தலித் படுகொலைகளுக்கு நிகழ்த்தப்பட வேண்டிய எதிர்வினை பற்றிய கேள்விக்கு டாக்டர் அம்பேத்கர், "ஒவ்வொரு தலித் மரணத்துக்காகவும் தனித் தனியாக நாம் நீதி தேட முடியாது. இந்த கொலைகளுக்கான ஆணிவேறோடு தான் நம் போர் அமைய வேண்டும்: என்று பதிலளித்தார். (புத்தகம் சரியாக நினைவில்லை மன்னிக்கவும்)

tamilnadu childrenஇந்த பதிலை நான் இன்றைய நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கிறேன். தினம் ஒரு பதற்றமான செய்தி ஊடகங்களாலும், social media'க்களாலும் பர‌ப்பப்படுகிறது. உடனே அதற்கான கண்டனம், வருத்தம், தொலைக்காட்சி விவாதம், சில மீம்ஸ், சில பதிவுகள் என புற்றிசல் கூட்டம் போல அதிகமாக வந்து ஓர் இரவில் காணாமல் போகிறது. இந்தப் போக்கு நம்மை "இன்று ஒரு பிரச்சனை கூட இல்லையே..!" என்று கவலைப்படும் அளவுக்கு மனநோயாளியாக மாற்றிவிட்டது.

வீட்டில் இருக்கும் பெண்கள் கூட "நேத்து அந்த சீரியல் என்னாச்சு...?" என்று கேட்ட காலம் மாறி "இன்னக்கி என்ன பிரச்சனை..?" என்று கேட்கும் காலமாகி விட்டது. இதை பெண்களின் அரசியல் அறிவில் எற்பட்ட முன்னேற்றம் என்று பார்ப்பதா அல்லது அவர்களும் இந்த மனநோய்க்கு பலியாகி விட்டார்கள் என்று பார்ப்பதா எனத் தெரியவில்லை.

எந்த சமுகத்திலும் குற்றங்கள், தவறுகள் என்பது அறவே இல்லாமல் போகாது. கொள்கை முரண்பாடுகள், சமுக சிக்கல்கள், வர்க்க வேற்றுமை சுரண்டல்கள் மொத்தமாக இல்லாமல் ஒழிந்துவிடாது. அப்படியான உடோபியன் சமுகத்தை ஒருநாளும் படைத்துவிட முடியாது.

ஆனால் மனிதமற்ற இந்தப் போக்கு உலகம் முழுவதும் இன்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. மனிதம் என்ற சொல் பொதுமக்கள் மனதிலும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி விட்டது.

இதற்கு அரசியல்வாதிகள் போல, ஊடகங்கள் போல தினம் ஒரு சம்பவம் என்று பேசிக் கொண்டிருப்பது தீர்வல்ல. பிரச்சனைகளின் வேர்களோடு போராடத் தொடங்க வேண்டும். நாம் முதலில் கற்க வேண்டும், பின் ஒன்றுசேர வேண்டும், பின் பணி செய்ய வேண்டும்.

கடந்த தலைமுறையை மாற்ற நினைப்பதை விட, இன்றைய தலைமுறையோடு சண்டையிடுவதை விட, நாளைய தலைமுறையோடு உரையாடுவது, அவர்களைப் பண்படுத்துவது மிக சரியானதாக இருக்கும். பிஞ்சு குழந்தைகள் கையில் அவர்கள் சாதிக் கயிறுகளை கட்டட்டும்; நாம் அவர்கள் மனதில் மனிதத்தை இறுக்க கட்டுவோம்.

பள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்