தெளிந்த நீரோடை ஒன்றின் சலசலக்கும் சப்தத்துக்கு நடுவே கண்கள் மூடி அமர்ந்திருந்தேன் நான். மெலிதாய் ஒரு ஊஞ்சல் அசைவும், யாரோ ஒரு பெண் பாடும் குரலும் கேட்டுக் கொண்டேயிருந்தது. கண்களைத் திறந்து தேடிப் பார்த்தேன். என்னருகே ஒருவருமில்லை. அதோடு ஊஞ்சல் அசைவும் பாடலும் நின்று போயிருந்தது. தேடுவதை நிறுத்திவிட்டு நான் மீண்டும் கண்களை மூடி அமர்ந்து கொண்டேன். மெலிதாய் ஒலித்த ஊஞ்சல் அசைவையும் பாடலையும் கேட்டுக்கொண்டே, தெளிந்த நீரோடையின் சலசலக்கும் சப்தத்துக்கு நடுவே.

lady 250சாலையெங்கும் ஆப்பிள் பழங்கள் சிதறிக் கிடந்தன. உடலெங்கும் சேறு பூசிக்கொண்டிருந்த பூனை ஒன்று அங்கும் இங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்தது. ஒரு சின்ன மரத்துக்குள் பொந்து போன்ற துளை ஒன்றுக்குள் அந்தச் சின்னப் பெண் ஒளிந்து கொண்டிருந்தாள். பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள்ளிருந்து கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. முகம் தெரியாத இருவர் எதுவும் பேசாமல் என்னைப் பார்த்துக் கொண்டே சென்றனர். அந்தப் பாதை அதோடு முடிந்துபோனது.

அந்த மரத்துக்கு ஒரு கதவு இருந்திருந்தால் எப்படியிருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தக் கதவுக்குள்ளிருந்து இன்னும் சில சின்னச் சின்ன மரங்கள் வெளிவரத் தொடங்கின. அந்தச் சின்னச் சின்ன மரங்களின் ஒவ்வொரு கிளையிலும் சிறிய விளக்குகளும் சில பறவைகளின் கூடுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு கூட்டுக்குள்ளிருந்து சின்னப் பறவையொன்றை என்னோடு எடுத்துக் கொள்ள முயன்றேன் நான். சட்டென்று அந்த மரம் கதவைச் சாத்திக் கொண்டது.

ஆளில்லாத நாற்காலி ஒன்றின் அருகிலிருந்த வேறு எதுவுமற்ற மேஜை மேல் தன்னந்தனியாக ஒரு கோப்பைத் தேநீர் நீண்ட நேரமாய் இருக்கிறது. நான் அந்த மேஜை மேலொரு கண்கள் கட்டப்பட்ட கரடி பொம்மையை வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு ஆளில்லாத நாற்காலி ஒன்றின் அருகிலிருந்த ஒரு கோப்பைத் தேநீர் வைக்கப்பட்ட மேஜையின் மேல் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தது கண்கள் கட்டப்பட்டிருந்த ஒரு கரடி பொம்மை.

போகுமிடமெங்கும் கொஞ்சம் இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கையோடு சுமந்து கொண்டே போவாள் அந்தச் சிறுமி. நட்சத்திர வடிவத்திலிருக்கும் அந்த இளஞ்சிவப்புக் கண்ணாடிப் பூக்கள். சில சமயங்களில் ஒவ்வொரு பூவையும் தனித்தனியாய் ஒவ்வொரு கண்ணாடிக் குடுவைக்குள் வைத்திருப்பாள் அவள். நேற்றைய இரவில் கவனித்தேன் கொஞ்சம் இளஞ்சிவப்பு நட்சத்திரப் பூக்களை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுத் தோட்டத்தின் ஏணிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. படிகளின் உயரத்தில், இரண்டோ மூன்றோ இளஞ்சிவப்பு நிற தேவதைச் சிறகுகள்.

தண்ணீர்த் துளிகளைக் கொண்டு மழைப் பறவைச் சிற்பமொன்றைச் செய்து கொண்டிருந்தேன். முன்னெப்போதோ என்னிடம் மீதமிருந்த சில மஞ்சள் நிற நீர்த்துளிகளைக் கொண்டு சிறகுகள் செய்துவிட்டேன். சில துளிகளை நிறங்களேதுமின்றி கருப்பு வெள்ளையாகவே விட்டுவிட்டேன். கொஞ்சம் மேகம் போல் மிதந்து கொண்டிருந்தன என்னைச் சுற்றி. அவற்றுள்ளிருந்து நீலத்துளிகள் சில எடுத்துக் கொண்டேன் சிற்பத்துக்குக் கண்கள் செய்துவிட. என்னைச் சுற்றி மிதந்த மேகங்களின் பிம்பம் , சிற்பத்தின் மேல் மோதியதில் கொஞ்சம் சிகப்பு நீர்த்துளிகள் உருவானது. அவற்றைக் கொண்டு இன்று அந்தத் தண்ணீர்ச் சிற்பத்தைச் செய்து முடித்துவிட இருந்தேன். அவ்வப்போது சிறிதும் பெரிதுமாய் உருமாறிக் கொண்டேயிருந்த சிற்பம் நேற்றைய இரவில் நான் காணும் முன் கடல் மணலுக்குள் புதைந்து போனது.

ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். ஒரு அறை முழுக்க நிரம்பியிருந்த நீல நிற நீருக்குள் மிதந்தபடி சலனமின்றித் தூங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். சட்டென்று அந்த அறையில் கண்ணாடி உடைந்து நொறுங்குமொரு சத்தம் கேட்டு நான் விழித்துக் கொண்டேன். பின் அந்தப் பெண் விழித்து மிதந்து கொண்டே போய் அந்த அறையிலிருந்த ஒரு கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு மீண்டும் சலனமேதுமின்றித் தூங்கிப் போனாள் நீல நிற நீருக்குள் மிதந்தபடி.

இலைகளுதிர்ந்து போன தனித்த மரமொன்றின் கிளைகளை ஒவ்வொன்றாய் எண்ணிக் கொண்டிருந்த பெண்ணொருத்தியிடம் 'என்ன செய்கிறாய்' என்று கேட்டேன். எதுவும் பேசாமல் எனைத் திரும்பிப் பார்த்த அவள் மீண்டும் முதலில் இருந்து கிளைகளை எண்ணத் தொடங்கினாள். நான் மீண்டுமொருமுறை 'என்ன செய்கிறாய்' என்று அவளிடம் கேட்டபோதும் அமைதியாய் எனைத் திரும்பிப் பார்த்த அவள் மீண்டும் கிளைகளை முதலில் இருந்து எண்ணத் தொடங்கினாள். நான் மீண்டும் அவளைப் பார்த்து 'என்ன செய்கிறாய்' என்று கேட்........

அந்தப் பெண்ணின் உருவம் ஒரு ஓவியமென வரையப்பட்டு அந்த வெள்ளை நிற மரப்பெட்டிக்குள்தான் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண் நீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாய் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் அவளின் உருவம் முழுவதும் சாம்பல் நிறமாயும் அவளின் கண்கள் மட்டும் தங்க நிறத்திலும் மினுமினுத்துக் கொண்டிருந்தன. முழுவதும் நீருக்குள் மூழ்கிப் போகும் முன் ஓவியத்திலிருக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் மரப்பெட்டிக்கு வெளியே நின்று ஓவியத்துக்குக் கை கொடுத்துக் கொண்டேயிருந்தாள். இருப்பினும் மூன்றாவதாய் ஒரு கை தனை நோக்கி நீள்வதை நீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த அவள் கவனிக்கவேயில்லை.

- கிருத்திகா தாஸ்