நாட்டின் பழம் பெரும் அரசியல்வாதியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்று உரையாற்றிவிட்டு வந்தது கடுமையான விவாத அலைகளை எழுப்பியுள்ளது. இந்திரா காந்தி காலத்தின் இரண்டாவது அமைச்சராக, அவரது மறைவுக்குப்பின் அடுத்த பிரதமர் கனவில் திளைத்திருக்க, அந்தக் கனவு பகல் கனவாக மாறியது ராஜிவ் காந்தியின் அரசியல் நுழைவினால். ராஜிவ் படுகொலைக்குப் பிறகு வாய்ப்பு கிட்டாதா என காத்திருந்த அதே பிரணாப்புக்கு சோனியாவின் வடிவில் முட்டுக்கட்டை போடப்பட்டது.

PranabMukherjee at RSS meeting

2012க்குப் பிறகு பிரணாப்பின் அபிலாஷை நிறைவேறியதா என்றால் இல்லை எனினும், நாட்டின் மிக உயர்ந்த அலங்காரப் பதவியான குடியரசுத்தலைவர் பதவியை வற்புறுத்தி, வலியுறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்தார் சோனியா காந்தி.

நல்லவேளையாக இவர் பிரதமராகாமல் போனார். இல்லையென்றால் அய்யகோ என்னவெல்லாம் செய்திருப்பாரோ என நினைக்கும் வண்ணம் குடியரசுத் தலைவரானபின் அவர் செய்த செயல்கள் அமைந்தன. அப்துல் கலாமும் பிரதிபா பாட்டிலும் தமது பொறுப்புக் காலத்தில் மரண தண்டனைக் கைதிகள் எவரையும் தூக்கு மேடைக்கு அனுப்ப சம்மதிக்காத நிலையில், பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி தீக்குச்சிக்களை சர் சர் என்று கிழித்து நெருப்பை பற்ற வைப்பது போல் கையெழுத்து போட்டு மரண நாயகனாக விளங்கினார்.

அப்ஸல் குரு முதல் யாகூப் மேமன் வரை பிரணாப்பின் எழுதுகோலால் சாய்க்கப்பட்டவர் அநேகம்.

அதுமட்டுமின்றி ஈழத் தமிழர்களை இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகள் குதறி, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தபோது இந்திய வெளியுறத்துறை அமைச்சராக இருந்து முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட ரத்த சகதிகளின் சாதனைகளுக்கு சொந்தக்காரராவர்.

பாஜக மத்தியில் வந்த பிறகு பல்வேறு சர்ச்சை சட்ட முன் வரைவுகளுக்கு அனுமதி கொடுத்த வகையிலும் பிரணாப்பின் பெயர் அடிபட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர், தற்போது ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைப்பு விடுவிக்கப்பட்டது. அழைப்பை ஏற்றார் பிரணாப். பூனை வெளியே வந்து விட்டது.

பிரணாபின் மகள் முதல் அவரது நெடுங்கால நண்பர் ஜாபர் ஷெரீப் வரை பிரணாப் ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்றதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மன்றாடினர்.

ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கினார்

அண்மைக்காலமாக ராகுல்காந்திக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் பெரும் அளவில் மோதல் ஏற்பட்டது. காந்தியாரின் கொலையில் ஆர்எஸ்எஸ்-ன் தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாக ராகுல் ஊர், ஊராகப் பேச பதறிய காவிப் பரிவாரம், அவர் மீது வழக்குகளைப் போட்டது. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அழைப்பை பிரணாப் ஏற்றது ஒரு வரலாற்றுப் பிழை என்றே கொள்ளலாம்.

காங்கிரசின் அத்வானி

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தின் குறிப்பேட்டில் பிரணாப், 'இந்தியத் தாயின் தவப்புதல்வன் ஹெட்கேவர்' என சிலாகித்து எழுதினார். அந்த தவப் புதல்வன் என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் புகழ் மாலை சூட்டத் தவறவில்லை.

2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் லால் கிஷன் அத்வானி. பயணத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவின் நினைவிடத்திற்குச் சென்றார். அங்குள்ள குறிப்பேட்டில் ஜின்னா உண்மையான மதச்சார்பற்ற தலைவர் என்றும், மாமனிதன் என்றும் பாராட்டித் தள்ளினார். குறிப்பேட்டில் எழுதியதைப் பார்த்த சங்கிகள் குமுறித் தீர்த்தனர். அதன்பிறகு அத்வானி கொட்டாவி விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க முடியும் என்ற அளவிற்கு ஆக்கிவிட்டனர். மோடியார் பாஜகவில் முன்னிலையில் வந்த பிறகு அத்வானி முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.

ஆனால் கட்சியின் ஒவ்வொரு அணுவிலும் அங்கீகாரத்தையும், பதவி சுகத்தையும் அனுபவித்த பிரணாப், நாட்டின் உச்ச பதவியை வகித்து விட்டு, ஆர்எஸ்எஸ்-ன் சிறப்பு அழைப்பாளராக உரையாற்றி விட்டு வருகிறார் என்றால், அத்வானி விவகாரத்தில் அந்தக் கட்சி சுதாரித்து பதிலடி கொடுத்தது. ஆனால் பிராணாப் விவகாரத்தில் இந்தக் கட்சி ஏமாந்து மூக்குடைபட்டதுதான் உண்மை.

ஆதரித்த தலைவர்கள்

பிரணாப் முகர்ஜிக்கு ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பார்ப்பன காங்கிரஸ் தலைவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளித்தனர். ப.சிதம்பரம் பாராட்டியதில் ஒரு வரையறை இருந்தது. அதில் நாட்டின் பன்முகப் பெருமையைக் கூறி ஆர்எஸ்எஸ் முகாமினருக்கு பாடம் எடுத்த விதத்தைப் பாராட்டினார்.

என்னதான் பேசினார்?

பிரணாப் தமது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தில் அவர் மனதில் எது நிறைந்துள்ளது என்பதை உரையில் தெளிவாக்கினார் . முகலாயர் ஆட்சிக்குப் பிறகும் இந்திய நாகரீகம் பண்பாடு நீடித்திருப்பது குறித்து சிலாகித்துப் பேசினார். சம்ஸ்கிருத சுலோகங்களைக் கூறியது ஆர்எஸ்எஸ் முகாம் குதூகலித்தது.

இது ஒன்று போதும் இந்த ஒரு நிகழ்வை வைத்து வரலாற்றினைப் புரட்ட...

காந்தியார் தம் அணிவகுப்பை பார்வையிட்டுப் பாராட்டினார், நேரு ஆர்எஸ்எஸ்-ஐ சீனப் போரில் பங்கேற்க அழைத்தார் என்பது போன்ற புரூடாக்களை அவர்கள் விடும் வழக்கம் பிரணாபுக்குத் தெரியாததா, புரியாததா? சென்ற வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கேற்ற சங்பரிவார நித்தியானந்தமும், பாஜகவின் ஸ்ரீனிவாசனும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் வரவேற்கப்பட்டார் என்று கூறினர். "ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கரா? எப்போது வந்தார், ஆதாரம் கூறுங்கள்" என அதே விவாதத்தில் பங்கு கொண்ட அய்யநாதனும் மதிமாறனும் கேட்டபோது, ஸ்ரீனிவாசன் வாய் மூடிக்கொள்ள, நித்தியானந்தம் என்பவர் ஆதாரத்தை கூகுளில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எனப் பிதற்றினார். இது போன்ற அபத்தங்கள் இனி தொடரும் என்பதை உறுதிபடுத்துவதைப் போல ஆர்எஸ்எஸ் சீருடையில் பிரணாப் இருப்பதுபோல் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூவர்ணக்கொடியை மறுதலித்த ஹெட்கேவர்

1929 டிசம்பரில் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பரிபூர்ண சுதந்திரமே குறிக்கோள் என்ற தீர்மானத்தை வலியுறுத்தி, 1930 ஜனவரியில் நாடெங்கும் மூவர்ணக் கொடியை ஏற்றி பரப்புரை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு விரோதமாக காவிக் கொடி ஏற்றி குழப்பத்தை ஏற்படுத்திய ஹெட்கேவரை, காந்தியாரின் படுகொலைக்கு காரணமான அமைப்பின் தலைவரைத்தான் இந்திய தாயின் தவப்புதல்வன் என்கிறார் பிரணாப். பிரணாப் கதருக்குள் காவி அணிந்த வினோத மனிதர் என்றால் மிகையில்லை..

- அபூஸாலிஹ் (வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர், மக்கள் உரிமை இணை ஆசிரியர்)