இது சாதிய வர்க்கச் சமூகம். இங்கு எல்லாமே உயர்வு தாழ்வு, மேல் கீழ் என்று பேதப்படுத்தி, பிளவுபடுத்தி வைத்திருக்கிறோம். இப்படியான அசமத்துவ சமூகத்தை வைத்துக் கொண்டு, 'எல்லோரும் சமம்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'ஜனநாயக நாடு' என்று பொய் சொல்லிக் கொண்டு வேறு அலைகிறோம்; பெருமிதம் கொள்கிறோம்.

ஆகப் பெரும்பான்மையோர் இதை ஏற்றுக் கொண்டும், கொண்டாடிக் கொண்டும் இருக்க, சாதியத்தை, வர்க்கப் பிளவை மறுத்து, அழித்தொழிக்க வழிவகையினைத் தேடிக் கொண்டும், களத்தில் போராடிக் கொண்டும் இருக்கிற சிறுபான்மையோர்... என இப்படியான அசமத்துவம் கொண்டதொரு நாட்டில், மனித சமூக நடவடிக்கைகள் மட்டுமல்ல.... ஆகப் பெரியதான, அரியதான, போனால் திரும்பக் கிடைக்காத மனித உயிருக்கும் கூட இங்கு சமத்துவமில்லை என்பதுதான் கொடுமையிலும் ஆகப் பெரும் கொடுமை.

AgapPuram 6சாதியாய் வர்க்கமாய் ஆயிரத்தெட்டு பிரிவுகள், பிளவுகள் இருந்தாலும், வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். அதைவிட, உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான். மரணம் என்பதுவும் எல்லோருக்கும் ஒன்றுதான். மனித மரணத்தில் மேல் கீழ் என்றெல்லாம் ஒன்றுமில்லை. உயர் மரணம், தாழ்வு மரணம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மரணம் மரணம்தான். சமம்தான். ஆனால், அப்படியா இருக்கிறது இந்த அசமத்துவ நாட்டில்?

மரணம். நம்மில் பலருக்கு மரணம் குறித்த பயம் இருக்கிறதே தவிர, மரணம் குறித்த புரிதல் இல்லை. பிறப்பொன்று இருப்பேல் இறப்பொன்றிருக்கும்தானே. பூப்பதும், பூத்தது புதைவதும் இயற்கைச் சுழற்சி. பிறப்பு ஒரு புள்ளி என்றால், இறப்பு ஒரு புள்ளி. இந்த இரு புள்ளிகளை இணைக்கிற கோடுதான் வாழ்க்கை. அக் கோடு நெடியதாகவும் இருக்கலாம், குறுகியதாகவும் இருக்கலாம், வளைந்ததாகவும் இருக்கலாம், வலியதுவாகவும் இருக்கலாம். ஆயின் இருபுள்ளிகளுக்கிடையேயான கோட்டில் இருக்கிறது அர்த்தம். வாழ்வின் அர்த்தம்.

தனக்கான மரணத்தை ஒருவன் எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம், எதிர் கொள்ளலாம். அது விபத்தாகவோ, நோய் பீடித்ததாலோ அல்லது புறவுலகுப் பேரிடர்களாலோ அமைந்தும் விடலாம். சிலபோழ்து சிறப்பு நிகழ்வாய், இந்த மனித குலத்தின் மீதான, மக்கள் விடுதலையின் மீதான... பேரன்பும், மனிதகுல விடுதலையின் எதிரிகளின் மீதான... பெருங்கோபமும் கொண்ட தலைவர்கள், போராளிகள் அந்தச் சாவையே சாகடிக்கும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்வார்கள். வரலாற்று நெடுகிலும் இறவாப் புகழினைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வெய்து சாவையே சாகடிப்பார்கள்.

நோயோ, விபத்தோ அல்லது புறவுலகப் பேரிடரோ இவைகள் இயல்புதானென்றாலும், இவைகளால் ஏற்படும் மரணங்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது ஓர் அறிவார்ந்த மனிதகுலத்தின் பொறுப்பு. ஆனால், கொலை? கொத்துக் கொத்தாகக் கொலை, போர், அரச பயங்கரவாதம், மதஅடிப்படைவாதப் பயங்கரவாதம் என மனித குலத்தின் மீது... ஆதிக்கம், அதிகாரங்களினால் கட்டவிழ்த்து விடப்படும் உயிர்ப் பலிகளை நாம் எந்த விதத்திலும், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது, ஏற்றுக்கொள்ள முடியாது. இயற்கையோ செயற்கையோ எந்தவிதத்திலும், எந்த வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

இப்படியான தனக்கான மரணங்கள் இல்லாமல் பொதுவிற்கான மரணங்களையே நாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்கிற பட்சத்தில், ஆதிக்கங்களினால், அதிகாரங்களினால், அரச பயங்கரவாதங்களினால், மதஅடிப்படைவாதப் பயங்கரவாதங்களினால் செய்யப்படும் தொடுக்கப்படும், நிகழ்த்தப்படும் 'வன்மரணங்கள்', 'வன்உயிர்ப்பலி'களில், உயர்வு தாழ்வு பார்க்கிற மனநிலை இருக்கிறதே.... அப்பப்பா சகித்துக் கொள்ளவே இயலவில்லை.

நம் ஊடகச் சொல்லாடல் வெளிகளில், மொழிகளில், மொழிதல்களில் இத்தகைய மரணங்களைப் பற்றி எழுதுகிறபோதே, இது தலை காட்டிவிடுகிறது. எப்படி?

'எல்லையில் வீரர்கள் வீர மரணம்', 'சுவாமிகள் ஜீவசமாதி', 'மீனவர்கள் கடலில் சுடப்பட்டு சாவு'

இங்கு ஒரு மரணம், உயிர்ப்பலி... ஒரு சமயம் வீரமரணமாகிறது. ஒருபுறம் ஜீவசமாதியாகி முக்தியடைகிறது. சுடப்பட்டு சாவு என்கிறது. செத்தான் என்கிறது. ஆக, இங்கு வார்த்தையாடல்களிலேயே துவங்கிவிடுகிறது அசமத்துவம்.

அடுத்து, புல்வாமா, கார்கில் என்று நாடு பிடிக்கும் ஆசையில், ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆசையில் விளைந்த, எல்லை காக்கும் படையணி மரணங்கள். அத்தகைய மரணங்கள் மிக உன்னதமானவையாக, உயர்வானவையாகப் பொதுவெளிகளில் கொண்டாடப்படுகின்றன. 'தியாக'ப் பெருங்கதையாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன. அந்தப் படையணி வீரர்களின் ஒவ்வொரு உயிர்களும் மதிப்பு மிக்கது. எதன் பொருட்டும் எக்காரணங் கொண்டும், இழக்கச் சம்மதிக்க முடியாதது. அதில் இருவேறு கருத்துக்கள் எள்ளவும் நமக்கு இல்லை.

ஆனால், அதேசமயம்... இங்கு உள்நாட்டுக் கலவரங்களில், தடுப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் மரணிக்கும், அரச பாதுகாப்பு அமைப்புகளின் இயந்திரமான காவல்துறை வீரரின் மரணமும் ஒன்றாகவா பார்க்கப்படுகிறது? கொண்டாடப்படுகிறது? ஏன்? இந்த உயர்வு தாழ்வு? கொண்டாட்டங்கள்? கொண்டாட்டமின்மை?

நமக்கு இந்த 'எல்லைப் பாதுகாப்பு' என்பதில் நிறையக் கேள்விகள் எழுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, நாடு முழுவதிலும்தான் இருக்கிறதே தவிர, ஏதோ எல்லையில் மட்டும்தான் என்றில்லை. மேலும், உள்நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு, கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு சர்வத்தையும் அகலத் திறந்து வைத்துவிட்டு, உள் நுழைய விட்டுவிட்டு, ஊடுருவ விட்டுவிட்டு, எல்லையில் மட்டும் ஏனிந்தப் பாதுகாப்பு, பதட்டம்?

எமது கவியரங்க கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

"இங்கோ/ எல்லா புறத்தையும்/ அகலத் திறந்து விட்டு /யாரும் /எங்கும் /எப்போதும் /தடையின்றிச் சுரண்டலாம் /திமிர் நடை போடலாம். /அணு ஆயுதம் முதல் /ஈனுலை பேருலை முதல் /அன்றாட கீரை வரை /அந்நிய நிறுவனங்களுக்கு /அகலத் திறந்து விட்டு /இரும்புச் சட்டியை /தலையில் கவிழ்த்தி /ஓரிரண்டு இலைதழைகளை அதில் செருகி /எல்லைக் கோட்டில் /நட்டமாய் நிறுத்துகிறீர்களே /காக்க காக்க /யாரைக் காக்க? /இல்லை இல்லை. /ஏய்க்க ஏய்க்க /எங்களை ஏய்க்க. /கன ரக /தன ரக /பெரு ரக /சிறு ரக என /எல்லாத் தொழிலும் போக... /இப்போது /உப்பு புளி /மிளகாய் வற்றல் /வர்த்தகத்திலும் /பன்னாட்டு நிறுவனங்கள். /இனி /டாலரில் காய்கறி வாங்கலாம் /யூரோவில் கீரை வாங்கலாம் /மொத்தத்தில் /இளிச்சவாய் இந்தியாவை /இனாமாகவே வாங்கலாம்" - அகண்ட காவிரியும் ஆடுதாண்டும் காவிரியும்.

ஆக, காக்க காக்க? யாரைக் காக்க? இவை மட்டுமல்ல. வேறு பல கேள்விகளும் எழுகிறது.

மனித மற்றும் சூழலுக்கு எதிரான, ஸ்டெர்லைட் அபாயத்திற்கெதிராக, வாழ்வாதார உரிமைக்காக, தூத்துக்குடியில் சுட்டுக் கொல்ல‌ப்பட்ட 14 பேர்களின் உயிர்ப்பலி என்ன மட்டமானதா? அதற்கான கொண்டாட்டங்கள் எதுவுமிங்கே காணப்படுகிறதா? எங்கே? நெய்தல் வெளிகளில் சுட்டுக் கொல்ல‌ப்பட்ட 800க்கும் அதிகமான எமது மீனவர்களின் உயிர்கள் என்ன நாற்றமெடுத்ததா? எங்கே காணவில்லை கொண்டாட்டம்? உழுது உழுது, உழைப்பைச் சிந்திச் சிந்தி, கடைசியில் ஆதார விலைகூடக் கிடைக்காமல், வாங்கிய கடனுக்கு வட்டி குட்டி போட்டுப் பெருகிட, கருகிய தம் பயிரைக் கண்கொண்டு காணவொன்னாது, தம்முயிரை மாய்த்துக் கொண்ட, தற்கொலை செய்து கொண்ட, எமது உழுகுடிகளின் உயிர்கள் என்ன உளுத்துப்போனவைகளா?

இவைகள் மட்டுமல்ல. கிறித்தவ, இஸ்லாமிய மதச் சிறுபான்மையினர்களை அழித்தொழித்தல், பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில் நர மாமிச வேட்டை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கொல்லப்பட்ட 40 குழந்தைகள், பண மதிப்பிழப்பு என்கிற பெயரில் கொல்லப்பட்ட 117 பேர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் தொடங்கி... ரோகித் வெமூலா வரை... கொல்லப்படும் அறிவுத்துறையினர்.

போதும் போதும். பட்டியலிடப் பட்டியலிட... அடங்காது பெருகிக் கொண்டேயிருக்கும். இந்த உயிர்களுக்கு என்ன மதிப்பு? ஏன் தரப்படவில்லை உரிய மதிப்பு? ஏனிந்தப் பாரபட்சம்?

தொடுக்கப்படும், நிகழ்த்தப்படும், வன்மரணங்கள்... வன்உயிர்ப்பலிகளில்... உயர்வு தாழ்வு பார்க்கிற மனநிலையைச் சகித்துக் கொள்ளவே முடியாது நம்மால். இப்படியான அசமத்துவம் கொண்டதொரு நாட்டில், ஆகப் பெரியதான, அரியதான, போனால் திரும்பக் கிடைக்காத மனித உயிர்களுக்கு இங்கு சமத்துவமில்லை.

எனவே, மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லுவோம். வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். உயிர் என்பதும் எல்லோருக்கும் ஒன்றுதான். மரணம் என்பதுவும் எல்லோருக்கும் ஒன்றுதான். மனித மரணத்தில் மேல் கீழ் என்றெல்லாம் ஒன்றுமில்லை. உயர் மரணம், தாழ்வு மரணம் என்றெல்லாம் வேறுபாடுமில்லை. மரணம் மரணம்தான். சமம் சமம்தான்.

- பாட்டாளி