சாதி மாறி காதலித்த காரணத்திற்காகவே காதல் இணையர் நந்தீஸ், சுவாதி ஆகியோர் சாதிய, மதவெறி கும்பலால் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் இதுவரை 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார்கள். நவம்பர் 10 அன்று தம்பியைக் காணவில்லை என சங்கர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2 நாட்களாகியும் கண்டுகொள்ளவில்லை காவல்துறை. ஆனால், கொலை நடந்தபின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவை அமலாக்கியது. இருந்தும் அக்குடும்பத்தினருக்கும் நந்தீஸ் சுவாதிக்கான நீதிக்காகவும் குரல் கொடுக்கும் இயக்கங்கள், உணர்வாளர்கள் சூடுகொண்டபள்ளிக்கு வந்துசெல்கிறார்கள். இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட நந்தீஸ் குடும்பத்தினரின் நிலை, அரசின் காவல்துறையின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது? முற்றிலும் வேறுவிதமான வடிவில் செய்யப்பட்டுள்ள இக்கொலையின் பின்னணி என்ன? என்பது குறித்து நிலவரம் அறிய சாதி ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக்கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர் குமார், மனித உரிமை ஆர்வலர்கள் ராஜவேல், சக்திவேல் ஆகியோர் 28.11.2018 அன்று சூடுகொண்டபள்ளி கிராமத்திற்குச் சென்று நந்தீஸ் குடும்பத்தினரையும், ஊர் பெரியவர்களையும் சந்தித்து உரையாடினோம்.

nantheesh familyசூடுகொண்டபள்ளி கிராமத்தை விசாரித்துக்கொண்டே செல்லும் வழிநெடுக மலைப்பாதைகள், ஒவ்வொரு கிராமத்தையும் கடக்கும் போதும் ஒரு பணப்பயிர் தோட்டங்கள் அதற்கான கட்டிடங்கள் தென்படுகின்றன. வழிநெடுக மார்பல் கற்களைத் தயாரிக்கும் கம்பெனிகள், கல்குவாரிகள், பாறையைப் பிளந்து கொண்டிருக்கும் வண்டிகள், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள வட இந்திய இளைஞர்களைக் காணமுடிந்தது. ஆனால் சுற்றுவட்டாரங்கள் முழுவதும் முதலாளியத்தின் பணப்பயிர் விவசாய உற்பத்தி முறை மேலோங்கியிருக்கிறது. சூடுகொண்டபள்ளியிலிருந்து 12 கி.மீ தொலைவிலேயே ஒசூர் நகரம் இருப்பதால் மக்களிடையே நகரவாழ்க்கைமுறை இருக்கிறது.

 சூடுகொண்டபள்ளி ஒரு பார்வை

 ஒசூர் தாலுகா, பலவனப்பள்ளி பஞ்சாயத்து, சூடுகொண்டபள்ளி கிராமத்தில் 40 குடும்பம் – வன்னியர், 10 குடும்பம் – குருமர், 15 குடும்பம் – நாயுடு, 10 குடும்பம் – பறையர், 2 குடும்பம் – அருந்ததியர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 80 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். கூலி ஏழைக்குடும்பங்கள் அதிகம் வசிக்கிறார்கள். மற்ற சாதி மக்களின் நிலங்களில் பட்டியலின மக்கள் வேலைசெய்துவருவது வழக்கம். அங்குள்ள மக்கள், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில எல்லைகளில் வாழ்ந்துவருகிறார்கள். அதற்கேற்றாற்போல் தாய்மொழியாக, தெலுங்கு, மற்றும் கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளைப் பேசக்கூடியவர்கள். மூன்று கலாச்சாரங்களோடும் பழகி வாழ்பவர்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்தவர்கள் அங்கு தெலுங்கு பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்ததால் முந்தைய தலைமுறைவரை தெலுங்கு கற்றவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்குமுன் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் வந்தபின்பு, இரண்டு தலைமுறைகள் தமிழ் கற்று எழுத படிக்க பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். கிராமங்கள்கூட ஊர், காலனி என்று தனியாக இல்லாமல் கலந்ததாக இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பறிவு, வேலைவாய்ப்பு இல்லாத கிராமமாக இருக்கிறது. அருகிலுள்ள பலவனப்பள்ளி கிராமத்தில் 5ஆம் வகுப்புவரை உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கும், அதற்கடுத்து 1கி.மீ தொலைவில் உள்ள வெங்கடேசபுரம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்குந்தான் வரவேண்டும். தற்பொழுதுதான் சூடுகொண்டபள்ளி கிராமத்திற்குத் தார்சாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூளகிரி, வெங்கடேசபுரம், அத்திமுகம், பலவனப்பள்ளி வழிப்பாதையில் உள்ள கிராமங்களில் ஒரு சில கட்சிக்கொடிகள், இஸ்லாமிய இயக்கங்களுக்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால், சூடுகொண்டப்பள்ளி கிராமத்தின் நுழைவில் எந்தக் கட்சிக் கொடிகளும் அடையாளமாக இல்லை. படித்த பட்டதாரிகள் இல்லாத கிராமமாக இருக்கிறது. அப்பகுதி மக்கள் ஆஞ்சநேயரை தெய்வமாக வணங்கிவருகிறார்கள். வாகனங்களில் குலதெய்வ படமான அனுமானை வரைந்துகொள்வது வழக்கமாக இருக்கிறது. இதுவரை அப்பகுதியில் ஆணவக்கொலைகளோ சாதி சண்டைகளோ வன்முறையோ நடந்ததில்லை என அப்பகுதி மக்கள் பதிவுசெய்தார்கள். இவ்வளவு நாள் இல்லாத சாதி மறுப்பு எதிர்ப்பு, கொலை இப்பொழுது ஏன் நடந்தது என்பதுதான் நாம் கண்டறிய வேண்டிய விசயம்.

முதலில் நந்தீஸ் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றோம். அவர்களிடம் பேசியபோது, நடந்த அத்தனை விசயத்தையும் பதிவுசெய்தார்கள். தம்மக்கா “எங்களுக்கு இரண்டு பையன்கள், ஒரு மகள் நாங்கள் கூலிவேலைசெய்துதான் வாழுறோம். நாங்க குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கிடையாது. இந்த நிலம் காணிப் பொறம்போக்கில் இருக்கிறது. கஷ்டப்பட்டுதான் பிள்ளைய வளர்த்துறோம். சுவாதி நந்தீசோட பழகுனது அவங்க வீட்டிற்கு தெரியும். இவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கினது எங்களுக்கே தெரியாது. கல்யாணம் நடந்தது தெரிந்தும் அமைதியாக இருந்தாங்க சுவாதியோட அப்பா, அம்மா. அவங்க அப்பா, அம்மாவும் செத்துப்போச்சுனு விட்டுடலாம்னு இருந்துட்டாங்க. கோபம் தணிந்து சரியாகிடும்னு நினைச்சு நாங்க ஏமாந்து இருந்துட்டோம். ஆனா, பெரியப்பாவும் அவங்க பசங்களும்தான் எங்க இருந்தாலும் கொன்னுபுடுவோமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. புள்ளைய இப்புடி அடையாளம் இல்லாம கொன்னுட்டானுங்களே“ என்றார். அத்தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி இன்றுவரை நந்தீஸ் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்கவில்லை. அதேபோல் திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் யாரும் இக்கொலையைக் கண்டிக்கவில்லை. அக்குடும்பத்தினரை நேரில் பார்க்க வரவில்லை என அப்பகுதி தோழர் நாகேஷ் பதிவு செய்தார்.

நந்தீஸ் வீட்டைக் கடந்துதான் சுவாதி வீட்டிற்குச் செல்லவேண்டும். சுவாதியின் குடும்பம் 3 ஏக்கர் நிலம் கொண்ட விவசாய குடும்பம். சுவாதி பி.காம் படித்திருக்கிறார். தமிழ் ஆங்கிலம் நன்கு தெரியும். அப்பா வன்னியர், அம்மா நாயுடு. இவர்கள் காதலிச்சு திருமணம் செய்து கொஞ்சகாலம் வெளியில்தான் இருந்திருக்கிறார்கள். தற்போது கைதாகியுள்ள குற்றவாளி பெரியப்பா வெங்கடேஷ் தான் அவர்களை அழைத்துவந்து ஊருக்குள் வாழவைத்திருக்கிறார் என்கிற தகவலை சங்கர் கூறினார். நாயுடு வன்னியரை ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பதால் சண்டையின்றி அதனை சரிசெய்துகொண்டனர். அதைத்தாண்டி ஒன்றும் பெரிதாக பின்னணி இல்லை. பெரியப்பா குடும்பத்திற்கு 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவர்களின் பிள்ளைகள் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்கள் என அறிந்தோம்.

பெரியவர்கள், மளிகைக் கடை பெண் ஒருவரிடமும் பேச்சுகொடுத்தோம். 

 தமிழகத்தில் முன்பு நடந்த ஆணவக்கொலைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னணியாக குடும்பங்கள் கௌரவத்திற்காக ஆத்திரத்தில் செய்யும் கொலையாக ஆணவக்கொலை நடந்தது. அண்மைய ஆண்டுகளில் நடக்கும் இத்தகைய கொலைகள் அரசியல் வடிவம் எடுத்திருக்கிறது. கொலை செய்யும் கும்பலுக்கு காவல்துறையின், அரசியல்வாதிகளின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆகையால், குடும்பம் மட்டுமின்றி அப்பகுதியில் செல்வாக்கு செலுத்தும் கட்சி மற்றும் சாதி சங்கங்கள் இந்துத்துவ மதவெறி கும்பல், உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து நபர்கள் இச்சம்பவங்கள் நடப்பதற்கு துணையாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் விட்டுவிடுவோம் என ஒதுங்கிச் சென்றாலும் அதைவைத்து ஆதாயம் செய்ய நினைக்கும் ஆதிக்க கும்பலால் தூண்டுதலின் பேரில் சாதிய வன்முறைகள், ஆணவக்கொலைகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நோக்கத்தில் கட்சி, சாதி மத சங்கங்கள் சூடுகொண்டபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்றதா? என அறிய முயற்சித்தோம்.

இந்த ஊரில் கட்சி கொடி எதுவுமில்லையா? எனக் கேட்டதற்கு, பெரியவர், இது இந்த கிராமத்தின் முடிவு. “இதுவரை எந்த சண்டையும் இங்கு வந்ததில்லை. காலங்காலமாவே இப்படி இருந்துட்டோம். நாலு சாதிங்க இருக்கோம். கட்சிக்கொடிங்க வந்தா ஆளாளுக்கு என் கட்சி உன் கட்சின்னு ஆரம்பிப்பாங்க. ஊரு ரெண்டுபடும். அப்படி வேணாமுன்னுதான் இந்த ஊர்ல இப்படி ஒரு முடிவு பண்ணியிருக்கோம். கட்சியில இருந்துக்கலாம் ஓட்டு போட்டுக்கலாம். ஆனால், எந்தக் கட்சி கொடிகளும் இங்கு வைக்கக் கூடாது. அதைவைத்து சண்டைகள் வருமுன்னு எதையும் வைக்கவிடல‘ என்று பேசிய பெரியவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதுபோலதான் 15 இளைஞர்கள் இணைந்து ஜெய்பீம் பேரவையை ஆரம்பித்தவுடன், அப்பகுதியில் நிகழ்வு ஏற்பாடு செய்த நந்தீஸ் உட்பட இளைஞர்களை அழைத்து ஊர் சார்பாக அறிவுறுத்தினோம்.“ அதனைக் கேட்டுக்கொண்டனர்.“ என்று பெரியவரும் சொன்னார். நந்திஸ் பெரியப்பாவும் இதனை நினைவுகூர்ந்தார். டீக்கடை வைத்துள்ள 45 வயது பெண் பேசும்போது, “இதுவரை இந்த மாதிரி ஒன்னு இங்கு நடக்கல. ஊரு நல்லாயிருந்துச்சு. இப்படி உலகமே இந்த ஊர தப்பா பேசும் அளவுக்கு நடந்திடுச்சு. இனிமேல் எப்படி ஆகப்போகுதோ“ என்றார். சரி, இப்படி இருந்த ஊருல ஏன் இந்த மாதிரி கொலை? சாதிப்பிரச்சனை? என்று கேட்டதற்கு, அரைகுறை வார்த்தையோடு விழுங்கி தயங்கி ஒரு வார்த்தையை விட்டார். “வந்தாங்க பிரச்சனை வந்துடுச்சி“ என்று சொல்லி சட்டென்று அமைதியாகிவிட்டார். திரும்ப கேட்டதும் பதிலே இல்லை. “அவங்க பழகனதும் தெரியாது. போனதும், கல்யாணம் பண்ணதும் எதுவும் தெரியாதும்மா““ என்று முடித்துக்கொண்டார். அவர்கள் பேசியதில் நந்தீஸ் சுவாதி குடும்ப சண்டையில் நமக்கு எதுக்கு வம்பு என்று கிராமத்தினர் யாரும் தலையிடவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.

 நந்தீஸ் சுவாதி காதல், திருமணம்

 நந்தீஸ் சுவாதியும் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். சுவாதி கிருஷ்ணகிரியில் விடுதியில் தங்கியபடியே கல்லூரியில் படித்துவந்திருக்கிறார். வாரத்திற்கு ஒருநாள் வீட்டிற்கு வந்து செல்வார். நந்தீஸ் ஒசூரில் மரக்கடை ஒன்றில் வேலைசெய்து வந்திருக்கிறார். அப்பொழுது இருவரும் பழக ஆரம்பித்துள்ளனர். 4 வருடங்களாக இவர்கள் காதலித்து வருவது சுவாதி வீட்டிற்கு தெரியவில்லை. கடந்த 2 வருடத்திற்கு முன்புதான் தெரிய வந்திருக்கிறது. 1 வருடத்திற்கு முன்பு, சுவாதியின் பெரியப்பாவின் பையன்கள் 5 பேர் நந்தீஸை அடித்து மிரட்டியிருக்கிறார்கள். சுவாதியின் குடும்பம், நந்தீசின் அம்மா, அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அம்மா, அப்பாவின் அறிவுறுத்தலுக்குப் பிறகு சுவாதியிடம் வரும் போன் அழைப்பை துண்டித்திருக்கிறார் நந்தீஸ். அதற்குப் பிறகு நந்தீஸ் சுவாதியைப் பார்க்கவோ, பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் எந்த சிக்கலும் செய்யாமல் சுவாதியின் பெரியப்பா குடும்ப பையன்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். சுவாதியோ நந்தீசை தேடிச் சென்று காதலை தொடர வலியுறுத்தியிருக்கிறார். “உங்கள் வீட்டில் மிரட்டுகிறார்கள். வேண்டாம்னு அம்மா பயப்படுகிறார்“ என சொல்லியிருக்கிறார் நந்தீஸ். அதற்கு சுவாதி, “அவர்களைக் கேட்டுதான் நாம் காதலிச்சோமா? நான் உன்கூடதான் வாழ்வேன்“ எனப் பேசி தொடர்ந்து முயற்சி எடுத்திருக்கிறார். சிறிதுகாலத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் பழகியிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் இருப்பதை கண்காணித்துக் கொண்டேயிருந்தவர்கள் பெரியப்பாவும் அவரது மகன்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்து வீட்டிற்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

 இதற்கிடையில் 3 மாதம் சுவாதி வீட்டில் வந்து தங்கியிருக்கிறார். சுவாதி வீட்டில் இருக்கும்போதே பெரியப்பா மகன்கள், மாமன்கள் சேர்ந்து நந்தீஸ் வீட்டில் நுழைந்து நந்தீஸ், அம்மா, அப்பா ஆகிய மூவரையும் கடுமையாக அடித்திருக்கிறார்கள். அவ்வாறு அடித்தும் நந்தீஸ் குடும்பம் புகார் கொடுக்கவில்லை அதனை அத்தோடு விட்டுவிட்டார்கள். இவர்கள் இங்கு வந்து அடித்ததைப் பார்த்த சுவாதி, வீட்டிலுள்ளவர்களிடம் கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். “அவங்கள எதுக்கு அடிக்கிறீங்க? அவங்களுக்கு எதாவது ஆகிவிட்டால் உங்கள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன்“ என எச்சரிக்கை செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் சுவாதியைக் கடுமையாக அடித்திருக்கிறார்கள். இதற்குப் பிறகுதான் நந்தீஸ் வீட்டில் இல்லாமல் ஒசூரிலேயே தங்கி சிவா ஆர்ட்வேர் என்கிற தனியார் கடையில் வேலைபார்த்து வந்திருக்கிறார். அடுத்து சில மாதங்களில் சுவாதி, “தோழி வீட்டிற்கு செல்கிறேன்“ என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதற்குப் பிறகு நந்தீஸ் வீட்டோடு அதிகம் தொடர்பில்லை. முழுக்க பணிபுரியும் முதலாளியின் உதவியோடு இருந்திருக்கிறார். 4 மாதத்திற்கு முன்பு பதிவுத் திருமணம் செய்திருக்கிறார்கள். சுவாதி “தங்களுக்கு ஏதும் நேர்ந்தால் இவர்கள்தான் பொறுப்பு“ என 15 பேர் கொண்ட பட்டியலை எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அதனைக் காவல்துறையிடம் கொடுத்து புகார் ஏதும் செய்யவில்லை. 4 மாதங்களானதால் நமக்கு எந்த சிக்கலும் வராது என்று அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டது தெரிய வருகிறது. அப்பொழுது சுவாதியின் அப்பா “அவள் செத்துப்போயிட்டான்னு நினைச்சுக்கிறோம், எங்காவது கெட்டுப்போகட்டும், விட்டுத்தொலையலாம்“ என பேசியிருக்கிறார். பெரியப்பாவும் மகன்களும்தான் இதனைத் தொடர்ந்து தொல்லைகொடுத்து தேடி வந்திருக்கிறார்கள். சுவாதி பெரியப்பா மற்றும் உறவினர்கள் நந்தீஸ் வீட்டு வழியாக செல்லும்போதெல்லாம், “எங்க வேணும்னாலும் போகட்டும் இருக்கட்டும் என்றைக்காவது அவர்களை வெட்டுவோம்“ உயிரோடு விடமாட்டோம் கொன்றுவிடுவோம்“ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சுவாதியின் அப்பாவைத் தூண்டியிருக்கிறார்கள். அவரும் தன்னிடம் இருந்த 3 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை 12 லட்சத்திற்கு விற்று அந்தப் பணத்தை கூலிப்படையாக செயல்பட்டவர்களுக்கு கொடுத்து அழைத்துச்சென்றிருக்கிறார்.

 சாதிய மதவாத சக்திகளின் கூட்டு முயற்சி

 நந்தீஸ் சுவாதி கொலை என்பது பெற்றோர்களால் ஆத்திரத்தில் கூலிப்படையை வைத்து கொன்ற கொலையாக மட்டும் தெரியவில்லை. குடும்பத்திற்கு வெளியே திட்டமிட்டு காய்நகர்த்தி மதச் சடங்குகளோடு நேர்த்தியாக செய்யப்பட்ட கொலை. நிச்சயம் வேறொரு வெளிப்புற அரசியல் கும்பலின் வழிகாட்டலின் அடிப்படையில் இக்கொலை நடந்திருக்கிறது. பாமக, ஜெய் அனுமன் சேனா, அதிமுக, கர்நாடகா ரெட்டியார் சங்கம் போன்ற சங்கங்கள் இவற்றிற்கு பின்புலமாக இருந்திருக்கிறது.

 குறிப்பாக இதுவரை நடந்த ஆணவக்கொலையிலேயே வித்தியாசமான கொடூரமான முறையில் பெண்ணுக்கு மதச் சடங்குகள் செய்யப்பட்டு கொன்ற கொலை இதுவே என்று கூறலாம். இந்துத்துவ மதவாத சக்திகளின் பின்புலமே இதற்குக் காரணம்.. இருவர் முகத்தை தீய்த்தது, கழுத்தை இறுக்கிக்கொன்றது, கட்டி ஆற்றில் அடையாளமின்றி தூக்கி வீசியது சுவாதிக்கு மொட்டை அடித்தது என கொலையின் வடிவங்கள் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. இன்னொன்று சுவாதியை மொட்டையடித்து அசிங்கம் செய்து ஏன் கொலை செய்யவேண்டும்? என்கிற கேள்வி எழுகிறது. சாதாரண மக்கள் என்றால் ஆத்திரத்தில் கொன்றுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இக்கொலையோ, திட்டமிட்டு முன்பாகவே இடத்தை பார்த்துவிட்டு வந்து அவர்களை சாதுர்யமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி சுவாதி என்கிற பெண் மீது வெறுப்பு இருந்ததற்கு காரணம், முதலாவதாக, வீட்டிலுள்ளவர்களைப் புகார் கொடுப்பேன் என மிரட்டியது, மிக முக்கியமான விசயம், 15 பேர் கொண்ட பட்டியலை எழுதி வைத்தது. அந்த பட்டியல் தற்போது காவல்துறையிடம் இருக்கிறது. இந்த வெறுப்புகளும் சேர்ந்து சுவாதியைக் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

 தருமபுரியில் பாமக எவ்வாறு தன் சாதி அரசியலுக்காக திவ்யாவின் அம்மா தேன்மொழியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து காய் நகர்த்தியதோ அதுபோன்று சுவாதியின் குடும்பத்தை சாதிய, மதவாத அமைப்புகள் கட்டுக்குள் வைத்து இக்கொலையை செய்திருக்கிறது எனத் தெரியவருகிறது.

 முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்படவில்லை

 இதுவரை கிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் 7 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இன்னும் பலர் சம்பந்தப்படிருக்கிறார்கள். இந்தகொலைக்கு உதவியதாக அத்தொகுதி எம்எல்ஏ அதிமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி சம்பந்தப்பட்டிருக்கிறார். அடுத்து, முக்கிய குற்றவாளிகளான பெரியப்பா, வெங்கடேஷ், பெரியப்பாவின் மகன்களான அமர்நாத் – 12ஆம் வகுப்பு, சுரேஷ் – எஞ்ஜினியரிங், ஆனந்த் – டிப்ளமோ, மற்றும் சுவாதிக்கு மாமன் முறையான ஆஞ்சி, மணிகண்டன், பி.காம் ஆகியோர் அனைவரும் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். இந்த இளைஞர்கள் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள இந்துத்துவ மதவாத அமைப்பான ஜெய் அனுமன் சேனா, அதன் இளைஞர் இயக்கமான யுவசேனா மற்றும் விஷ்வ இந்து பரிசத் ஆகிய இந்துத்துவ அமைப்பிலும் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இந்த அமைப்புகள்தான் இக்கொலைக்கு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறார்கள். மதவாத அமைப்புகள், அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் யார்? என்பதை காவல்துறை விசாரணைமூலம் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

 பலவனப்பள்ளி

 சூடுகொண்டபள்ளி கிராமத்திற்கு அடுத்து உள்ளது பலவனப்பள்ளி கிராமம். 150 வீடுகளைக் கொண்டது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் பாமக கட்சியில் இருக்கிறார். இவர், நந்தீஸ் சுவாதியைக் கடத்திச்சென்ற கார் உரிமையாளர், ஓட்டுனரும் அவர்தான். இவரின் காரில் பின்பக்கம் சிறிய அனுமன் படமும் ஒரு கொடியும், முன்பக்கம் பெரிய அளவில் அனுமன் படமும் இருப்பது தெரிகிறது.

 அடுத்து, புனுக்கனதொட்டி கிராமத்தில் நந்தீசுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருந்தவர்களில் மிக நெருங்கிய நண்பர் கிருஷ்ணன். (35) இவர் பாமக கட்சியின் பகுதி கிளைச் செயலாளர். இவர் வீர வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் சார்ந்த வீரவன்னியர் பிரிவினர் என்பவர்கள் சூடுகொண்டபள்ளி கிராமத்தில் நடக்கும் கங்கம்மன் தேர் திருவிழாவின்போது கத்தியைக் கொண்டு தம் நெஞ்சில் அடித்தபடியே ரத்தம் வழிய ஊர்வலமாக வரும் வீரவன்னியர் பிரிவினர் என அம்மக்கள் கூறினர். அவ்வாறுதான் அந்த ஊருக்கு வந்துபோவதுமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணனை வைத்துதான் நந்தீஸ் சுவாதியை வரவழைத்திருக்கிறார்கள். நண்பர் அழைக்கிறார் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நந்தீஸ் சென்றிருக்கிறார். சாமிநாதன், கிருஷ்ணன் மூலம்தான் கொலைக்கான ஏற்பாடும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இவர்களை ஒருங்கிணைத்தது மற்றும் மாண்டியாவில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்தது யார்? முக்கியப் புள்ளி யார்? என்பதும் வெளிவராத தகவலாக இருக்கிறது. காவல்துறைதான் இந்த உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஒரு விசயத்தை மக்கள் பதிவு செய்தார்கள் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி அதிகாரத்திற்கு வந்தபின்புதான் ஒசூரைச் சுற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளும், சாதிய ஒடுக்குமுறைகளும் அதிகரித்திருக்கிறது எனப் பதிவு செய்தார்கள். ஆனால் காவல்துறை இதுவரை எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டியை விசாரிக்கவும் இல்லை. விசாரணைக்கு முயற்சிக்கவும் இல்லை. மாண்டியாவில் உள்ள இளைஞர்களை இதுவரை கைதுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 சாதி அமைப்புகள், சாதிய சண்டைகள் இல்லாத சூடுகொண்டபள்ளி சுற்றுவட்டாரத்தில் இதை செய்வதன் நோக்கம் என்ன? எதற்காக? என்கிற கேள்வி இருக்கிறது. நந்தீஸ் சுவாதி கொடூர கொலை மூலம் அதற்கான அடித்தளத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. சாதிய, மதவாத அமைப்புகளை நோக்கி இளைஞர்களை அணிதிரட்ட, அமைப்பாக்கிட நந்தீஸ் சுவாதி திருமணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னொன்று நந்தீஸ் அணிந்திருந்த பனியனில் அம்பேத்கர் படத்துடன் கிராமத்தின் பெயர் இருந்ததால் கண்டுபிடிக்க முடிந்தது, நல்லதா போயிற்று என பார்க்கப்படுகிறது. இவ்வளவு கொடூரமாகக் கொன்றவன் ஏன் அந்த பனியனைக் கிழித்தோ அடையாளம் இல்லாமலோ ஆக்கவில்லை? முகத்தை அடையாளமின்றி அழிக்க நினைத்தவர்கள் ஊர் பெயர் பதவாகியுள்ள பனியனை மட்டும் விட்டுவைக்க காரணம்? இந்தகொலை பொது சமூகத்தினருக்கும் காதலர்களுக்கும், குறிப்பாக சூடுகொண்டப்பள்ளி பட்டியலின மக்களுக்கும் ஜெய்பீம் பேரவை இளைஞர்களுக்கும் விடப்பட்ட அச்சுறுத்தல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஜெய்பீம் பேரவை

 இன்னொன்று முக்கியமானது சூடுகொண்டபள்ளி கிராமத்தில் 15 இளைஞர்கள் ஜெய்பீம் பேரவை இயக்கத்தில் இயங்கிவருகிறார்கள். அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் 150க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் ஜெய்பீம் பேரவையில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் நினைவுநாட்களில் நிகழ்வு நடத்துவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜெய்பீம் பேரவை இளைஞர்கள் அம்பேத்கர் உருவம் பொறித்த நீல பனியன் அடையாளத்துடன் செயல்படுவது ஒசூர் சுற்றுவட்டாரத்தில் நெருடலாக இருந்திருக்கிறது. நந்தீஸ் இவற்றில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஒசூர் சுற்றுவட்டாரத்தில் விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தி.மு.க., அ.தி.மு.க போன்ற பல்வேறு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள் ஜெய்பீம் பேரவை என்ற குடையின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர். இன்னும் சிலர் மற்ற அம்பேத்கரிய இயக்கங்களிலும் இயங்கிவருகிறார்கள். ஜெய்பீம் பேரவையில் நந்தீஸ் அங்கம் வகித்தாலும் அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களிடமோ அங்கு செயல்பட்டுவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திடமோ இச்சிக்கலை கொண்டுபோகவில்லை. எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதைத்தான் நாம் யோசிக்கவேண்டும்.

 நந்தீஸ் சுவாதி கொலையில் சாதியவாத, இந்துத்துவ மதவெறி அமைப்புகள் பின்னால் இருப்பது உறுதியாகியிருக்கிறது. அரியலூர் நந்தினி முதல் உடுமலை சங்கர், சிவகங்கை தமிழ்ச்செல்வி, சாலியமங்கலம் கலைச்செல்வி, நுங்கம்பாக்கம் சுவாதி, மற்றும் இன்னும் வெளிவராத பலரின் கொலைகளில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தில், ஆணவக்கொலைகளில் இந்துமுன்னணி கும்பல் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தருமபுரியில் பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சியிலுள்ள இராமதாசு வகையறாக்கள் சமூகத்திலும் வன்னிய சமூக இளைஞர்களின் மனங்களிலும் விதைத்த சாதி விசம் இன்னும் வீரியத்துடன் வினையாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. சாதி ஆதிக்கமும் மதவெறியும் இணைந்து செய்யும் கொலைவெறிச்செயல் எத்தகைய கொடூரத்தோடு இருக்கும் என்பதற்கு நந்தீஸ் சுவாதி கொலையே ஆதாரம். சாதி அணிதிரட்டல் அரசியலை கையிலெடுத்துள்ள இராமதாசு இக்கொலையைக் கண்டித்து அறிக்கைவிட்டார். அறிக்கைவிடுவது முக்கியமல்ல. நந்தீஸ் சுவாதி கொலையில் பாமக வை சேர்ந்த கிருஷ்ணன், சாமிநாதன் ஆகியோர் குற்றவாளிகாக கைதாகியிருக்கிறார்கள் அவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவாரா? இவர் ஆணவக்கொலைக்கு பொறுப்பேற்பாரா? என்பதுதான் முக்கியம். மேலும் இளைஞர்களின் பள்ளி மாணவர்களின் மனங்களில் விதைத்துள்ள சாதிவெறி விசத்தை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

தருமபுரியில் 2012ல் 3 தலித் கிராமங்களை எரித்து சூறையாட பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். தன் வீட்டை தன்னோடு படிக்கும் சக பள்ளி மாணவனே அடித்து உடைத்த அந்தக் காட்சி சாதிக்கொடூரத்தின் சுவடு அறியா அந்தப் பிஞ்சு மனதில் எத்தகைய காயத்தை ஏற்படுத்தியிருக்கும்?! அந்த சூழலில்தான், தனியார் பள்ளிகளில் வன்னிய மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்துவந்தார் அமைச்சர் அன்புமணி. ஒவ்வொரு வன்னிய சமூக மாணவர்களும் நீ என்ன சாதி? என்ன ஊர்? எனக் கேட்டுத்தான் பழக ஆரம்பிக்கும் போக்கு தருமபுரி மட்டுமல்ல தமிழகம் முழுக்க தொற்றிக்கொண்டது. பிஞ்சு உள்ளங்களில் சாதியஉணர்வை விதைப்பதை தன் கட்சிப்பணியாக செய்தார்கள் பாம.கவினர். “என் நண்பன் என்னோடு பேச மறுக்கிறான் அப்பா, நீ வேறு, நான் வேறு என சொல்லி ஒதுங்கிப்போகிறான் ஏம்மா“ என அழுதுகேட்கும் பிள்ளைகளுக்கு பதில்சொல்ல முடியாமல் பெத்தவங்களும் சேர்ந்து அழும் அந்த நிலைக்கு யார் காரணம்? இன்றும் பாதிக்கப்பட்ட 3 கிராம மாணவ, மாணவிகள் வியப்போடு அதனை சொல்கிறார்கள். சமூகத்தின் இதுபோன்ற கேள்விக்கு சாதி அரசியல் செய்த இராமதாசுகளே பதில் சொல்லியாக வேண்டும்.

 நந்திஸ் சுவாதி கொலை நடந்த சில நாட்களிலேயே திருநெல்வேலியில் இசக்கிமுத்து என்கிற பட்டதாரி இளைஞரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டுசேர்ந்து கொலைசெய்த கொடுமை அரங்கேறியது. சாதிய வன்முறைக்கும் தாக்குதலுக்கும் அண்மைக்காலமாக பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இளைஞர்களிடையே கையில் வண்ணக் கயிறுகளைக் கட்டும் பழக்கத்தை கலாச்சாரமாக மாற்றியிருக்கிறார்கள். இத்தகைய உத்தியை சாதிவெறி கும்பல் திட்டமிட்டு நடைமுறையாக்குகிறது. அடுத்து தன் சொந்த சாதிப் பெண்ணை பலியாக்கியது. இன்றோ பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கிடையிலான காதல் தம்பதிகளையும் கொன்று புதைக்கும் சூழலுக்கு இழுத்துச்செல்கிறது. ஒவ்வொரு ஆணவக்கொலைக்குப் பின்னால் அப்பகுதியிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட காவல் அதிகாரிகள் இதற்குத் துணையாக இருப்பதால் ஆணவக்கொலைகள், முன்பைவிட அதிகரித்துவருவதற்குக் காரணமாகிறது. உதாரணம், சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை நேர்மையான முறையில் விசாரித்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்தின் மர்மங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டது. சென்னை சுவாதியின் கொலையில் அப்பாவி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம்குமார் பலியாக்கப்பட்டு அக்கொலைக்கு பின்னுள்ள ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிசத் அமைப்புகள்மீது ஐயம் எழுந்திருக்கிறது. இதனைத் தடுத்திட சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஆணவக்கொலைகளே நடக்கவில்லை என அதிகாரத்திமிருடன் பேசினார் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். சமூகத்தில் நடக்கும் இத்தகைய கொடூரத்திற்கு மெத்தனத்துடன் கண்டும்காணாமலும் இயங்கும் தமிழக அரசே முதல் பொறுப்பாளி என்பது அழுத்தமாக எழுப்பவேண்டிய கேள்வி. 

ஆணவக்கொலைகள்– நமது பார்வை

 ஆணவக்கொலைகள் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக குலம் மீறிய திருணமங்களுக்கு எதிராக நடந்துவருகின்றன. நமது கிராமத்தில் இருக்கும் பெண் தெய்வங்களிலும், சிறு தெய்வங்களிலும் சாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கொலைசெய்த ஆதிக்க சாதிய சமூகம் குற்றவுணர்வில் பாவமன்னிப்பு கேட்டு அத்தெய்வத்தையே வணங்கிவருவதன் விளைவாக உருவானதுதான். முத்துப்பாட்டன் தன் பிராமண அடையாளம் களைந்து அருந்ததியராக மாறி, அருந்ததியர் சமூகத்து பெண்ணை மணந்ததற்காகக் கொல்லப்பட்டதை நெல்லையில் வில்லுப்பாட்டாக மக்கள் இன்றும் பாடிவருகின்றனர். அடுத்து, தருமபுரி நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கொடகாரனையும் உடையார் சாதியைச் சேர்ந்த கொடகாரியையும் சாதிகௌரவத்தைப் பாதுகாக்க தீயிட்டு கொன்றிருக்கிறார்கள். இன்று கொடகாரியம்மன் திருவிழாவாக சனவரி மாதந்தோறும் விழா எடுத்து வன்னியர் சாதி மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் தெய்வமாக வணங்கிவருகிறார்கள். இதுபோல மாவட்டந்தோறும் ஆணவக்கொலை செய்யப்பட்ட தெய்வங்களின் கதை இருக்கிறது. காத்தவராயன், மதுரைவீரன் எனக் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் உண்டு. பல பெண் தெய்வங்களின் வரலாற்றை அறிந்தால் அதன் ஆழம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் நடந்த ஆணவக்கொலைகளுக்கான சமூகக் காரணியும், இன்று நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கான காரணிகள், சமூகத் தன்மைகள் வெவ்வேறானவை. சாதி ஆதிக்கமும் மூலதனமும், அதிகாரமும் இருக்கும் சக்திகள் இத்தகைய ஆணவக்கொலைகளுக்குப் பின்புலமாக இருக்கிறார்கள்.

இன்று மாறிவரும் சமூக பொருளாதார மாற்றங்கள், விவசாய நெருக்கடி, ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் கிராமப்புற கூலி சார்பு முறையில்லாமல் நகர்ப்புற வாழ்க்கைமுறையில் இணைதல், பொருளாதார வளர்ச்சி நகர்ப்புற நுகர்வு பண்பாட்டைக் கொண்டுவந்த அளவிற்கு, கிராமப்புற இரத்த உறவு குடும்ப அமைப்புமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாதது, பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப பண்பாட்டு உறவுகளில் ஏற்படும் மாற்றத்திற்கு சேவை செய்யும் அரசு, மற்றும் அரசியல் சக்திகளின் தலையீடின்மை, குறிப்பாக பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருதல். சுயமாக தன் வாழ்க்கை தேர்வைத் தேர்ந்தெடுத்தல், ஏற்பாட்டுத் திருமணங்களுக்கு மாறாக காதல் திருமணங்கள் அதிகரித்தல். வட்டார சாதிய பிற்போக்கு சங்கங்களின் இருத்தல் கேள்விக்குறியாதல். பெரும்பான்மை சாதியை அணிதிரட்டும் தேர்தல் அரசியல், கிராமப்புற நிலவுடமை ஆதிக்க கட்டமைப்பு உடைதல், நகர்மயமாதல், சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்தல். குடும்ப உறவுகளில் தளர்வு, முதலாளித்துவ நுகர்வு பண்பாடு, வாழ்க்கைமுறை, வேலையில்லா உதிரி பட்டாளங்கள் உருவாகுதல், இடப்பெயர்வு, அதிகரித்தல், புதிய உடைமை வர்க்கங்கள் நடுத்தரவர்க்கங்கள் உருவாகுதல் போன்ற பல அடிப்படையான காரணிகளோடு ஆணவக்கொலைகள் நடக்கின்றன.

 இராமதாசு தருமபுரி தலித் கிராமங்கள் எரிக்கப்பட்டு இளவரசன் கொல்லப்பட்டு தன் மகனை அமைச்சராக்கி வெற்றிபெற்றுவிட்டார். தமிழகம் முழுக்க அதனை நடைமுறையாக்கினார். பாமக மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளிலும் சாதிவெறி சக்திகள் பட்டியலின மக்களின்மீது தாக்குதலை தொடுப்பது, ஆணவக்கொலை செய்வது, சாதி மறுப்புக்காதலர்களை பிரிப்பது மக்களை மோதவிடுவது, அச்சுறுத்துவது என்கிற நோக்கத்தை செயலாக்கிவருகிறார்கள். பெரும்பான்மை சாதியின் வாக்குகளைப் பெறுவதற்கு இத்தகைய வன்முறைகளை அரசியலாக்குவது தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் செயல்படும் கொங்கு இளைஞர் பேரவை, தீரன் சின்னமலை பேரவை போன்ற சாதி அமைப்புகள் இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். அதற்கு உரம் போடும் உத்தியைத்தான் மத்திய பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நடைமுறைப்படுத்துகிறது. ஆக இதற்கு பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி அடங்கியிருக்கிறது. அதனை நாம் வெளிப்படையாக விமர்சிக்காமல் முக்கிய அரசியல் புள்ளிகளை, காவல் துறையைக் குற்றவாளியாக்காமல் மேம்போக்காக ஆதிக்க சாதிவெறியர்கள் கௌரவத்திற்காக கொலை என்று மட்டும் ஒற்றைப் பார்வையில் பார்ப்பது மிகவும் சிக்கலானது. இதற்கு சமூக பொருளாதார, அரசியல் ஆட்சியாளர்களின் பின்புலமும் காரணிகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

 தமிழகத்தில் முன்பை விட சாதி மறுப்புத் திருணங்கள் அதிகரித்திருக்கிறது. அவை பதிவுசெய்யப்படுவதில்லை. இன்னொன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சொந்த சாதியிலுள்ள பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொது சமூகத்தில் கலந்தவர்களாக மாறியிருக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அச்சாதியில் உள்ள ஆண்களை அந்த பெண்களே திருமணம் செய்துகொள்வதில்லை என்பதே தற்போதைய புள்ளிவிவரம். ஆண்கள் அதிகளவு படித்தவர்களாக இல்லாதிருப்பது, பொருளாதாரம் வேலை இல்லாதவர்களாக இருந்தால் அக்குடும்பம் மதிக்கப்படாதவையாக மாறிவிடுகிறது. அனைத்து சாதிகளுக்குள்ளும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நன்கு வசதிபடைத்த குடும்பம் என்றால் பல திருமணங்களில் சாதி இரண்டாம் பட்சமாகிறது. வர்க்க அந்தஸ்தும் இணைந்தே சாதியின் இருத்தலை தீர்மானிக்கிறது என்பது முக்கிய மாற்றங்கள்.

அதேபோல் அனைத்து சாதி மறுப்புத் திருமணங்களும் அழித்தொழிக்கப்படுவதில்லை. வட்டாரம், அரசியல் ஆதிக்கம், பொருளாதார நலன் ஆகிய ஏதோவொரு காரணத்திற்காக திருமணங்களைப் பயன்படுத்தி கொலை நடக்கிறது. அந்த சக்திகளை தனிமைப்படுத்தி மக்களிடம் சுமூக உறவை உருவாக்குவதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்து, மனித மாண்பை வளர்த்தெடுப்பதில நம் ஒவ்வொரு வருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த சாதிகளையும் எதிராக்குவது சாதிய அரசியலுக்குத்தான் வழிவகுக்கும். சாதிகளுக்கிடையில் மோதல் கலவரம் என்பது மாறி கலவரத்தை வன்முறையைத் தூண்டி அவற்றில் பலன் அடைவதற்கும் பேரம் பேசுவதற்குமான சாதிமுரணாக ஆளும் வர்க்கத்தால் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆக இதற்குபின்னுள்ள ஆபத்தை கவனத்தில்கொண்டு சனநாயக் சக்திகள் ஒன்றுபட்ட எதிர்ப்பை வளர்த்தெடுப்பதும், பின்புலமாக இயங்கும் சாதிய, மதவாத அமைப்புகளை, ஆதிக்க வன்முறையாளர்களை போராட்டத்தின்மூலம் தனிமைப்படுத்திடும் பணியை செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி சனநாயகத்திற்காக சக மனிதருக்காக நிற்கும் மனித மாண்பை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நம் முன் உள்ளது.

நமது கோரிக்கைகள்

  1. நந்தீஸ் சுவாதியைக் கொன்ற குற்றவாளிகள் யார் என்பதை வெளிக்கொணர சிறப்பு புலன்விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
  2. நந்தீஸ் சுவாதி ஆகியோரை கொலைசெய்த குற்றவாளிகளான ஜெய் அனுமன் சேனா, யுவ சேனா, பாமக பிரமுகர்கள், ரெட்டியார் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சாதிய, மதவாத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்.அதற்கு உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
  3. வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை, அரசு வேலையை உடனடியாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
  4. உள்ளூரில் சாதிய, மதவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் ஆதிக்க கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்.
  5. உடுமலை விமலாதேவி கொலைவழக்கில் 11.11 2014ல் வெளியான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பை மாவட்டந்தோறும் நடைமுறையாக்கு.
  6. பெண்களின் உரிமையை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு. 

ஆணவக்கொலைகளைத் தடுத்திட 11.11.2014ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் விவரம்

  1. பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழிகாட்டியதைப்போல, மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நல அலுவலர், மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக்குழு ஒன்றை அச்சுறுத்தலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகும் கலப்பு மணம் செய்த இணையர்களின் புகார்கள், மனுக்களைப் பெறுவதற்கு உருவாக்க வேண்டும்.
  2. அத்தகைய புகார்களைப் பதிவு செய்வதற்கும் பெறுவதற்குமான 24 மணிநேர உதவி மையத்தை உருவாக்க வேண்டும். மேலும் தேவையான அறிவுரை மற்றும் உதவிகளை செய்யவும் இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டும்.
  3. மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிஎன்எஸ் போர்டெல் வழியாக மின் இணைப்பு தொடர்பு இணைக்கப்பட்டிருப்பதா தெரிவதால் பாதிக்கப்பட்ட இணையர்களிடமிருந்து சேவை இணைப்பு வழியாகப் பெறக்கூடிய புகார்களுக்கும் கூட தானாகவே முதல் அறிக்கையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
  4. சேவை இணைப்பு வழியாகவோ அல்லது வேறு விதமாகவோ பெறக்கூடிய புகார்களையும் அவை பதிவுசெய்யப்பட்டதையும் அவற்றின்மீது காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கையையும் சீரான இடைவெளியில் கண்காணிக்கவேண்டும்.
  5. எந்த காவல்நிலையத்தின் எல்லைக்குள் இணையர்கள் வாழ்கிறார்களோ அந்த காவல்நிலையத்தின் அலுவலரின் கடமை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும். அத்தகைய பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, இந்த சிறப்புக்குழு சேவை இணைப்பின் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ பெறப்பட்ட புகாரை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இணையர்கள் இருக்கக்கூடிய நீதிபரிபாலன எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பவேண்டும்.
  6. சிசிடிஎன்எஸ் போர்டல் வழியாக இணைய வழி பதிவு சாத்தியமாயின், அதன் மூலம் குறித்த காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்புவது மிகவும் இலகுவாக இருக்கும்.
  7. இணையர்களின் வேண்டுகோள் சிறப்புக்குழுவால் குறித்த காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட தருணத்திலிருந்து அந்த இணையர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது அந்த காவல்நிலையத்தின் காவல்நிலைய அலுவலரின் கடமையாகும்.
  8. இச்சிறப்புக்குழு துன்புறுத்தப்படும் இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மற்றும் அவர்களை துரத்திக்கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு சுருக்கிக்கொள்ளாமல், இணையர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான உயிர்ப்பான முன்னெடுப்புகளை செய்யவேண்டும்.
  9. மாநில அரசு தேவையான நிதியை ஆணவக்கொலை எனும் தீமையை அழிப்பதற்கு ஒதுக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சிறப்புக்குழுக்கள் பயன்படுத்துவதற்கு என போதிய நிதியை உறுதிசெய்ய வேண்டும். இந்த நிதி இணையர்களுக்கு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்துவதற்கும் எங்கு தேவையோ அங்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் சிறப்புக்குழு பயன்படுத்த வேண்டும். இந்த சிறப்புக்குழுக்களுக்கு ஆலோசகர்களின் சேவையைப் பெறுவதற்கு ஏற்ற தற்சார்பு இருக்கவேண்டும்.

விரும்பத்தகாத நிகழ்வு ஏதும் நடக்குமாயின் இச்சிறப்புக்குழு இணையர்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிய அலுவலர்களை பொறுப்பேற்க செய்யவேண்டும். இணையர்களைப் பாதுகாக்கத் தவறியதை நன்னடத்தை மீறலாக பார்க்கவேண்டும். மாநில அரசு சிறப்புக்குழுக்களை உருவாக்கி மேற்சொன்ன நடவடிக்கைகளை மூன்று மாத காலத்திற்குள் செய்யவேண்டும்.