துப்புரவுத் தொழிலாளிகளின் துயர் பொருளாதார அடிப்படையிலானது அல்ல. அது சாதி ரீதியான அடக்குமுறை. அந்த அடக்குமூறை சாதியின் பெயரால் இங்கே நியாயப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு வேறு வாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் அவர்களை அதனுள் மட்டுமே நிலைத்திருக்கச் செய்கிறது இந்த சாதிய அடக்குமுறை. இதற்குக் காரணமாக இருக்கும் சனாதன தர்மத்தை தூக்கி வைத்து அதனை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்கிற மோடி தான், சில நாட்களுக்கு முன் துப்புரவுப் பணியாளர்களின் பாதம் கழுவும் தேர்தல் நாடகத்தை நடத்தினார். அதற்கேற்றவாறு நம் நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும், 'பாருங்கள் என்னே! நம் பிரதமர்' என்று சிலாகித்துப் பரப்பினார்கள்.

modi cleaning the feet of a scavengerஇந்த இழிநிலையில் வைத்திருக்கும் அமைப்பை ஆதரிக்கும் ஒருவர் துப்புரவுத் தொழிலாளிகளை எப்படி மதிப்பார்? அவர்களின் நலன்களில், கோரிக்கைகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல் கும்பமேளா நிகழ்ச்சியில் போய் கால் கழுவினால் அம்மக்களை ஏமாற்றி விடலாம் எனக் கனவு காண்கிறார் மோடி.

மோடி கால் கழுவி விட்ட கும்பமேளா விழாவில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு சம்பளமோ வெறும் 310 ரூபாய் மட்டுமே. அந்த ரூபாயும் கூட சரியாகத் தரவில்லை எண்று துப்புரவுத் தொழிலாளிகள் போராட்டத்தில் இறங்கினர்.

கும்பமேளா நிகழ்ச்சிக்கு துப்புரவுப் பணிக்கு அழைத்து வரப்பட்ட 50 வயது பெண்மணி கூறுகிறார், "பக்தர்கள் நீரில் விடும் பூக்களை எடுப்பது தான் உங்கள் வேலை என்று அழைத்து வந்தார்கள். ஆனால், இங்கு வந்தால் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொன்னார்கள். இதற்கு முன்பு நான் இந்தப் பணியையெல்லாம் செய்ததில்லை. முதல் நாள் முழுக்க அழுது கொண்டே தான் வேலை செய்தேன்."

கும்பமேளா நிகழ்ச்சிக்கு 14,000 துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இதில் 1%-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

கும்பமேளா நிகழ்ச்சிக்காக மொத்தம் 1,40,000 கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கழிவறையிலிருந்து கழிவு சேமிப்புத் தொட்டிக்கு செல்லும் பைப்களை துப்புரவுத் தொழிலாளர்கள் கையில் எடுத்தே மாட்ட வேண்டும். அதற்கான கை கிளவுஸ் கூட போதுமான அளவு கொடுக்கப்படவில்லை. சில சமயங்களில் கழிவறை அடைத்துக் கொள்ளும் போது துப்புரவுத் தொழிலாளிகள் தான் சுத்தம் செய்தாக வேண்டும்.

மோடியின் நாடகத்துக்கு துப்புரவு பணியாளர்களின் குமுறல்களில் சில...:

52 வயதான சுபாஷ்: 2017ம் ஆண்டு சாக்கடையினுள் வேலை பார்க்கும் போது திடீரென்று மூழ்கி, என்னுடன் இருந்தவர்கள் வேலை பார்த்தவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மோடியின் இந்த செயலால் அவர்கள் திரும்பி விடுவார்களா? அல்லது எங்கள் இந்த நிலைக்குத் தான் விடிவுகாலம் கிடைக்குமா?

40 வயதான ராஜேஷ் பிகானிர்: நான் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறேன். ஆப்ரேசன் தியேட்டர்களை சுத்தம் செய்வது தான் என் வேலை. பல்வேறு நோய்த் தொற்று இருப்பவர்களின் ரத்தத்தை தினமும் சுத்தம் செய்கிறேன். தினமும் 225 ரூபாய் எனக்கு சம்பளம். 2019ம் ஆண்டு எங்கள் கொடுமையைக் கண்டு கொள்வதற்காக டெல்லியில் கூட போராட்டம் நடத்தினோம். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

துப்புரவுத் தொழிலாளிகள் அமைப்பான ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர தேவ்: மோடியின் ஆட்சியின் கீழ் ஒரு பைசா கூட கையால் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வோரின் வாழ்க்கையை புனரமைப்பதற்கு ஒதுக்கவில்லை. அதனால், அவர்களுடைய காலைக் கழுவுவதால் மட்டும் எந்தப் பாவமும் மறையப் போவதில்லை.

இப்படியொரு நிலையில் இருக்கும் மக்கள் யாவரும் பிரதமர் தங்களுக்கு கால் கழுவி விட வேண்டும் என்று விரும்பவில்லை. மற்ற மனிதர்களைப் போல தங்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று மட்டும் தான் விரும்புகிறார்கள்.

மோடியின் இச்செயலைப் பற்றி பீனா என்ற பெண் துப்புரவுத் தொழிலாளி சொல்கிறார், "பிரதமர் எங்கள் கால்களைக் கழுவுவதாக எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்தேன். நான் தில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் பலரது வீடுகளில் துப்புரவுப் பணி செய்து வருகிறேன். அங்கு எங்களை சமமாக நடத்துவதில்லை. எங்களுக்கு என தனிக் குவளைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சொன்னால், பாஜகவின் தில்லி எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா வீட்டில் இது இருக்கிறது." அதுமட்டுமல்ல தனது இரு சகோதரர்கள் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்து விட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் தங்களை மிரட்டி மீண்டும் மீண்டும் இப்பணியைச் செய்ய கட்டாயப்படுத்துவதாகத் தெரிவித்தார்.( 08.03.19 தீக்கதிர்)

2014 முதல் 2016 வரை மட்டுமே 1327 துப்புரவுத் தொழிலாளிகள் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். கணக்கெடுப்புக்குள் வராத உயிரிழப்புகளை சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கான முயற்சியை எடுப்பதைத் தவிர்த்து விட்டு மக்களை மடையர்களாக்கும் நாடகங்களை நிகழ்த்தி வருகிறார் மோடி.

மோடி எழுதிய கர்மயோகி என்ற புத்தகத்தில் தலித்களின் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார், "அந்தத் தொழில் ஓர் ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கைகாக இதைச் செய்வதாக நான் நம்பவில்லை. அப்படியிருந்திருந்தால், இந்தத் தொழிலை அவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்திருக்க மாட்டார்கள்" என்கிறார். மோடியின் இக்குரல் அப்படியே சனாதன தர்மத்தினுடையது. இதற்குப் பெரியாரின் மொழியில் பதில் கூறுவதாக இருந்தால், 'இவ்வளவு ஆன்மிகம், புனிதம் இருக்குமானால் இந்தத் தொழிலை நீங்களே முன்வந்து செய்யுங்கள். இந்தத் தொழில் அவர்களாக தேர்வு செய்தது அல்ல, அவர்கள் மீது திணிக்கப்பட்டது."

இந்தத் தொழிலை செய்வதற்காகவே அவர்களின் பொருளாதார நிலையை மோசமாக்கி வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு இடையில் அவர்களில் சிலர் ஆங்காங்கே இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறிக் கொண்டிருப்பதால் இப்போது அந்த முறையையும் ஒழிக்க மோடியின் அரசு படாதபாடு படுகிறது. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்குகொண்டு அம்மக்களின் கால்களைக் கழுவுவதற்குப் பதில் அவர்களின் குறை கேட்டு அதனை நிவர்த்தி செய்திருந்தால் கூட மோடி மகானாகி இருக்கலாம். ஆனால் ஏமாற்று வித்தைகள் மூலம் எதையும் சாதித்து விட முயற்சிக்கிறார் மோடி.

- அபூ சித்திக்