ஒவ்வொரு நாளையும் வருத்தத்துடனும் சோகத்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களின் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து, உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு. சமூக வலைதளங்களின் வலையில் சிக்க மறுத்ததால் நான் புறக்கணிக்க வேண்டியவை தொலைக்காட்சியையும் நாளிதழ்களையும். இதுதான் எளிதாயிற்றே ! இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஆழ்மனதின் தூண்டுதலால் நான் மறக்க விரும்பிய அல்லது மறந்துவிட்டதாய் மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மனிதர்களையும் அவர்கள் தொடர்புடைய செய்திகளையும் பற்றிய நூல்களை உலகத் திரைப்படங்களை நாடிச் சென்ற மனதை நான் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன்.

eelam refugees 400‘அம்மனிதர்கள்’ – உலகத்துக்கானவர்கள். அடையாளம் தொலைத்து நிற்பவர்களை உலகம் தனது கதகதப்பான கரங்களால் வாரியணைத்துக் கொள்ள வேண்டாமா? அதை விடுத்து… ‘நாடற்றவர்கள்’ – இச்சொல் பிடிக்கவில்லை. அவர்களது இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பொருளில் விளிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அனைத்தையும் இழந்தவராகிறார்? யாருக்கோ யாருடனோ பிணக்கு. தமது நிலங்களை, அடையாளங்களை, உரிமைகளை மீட்டெடுக்கும் விடுதலைக்கான அறப் போர்; அதை எதிர்த்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர்; அதிகாரத்தின் தலைமையிடம் யாருக்கானது என்பதற்கான போர்; இயற்கை வளங்களை அபகரிக்கும் போர்; என்னுடைய கட்டுக்கதைதான் சிறந்தது என்று (உருவில்லா / உரு கொடுக்கப்பட்ட) கற்பனைகளின் பெயரில் நடக்கும் புனிதப் போர்…. இதில் முதல் பிரிவில் வரும் வணக்கத்திற்குரிய போராளிகளை விடுத்து இதர பிரிவுகளில் வரும்…… என்ன பெயர் சொல்லி விளிப்பது இப்பேய்களை ? அதிகார அட்டைகள், கண்றாவி கம்பிளிகள், பித்துப்பிடித்த பிசாசுகள்….. அடச்சே! இந்தக் கருமாந்திரங்களுக்கு ஏன் பெயர்சூட்டு விழா?

வேர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படும்போது உண்டாகும் வலிக்கு நிகரானது, பாதுகாப்பின் பொருட்டு வேர்களைத் தாமே உதறித் தள்ளித் தொலைக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது. இன / மதக் கலவரங்கள், போர், மனித உரிமை மீறல் மட்டுமல்ல….. பஞ்சம், இயற்கைப் பேரழிவுகள், நெருக்கடி நிலை, பிழைப்புக்கு வழியில்லாமை – இவற்றில் ஏதோ ஒன்று கூட மனிதர்களை வேறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்யலாம். இயற்கை பேரழிவுகள் தவிர்த்து மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள். வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் அந்தப் பயணமே அவர்களைப் பாதி கொன்றுவிடும். வான்வழிப் பயணத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் சாலை/தரை வழிப் பயணம் அல்லது கடல் வழிப் பயணம் என்ற யோசனைக்கே வந்து நிற்க வேண்டியிருக்கும்.

தரை வழிப்பயணம் : சுற்றி என்ன இருக்கிறது? வெளியே மழையா? வெயிலா? குளிரா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் இல்லாத அவர்கள் இடித்துப் பிடித்து அமர்ந்து முழங்கால்களுக்கிடையில் தலை புதைத்து, வழியில் எங்கேனும் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டு முகாமுக்கு அனுப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இரு கைகளாலும் படபடக்கும் நெஞ்சையும் உயிரையும் பிடித்தவாறே அந்த இருட்டடைந்த டிரக்கினுள் தம் வாழ்வு வெளிச்சத்தை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்ப விழைவது ….

கடல் வழிப்பயணம் : ஆழியினால் சூழப்பட்ட இக்கள்ளத் தோணி புணரியின் முனிவுக்கு இரையாகாமல் நல்லதொரு நிலத்தைக் கண்டடைய வேண்டும்; இத்தோணியில் இருந்து இறங்குகையில் தமது உடலில் உயிர் இருக்க வேண்டும்; அந்நிலத்தில் தமக்காகக் காத்திருக்கும் (கண்டிப்பாய்க் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்) நல்வாழ்வை இருகரங்களாலும் இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற வேண்டுதல்களால் நிரம்பியது கடல் வழிப் பயணம். இவ்வேண்டுதல்களைத் தாங்கிச் செல்லும் கனத்த இதயங்களின் சுமைகளைத் தாங்க இயலாமல் கொஞ்சம் தள்ளாடித்தான் போகும் தோணி.

‘வேறு வழியே இல்லை, உயிரை இழக்காதிருக்க மற்ற எல்லாவற்றையும் இழக்கத்தான் வேண்டும்’ என்று உணர்ந்த பின் புலம் பெயர வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் வலியை அவ்வளவு எளிதில் எழுத்தில் வடிக்க இயலாது.

தன்னை ஈன்றெடுத்த மண்ணை, தான் ஒவ்வொரு முறையும் தடுக்கி விழுந்த போது தாங்கிப் பிடித்த மண்ணை, நீண்ட நெடிய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் மண்ணை, அம்மண்ணுக்கே உரிய தனித்துவமான வாசத்தை, தனது உலகமாகிப் போன ஊரை, தன் ஊருக்கே உரித்தான மரம் செடி கொடிகளை, அவை வீசிய தென்றல் காற்றை, நீச்சல் பழகிய கிணற்றை, மீன் பிடித்த குளத்தை, குறுக்கும் நெடுக்குமாக வளைய வளைய ஓடி விளையாடிய ஒழுங்கைகளை….. நெருப்புக்கோழி முட்டை சமைக்கும் போதெல்லாம் தனது வீட்டுக்கும் கொடுத்து அனுப்பும் ஃபர்ஹானா அத்தையை, சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்த செழியன் அண்ணாவை, தினமும் மதிலின் மீது எட்டி எட்டிப் பார்த்து ‘டாட்டா’ சொல்லும் நிலா குட்டியை, ஒவ்வொரு ஈஸ்டர் திருவிழாவுக்கும் கேக் கொண்டு வரும் ஏஞ்சல் அக்காவை…. (இவர்களும்தான் சிதறப் போகிறார்கள் என்றாலும் கூட…) – இவ்வாறு எல்லோரையும் எல்லாவற்றையும் விட்டுச் செல்வது என்பது தன்னை இழப்பதுதானே?

புலம் பெயர்வது என்று முடிவான பின்னும் கூட அனைவரும் சேர்ந்து செல்லும் வசதியோ சூழலோ அமையாமல் போகலாம். ஒவ்வொருவராகச் செல்வது என்னும் முடிவு அதனுடன் எதிர்காலம் குறித்த நிலையற்ற தன்மையையும் அச்சத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரலாம். குடும்பத்தலைவர் தாம் முதலில் சென்று தம்மை அரவணைத்துக் கொள்ளும் ஒரு நாட்டில் தம்மை ஓரளவு நிலைபடுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை வரவழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பிச் செல்வாராய் இருக்கலாம். சென்றவரிடமிருந்து பல காலமாக ஒரு தகவலும் வராமல் போகையில், இவ்வுலகில் அன்னாரது இருப்புக்கான கேள்விகளை எழுப்பும் வலிமை இல்லாது அதையும் தாண்டி, ‘தாம் இப்போது வேறு இடத்திற்குப் புலம் பெயர்வதா ?’ அல்லது ‘அவர் வந்து தேடும் போது தாம் இங்கு இல்லாதது கண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார் ஆகையால் இங்கேயே கிடந்து உயிர் விடுவதா?’ என்னும் குழப்பங்கள் எழலாம். ஏனெனில் அக்குடும்பத்தையும் தலைவனையும் இணைக்கவல்ல ஒரே சாதனம் அவ்விடம் மட்டுமே.

‘இது தற்காலிகமான ஏற்பாடா?’ அல்லது ‘காலாகாலத்திற்கும் இங்குதானா?’ போன்ற கேள்விகள் தலையினுள் சுற்ற ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் முகாம் வாழ்விற்குப் பழக வேண்டும். அருவியில் களித்துக் குளித்துப் பெற்ற கட்டுக்கடங்காத உற்சாகத்தை ஒரு வாளித் தண்ணீரில் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். நதிக்கரையில் குப்புறப்படுத்து தலையை மட்டும் முழுவதுமாக நீரினுள் விட்டு மூச்சை அடக்கி வேண்டுமட்டும் நீரைப் பருகித் தீர்த்துக் கொண்ட தாகத்தை அன்றாடம் தரப்படும் ஒரு பாட்டிலில் தணித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மண்ணின் சுகந்தத்தின் மூலம் தன் வரவை முன்னரே அறிவித்து குதியாட்டம் போட வைத்த மழைக்கு இப்போது பயந்தே ஆக வேண்டும்…. டென்டிடுள் நீர் புகுந்து விடுமோ என்று. தமது செல்லப் பெயரின் மூலம் தமது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் பரிச்சயமாகிப் போனவருக்கு இப்போது தம்மை ‘அகதி’ என்று நிலைநாட்டிக் கொள்ள எப்போதும் நாற்பது ஐம்பது காகிதங்களுடன் இருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவர் தமது கையறு நிலையைப் பிரகடனப் படுத்த, அத்தியாவசப் பொருட்கள் வாங்க, பத்து டென்ட் கழித்து இருக்கும் தமது புதிய நண்பரைச் சந்திக்கச் செல்லுகையில் எதிர்ப்படுவோரிடம் காட்ட….. என எல்லாவற்றிற்கும் அவர் கையில் ஒரு கத்தைக் காகிதக் குப்பையைத் திணித்திருக்கிறது உலகம்.

ஏன் ? ஏன் ? ஏன் ? இவையெல்லாம் ஏன் நடக்கின்றன ? என்று உரக்கக் கத்திக் கேட்டாலும் சமாதானம் தரும் பதில் கிடைப்பதே இல்லை. இதற்குச் சமாதானம் தரும் பதில் என்று ஒன்று இருக்கவா செய்கிறது ? பூமிப்பந்தில் நாம் வரைந்து தொலைத்த அத்தனை கோடுகளையும் அழிப்பது மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறது. காகிதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வறட்டுச் சட்ட திட்டங்களை ஒழித்துக் கட்டி ‘மனிதர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கு எவ்விதத் தடையுமின்றி வசிக்கலாம். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை’ என்ற பொதுவானதொரு சட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?

இவ்வளவிற்கும் பெரும்பாலும் காரணமாகிப் போகும் அதிகாரப் பிரியர்களை வெறியர்களை வறுத்தெடுக்கும் உன்னதப் பணியை இதை விட கூர்மையான வலிமையான பேனாவிற்கு விட்டுவிடுகிறேன். எனது நோக்கம் உலகம் முழுதும் ஆங்காங்கே நிராதரவாகப் பரிதவித்து நிற்பவர்களை அணைத்து நம் மனங்களை (கொஞ்ச நேரத்திற்கேனும்) அவர்களோடு இருத்தி வைப்பது. இருப்பினும்….. மனிதத்தையும் மனிதகுலத்தையும் குலைத்துச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியாக முன் எடுத்து வைக்கும் சர்வாதிகாரிகளிடம் எதேச்சதிகாரிகளிடம் தீவிரவாதிகளிடம் ஒரே ஒரு கேள்வி – “என்னதான்டா வேணும் உங்களுக்கு?” 

- சோம.அழகு