இளைஞர்கள் நெசவுத்தொழிலுக்கு வரவேண்டும் என்று என்று கமல் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நல்ல செய்தி . வேலை வாய்ப்புகள் கைத்தறி நெசவில் கொட்டிக்கிடக்கின்றது.

handloomவிவசாயம் நலிந்து போன நிலையில் மண்ணைத்திங்கவா முடியும் என்று கேட்பவர்கள் நெசவுத் தொழிலை நினைத்துக் கொள்ளலாம். பின்பற்றலாம். பயிற்சி பெறலாம் . வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

கமல் செய்தி ஆறுதல் தருவகிறது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய வளர்ச்சி திட்டத்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதில் உள்ள புதிய விதிகள் கவலை தருகிறது. அரசின் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் குறைவாகவே உள்ளன. 99% தனியார் முதலாளிகளிடம் நெசவாளிகள் நெய்கிறார்கள். 1% மட்டுமே நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெய்கிறார்கள். தமிழகத்தில் 6. 5 லட்சம் நெசவாளர்கள் நெசவில் ஈடுபட்டுள்ளனர். 1150 கூட்டுறவு சங்கங்களில் இருப்போர் கணிசமே. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய வளர்ச்சி திட்ட்த்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கே ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தப்படும் என்ற சமீபத்திய தகவல் நெசவாளர்களுக்கு அதிர்ச்சி தருகிறது.. இதனால் நெசவாளர்களின் உற்பத்தித் திறன் குறையும். சுமார் 800 சங்கங்கள் இதன் மூலம் பயன் பெறாது. இந்த ஊக்கத்தொகை கூட ஊழலில் சென்றுதான் சேர்கிறது. நெசவாளர்கள் இல்லாமல் ஆவணத்தில் மட்டும் தறிகள் இருப்பதாகக் காட்டிக் கொண்டு பல நூறு சங்கங்கள் நடக்கின்றன. எல்லாம் ஊழல் மயம்.

ஆனால் தனியார் முதலாளிகள் தினம் ஒரு பட்டு கைத்தறி ஜவுளிக் கடையைத் திறக்கிறார்கள். விதவிதமான சேலைகள் தினமும் ஆயிரக்கணக்கில் நுகர்வுக்காக தயாரிக்கப்படுகின்றன. அரசு கடைகள், கூட்டுறவு சங்கங்கள் தினமும் மூடப்படுகின்றன.

வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் நெசவுத் தொழிலில் உள்ளன. ஆனால் இளைஞர்களுக்கு நெசவுத் தொழிலைச் சொல்லித்தர அரசு தரப்பில் பள்ளிகள், கல்லூரிகள் இல்லை. அப்பன் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக வருகிறது பெரும்பாலும். சாதிக்கு அப்பாற்பட்ட்த் தொழில் நெசவு. எந்த சாதியினரும் நெய்ய வாய்ப்பிருப்பது பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. இப்போது நெசவு செய்பவரகள் எல்லோரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே . இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் நெசவு செய்ய முடியாதபடி முதியவர்கள் ஆகிவிடுவார்கள். அப்படியே மெல்ல கைத்தறி அழியும். நெசவு நெய்ய ஆட்களைத் தேடவேண்டும். 

எல்லாவற்றையும் விசைத்தறி பார்த்துக்கொள்ளும் என்று நினைப்பது விவசாயப் பொருட்களை மறுத்து மண்ணைத் தின்பதற்கு ஒப்பாகும். வெயில் மழை வெள்ளம் என்று சிரமங்கள் இருந்தாலும் வீட்டில் நெய்யலாம். எந்த மோசமான சீதோஷ்ணநிலையும் ஓரளவே பாதிக்கும். ஓரளவு இலவசம் ஓரளவு நெசவாளர்களை முட்டாளாக்கியுள்ளது. முடக்கியுள்ளது. இலவசத்தில் வரும் பொருட்களை வைத்து சாப்பிட்டு சோம்பேறி வாழ்க்கை வாழ அதில் ஒரு பகுதியினரும் அக்கறை கொள்கிறார்கள். நெசவில் பருத்தி விளைவதிலிருந்து 300 பேர் ஒரு சேலைத் தயாரிப்பிற்காக ஈடுபட வேண்டியிருக்கிறது. ஒரு சேலை உருவாக அவ்வளவு பேர் ஈடுபட வேண்டியிருக்கிறது விவசாயத்திற்கு 10 ஏக்கருக்கு 4 பேர் போதும் என்ற நிலை வந்து விட்டது. விவசாயத்தில் எல்லாம் கணினி மயம் ஆகிக் கொண்டிருக்கும் சூழல். 

ஆனால் நெசவில் அப்படி இல்லை. பலரின் உழைப்பு தேவைப்படுகிறது, அந்த உழைப்பை இளைஞர்களிடம் கோருகிறது நெசவு. நல்ல வருமானமும் கொண்டிருக்கிறது.. பம்பர், கோரா, பட்டு போன்றவற்றில் நல்ல வருமானம் உள்ளது. கைத்தறியில் கொஞ்சம் குறைவே, நெசவை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலைவாய்ப்பை மனதில் கொண்டு இளைஞர்கள் இதில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.

கமலும் அவரின் இச்செய்தியை மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம் வலியுறுத்தலாம். (திரைப்படத்துறையினர் சொன்னால்தானே நம் இளைய தலைமுறை காது கொடுத்துக் கேட்கும்)

- சுப்ரபாரதிமணியன்