இந்தக் கேள்வி இன்று தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நமது அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் அரசியல் தலைமை சரியில்லை, அதனால் தலைமையை சரி செய்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற சிந்தனை பரவலாக நிலவுகிறது. நல்ல தலைமை முக்கியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் இது பல முக்கியக் கேள்விகளை மறைக்கிறது: ஒரு நல்ல தலைமையினால் சிக்கல்களை எவ்வளவு தூரம் தீர்க்கமுடியும்? ஒரு தலைமைக்கு சிக்கல்களைத் தீர்க்கும் அனைத்து அதிகாரங்களும் உள்ளதா? நல்ல தலைமையை எப்படி அடையாளம் காண்பது? நல்ல தலைமை மட்டும் போதுமானதா? நமது கருத்து தவறாக இருந்தால் என்ன ஆகும்? அவ்வாறு தவறாக இருந்தால், நமது சிக்கல்களைத் தீர்க்க உண்மையில் நாம் என்ன செய்யவேண்டும்? இன்றைய சூழலில் இக்கேள்விகள் மிக முக்கியமானவை, நமது எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியவை. அதனால் இவற்றை ஆராய்ந்து தெளிவான சிந்தனையுடன் செயல்படவேண்டியது அவசியமாகிறது. இக்கேள்விகள் மனித வரலாற்றில் புதிதானவை அல்ல. மேற்குலக தத்துவமேதைகள் பலர் இதைப்பற்றி ஏற்கனவே ஆராய்ந்துள்ளனர். அச்சிந்தனைகளைப் பகிர்ந்து நாம் செயல்படவேண்டிய முறையை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். எந்த ஒரு அறிவியல் கருத்தோ தத்துவமோ இறுதியானது அல்ல. இது நமது சிந்திக்கவேண்டிய திசையின் ஒரு ஆரம்பமே. இக்கட்டுரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகவும் எழுதப்பட்டது அல்ல. நமது சிந்தனைகளில் உள்ள பிழைகளை ஆராய்ந்து, புதிய மாறுபட்ட கருத்துக்களை விதைப்பதுதான் எனது எண்ணம்.

agitation

தலைமையின் சிக்கல்கள்:

நல்ல தலைமை அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் என்ற கருத்து பல கருதுகோள்களை (assumptions) நம்பியுள்ளது என்கிறார் கார்ல் பாப்பர் [1]. இவற்றின் உண்மைத் தன்மையையும் நிதர்சனத்தையும் ஆராய்வதன் மூலம், நாம் இக்கருத்தில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்ளமுடியும்.

  1. மக்களிடம் எது மாதிரியான தலைமை வேண்டுமென்று கேட்டால் நல்ல, அறிவுள்ள, துணிந்த, திறமை வாய்ந்த எனப்பல நற்பண்புகள் கொண்ட தலைமை வேண்டும் என்று தெளிவாகக் கூறுவார்கள். ஆனால் நிதர்சனத்தில் நடப்பது என்னவோ அது பெரும்பாலும் கனவாகவே அமைகிறது. பெரும்பாலும் அரசியல் தலைமைகள் அறிவிலும் அறத்திலும் நீதியிலும் சராசரி மனிதனைவிடக் குறைந்த பண்புகளே உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்கிறார் பாப்பர். வரலாற்று ரீதியாக பார்த்தால் அன்றிலிருந்து இன்றுவரை, அவ்வாறான புத்திசாலியான திறமையான தலைமைகள் தோன்றியது மிகக்குறைவே. மேலும் இன்றைய மக்களாட்சியிலும் நல்ல தலைமையை மக்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. நடைமுறையில் நல்ல தலைமை கிடைப்பது கடினம், மோசமான தலைமை கிடைப்பது எளிது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
  1. நல்ல தலைமைதான் முக்கியம் எனக் கருத்துபவர்கள் எண்ணும் ஒரு கருதுகோள் என்னவென்றால் அதிகாரம் என்பது முழு இறைமை (sovereign) கொண்டது, எல்லையில்லாதது, தலைவர் நினைத்தால் அனைத்தையும் செய்துமுடிக்கலாம்; அதனால் அனைத்து சிக்கல்களின் தீர்வுக்கு அடைப்படை தலைமை மட்டுமே. ஆனால் உண்மையென்ன?

இதுவரை உலகில் எந்த ஒரு அரசியல் சக்தியும் முழு அதிகாரம் படைத்ததாக இருந்ததில்லை. வல்லவனுக்கு ஒரு வல்லவன் இருப்பான். அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றை ஒன்று சமன்படுத்தி செயல்படுகிறது. அதனால் அதிகாரம் என்பது மட்டுப்படுத்தப் படுகிறது. மேலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மாநில அதிகாரம் ஏற்கனவே மிகக்குறைவானது. அதையும் மீறி கிடைக்கும் அதிகாரத்தை ஒரு தலைமையினால் முழுதுமாக பயன்படுத்த முடிவதில்லை. மேலும் கூட்டணிகள் அமைக்காமல் ஆட்சி பெறமுடியாது என்றால், அவர்களுடனும் அதிகாரம் பங்குபோடப்படும். ஒரு தலைமைக்கு பலமான நண்பர்கள், உதவியாளர்கள் என நிறைய இருப்பார்கள். அவர்களின் உதவியில்லாமல் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதால், அதிகாரம் அவர்களுடனும் பங்கிடப்படுகிறது.

  1. மக்கள் விரும்பி மோசமான தலைமைகளை தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது? வரலாற்றில் இதுப் பலதடவை நடந்துள்ளது. சிறந்த உதாரணமாக இட்லரை எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் தொடந்து திரைப்படத்திலிருந்து தலைமைகளைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனமும் உள்ளது. இது தொடர்ந்தால் என்ன செய்வது?
  1. ஒரு நல்ல வாய்ப்பில் நல்ல தலைமை அனைத்து அதிகாரங்களுடனும் கிடைத்துவிட்டது என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் காலப்போக்கில் அத்தலைமை பதவிக்கு மயங்கி சுயநலத்துடன் செயல்பட்டால் என்ன ஆவது? அப்படி ஆகாவிட்டாலும், அத்தலைமை தனக்கு பின்வரும் நல்ல தலைவர்களிடம் அதிகாரத்தை கையளிக்கவேண்டும். அப்படி இல்லாமல் தனக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு அல்லது வாரிசுகளுக்கு தலைமைப் பொறுப்பை அளித்தால் என்ன செய்வது? ஒருவர் பதவி கிடைத்தவுடன் என்ன செய்வார் என்று முன்கூட்டியே அறியும் திறன் யாருக்கும் இல்லை. பதவியைப் பெறுபவருக்கே அவர் எப்படி மாறுவார் என்று தெரியாது என்பதையும் மறுக்க முடியாது.
  1. நல்ல உள்ளம் கொண்டு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆண்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் அது போதாது. சமூகம் என்பது சிக்கலான அமைப்பு. நல்ல எண்ணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் நன்மையில் முடியும் என்ற எந்த உறுதியும் இல்லை. அவை மோசமான பாதிப்புகளை காலப்போக்கில் ஏற்படுத்தவல்லது. இதற்கு அடிப்படைக் காரணம் எவ்வாறு செயல்படுத்துவது என்ற முழுமையான அறிவு (knowledge) இல்லாமை. அதனால் நமக்கு அறிவுள்ள , தனக்கு எது தெரியும் எது தெரியாது என்று உணர்ந்து செயல்படும் தலைமை தேவைப்படுகிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் யார் மிகச்சிறந்த அறிவாளி என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. உலகம் தட்டை என்று நம்பும் உலகில், உலகம் உருண்டை என்று கூறினால் அவரை கல்லெடுத்து எறியும் நிலையிலே உலகம் உள்ளது. அறிவாளியை மக்களால் முன்கூட்டியே உணர்வது எளிதல்ல. மக்களால் யாரைப் புரிந்துகொள்ள முடிகிறதோ அவர்களையே தேர்ந்தெடுப்பர். அப்படிப்பட்டவர் அதிக அறிவுள்ளவராக இருப்பார் என்பதில் எந்த உறுதியும் இல்லை.
  1. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிளாட்டோ (Plato) இந்த சிக்கலை ஆராய்ந்து, ஒரு நாட்டை ஆள தத்துவமேதை தான் தேவை என்று முடிவுக்கு வந்தார். அதனால் மக்களாட்சியை வெறுத்தார். பிறப்பினால் மக்களை அவர்களின் "தன்மைக்கேற்று" மூன்று இனங்களாக “ஆட்சி”, “காவல்”, “ வேலை” என்று கடமை ஆற்றுவதற்கென பிரித்தார். “ஆட்சி” இனத்திற்கு கல்வி அளிக்கப்பட்டு அதிலிருந்து தத்துவமேதையை தேர்ந்தெடுத்து ஆட்சியளிக்கவேண்டும் என்கிறார். “வேலை” இனம் கல்வி இல்லாமல் அடிமைத்தொழில் செய்யவேண்டும். “காவலினம்” நாட்டைக் காக்கவேண்டும் என்று கூறுகிறார். இதுதான் சுருக்கமாக அவரின் "ரிபப்ளிக்"( Republic) நூலில் கூறும் கனவுதேசம். இது இந்தியாவில் ஒரு காலத்தில் நிலவிய சாதிய ஆட்சியைப் போன்றதே. "அறிவாளி" ஆளவேண்டும் என்ற எண்ணம் இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சிகளுக்கும் வழிவகுக்கும்.

நல்ல தலைமையப் பெறுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்பொழுது, "யார் ஆட்சி செய்வது?" என்ற கேள்வியை முக்கியமாக்குவது பொருளற்றது; அதனால் நாம் வேறுமாதிரியான கேள்வியைக் கேட்கவேண்டும் என்கிறார் கார்ல் பாப்பர்: மோசமான ஆட்சிகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து நமது சிக்கல்களைத் தீர்த்து முன்னேறுவது எப்படி? இதன் பொருள் நல்ல தலைமை தேவையில்லை என்பதல்ல. நாம் மோசமான தலைமை ஏற்பட்டாலும் எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொண்டு, அதே நேரம் நல்ல தலைமையை உருவாக்குவதை நோக்கியும் செயல்படலாம். அவ்வாறில்லாமல் நல்ல தலைமையை மட்டுமே நம்பி செயல்பட்டால் நாம் மோசம் போய்விடுவோம். அவ்வாறு செயல்பட என்ன செய்யவேண்டும் என பார்ப்போம். அதற்கு முதலில் ஒரு சமூகத்தின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான சில உண்மைகளை அறிந்து கொள்வது முக்கியம்.

ஒரு சமூகத்தின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை எது?

சரசுவதி சபதம் என்றொரு திரைப்படத்தில் கல்வியா, செல்வமா, வீரமா என்ற வாக்குவாதம் நடக்கும். முடிவில் அனைத்தும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடியும். இது பொதுவாக நமது பண்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம் என்றும் கூறலாம். ஆனால் இது உண்மையா?

புளொட்கின் [3] இதற்கு ஒரு தீர்க்கமான விடையைத் தருகிறார். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) என்கிறார். ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதே அதன் வாழ்வை தீர்மானிக்கிறது. தாவரங்கள், விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம், அதுதான் வித்தியாசம். இந்த அறிவின் தேவை உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரை ஒட்டிய அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். ஒரு தனிமனிதனின் வெற்றி, வணிக நிறுவனத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி உட்பட தீர்மானிப்பது அவ்வமைப்புகள் பெற்றுள்ள அறிவு. மனிதன் அடைப்படையில் நிலத்தில் வாழ்வதற்கென்று வடிவமைக்கப் பட்டாலும், அவனால் நீரிலும் வானிலும், விண்வெளியில் வாழ முடியும். இவ்வுலகம் உயிர்கள் வாழமுடியாதபடி வெப்பமடைந்தாலும், அந்தச் சூழலிலும் வாழ்வதற்கான அறிவை மனிதன் பெற்றுக் கொண்டால், அதிலும் செழிக்க முடியும். அடிப்படையில் மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அறிவு மட்டுமே. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்: அப்படியென்றால் ஏன் படிக்காத அரசியல்வாதிகள் எளிதாக வெற்றி பெறுகிறார்கள்? இதற்கு விடை என்னவென்றால், அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்கான அறிவு அவர்களிடம் இருக்கிறது என்பதுதான். அந்த அறிவு பள்ளி கல்வியில் கற்றத்தரப்படாதது.

இதிலிருந்து நமக்கு ஒரு அரசியல் பாடம் இருக்கிறது. ஒரு இனம் வாழ்கிறதா அல்லது அழிகிறதா என்பது அவ்வினம் பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமைகிறது. நமது சிக்கல்கள் அடிப்படையில் ஒரு அறிவுச் சிக்கல் என்று உணரவேண்டும். செல்வமோ, வீரமோ, நம்மை வெற்றிபெற வைக்கப்போவதில்லை. நாம் சந்திக்கும் சூழலுக்கு ஏற்ப நமக்கு அறிவு (knowledge) உள்ளதா என்பது மட்டுமே. உலகில் பலமான வல்லரசுகள் அந்நிலையை அடைவதற்கு அவைப் பெற்றுள்ள அறிவுதான் அடிப்படைக் காரணம். நம்மால் அறிவில் பின்தங்கிய ஆனால் முன்னேறிய நாட்டைக் காண முடியாது. அறிவு ஒரு சமூகத்தின் தற்காப்புக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை, மற்றவை அதற்குப்பின் வருபவை. 

தீர்வு என்ன?

நீண்டகால அரசியல் அனைத்தும் அமைப்பு ரீதியானவை என்பதை நாம் முதலில் அறியவேண்டும். (All long term politics are institutional) [1]. தனி மனிதனின் வாழ்வு குறுகியது, ஆனால் சமூகம் நீண்டகாலம் வாழ்வது. அனைத்து சமூக சிக்கல்களுக்கும் தீர்வு அமைப்புகளின் வழியேதான் தீர்க்க முடியும். ஒரு தனிமனித தலைமையால் மட்டும் முடியாது. அப்படி தொடர்ச்சியான நல்ல தலைமை வேண்டுமென்றாலும் அதற்கான கல்வி அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அதற்காக வெறும் அமைப்புகள் மட்டும் போதும் என்றாகாது. அமைப்புகளை நடத்த திறமையான மனிதர்களும் தேவை. அமைப்புகள் என்பது கோட்டைகள் போன்றது, மனிதர்கள் அதை நடத்துகிறார்கள். நல்ல மனிதர்களை உருவாக்க அமைப்புகள் தேவை, அதே நேரம் நல்ல அமைப்புகளை உருவாக்கி சீர் செய்ய மனிதர்கள் தேவை. அமைப்புகளும் மனிதர்களும் ஒன்றை ஒன்று நம்பி இருக்கின்றன [1].

ஆனால் எப்படி நல்ல அமைப்புகளை உருவாக்குவது? . நாம் சந்திரனுக்கு சென்று வருவதற்கான அறிவைப் பெற்றிருக்கிறோம். ஆனால் சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அவற்றில் ஏற்படும் சிக்கல்களை எப்படித் தீர்ப்பது, உலகத்தில் அமைதியை எவ்வாறு ஏற்படுத்துவது? என்ற சமூக கேள்விகளுக்கு நாம் முழு அறிவைப் பெறவில்லை, அவ்வாறு பெறவும் முடியாது. இது ஏனெனில் நமது அறிவு என்பது வளர்ந்து கொண்டே செல்வது. அதனால் புதிய கண்டுபிடிப்புகள் மாற்றங்கள் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இன்று வரும் கண்டுபிடிப்புகளின் சமூகத் தாக்கங்களையே நம்மால் அறிய முடியாத பொழுது, எதிர்காலத்தில் வரும் கண்டு பிடிப்புகளின் விளைவை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. சமூகம் என்பது தொடந்து மாறிக்கொண்டே தான் இருக்கும். நமது சமூக அறிவு என்பது எப்பொழுதும் அரைகுறை அறிவுதான். அதனால் நாம் உருவாக்கும் அனைத்து அமைப்புகளும் குறைபாடுகளுடனேயே இருக்கும். அவை அனைத்தும் தவறிழைக்கும் தன்மையைக் கொண்டவை. இவ்வாறான குறைபாடுகள் கொண்ட அமைப்புகளைக் கொண்டு எப்படி ஒரு நல்ல சமூகத்தை ஆட்சியை உருவாக்குவது என்ற கேள்வி எழுகிறது. இங்குதான் மேற்கத்திய தத்துவம் அருமையான தீர்வை முன்வைக்கிறது. தீர்வு இரு பாகங்களைக் கொண்டது:

  1. தவறுகளை கட்டுப்படுத்துதல் (Checks and Balances): நல்ல ஆட்சி நடைபெற தேவையக பாப்பர் கூறுவது என்னவென்றால் தனித்து இயங்கும் பல அமைப்புகளை உருவாக்கி, அவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி (Checks and Balances) ஆட்சி செய்யவேண்டும். ஒரு அமைப்புத் தவறிழைத்தால், மற்றொரு அமைப்பு அந்தத் தவறை தடுத்து நிறுத்தும், தவறினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும். ஒவ்வொரு அமைப்பும் தவறிழைக்கும் தன்மையுடையவை, ஆனால் சேர்ந்து இயங்கும் பொழுது தவறுகள் குறையும். இதன் அடிப்படையிலேயே மக்களாட்சி அரசியல் சித்தாந்தம் கட்டியமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் அரசு அதிகாரம் மூன்று பங்குகளாக அதிபர், மக்களவை, உச்ச நீதிமன்றம் என பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு அமைப்பு தவறிழைத்தால் இன்னொரு அமைப்பு தடுத்து நிறுத்தும். அதுபோக மக்களுக்கான கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பனவையும் தவறுகளை கட்டுப்படுத்துவதற்கு துணை புரிகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் தனித்து சுதந்திரமாக இயங்கும் தன்மை கொண்டுள்ள வரைதான் அவற்றால் பிழைகளைத் தடுக்க முடியும். அவ்வாறில்லாமல் அனைத்தும் ஒரு அதிபரின் கட்டளையின்படி நடக்கிறதென்றால், அந்நாடு விரைவில் சர்வாதிகார நாடாகி, பல கொடுமைகளை செய்து பிழைகளினால் தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்ளும்.
  1. சிறிது சிறிதாக முன்னேறுதல் (Piecemeal Engineering): எந்த ஒரு குறையும் அற்ற சிறப்பான சமூகத்தை அமைப்பதற்கான அறிவு நம்மிடம் இதுவரை இல்லை. மேலும் எதிரகாலத்திலும் இருக்கப்போவதில்லை. மனித சமூகம் நிலையான ஒன்று கிடையாது. அப்படியே வளராமல் ஆடு மாடுகள் போன்று நிற்பது அல்ல. சில நூற்றாண்டுகள் முன்வரை அறிவு வளர்ச்சி என்பது சமூகத்தில் பெரிதாக எதுவும் இல்லை. காலகாலமாக என்ன தொழில் செய்துவந்தார்களோ அதையே பரம்பரை பரம்பரையாக செய்து வந்தார்கள். மக்களும் ஆடு மாடுகள் போலவே அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அதுபோன்ற சமூகங்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து வந்தன. அவை நிலையான மாற்றமில்லாத சமூகங்கள் [2]. ஆனால் அறிவியல் புரட்சியின் பின் சமூகத்தில் அறிவு முன்னேற்றம் அதிவேகமாக நிகழ்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் அதிவேகமாக தோன்றி வருகின்றன. இவை எவ்வாறு மனித சமூகத்தை மாற்றி அமைக்கும் என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியாது. மேலும் இனிமேல் வரும் கண்டுபிடிப்புகளின் தாக்கம் என்ன என்றும் அறிய முடியாது. மேலும் நாம் எப்படி வாழவேண்டும், எது அறம் என்பனவும் மாறிக்கொண்டே செல்கின்றன. இவற்றை முன்கூட்டியே நம்மால் அறிய முடியாது. அவ்வாறு இருக்கும்பொழுது ஒரு சமூகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு நிரந்தர திட்டம் தீட்ட முடியாது. நமது அறிவு வளரவளர, அதனைக்கொண்டு நமது சமூகத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற ஆராய்ந்து தொடர்ந்து மாற்றிக்கொண்டேதான் செல்லவேண்டும் [2]. அவ்வாறு செய்யாமல் மாறாத சமூகங்கள் காலப்போக்கில் அழிந்துதான் ஆகவேண்டும்.

சமூகத்தை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் மாற்ற நினைப்பதில் பெரிய சிக்கல்கள் உள்ளன. அவ்வாறு செய்வதற்கு நமக்கு அறிவு போதுமானதாக எப்பொழுதும் இருக்கப்போவதில்லை, மேலும் அறிவு வளர்ந்து கொண்டே செல்வது. அதனால் ஒட்டு மொத்த மாற்றம் என்பது ஆபத்தானது. இது சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய சிக்கல்களை உருவாக்கும். உதாரணமாக சோவியத் கம்யூனிசப் புரட்சியில் ஒட்டுமொத்த மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அதனால் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. அதனால் லெனின் ஒரு "புதிய பொருளாதாரக் கொளகையைக்" கொண்டு வந்தார். இதன் மூலம் எதை ஒட்டு மொத்தமாக முதலில் அழித்தார்களோ, அதை (சந்தை, பணம்) மீண்டும் கொண்டு வந்தார்கள். ஒட்டுமொத்த மாற்றம் என்பது அடைப்படையில் ஆபத்தான தவறான கொள்கை.

மாற்றத்தை பெரிய இழப்பில்லாமல் செய்வதற்கு சிறிது சிறிதான மாற்றங்களே சிறந்தது. இந்த முறையில் ஒரு சமூகத்தை முற்றிலும் மாற்ற எந்த ஒரு முழுத்திட்டமும் கிடையாது. அதற்கு மாறாக சமூகத்தில் சிக்கல் எங்கே ஏற்படுகிறதோ, அவற்றை ஆராய்ந்து அதைத் தீர்க்க முயலவேண்டும். சமூக அமைப்புகளில் சிக்கல்கள் இருந்தால், அவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக மாற்றுவதற்கு திட்டமிடப்படும். உதாரணமாக கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறான மாற்றத்தில் தோல்விகள் ஏற்பட்டால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக் குறைவாகவே இருக்கும். அதனால் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை. அவ்வாறான தோல்விகள் நமது பிழைகளை கற்றுக்கொள்வதற்குப் பயன்படுவதால், அடுத்த முயற்சி வெற்றியடைய வாய்ப்பு அதிகரிக்கிறது.. உண்மையில் இவ்வாறான பல சோதனைகள் மூலமே நாம் சிறந்த அமைப்புகளை உருவாக்குவதற்கான அறிவைப் பெறமுடியும். இந்த முறையில் காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப சமூக அமைப்புகளை நாம் மாற்றிக்கொண்டே முன்னேறிச் செல்லலாம். இது அறிவியல் முறைக்கு ஏற்ற செயல்பாடு, அதனால் அறிவியல் முறையை அரசியலிலும் பின்பற்றலாம்.

சிலர் கேட்கலாம்: சிக்கலான எந்திரங்களான விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை முழுத் திட்டமிடல் கொண்டு கட்ட முடியும்பொழுது, ஒரு சமூகத்தைக ஏன் கட்ட முடியாது? இதற்குக் காரணம் என்னவெனில் ஒரு கப்பல், விமானம் கட்டுவதற்கான அறிவு சிறிது சிறிதாக பல சோதனைகள் மூலம் ஏற்கனவே அறியப்பட்டுவிட்டது. ஒரு சமூகத்தை அவ்வாறு கட்டமைக்க முழு அறிவு கிடையாது. அதையும் நாம் சிறிது சிறிதாக சோதனைகள் செய்தே கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு சிறிது சிறிதான சமூக மாற்றங்களே உதவும். இவ்வுலகில் அனைத்து அறிவும் சோதனைகள் மூலம் சிறிது சிறிதாகப் பெறப்பட்டவையே. இதை விட்டால் வேறு வழியில்லை.

இந்த முறையில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், நாம் இவ்வுலகைப்பற்றிய அறிவைப் பெறுவதற்கும் ஆழமானத் தொடர்புகள் உண்டு. நமது புலன்களின் வழியேதான் அனைத்து தகவல்களும் வருகின்றன, ஆனால் புலன்கள் ஏமாற்றும் தன்மையைக் கொண்டவை. அவை உறுதியான உண்மையைக் கூறுபவை கிடையாது. தேக்கார்டு (Descartes) இதைப்பற்றி சிந்தித்து "நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன் (I think, therefore I am)” என்றார். “நான் இருக்கிறேன்” என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் உண்மை என்று உறுதியாகக் கூற முடியாது என்கிறார். நாம் அடையும் எந்த அறிவும், அறிவியல் உட்பட, சரியானது என்று அடித்து உறுதியாகக் கூறமுடியாது. அவ்வாறு இருக்கும்பொழுது நமது அறிவு பயனுள்ளதா என்பதை எப்படி உறுதி செய்வது?

நாம் அறிவை (knowledge) பல பாகங்களால் இணைத்து கட்டப்பட்ட ஒரு கப்பலைப் போல பார்க்கவேண்டும். அகப்பலின் பலம் தனி ஒரு பாகத்தினால் வருவதல்ல, அதன் பலம் அவை எவ்வாறு இணைத்துக் கட்டப்பட்டுள்ளன என்பதிலிருந்து வருகிறது. அவ்வாறான கப்பல் தானாக மிதக்கும். அது மூழ்காமல் இருக்க வேறு எதுவும் அதைத் தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வாரு பாகத்தையும் மற்ற பாகங்கள் தூக்கிப்பிடிக்கும். இதுபோலத்தான் நம்முடைய அறிவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது அறிவு முழு உண்மை என்பதற்கு எந்த உறுதியும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிப்பதால் நமக்கு பயன் கிடைக்கிறது.

“A ship or a web may be made up of a tissue of interconnecting parts, and it derives its strength from just those interconnections. It does not need a base or a starting point or a foundation. A structure of this kind can have each bit supported by other bits without there being any bit that supports all others without support itself. Similarly, if any belief is challenged, others can support it… The Austrian philosopher Otto Neurath used this lovely metaphor for our body of knowledge: We are all like sailors who on the open sea must reconstruct the ship but are never able to start afresh from the bottom. Any part can be replaced, provided there is enough of the rest on which to stand.” [4]

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும், மனிதர்களும், மனித சமூகங்களும் அறிவை உள்ளடக்கியவை என்று பார்த்தோம். சமூக அமைப்புகளும் அவை இயங்குவதற்கான அறிவை உள்ளடக்கியவை.. ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள அறிவு முழுமையானதாக சரியானதாக இருக்கும் என்று எந்த உறுதியும் இல்லை. ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து இயங்கும்பொழுது ஒன்றை ஒன்று தூக்கிப்பிடித்து வெற்றியடையும். சமூகம் என்பது கடலில் மிதக்கும் கப்பல் போல என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இக்கப்பல் தன்னைப் புதுப்பிக்க கரை சென்று ஒதுங்க முடியாது. சமூகம் தனது கடலில் மிதந்து கொண்டே தன்னை புதுப்பிக்கவேண்டும். இக்கப்பலின் பாகங்களான சமூக அமைப்புகளை தனி தனித்தனியாக எடுத்து புதுப்பிக்கலாம், மற்ற பாகங்கள் கப்பலை மூழ்காமல் காப்பாற்றும். இவ்வாறு கப்பலை முழுதுமாக காலப்போக்கில் மொத்தமாக புதுப்பித்து விடலாம். அவ்வாறில்லாமல் ஒரே அடியாக மொத்தமாக மாற்றுகிறேன் என்றால், சமூகக் கப்பல் மூழ்கிவிடும்.

ஒரு சமுகத்தின் வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாக இருப்பது அறிவு மட்டுமே. அந்த அறிவைப் பெற்று, நமது சமூக அமைப்புகளில் உள்ளடக்கி, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து செயல்படுத்துவதுதான் வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.

நாம் என்ன செய்யவேண்டும்?

தமிழ்ச் சமூகம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அழியாமல் நிலைத்து வந்துள்ளது. அதனால் இனியும் அழியாமல் வாழ்ந்துவிடும், நாம் கவலைப்படத் தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இது ஒரு அறிவுப்பூர்வமற்ற நம்பிக்கை. இதுவரையான தமிழ்ச் சமூகம் ஒரு நிலையான மாற்றமில்லாத சமூகக் கட்டமைப்பில் (static society) ஆடுமாடுகள் போல எந்த மாற்றமில்லாமல் வாழ்ந்து வந்தது. அதனால் அழிவதற்கு வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. ஆனால் அறிவியல் புரட்சி ஏற்பட்டபின், குறிப்பாக கடந்த ஒரு நூற்றாண்டாக மாற்றங்கள் வெகுவேகமா நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் பழைய பிற்போக்கான சமூக வழக்கங்களை ஒழித்துக்கட்டி பல்வகைகளில் நன்மை புரிந்துள்ளது. ஆனால் மொழி, பண்பாடு, நிலம் ஆகியற்றில் ஏற்படும் அதிவேக மாற்றங்கள் தமிழினம் என்று ஒன்று இல்லாமல் ஆக்கவும் வாய்ப்பளிக்கிறது. நமது சமூகக் கப்பல் பழுதடைந்து ஆபத்தை எதிர்நோக்கி நிற்கிறது. இதை எப்படி சீர் செய்வது என்பதுதான் இன்று நாம் எதிர்நோக்கும் முக்கியக் கேள்வி. தற்பொழுது நிலவும் சிந்தனை என்னவென்றால் நல்ல தலைவனைத் தேர்ந்தெடுத்து விட்டால், சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் இருக்கிறது. நல்ல தலைமை முக்கியம் எனபது தவறல்ல, ஆனால் இது நமது சிக்கல்களைத் தீர்க்க போதுமானது அல்ல. மேலும் நாம் அவ்வாறான தலைமையை அடைவோம் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது என ஏற்கனவே பார்த்தோம். நமது சிக்கல்களைத் தீர்க்க நாம் என்ன செய்யவேண்டும் என ஏற்க்கனவே விவாதித்த கருத்துக்களின் அடிப்படையில் இனி காண்போம்:

1. சமூக அமைப்புகளை உருவாக்குதல்:

நீண்ட கால அரசியல் அனைத்தும் அமைப்பு ரீதியானவை என்பதை நாம் முதலில் உணரவேண்டும். தமிழ்ச் சமூகத்திற்கென்று தனி நாடில்லை; மேலும் அரசியல் பலம் குறைவானது. இந்நிலையில் அரசினை நம்பி செயல்படுவதோ அல்லது அரசு சார் அமைப்புக்களை மாற்றுவதோ கடினமானது. அரசுகளின் திட்டங்கள் தமிழர்களின் மொழியையும் அடையாளங்களையும் அழிப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு செயல்படுகின்றன. அதுபோக சமூகத்தில் சாதி மதப் பிணக்குகள், மொழியை கீழ்த்தரமாக எண்ணும் போக்கு, பண்பாடு மற்றும் கலைகளின் சீரழிவு, வேலை வாய்ப்பின்மை எனப்பல சிக்கல்கள் உள்ளன. இதற்குத்தீர்வு: நமது சமூகத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் கண்டுபிடித்து, அவற்றை வெற்றிகொள்ள சமூக அமைப்புகளை மக்களினூடாகக் கட்டி எழுப்பி செயல்பட வேண்டும். உதாரணங்களாக கீழ்வரும் அமைப்புகளை உருவாக்கலாம்:

1. கல்வி: இன்று தமிழ்வழிக்கல்வி அழிந்துவருகிறது. இது எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் ஆபத்தை உருவாக்கவல்லது. இதைத் தீர்க்க எதுமாதிரியான சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஏற்கனேவே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன் [6].

2. அரசியல் அமைப்புகள்: இதன் தேவையை ஏற்கனவே உணர்ந்து பல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

3. பண்பாட்டு அமைப்புகள்: மக்கள் சாதிமத பிணக்குகளினால் பிளவுண்டு இருக்கின்றனர். இதை சரி செய்வதற்கு எது மாதிரியான பண்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதென்று ஆராயவேண்டும். மேலும் கலைகளை வளர்ப்பதற்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

4. தொண்டு அமைப்புகள்: மக்களுக்கு உதவி செய்வதற்கான அமைப்புகள்.

5. தமிழ் மீட்சி இயக்கங்கள்: இன்று மொழியில் ஆங்கிலம் தேவையில்லாமல் புகுந்து மொழியை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் தாக்கத்தை தடுத்து நிறுத்தி மொழியை மீட்பதற்கென்று தனி இயக்கங்கள் ஆரம்பிக்கப் படவேண்டும்.

6. தமிழ் ஊடக அமைப்புகள்

மொத்தத்தில் நாம் எங்கெங்கெல்லாம் சிக்கல்களைக் காண்கின்றோமோ (குறிப்பாக நீண்டகால) , அவற்றை தீர்ப்பதற்கான அமைப்புகளை உருவாக்கவேண்டும்.

அமைப்புகள் அனைத்தும் ஒரு வலைப்பின்னலாக இணைந்து செயல்படவேண்டும். அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தேவையான இடத்தில் ஒத்துழைத்து, முரண்பட வேண்டிய இடத்தில் முரண்பட்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பின் தவறை சுட்டிக்காட்டலாம். இன்னொரு அமைப்பின் தவறினால் விளையும் தீங்குகளை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். ஒத்துழைக்க வேண்டிய இடத்தில் ஒத்துழைத்து கூட்டு வெற்றிக்கு பாடுபடலாம்.

2. அறிவைப் பெருக்குதல்:

ஒரு சமூக அமைப்பின் வெற்றி அது தன்னுள்ளே கொண்டிருக்கும் அறிவைப் பொறுத்தே அமையும். அதனால் கற்றல் என்பது அமைப்புகளின் அடிப்படைத் தன்மையாக இருக்கவேண்டும். அமைப்புகள் ஆரம்பிக்கும் முன் மற்ற சமூகங்கள் எது மாதிரியான அமைப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தீவிரமாக ஆராய்ந்து நல்ல திட்டங்களை வகுக்கவேண்டும். எந்த ஒரு திட்டமும் பிழையில்லாமல் இருப்பதில்லை, அதனால் தொடர்ந்து பல சோதனைகள் செய்து கற்று அமைப்புகளை சீர்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அனைத்து சிக்கல்களுக்கும் திறவுகோல் அறிவு என்பதை மந்திரமாகக் கொண்டு செயல்படவேண்டும். அந்த அறிவு எளிதாகக் கிடைப்பதில்லை. நல்ல அறிவைப் பெறுவது கடினமானது என்பதை உணர்ந்து அவ்வறிவைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்கவேண்டும். இதற்கு அமைப்புகள் சில அடிப்படைத் தன்மைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்:

  1. அனைத்து அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளாக (independent organizations) இருக்க வேண்டும்.. மேலும் அவை தனக்குத் தேவையான அறிவை சுந்தந்திரமாகப் பெறலாம், செயல்பாடுகளை சுதந்திரமாக அமைக்கலாம்.
  2. அவை இயங்குவதற்கான பொருளாதாரத்தைத் தாமாகப் பெரும்படியாக (self-reliant) செயல்படவேண்டும். அது மக்களின் நன்கொடையாகவும் இருக்கலாம். அவ்வாறான செயல்பாடுதான் ஒர் அமைப்பு இயங்குவதற்கான அறிவைப் பெற்றிருப்பதற்கான அளவுகோல்.
  3. ஒவ்வொரு அமைப்பின் செயல்பாடும் மேலிருந்து கீழாக (top-down) இல்லாமல், அமைப்பில் உள்ளவர் எவரும் கற்று, சோதனை செய்து அறிவைப் பெருக்குவதற்கான சுதந்திரம் இருக்கவேண்டும். அமைப்புகள் கருத்துக்களை பகுத்து ஆய்வதிலும் (critical thinking), குறைகளைக் கண்டுபிடிப்பதிலும் (criticism of ideas), சுயமாக சிந்திப்பதற்கும் (independent thinking) முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தலைமைக்கு ஆமாஞ்சாமி போடும் அமைப்புகளாக இருக்கக் கூடாது.
  1. அறிவை மற்ற அமைப்புகளுடன் பகிர்தல்.

நமது பின்னடைவுகளுக்கு அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. நமதுப் பிழை என்பது அனைத்து சிக்கல்களையும் ஒரு அரசியல் தலைமைச் சிக்கலாக பார்ப்பதுதான். நாம் எது மாதிரியான சமூக அமைப்புகளை உருவாக்கி சமூகத்தை நல்ல திசையில் திருப்புவது என்று பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது. அரசியலும் தானாக சரியானப் பாதைக்கு வந்து சேரும்.

இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் என்பது இவ்வாறான சமூக அமைப்புகளால்தான் உருவானது. அரசுகள் பெரும்பாலும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்துள்ளன. ஐரோப்பா இருண்ட காலத்திலிருந்து மீள உதவியது இத்தாலியில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் தான். அதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் மனிதநேய அமைப்புகள் (Humanists). இதை அரசுகள் திட்டமிட்டு செய்யவில்லை, மாறாக பெருந்தடையாகவே இருந்தது. குறுகிய காலத்தில் இத்தாலிய மறுமலர்ச்சி அணைக்கப்பட்டது, ஆனால் அதற்குள் அத்தீ ஐரோப்பாவின் மற்ற பிரதேசங்களுக்குப் பரவியது. அறிவியல் புரட்சியும் அமைப்புகளால் தாமாக முன்னெடுக்கப் பட்டதுதான். அரசுகள் இதற்கும் முட்டுக்கட்டையாகவே இருந்தன. கலிலியோ சிறைபிடிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கமும் அவ்வாறே ஆரம்பித்து வெற்றி கொண்டது. வரலாறு கூறும் செய்தி என்னவென்றால் எந்த ஒரு புதுமையும் முதலில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகொண்ட பின்னர்தான் அரசுகள் ஆதரவளிக்கும். அரசுகள் தங்கள் இருப்பை உறுதி செய்வதில் கவனமாக இருப்பதால், அவை மாற்றத்தை விரும்புவதில்லை. அதனால் மாற்றம் என்பது மக்களிடமிருந்து சமூக அமைப்புகளின் மூலம்தான் ஆரம்பிக்கப் படவேண்டும்.

அரசியல் தலைமை என்பது நாம் அமைக்கும் சமூக அமைப்புகளில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டுமே தவிர, அதை முதன்மையாகப் பார்க்கக்கூடாது. அதனால் ஒரு தலைமையை மட்டும் முழுதாக நம்பி செயல்படாமல், அறிவுப்பூர்வமாக சிந்தித்து சமூக அமைப்புகளைக் கட்டி எழுப்புவதன் மூலமே வெற்றிபெற முடியும். அவ்வாறு செய்யும்பொழுது சமூக அமைப்புகள் நல்ல தலைமையத் தாமாகத் தூக்கிப்பிடித்து வெற்றிபெற வைக்கும். அப்பொழுது தலைமைச் சிக்கல் என்று ஒன்று இருக்காது.

உசாத்துணை:

  1. Popper, Karl. The open society and its enemies. Routledge, 2012.
  2. Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK, 2011.
  3. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge. Harvard University Press, 1997.
  4. Blackburn, Simon. Think: A compelling introduction to philosophy. Oxford University Press, 1999.
  5. Greenblatt, Stephen. The swerve: How the world became modern. WW Norton & Company, 2011.
  6. சு.சேது, தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

- சு.சேது