில் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்திச் சென்றது இந்த அமெரிக்கப் படைப்புழு. இதன் விளைவாக 300 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவுக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அறிந்தால் இதன் வீரியம் நமக்குப் புரியும்.

இந்தியாவிலும் தனது அழிவு வேலையை கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் ஆரம்பித்தது. அங்கிருந்து வேகமாக பல இடங்களுக்கும் பரவியது. குறிப்பாக தமிழகத்தில் பெரும் சேதத்தை இந்த படைப்புழு ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக வறட்சியில் தவிக்கும் விவசாயிகளின்மேல் இது மேலும் பாதிப்பை சுமத்தியிருக்கிறது. மக்காச் சோளத்தின் 25 நாள் பயிரில் இந்த நோய்த் தாக்குதல் ஆரம்பிக்கிறது. 50 நாள் பயிரில் தண்டு, இலை, கதிர் என அனைத்துமே சேதமடைந்துவிடுகின்றன. அமெரிக்கப் படைப்புழு தாக்கினால் நூறு சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நான் சந்தித்த பல விவசாயிகள் பயிரிடப்பட்ட பாதிக்குப் பாதி சோளத்தை இப்புழு அழித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மக்காச் சோளம் பயிரிடப்படுகின்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, குறுகிய நாட்களில் மகசூல் செய்துவிடலாம் உள்ளிட்ட பல காரணங்கள் அதற்குப் பின் இருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச் சோள சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 61,594 ஹெக்டேர்களும், சேலம் மாவட்டத்தில் 31,279 ஹெக்டேர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 24,500 ஹெக்டேர்களும் மற்ற மாவட்டங்களில் 10,000 ஹெக்டேர்களுக்கும் குறைவில்லாமலும் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றைப் பயிர் செய்வதற்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக ஒரு விவசாயிடம் பேசும்போது அறிந்து கொள்ள முடிந்தது. இவற்றில் பாதியைக்கூட திரும்பப் பெற முடியாத வகையில் அமெரிக்கப் படைப்புழு பயிர்களை நாசம் செய்துவிட்டது.

இதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் பல இடங்களில் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகைக்கு உள்ளாகின. இறுதியில் இறங்கி வந்தது அரசு. நிவாரணம் அறிவித்தது. மானாவாரி மக்காச் சோளப்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 7,410 எனவும், இறைவைப் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 13,500 எனவும் அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் நியாய‌மற்றதாக விவசாயிகள் கருதுகிறார்கள். குறைந்தது நிவாரணமாக ரூ 20,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அரசு அறிவித்த அந்த நிவாரணத் தொகைகூட இன்றுவரை வழங்கப்படவில்லை.

நிவாரணம் பெறுவதற்காக சிட்டா, வங்கி புத்தகம், ஆதார் அட்டை என அனைத்தும் நகல் எடுத்து மனு எழுதி கால் வலிக்க வரிசையில் நின்று கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்கள். இதுவரை அதற்கான நடவடிக்கை என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. நிவாரணத்தை அரசு வழங்கும் என்று இன்னும் விவசாயிகள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

யாரும் கேட்காமலேயே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 2000 வழங்கி வருகின்ற தமிழக அரசு விவசாயிகள் தங்கள் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட நிவாரணம் கேட்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

- வி.களத்தூர் எம்.பாரூக்