சில நாட்களுக்கு முன்பு, மதிமுக கட்சியில் பொறுப்பில்/அங்கீகாரத்தில் உள்ள ஒருவர் சாதி சங்க மாநாட்டில் பேசியதான கணொளியையும், அதன் எதிரொலியாக பல விமர்சனப் பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது.

இது மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்புகூட சில திமுக முன்னணி பொறுப்பாளர்களே சாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்டதையும் பார்த்தோம். இத்தகைய போக்குகள், நாங்கள் பெரியார் இயக்கத்தவர்கள், சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதையே கேள்விக்குள்ளாக்கும் என்பதில் அய்யமில்லை.

dravidian party leadersகட்சித் தலைமைகள் இத்தகைய ஆபத்தான போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இதை குணப்படுத்தாவிட்டால், கேன்சர் நோயாகி, கட்சியிலும், அரசியல், சமூகத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாதி சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்வதை திராவிடக் கட்சிகள் தடை செய்ய வேண்டும். அப்படி கலந்து கொள்பவர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்படவேண்டும். இதில் தடுமாற்றமோ, பாராமுகமோ இருந்தால், நாங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் என்கிற சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.

இந்தப் பெண்மணி தொடர்பான நிகழ்வில். அவர் கலந்து கொண்டது மட்டுமல்ல, அவர் பேசிய செய்திகளும் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கின்றது.

ஈழப் பிரச்சனையில் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும், தமிழினத்திற்குத் துரோகம் செய்தது வரலாற்றில் துடைக்க முடியாத களங்கம், அவமானம்.

அதனால், ஈழப்படுகொலையையொட்டி எழுந்த உணர்வலைகளால் உந்தப்பட்ட மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், கருணாநிதி, ஜெயலலிதா மீது கொண்ட (நியாயமான) கோபமானது, திராவிட இயக்கத்துக்கு எதிராக வலதுசாரி, சாதிய தேசியம் பேசுவோரால் மடைமாற்றம் செய்யப்பட்டது.

இவ்விரு கட்சிகளைத் தாண்டி, (2009க்கு முன்பான காலத்தில் இவ்விரு கட்சிகளும் கூட பலநேரத்தில் ஈழப் பிரச்சனையில் ஆற்றியிருக்கும் பங்கை மறுக்க இயலாது). ஈழப் பிரச்சனையில் பிற திராவிட இயக்கத்தவர்களின் பங்களிப்புகள், தியாகங்கள் சாதியைச் சுட்டி கொச்சைப்படுத்தப்பட்டன. மறைக்கப்பட்டன/மறுக்கப்பட்டன.

ஈழப் பிரச்சனையைத் தாண்டியும், தமிழ் மொழி, இனத்திற்கான அளப்பரிய பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன.

தட்டையாக சாதியைக் காட்டி, அவர்களின் பங்களிப்புகள் மட்டுமல்ல, அவர்களின் அடிப்படை தமிழின உணர்வே/அடையாளமே கேள்விக்குள்ளாயின.

வைகோ, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்களையே வெறும் சாதியைக் காட்டி, 'அவர்கள் தமிழரே இல்லை' என்பது, அவர்களே சொல்லாவிட்டாலும், தடுத்தாலும் அவர்கள் சார்ந்த சாதிகளில், சமூகத்தில் என்ன மாதிரியான உளவியல் போக்கை உருவாக்கும் என்பதை சாதி தேசியம் பேசுபவர்கள் புரிந்து கொள்வதில்லை.

அவர்களையே தமிழர் இல்லை என்றால், அவர்கள் சாதிகளைச் சேர்ந்த, நம்மைப் போன்ற சாதாரண மக்களின் அடையாளம், சமூக இருப்பு என்ன என்ற கேள்விகள் முன்நிற்கும்.

வர‌லாற்று, சமூக இயங்கியலில் தமிழ்நாட்டிலேயே தமிழர்களாக வாழ்வியல் சூழலை கைக் கொண்டுவிட்ட மக்களை, வற்புறுத்தி, வலிந்து அவர்களின் கடந்த காலங்களை தேடச் சொல்லும், நாடச் சொல்லும், அவர்களைத் தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தி, தனியாக அடையாளம் காணச் சொல்லும் உளவியல் போக்கில் கொண்டுவந்து விடும்.

அத்தகைய சாதிகளின், கடந்த காலத்தின் வேர்களை, பெருமைகளை (பெருமையா என்பது வேறு விசயம்) பேசும் போக்கு, சாதிய தமிழ்த் தேசியவாதிகளின் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி, அவர்கள் தங்களை, தனிசாதிகளாக, தங்களை பிறமொழியாளர்களாக, பிற இனத்தவராக அடையாளப்படுத்த முனைவது எதிர்கால நோக்கில் அவர்களுக்கே தீங்கானதாகும்.

இந்துத்துவவாதிகளின் போக்கும், அவர்களின் அவதூறு, வரலாற்று, சமூக இயங்கியலுக்கு எதிரான சமூக நெருக்கடிகள், உளவியல் தாக்குதல்கள் இசுலாமியர்களிடம் ஏற்படுத்தும் உளவியல் போக்கும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

இந்துத்துவ சங்கிகளின் தொடர்ச்சியான, இசுலாமியர்களின் இந்திய அடையாளங்களை, அவர்களின் பங்களிப்புகளை மறுக்கும்/மறைக்கும் போக்குகளும், விமர்சனங்களும், அவர்களை இந்தியர்கள் அல்ல, பாகிஸ்தானியர்கள் அல்லது பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என்பது போன்ற தொடர் அவதூறுகள், உளவியல் தாக்குதல்கள், இசுலாமியர்களிடையேயே அவற்றை ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை நம்பச்சொல்லும் மனநிலைக்கு கொண்டு செல்கின்றதை காண்கிறோம்.

அதன்மேல் எழுந்த உணர்வின் வெளிப்பாடாக, இசுலாமிய மக்கள் சிலரிடையே எழும் பாகிஸ்தான் ஆதரவு மனநிலையும், பதில் பயங்கரவாதங்களும் எழுகின்றன. இந்து-இசுலாமியர் என தீவிரமான பிளவை/பிணக்கை விரும்பும் இந்துத்துவவாதிகளின் நோக்கமும் அதுதான். அதற்கு சில இசுலாமியர்களும் இரையாகிப் போகின்றனர்.

சிறுபான்மையினரின் தீவிரவாதம்/பயங்கரவாதம் என்பது பெரும்பான்மையில் இருக்கும் சிறுபான்மை ஆதரவுப்போக்கை, நேசக்கரங்களை பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அது நெடுநோக்கில், இசுலாமியருக்கே தீங்கில் முடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இத்தகைய சிறுபான்மை மக்களிடையே எழும் கடும்போக்குகளை, எண்ணங்களை, அச்சிறுபான்மை இனத்திலுள்ள புரிதல் உள்ளவர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி கண்டிக்கவேண்டும், வெளிப்படையாக புறந்தள்ள வேண்டும்.

அதேபோன்றுதான் தமிழகத்தில் சிறுபான்மை மொழி சாதிகளைச் சார்ந்தோர் (அம்மொழியை வெறும் வீட்டு மொழியாக மட்டும்), சாதிய தமிழ்த் தேசியவாதிகளின் சதிக்கு இரையாகி, தமிழ் மொழி, இன ஒருமைக்கு எதிராகப் பேசுவது, செயல்படுவது என்பது நெடுநோக்கில் அவர்களுக்கே தீங்காக முடியும். அச் சாதிகளில்/சமூகங்களில் உள்ள புரிதல் கொண்டவர்கள் இத்தகையோரின் தமிழ் மொழி, இன விரோதக் கருத்துகளை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும், அவர்களைப் புறந்தள்ள வேண்டும்.

தங்களின் தமிழின அடையாளத்தை, அதற்கான பங்களிப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலமே சாதிய தமிழ்த்தேசியவாதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க முடியுமே தவிர, பதிலுக்கு தங்கள் சாதிப் பெருமைகளை பேசுவதன் மூலமோ அல்லது தாங்கள் பிற இனத்தவர்கள் என்பதன் மூலமோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில், இத்தகைய தமிழின, மொழி விரோதப் போக்குகள், செயல்பாடுகள் பெரும்பான்மை மொழியாளராக உள்ள சாதிகளில் உள்ள தோழமை அல்லது ஆதரவு சக்திகளை பாதிக்கும்/குறைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மொழி (தமிழை அனைத்து நிலைகளிலும் பேசும்) சாதிகளில் உள்ள ஆக்க சக்திகளும், இவ்வாறு சாதிய தேசியம் பேசும், அவ்வாறு பேசி, ஏற்பட வேண்டிய தமிழின ஓர்மையை பல நூற்றாண்டுகளுக்குப் பின் தள்ளும் சாதி தேசியவாதிகளை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும், புறந்தள்ள வேண்டும்.

வரலாற்று, சமூக, அரசியல் காரணங்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து, தமிழகத்தையே தங்கள் வாழ்விடமாக, தமிழையே தங்கள் வாழ்வியல் மொழியாக, சமூக மொழியாகக் கொண்ட மக்களை தமிழரில்லை என்பது இயங்கியலுக்கு, மனிதப் பண்பாட்டுக்கு எதிரானது. அவ்வாறு வாழும் கணிசமான மக்களைப் புறந்தள்ளுவதன் மூலம் ஏற்பட வேண்டிய தமிழின ஒற்றுமை கடும் பாதிப்புக்குள்ளாகிறது என்பதை சாதிய தமிழின உணர்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று, சமூகப் போக்கில், மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபிறகு தமிழ்நாடு என்பது தமிழர்களின் மொழி, இன, பண்பாட்டுத் தாயகமாகும் என்பது இயல்பானது, இயற்கையானது.

தேசியம் என்பது ஒரு வகையில் கற்பிதம் என்றாலுங்கூட, அதற்கான புற, அகச் சூழல்கள், காரணங்கள் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் உலகெங்கும் பல்வேறு மொழி, இன, மத அடையாளங்களையுமோ அல்லது பிற அடையாளங்களையுமோ அல்லது இவற்றில் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டோ பல்வேறு தேசியங்கள், தேசங்கள் கட்டியமைக்கப்பட்டோ, உருவான பிறகோ, அத்தகைய உணர்வின் அடிப்படையில், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான மொழி, இனக்கூட்டமாகிய தமிழர்கள், தங்களை ஒரு தேசிய இனமாக, ஒரு தேசமாக விரும்புவது, விளைவது இயல்பானது மட்டுமல்ல, இன்றைய அரசியல், பொருளாதார, சமூக சூழல்களில் தேவையானதும்கூட.

அத்தகைய மொழி, இன உணர்வு அடிப்படையில் ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய உணர்விற்கு பங்களிப்பதே ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

- ப.பூங்குமரன்