ஆற்றுப்படுத்துதல் என்பது நெறிப்படுத்துதல், வழிகாட்டுதல், ஆறுதல் நெறிகளை மொழிதல் என்றவாறு அமையும்.

ஆற்றுப்படையின் இலக்கணத்தை,

“கூத்தரும் பாணரும் பொநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்னபக்கமும்”.(தொல்.புறம்.36)

என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது. சங்ககால மன்னர்களும் வள்ளல்களும் தம்மை நாடிவந்த புலவர்கள், கூத்தர்கள், பாணர், பொருநர், விறலியர் போன்றோரை வற்கடக்(வறுமை, பஞ்சம்) காலத்தில் ஆதரித்தனர். தாம்பெற்ற பெரும்பயன் பிறரும் பெறவேண்டி, அரசர்கள், வள்ளல்களிடம் சென்று பொருள் பெற்று வந்தவர்கள் மற்றையோரையும் ஆற்றுப்படுத்தி, அவர்களிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இவ்வாறு ஆற்றுப்படுத்தியதை “ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றி” என்று காப்பிய விதி கவினுற மொழிகிறது.

ஆற்றுப்படை எனும் இலக்கிய மரபு மனித நேயம் கொண்ட மரபாகும். இஃது தமிழ்மொழி தவிர பிறமொழி இலக்கியங்களில் காணப் பெறவில்லை என்பர் அறிஞர்கள்.

ஆற்றுப்படை நூல்கள்:

thiruvalluvarதிருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மிலைபடுகடாம்), சிவக்கவிராயர் இயற்றிய திருவேலாற்றுப்படை, மேலும், திருத்தணிகை ஆற்றுப்படை, திருப்பாணற்றுப்படை முதலிய நூல்களிலும் ஆற்றுப்படைப் பண்புகள் காணப் பெறுகின்றன.

துயர் படுவோரை ஆற்றுதல் என்பதாகப் பொருள்தரும் ஆற்றுப்படை நூலாகும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். அஃது யாதெனில், முருகன் சூர்மாதடிந்த உக்கிர நிலையில் காணப் பெறுவதால் முருகனை ஆற்றுப்படுத்தல், துயர்படுவோரை முருகனிடம் ஆற்றுப்படுத்தல் ஆகிய இரண்டாகும் அது.

அஃதேபோல் வேலாற்றுப்படையும் ஆயின், பிற ஆற்றுப்படை நூல்கள் புரவலனிடம் இரவலனை ஆற்றுவிக்கும் முறையில் அமைந்துள்ளன.

இவ்வாறெல்லாம் ஆற்றுப்படை நூல்கள் இருந்த போதிலும், ஆற்றுப்படைக்கு அடிப்படையாவது சங்க இலக்கியத் 'தோழிகள்' மற்றும் தொல்காப்பியம் கூறும் 'வாயில்கள்' தான் என்ற நிலையில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை எனலாம்.

நெடுநல்வாடை இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து உறக்கம் இன்றி இருந்த தலைவியை (அரசியை)த் தோழியரும் செவிலியரும் ஆற்றி இருந்தனர், அவள் தம் மனதைத் தேற்றி இருந்தனர்.

“செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோர்என
உகந்தவை மொழியும்”. (நெடுநல்)

செம்முகம் கொண்ட செவிலியர் யாவரும் இன்முகத்தோடு இருபுறமும் நின்று, அரசனின் பிரிவால் வாடும் அரசியாரின் துயர் நீக்க அவளுடைய மனக்கவலை தீர நகைச்சுவைகளையும் பல நெடிய கதைகளையும் கூறி, அவளுக்கு ஏற்ற இதந்தரும் இனிய சொற்களைக் கூறி ஆற்றுவித்தனர். இஃதே போல் போர்ப் பாசறையில் தங்கியுள்ள அரசன் போரில் விழுப்புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி, வீரர்களின் விழுப்புண்களுக்கு மருந்திடுகின்றான்.

“தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (நெடுநல்:185:188)

இஃதூவூம் ஆற்றுப்படையாம்.

“நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின் தோழி அவர் சென்ற ஆறே” (குறுந் பாலை-37)

இதன் துறையாவது, தலைவன் கடிது வருவர் என்று தலைவியைத் தோழி ஆற்றுவித்தது. இதன் பொருளாவது பொருள் தேடச் சென்ற தலைவனை நெடிது நினைந்து துயர்மீள முடியாது தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் தோழிக்குத் தலைவி ஆறுதல் மொழிகளைக் கூறி ஆற்றுப்படுத்துகிறாள்.

தலைவர் நம் மீது மிக்க அன்புடையவர். அவர் பொருளீட்டச் சென்ற பாலை மிகக்கொடியது. அங்கு அவர் காணும் காட்சியால் உன்நினைவே மேலிடும். யாதெனில், பசியால் வாடும் பெண் யானைகளின் பசியைப் போக்க ஆண் யானைகள் தம்முடைய நீண்ட பெரிய துதிக்கைகளால் மெல்லிய கிளைகளை உடைய ‘யா’மரத்தின் பட்டையை உரித்து அதில் வரும் நீரைப் பருகக் கொடுக்கும். அதனைக் கண்டவுடன், அன்புடைய யானைகளின் செயல்களால் உன்நினைவு அவருக்கு வரும். அவர் உன்மீது விருப்பம் கொண்டு விரைவில் உன்னை வந்து தழுவுதலை உடையவராவார் என ஆற்றுவித்தாள்.

பொதுவாகவே, தோழியின் கூற்றாக அமைந்த சங்ககாலப் பாடல்களே ஆற்றுப்படை இலக்கியம் வளர அடிப்படையாக அமைந்தது எனலாம். இருப்பினும், நங்கிழவர் திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறளே யாவருக்கும் எவற்றுக்கும் ஆன ஆற்றுப்படை எனலாம். எவ்வாறெனில்,

இனிய உள ! – ஆக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று ! – என எல்லோரையும் ஆற்றுப்படுத்தும் திருக்குறளை 'ஆற்றுப்படை' எனலாமே?

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”. (1031)

உலகிலுள்ள எல்லா உயிர்களும் உழவரையே நம்பி வாழ்கின்றன. உலகம் உழவுத் தொழிலை நம்பியே உள்ளது. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். யாவருக்கும் உணவளிப்பவர். உழவர் யாரிடமும் யாசித்து நில்லாதார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

பலகுடை நீழலும் தங்குடைக் கீழ்க் காண்பர்
அலகுடை நீழலவர்” (1034)

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து !” (குறள்-1032),

உழவர்கள் உலகத்திலுள்ள யாவருக்கும் ஆற்றி இருந்து வேளாண்மை செய்து உணவளிப்பவராவர். அவர்கள் பல பொற்குடை, வெண்கொற்றக்குடை போன்ற சிறப்புகளோடு மக்களை அரசாட்சி செய்யும் மன்னர்கள் பலருக்கும் மன்னராக இருந்து உழவென்னும் தன்குடையின் கீழ் காத்து வருபவர்கள். அதனால் தான் நாம் உழவர் திருநாளாம் தைத்திருநாளைத் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடுகிறோம். இன்று முதல் திருக்குறள் 'உழவராற்றுப்படை' எனவும் பெயர் பெறட்டும். உழவர்களைப் பாதுகாக்கும் அரசு மட்டுமே உயரும். ஆற்றுப்படைக்கு அடிப்படை திருக்குறளே, உழவராற்றுப்படை ஆகும்.

“இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் !! – (1040)

உழவர்களே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் எக்காலத்திலும் உண்ணக் கொடுத்து உயிர் வாழச் செய்பவர்கள். ஆகவே, உழவை நாடியே அனைவரும் செல்லுங்கள் என்று திருவள்ளுவர் ஆற்றுப்படுத்துகின்றார். அஃது மட்டுமன்றி,

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்”. – (1039)

என்கிறார்.

வயல் சென்று உழவு செய்யாதவர்களை நிலமானது தன் கணவனை மனையால் (ஊடுவது) கோபிப்பது போலே கோபங்கொள்ளும். ஆகவே, நிலத்தை நாடி உழவுமேற் கொள்ள அனைவரும் செல்லுங்கள் என்று ஆற்றுப்படுத்துகின்றார் வள்ளுவர்.

அழுங்குழந்தையை ஆற்றுப்படுத்தும் தாய்கூட அக்குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடலில், “உழ்ழுழ்ழு..ழு..ழு..ழூ..லாயி..!” என்று இசைத்துப் பாடுதல் காண்கிலமோ? காண்கிறோம்! கேட்கிறோம் ! இவ்வோசையின் பொருள் உழு ! உழு! உழு!....ஆயி ! அழாதே.! நீ இப்போது குழந்தையாய் இருக்கின்றாய்.! வளர்ந்து பெரியாளாகி நிலத்தை உழுது பயிரிட்டு உலகிற்கே பசியாற்று என்பதே! திருக்குறள் முழுமையுமே உழவு என்ற அதிகாரத்தில் வைத்துப் பாடியுள்ளார். “உலகம் முதல் ஊடல் வரை” என்பது குறிப்பிடத்தக்கது.

- முனைவர் கா.காளிதாஸ், புதுக்கோட்டை-3