தமிழில் இலக்கணம் செய்த புலவர்கள், இந்நாட்டு உழைக்கும் மக்களின் உழைப்பின் போது, உழைப்பின் களைப்பைப் போக்க, அவர்கள் செவிவழி கேட்டு வழிவழி வந்த மொழிகளை வைத்தே இலக்கணம் செய்தார்கள்.

பொதுவாக, இம்மக்கள் ஏட்டில் எழுதாமல் இசையில் வழுவாமல் பண்களைப் பாடிவைத்தார்கள். கற்பனையில் உதித்த கட்டு (இசைமெட்டு), தாளம் இவற்றைக் கொண்டே பண் அமைத்தார்கள். பண்டு இசைத்த இசை இன்றுவரை இலக்கணமாய்த் திகழ்கிறது. இவற்றைக் கொண்டே இலக்கணம் செய்தார்கள்.

இலக்கணம் பெயர்க்காரணம்:

tolkappiar(இலங்கு + அணம் ஸ்ரீ இலக்கணம்) அஃதாவது, நாசித் துளைகளை நாவடைத்தும் திறந்தும் வெளிவிடும் காற்றின்(வளி) அளவு, இயங்கு இடம், அதனால், உண்டாகும் ஓசையின் இனிமைத் தன்மை இஃதே இலக்கணத்திற்குரிய இலக்கணம் ஆகும். இதனைத் தொல்காப்பியர்,

“உந்தி முதலா முந்து வளித் தோன்றித்

 தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

 பல்லும் இதழும் நாவும் மூக்கும்

 அண்ணமும் உளபட எண்முறை நிலையான்.

     மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்;”

என்பார். ‘செய்யுள்’ அல்லது ‘யாப்பு’ என்று அதற்குப் பெயரிட்டார்கள். (செய்தல், கட்டுதல்) மெட்டுக்கட்டுதல், யாத்தல் என்பது யாப்பு இலக்கணம். ஈண்டு, ‘யாப்பு’ எனினும் ‘பண்’ எனினும், ‘பாட்டு’, ‘தூக்கு’, ‘தொடுப்பு’ அல்லது ‘தொடர்பு’ எனினும் ஒக்கும்.

இசைத்தார் மெட்டும் இலக்கணக் கட்டும்:

பொதுவாகவே உழைக்கும் மக்கள் பாடிவரும் இசையில் இலக்கண மெட்டுக்கள் இயல்பாக, அவர்களது கற்பனையில் உதித்த வண்ணம் காணப் பெறுகின்றன. வெண்பா, ஆசிரியம், கலிப்பா, வஞ்சிப்பா இவைகளைத் தனக்கே இயல்பாகக் கொண்டு பாடப்பெறும் தொழிற்களப் பாடல்களை முன்வைத்தே இலக்கணிகள் இலக்கணம் செய்தார்கள். காட்டாக, தொன்று தொட்டுப்பாடிவரும் தொழிற்கள மெட்டுக்கள் இலக்கண நூல்களில் எவ்வாறு கூறப்பட்டு உள்ளன என்று காண்போம்.

வெண்பா: வெண்பா ஈற்றடி முச்சீரையும், ஏனைய அடிகள் நான்கு சீர்களையும் பெற்று ஈற்றில் உள்ள சொல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாறு வரும்.

குறள் வெண்பா: உள்@ர் உடுக்கடிப் பூசாரிபாடும் பாடலை இதற்குக் கூறலாம். முனிவர்கள் மொழியும் பாடல் அறம் பாடுதல் என்றனர் நம் தமிழ் மக்கள். பாடல் இதோ, வெளிப்படையாக வெள்ளந்தியாகப் பாடிய பாடல் வெண்பா எனப்படும்.

“என்னடா மலையாண்டி எதிரக்க வந்திருந்து

சொல்லடா இவனுக்கே குறி” (இது உடுக்கடிப்பாடல்)

இப்பாடல் பாடி இசைக்க இசைக்கருவி உடுக்கு. உடுக்கின் ஓசை(ஒலி)

இரெண்டுண்டு ரெண்டுண்டு ரெண்டுண்டு ரெண்டுண்டு

இரெண்டுண்டு ரெண்டுண்... டேய்..! 

இவ்வொலி உலகில் உண்மை, பொய் இரண்டும் உண்டென மொழிகிறது.

“மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்

அஞ்சொல் மடவாட் கருளு”(யாப்பருங்-63)

இப்பாடல் ஒரே பொருளைக் கொண்டு மேற்கண்ட பாடலுக்கு இலக்கியப் பாடலாக வந்தமை காண்க.

குறட்டாழிசை: குறள்வழிப் பிறந்த தாழிசை(இழுவை இசை).இதனை,

குறள் + தாழ் + இசை ஸ்ரீ குறட்டாழிசை எனலாம்.

“வெள்ளையம்மா என்னைப் பெற்றவளே! – அந்த

வில்பிரம்பை எடுத்து வாடி!” (இது உடுக்கடிப் பாடல்)

“அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி

மறுவறு பத்தினி போல் வயினிரே!” (இது இலக்கியப்பாடல்)

இப்பாடலுக்கு இசைத்து உடுக்கடியில் பெறும் ஒசை,

அங்குட்டும் இங்குட்டும் அங்குட்டும் இங்குட்டும்

வேலும் மயிலும் - வேலும் மயிலும்

(மேலும் + கீழும் ஸ்ரீ அங்குட்டும் இங்குட்டும் அல்லது வேலும் மயிலும்) இவ்வாறு குறுகிய, தாழ்ந்த இசையொலி உடையதாய்க் குறட்டாழிசை அமையும். இவ்வுடுக்கடிப் பாடலுக்கு வெறியாட்டுப்பெண் தலையை விரித்தாடுவாள்.

வெண்பாவிலமைந்த உடுக்கடிப்பாடல் இதோ!

               “கேளப்பாகுறியைக் கெழக்கே ஒரு ஆலமரம்

               ஆளமரத்து அடங்காச் செவிட்டு முனி: கண்டு

               நாளப்பா மூனாச்சு நளிருங் குளிராச்சு

               நுய்யன் அண்டிருக்கான் போ!”

- இப்பாடல் உடுக்கடிப் பூசாரி பாடும் பாடல், இஃது வெண்பா அமைப்பிலே அமைந்தது காண்க.

               “இன்றுசொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

               பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

               ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்

               மருவுமின் மாண்டார் அறம்!”

- இது இலக்கியப்பாடல் இவ்விரண்டு பாடலும் வெண்பாவின் அமைப்பு முறையில் உள்ளதை அறியலாம்.

நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த தொழிற்களைப்பாடல் மெட்டானது.

“ஏ..! தன்னனன்னே – ஏலெ...! தானேனன்னே !

அடி தானனன்னே - இந்தா..!வாங்கிப்பாடு!

என இவ்வாறு வரும் மெட்டானது

வள்ளி நல்ல – ஏ..மலைக்குறித்தி...!

வடிவேலவர்க்கு – தினை மாவிடிடி..!

அந்த வெள்ளிமலைக்கானலிலே

மான்வேட்டையாடி – நல்லாவாரரடி !”

என்று இன்றுவரை எழுதா மெட்டாய் இசைக்கப்படும் இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம் ஆகும்.

 ஐவகை அடியும் ஆசிரியக்கு உரிய

“அந்த வடியின் அயலடி சிந்தடி

 வந்தன நேரிசை யாசிரியம்மே (யாப்பாருங்கலக்காரிகை)

“ஈற்றதன் அயலடி ஒரு சீர்குறைய

நிற்பது நேரிசை ஆசிரியம்மே” (அவிநயனார்)

“இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்

நிலைக்குரி மரபினிற்கவும் பெறுமே” (தொல்:1319)

“வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே

வெண்பா விரவினும் கடிவரையிலவே”(பல்காயம்)

நேரிசை ஆசிரியப் பாவில் அமைந்த இலக்கியப் பாடலோடு ஒப்பிட,

“பகலேபல்பூங் கானக் கிள்ளை ஓப்பியும்

பாசிலைக் குளவி யொடு கூதளம் விரைஇப்

பின்னுப் பிணி அவிழ்ந்த நன்னெடுங்கூந்தல்

புனையீ ரோதி செய் குறி நசைஇப்

பூந்தார் மார்ப ! புனத்துட்டோன்றிப்

பெருவரை யடுக்கத் தொருவேல் ஏந்தி.

(தன்னனன்னே! – ஏலெ!-தானே நன்னே!

அடி தானனன்னே! - இந்தா...! வாங்கிப்பாடு!

இஃது நேரிடையாக ஆசிரியர் வினாவுதலும் மாணவன் விடையிறுத்தலும் போலமைந்ததால் இவ்வகை இலக்கணம் நேரிசை ஆசிரியம் என்றனர் இலக்கணப் புலவர்கள்.

நேரிசை ஆசிரியப்பாவில்:

குன்றக் குறவன் காதல் மடமகள்

வரையா மகளிர் புரையுஞ் சாயலள்

ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே

வஞ்சிப்பா:

“சிந்தடி, குறலடி என்றிரண்டடியான்

                              வஞ்சி நடக்கும் வழக்கினை யுடைய!”

என்று இலக்கணம் செய்தார் காக்கை பாடினியார். வஞ்சியர்(பெண்கள்) இரண்டிரண்டடியா அசைந்து நடப்பது போல் உள்ளதால் இது வஞ்சிப்பா எனப்படும்.இதற்குக் காட்டாகக் கீழ்வரும் அவலிடிப் பாடலைக் கூறலாம்.

               இவ்வகைப் பாடலானது பெண்கள் இருவர் அவலிடிக்கும் போதும் உலக்கையைக் கைமாற்றும் போதும் வினாவிடையாகப் பாடப்படும் பாடலாகும். அப்போது கீழமர்ந்து, அவல்கெட்டிபடா மலிருக்க ஒருத்தி தனது கையால் அவலைத் துளாவி உடைத்து விடும்போது” அடி! ஆமாஞ் சொல்லு”, அடி! அப்படிச் சொல்லு!” என்று அழுந்தப் பாடுவாள். இலக்கணத்தில் இஃதே “கூன்” எனப்படும். தனிச்சொல் தாளத்தோடு ஒன்றிவரப்பாடுவது இக்கூனே யாகும். அவலை இடிக்கும்போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உலக்கை மோதிக் கை உடைந்து போகும்.

அவலிடிப்பாடல் அல்லது உலக்கை சாற்றுப்பாடல்

  1. முதல் வஞ்சிப்பெண் : குத்தடிக்குத்தடி தையலக்கா..!
  2. இரண்டாவது வஞ்சிப்பெண் : குனிஞ்சுகுத்தடி தையலக்கா..!
  3. முதல் வஞ்சிப்பெண் : அத்தை மகன் வரும் ஒத்தடி பாத்து..!
  4. இரண்டாவது வஞ்சிப்பெண் : அசந்து குத்தாதே தையலக்கா..!

என்று பாடுவார் அவலிடிக்கும் பெண்கள்.

இதனை முன்னிறுத்தி எழுதப் பெற்ற இலக்கியப் பாடல் கீழ்க்கானுமாறு,

  1. மைசிறந்தன மணிவரை!
  2. கைசிவந்தன காந்தளும்!
  3. பொய் சிறந்தனர் காதலர்!
  4. மெய் சிறந்திலர் விளங்கிழாய்! - இஃது வஞ்சி அடிகளால் வந்த வஞ்சிப்பா ஆகும்.

கலிப்பா:

உள்ளம் மகிழ்வாகும்போது பெருந்தகையார் பெருமை, புகழ்சாற்றுவது: ஆடிப்பாடிக் கொண்டாடுவது கலிப்பா ஆகும்.

               கலிப்பாவிலமைந்த மாரியம்மன் பாடல், மெட்டுடன்

“அடி..!

தன்னனன்னே! நான னன்னே-எங்க முத்துமாரி ..அடி! நா வளருஞ்சோதி  எடுத்தாளாம் பூங்கரகம் சந்தனப் பூமாரி”

இஃது போலவே அடுக்கிக் கொண்டு

மாரியம்மனின் புகழ் சாற்றும் பாடல் கலிப்பா ஆகும். ஈண்டு, அடி..! என்பது கூனாக வந்தது. பாடுவர் இஃது

               உலகினுள்,

பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்: இருந்தகைய இருவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே, சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி உறுதகைமை உலகிற்கோர் ஒப்பாகத் தோன்றாவே”.

இக்கலிப்பாவின் அடிகளில் முதற்கண் ‘உலகினுள் எனச் சீர் கூனாய் வந்தது’

தமிழகத்து உழைப்பார் பாடல்களிலிருந்துதான் பண்கள், பாடல்கள், அவற்றுக்குரிய தாள ஒத்துக்கள் ஆகியனவற்றை இலக்கணம் செய்தனர் நம் இலக்கணிகள். குறிப்பாக, அணி இலக்கணம் முழுமையும் நம் நாட்டு எழுதப்படிக்க அறியாப் பாமர மக்கள் பாடிய பாட்டின் மெட்டுக்களே என்பதில் எவ்வித மாறுபாடுகளும் கிடையா ! அவையே பாமரப் பண்கள்’. அவை சங்ககாலத்திற்கு முன்பிருந்தே இன்றுவரை தொடர்ந்து பாடப்பெற்று வருவது என்பதால், தமிழ்மொழி ஓர் சிறந்த செம்மொழி என்பதில் ஐயம் உண்டோ? இதன்வழி இன்னும் ஆராய்வு செய்தல் வேண்டும்.

- முனைவர். கா.காளிதாஸ், புதுக்கோட்டை-3