இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறை எதை அடிப்படையாக வைத்து நடக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. நன்றாக விளையாடும் வீரர்களை அணியில் தேர்வு செய்வது போல செய்து அவர்களை மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க மட்டுமே பயன்படுத்திவிட்டு, பிறகு அணியில் இருந்து கழட்டிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலருக்கு ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பளித்துவிட்டு அதில் சரியாக விளையாடவில்லை என்றதும் உடனடியாக கல்தா கொடுத்துவிடுகின்றனர்.

kohli and ravi shastriதிடீரென யோயோ என்று ஏதோ ஒரு தேர்வுமுறையை அறிமுகப்படுத்தி அம்பத்தி ராயுடு, ஷமி போன்ற இன்-ஃபார்ம் வீரர்களுக்கு முக்கியமான இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடமில்லை என்று இன்ஃபார்ம் செய்தார்கள். அங்கு சென்ற பிறகு அணியின் பர்ஃபார்மன்ஸ் எப்படி இருந்தது என்பதை நாடறியும். முச்சதம் எடுத்த கருண் நாயர் அதற்கு பிறகு எத்தனை டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவரே இதுகுறித்து புகாரும் தெரிவித்துவிட்டார். இப்போது நடந்து கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் கேதர் ஜாதவ் திடீரென கழற்றி விடப்பட்டுள்ளார். அவரும் தான் என்ன காரணத்திற்காக கழற்றி விடப்பட்டேன் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் எத்தகைய ஃபார்மில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல், துலீப் ட்ராபி என்று தொடர்ச்சியாக நல்ல ஃபார்மில் இருந்தவரைத்தான் இந்திய அணியில் தேர்ந்தெடுத்து அவ்வபோது வாய்ப்பும் வழங்கினார்கள். கிடைத்த வாய்ப்புகளில் சரியான பங்களிப்பையே அவரும் வழங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனியுடன் அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப்தான் அந்த போட்டியை வெல்ல பெரிதும் உதவியது. ஆனால் அதற்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவர் அணியில் இருந்து தூக்கப்பட்டார். இப்போது மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியிலும் அவர் இல்லை.

சென்ற உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் முகமது ஷமி. ஒருநாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர். உலகக்கோப்பைக்கு பிறகு காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாமல் இருந்தவர் குணமாகி வந்த பின்பு டெஸ்ட் வீரராக மாற்றப்பட்டார். ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாததற்கு யோயோ டெஸ்ட், மனைவியுடனான ப்ரச்னை என்று விசித்திரமான காரணங்கள் கூறப்பட்டன. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் கூட ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடப்பு மேற்கிந்திய தீவுகள் தொடரில் இடம்பெற்ற ஷமி இரண்டு போட்டிகளுக்கு பிறகு திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இத்தனைக்கும் முதல் இரண்டு போட்டிகளில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் வெற்றியை நோக்கி மேற்கிந்திய தீவுகள் வீறுநடை போட்டுக் கொண்டிருந்தபோது தனது 8வது ஓவரை வீசி வெறும் இரண்டு ரன்களே வழங்கி ரன்வேகத்தை கட்டுப்படுத்த உதவினார். அந்த ஓவரில் துல்லியமான நான்கு யார்க்கர் பந்துகள் வீசி சத நாயகன் ஷாய் ஹோப்பை திணறடித்தார். ஆனால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு இரண்டு போட்டிகளில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்ததுடன் கடைசி ஓவரில் 11 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல், கடைசி பந்தில் தேவையில்லாத அவுட்சைட் பந்து போட்டு பவுண்டரி வழங்கி மேற்கிந்திய தீவுகள் போட்டியை சமப்படுத்த உதவிய உமேஷ் யாதவ் அணியில் தொடர்கிறார்.

இந்திய ஏ அணிக்கு சிறப்பாக விளையாடியும் சிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஷ்ரதுல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கி அவரும் காயத்தால் முதல் நாளோடு விடைபெற்றார். அதற்கு பதிலியாகவும் யாரும் அணிக்கு அழைக்கப்படவில்லை. கலீல் அகமது ஆசிய கோப்பையில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ஹாங்காங்க்கிற்கு தடுப்பணை கட்டினார். ஆனால் அவரை அடுத்தடுத்த போட்டிகளில் உட்கார வைத்தார்கள். இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் இடம்பெற்றிருந்தவர் இரண்டாவது போட்டியில் ஓய்வறையில் இருந்து வேடிக்கை பார்த்தார். அநேகமாக அடுத்த இந்திய தொடரை டீவியில் பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம் அவருக்கு.

முன்பு போல இல்லாது இப்போது இந்தியாவில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் பலர் உருவாகிறார்கள். உறுதியான ஒரு அணியை தொடர்வதில் சிரமம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அது ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதும் அணிக்கு நன்மை தரக்கூடியதுதான். ஆனால் அதற்காக ஒரு வரைமுறை இன்றி இஷ்டத்திற்கு வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதும் வீரர்கள் மத்தியில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். தேசிய அணியில் விளையாடுவதை விட ஐபிஎல் போன்ற வியாபரங்களில் விளையாடுவதே மேல் என்ற மனநிலைக்கு வீரர்களை தள்ளிவிடக் கூடாது.

ஒரு வீரர் எதற்காக அணியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார், எதற்காக நீக்கப்படுகிறார் என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் ஷமி, கார்த்திக், ஜாதவ் ஏன் நீக்கப்பட்டனர், உமேஷ் ஏன் தொடர்கிறார் இவையெல்லாம் எம்எஸ்கே பிரசாத்திற்கும், ரவி சாஸ்திரிக்கும், கோலிக்கும் தான் வெளிச்சம்.

- அபுல் ஹசன்