சமீபத்தில் தோழர் மதிமாறன் அவர்களின் தோசை பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிஜேபி, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு மதிமாறனைத் தாக்கினார். மதிமாறன் சொன்ன கருத்தில் முரண்பாடு இருந்தால், அதை தர்க்க ரீதியாக எதிர்க்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அவர் தோசையை சுடும் முறையில் சாதிய வேறுபாடுகள் இருப்பதாக சொன்னால், எந்த ஆதாரத்தின் அடிப்படியில் அப்படிச் சொன்னீர்கள் எனக் கேட்கலாம். அதுதான் சரியானதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு சம்மந்தமே இல்லாமல் பல தோசைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, இது எந்தச் சாதி தோசை எனக் கேட்பது ஆய்வறிவற்ற வறட்டுவாதிகளின் செயலாகும்.

dalit cookingபொதுவாக நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது ஏற்கெனவே நமக்குள் தீவிரமாக உருவாக்கி வைத்திருக்கின்ற கருத்தியலின் அடிப்படையிலேயே ஆராய்வோம். ஏற்கெனவே செய்து வைத்த செருப்புக்கு ஏற்றபடி பாதத்தை வெட்டிப் பொருத்தும் முயற்சி இது. ஆனால் இந்த முயற்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றிபெற்று விடுவதில்லை. இதைத்தான் வறட்டு கோட்பாட்டுவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். நாம் ஒரு பிரச்சினையை சாதியக் கண்ணோட்டத்தில் இருந்தும் அணுகலாம், வர்க்க கண்ணோட்டத்தில் இருந்தும் அணுகலாம். இந்திய சமூகத்தில் சாதியும், வர்க்கமும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றிணைந்து உள்ளது. இங்கே கோடிக்கணக்கான தலித் மக்களும், சூத்திர மக்களும் வறியவர்களாய் இருப்பதற்குக் காரணம், பார்ப்பனியம் அவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியைக் காரணம் காட்டி, அவர்களின் உழைப்பை சுரண்டியதே ஆகும். அதனால் தவிர்க்க முடியாமல் வர்க்கத் தட்டில் மேல் நிலையில் இருந்த ஆதிக்க சாதிகள் தங்கள் விரும்பும் உணவை சுவையாக தயாரித்து சாப்பிட்டதும், கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக மிகக் கீழ்நிலையில் திட்டமிட்டு வைக்கப்பட்ட சாதி மக்கள் கூழோ, கஞ்சியோ தான் குடித்து வந்தனர் என்பதும்தான் வரலாறு.

தலித் மக்களும், சூத்திர சாதியில் கீழ்நிலையில் உள்ள மக்களும் மிக மோசமான உணவை உண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர்கள் சாதியின் பெயரால் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளக்கப்பட்டதுதான். தமிழ் நாட்டின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன. அவற்றில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனதாகவும், ஒருவேளை சோற்றுக்கே தங்கள் மானத்தை விற்றுவிட்டதாகவும் கூட குறிப்புகள் உள்ளன. இன்றைக்கும் கூட சுவையான சைவ உணவு வகைகளைத் தயாரிப்பவர்கள் தஞ்சாவூர்ப் பார்ப்பனர்களும், அசைவ உணவு வகைகளைத் தயாரிப்பதில் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், இனிப்பு வகைகளை தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்களும், திருவையாற்றுப் பகுதிப் பார்ப்பனர்களும்தான் பிரபலமாக உள்ளனர். அதனால் சாதி என்பது உணவில் மிக முக்கிய பங்காற்றுகின்றது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகவும், சுகாதாரமாகவும் உணவை தயாரிப்பார்கள் என்றும், அதே போல தலித் மக்கள் மிக அசுத்தமானவர்களாகவும், தீட்டானவர்களாகவும் கருதப்படுவதால் அவர்கள் தயாரிக்கும் உணவு அசுத்தமானதாகவும், சுவையற்றதாகவும் இருக்கும் என்ற சிந்தனை நம் சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளது.

இயல்பாகவே கடும் உடலுழைப்பு சார்ந்து வாழும் மக்களான சூத்திர கீழ்சாதி மற்றும் தலித் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணவு சுவையைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. காலையில் பழைய சோறை குடித்துவிட்டு வேலைக்குப் போகும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு நாக்கின் ருசியைவிட வயிற்றுப் பசியே பெரியது. குடும்பத்தில் மனைவி, கணவன் என இரண்டுபேரும் வேலைக்குப் போகும் வீடுகளில் கூட காலையில் ஏதாவது கலவை சோறை தயாரித்து சாப்பிட்டுவிட்டு, அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு போகும் நிலைதான் உள்ளது. ஆற அமர உட்கார்ந்து மெலிதாக தோசை சுட்டு, இரண்டு சட்னி, சாம்பார் சகிதம் சாப்பிடும் பழக்கும் எல்லாம் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள குடும்பங்களிலும், கணவன் மட்டுமே வேலைக்குப் போய் சம்பாதித்தால் போதும் என்ற நிலை உள்ள குடும்பங்களில் மட்டுமே சாத்தியம்.

என்ன பிரச்சினை என்றால் பெரும்பாலான உடலுழைப்புத் தொழிலாளர்கள் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருப்பதுதான். அவர்கள் தங்களின் வீடுகளில் தங்களுக்கு உரிமையான தோசைக் கல்லில் மெலிதான மொறு மொறு என்று தோசையைச் சுட்டு, இரண்டு சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால் அதை யாரும் தடுக்க முடியாதுதான். ஆனால் அதற்கான சூழல் நிலவுகின்றதா என்பதே முக்கியம். இன்று உணவகங்களில் நாம் விரும்பிய தோசையை சாப்பிட முடியும் என்றாலும், தினம் 100 ரூபாய் கூலிக்கும், 200 ரூபாய் கூலிக்கும் மணிக்கணக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவகத்தில் போய் சாப்பிடுவது என்பது கூட ஆடம்பரம்தான். இதை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், சாமானிய மக்களோடு மக்களாக வாழ்பவர்களால் மட்டுமே முடியும். ஆனால் மூன்று வேளையும் கொழுத்துப்போய் தின்றுவிட்டு, எப்போது பார்த்தாலும் வறட்டு சித்தாந்தம் மட்டுமே பேசிக்கொண்டு, தங்களை மண்டைவீங்கி அறிவாளிகளாக காட்டிக் கொள்ள முற்படுபவர்களால் நிச்சயம் அதைப் புரிந்துகொள்ள முடியாது.

tamil brahmin foodதோசையை சுடுவதில் சாதி இருக்கின்றதா என்றால் நிச்சயம் இருக்கின்றது. மெலிதாக பத்து தோசையை சுட்டு சாப்பிட நேரம் இல்லாத, உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட மக்கள் மாவை அதிகமாக ஊற்றி அதை மூன்று, நான்கு தோசைகளாக அவசர அவசரமாக வெந்தும் வேகாமல் சாப்பிட்டுவிட்டு, அவதி அவதியாக வேலைக்கு ஓடும் மக்கள் பெரும்பாலும் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருப்பதால் நிச்சயம் தோசையின் தடிமனில் கூட சாதியும், வர்க்கமும் இருக்கத்தான் செய்கின்றது. சாதியையும், வர்க்கத்தையும் ஒன்றாக இணைத்துக் காணும்போதுதான் இதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஒருவேளை பொருளாதார தளத்தில் மேல்நிலையில் இருக்கும் தலித் மக்களுக்கும், சூத்திர கீழ்சாதி மக்களுக்கும் இது பொருந்தாமல் இருக்கலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒருவரின் சாப்பாட்டின் தரத்தை பொருளாதாரமே நிர்ணயிக்கின்றது என்பதும், பொருளாதார நிலையில் கீழ்நிலையில் உள்ள மக்கள் பெரும்பாலும் சுவையான உணவு வகைகளை சாப்பிட அவர்களது வாழ்வியல் முறை இடம் தருவதில்லை என்பதும், அப்படிப்பட்ட வாழ்வியலைக் கொண்ட மக்கள் பெரும்பாலும் இந்தியாவில் தலித்துக்களாகவும், சூத்திர கீழ்சாதி மக்களாகவும் இருக்கின்றார்கள் என்பதும்தான்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களை குறிப்பாக மாட்டுக்கறி தின்பவர்களை கீழானவர்களாக நினைக்கும் போக்கு இன்றும் உள்ளது. ஆனால் சாதிய கட்டமைப்பு வலுப் பெறாத அன்றைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன், நண்டு, கோழி, காடை, உடும்பு, பன்றி,யானை என அனைத்தையும் தின்றதாக சங்க இலக்கியத்தின் வழி நம்மால் அறிய முடிகின்றது. ஆனால் இன்றும் கூட சில வரலாற்றுப் புரட்டர்கள் தமிழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்று நாக் கூசாமல் புழுகுகின்றனர். சாதியக் கட்டமைப்பு என்று வலுவாக தமிழகத்தில் காலூன்றியதோ, அதுமுதல் அசைவ உணவு என்பது கீழான ஒன்றாகவும், அதைச் சாப்பிடும் மக்கள் கீழனாவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள். பின்னால் அதையே காரணமாக வைத்து அந்த மக்கள் உழைப்புச் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இன்றும் சாதியின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை என்பது பெரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகாமல் கட்டிக் காப்பாற்றப்பட்டுதான் வருகின்றது.

ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் சுரண்டப்பட்ட மக்களின் வாழ்வியல் முறை, ஆண்டாண்டு காலமாக ஆதிக்க நிலையிலேயே தங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் வாழ்வியல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. அதிகமான உடலுழைப்பையும், குறைவான வருமானத்தையும் பெற்றிருக்கின்ற மக்கள் இயல்பாக அதற்குள் வாழ்வதற்கு பழக்கப்பட்டு, அதுசார்ந்து தங்களின் உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மாற்றிக் கொள்கின்றார்கள். குறைவான உடலுழைப்பையும், அதிகமான வருமானத்தையும் பெற்றிருக்கின்ற மக்கள் அது சார்ந்து தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றார்கள். இரண்டு வாழ்க்கை முறைகளும் நேர் எதிரானது. இந்திய சமூகத்தைப் பொருத்தவரை நாம் வர்க்க அடிப்படையில் இருந்து மட்டும் ஒவ்வொன்றையும் அணுகாமல் சாதிய அடிப்படையிலும் அணுக வேண்டும். அப்போதுதான் தெளிவான ஒரு புரிதலுக்கு நம்மால் வரமுடியும். எனவே தோசை சுடும் முறையில் கூட சாதி இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

- செ.கார்கி