குற்றம், 9 வோல்ட் சிறிய பேட்டரி வாங்கிக் கொடுத்தது; ஆனால்  அது பயன்படுத்தப்பட்டது வரலாற்றுச் சம்பவத்துக்காக; 46 வயதுக்காரர் சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…!!

perarivalan 330சென்னை: “வெறும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் அழைத்துச் செல்கிறோம், நாளைக் காலையில் அனுப்பி விடுவோம்” என்று சொல்லி, 19 வயதான பேரறிவாளனை வீட்டிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றார்கள். சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று நினைத்து  அப்பா குணசேகரனும் அம்மா அற்புதம்மாளும் மகனது வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கி இப்போது 27 வருடமாகிறது. வெறும் இரண்டு பேட்டரிகள் வாங்கியதற்காக, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 1991 ஜூன் 11ல் போலீஸார் பேரறிவாளனை அழைத்துச் சென்றார்கள்.

இந்தியாவைத் திடுக்கிடச் செய்த சம்பவத்தில், இந்திய பிரதமரைக் கொல்ல விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றத்துக்காக பேரறிவாளன் இப்போதும் சிறையில் இருக்கிறார். ஒருக்கால், வெளியே வாழ்ந்ததைவிட எட்டு வருடம் அதிகமாக சிறையில் இருக்க நேர்ந்த பேரறிவாளனுக்காக இப்போதும் அற்புதம்மாளும் குணசேகரனும் காத்திருக்கிறார்கள். அன்று போலீஸார் மகனைக் கொண்டு சென்றதற்குப் பிறகு இருவரும் பேரறிவாளனைப் பார்க்கவில்லை. இரண்டு மாத காலம் மகனைப் பற்றி எந்த விவரமும் இல்லை. சட்டங்களைக் குறித்து தெரியாததாலும், மகனை போலீஸார் பிடித்துச் சென்றது அவமானமாகத் தோன்றியதாலும் ஹேபியஸ் கோர்ப்பஸ் மனுவும் கொடுக்கத் தயங்கினார்கள்.

தங்கள் மகன் இன்று வருவான் நாளை வருவான் என்று இருபத்தைந்து  ஆண்டுகளைக் கடந்த நம்பிக்கையுடன் இப்போதும் இவர்கள் இருக்கிறார்கள். பெட்டிக்கடைகளில்கூடக் கிடைக்கும் 9 வோல்ட் சிறிய பேட்டரி வாங்கினார் என்பதுதான் பேரறிவாளன் மீது போஸீஸ் சுமத்திய குற்றம். ராஜீவ் காந்தியைக் கொன்ற தனு வெடிக்கச் செய்த பெல்ட் வெடிகுண்டில் பயன்படுத்திய பேட்டரி வாங்கிக் கொடுத்தது பேரறிவாளன் என்பதுதான் கண்டுபிடிப்பு. வழக்கின் முக்கியக் குற்றவாளி சிவராசன் சொற்படிதான் பேட்டரி வாங்கிக் கொடுத்தது. கடைக்காரர் பேரறிவாளனை அடையாளம் கண்டதும், இரண்டு மாதத்துக்குப் பிறகு சட்டைப் பையிலிருந்து, பொருள் வாங்கியதற்கான ரசீது கிடைத்ததும் பேரறிவாளனுக்கு எதிரான ஆதாரங்களாயின.

தடா சட்டத்தின் அடிப்படையிலான வழக்கு இது. புலனாய்வுக் குழுவினரிடம் பேரறிவாளன் எழுதிக் கொடுத்த வாக்குமூலம், விசாரணையின்போது பேரறிவாளனுக்கு எதிரான ஆயுதமாக்கப்பட்டது. அதே நேரத்தில், அது அடித்துச் சொல்ல வைத்ததா, அல்லது செயற்கையாக உருவாக்கியதா எனும் சந்தேகம்கூட ஆராயப்படவில்லை. ராஜீவ் கொலையின் முக்கியக் குற்றவாளி சிவராசன் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுக்கும்படி தன்னைக் கேட்டபோது, அதை அவர் எதற்காகப் பயன்படுத்துவார் என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றுதான் கேள்வி கேட்கும்போது பேரறிவாளன் சொன்னார். ஆனால், அத்த விஷயம் சாமர்த்தியமாக வாக்குமூலத்திலிருந்து தவிர்க்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பொட்டு அம்மானும் சிவராசனும் கொலை சதித்திட்டத்தைப் பற்றி தங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நடத்திய கம்பியில்லா தகவல் தொடர்பைக் கைப்பற்றிய பிறகும், பேரறிவாளன் நிரபராதியாக்கப்படவில்லை. எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட மாட்டார் என்று உறுதிப்படுத்தும் இந்திய சட்ட  அமைப்பில் இப்போதும் பெரும் நம்பிக்கை வைத்து, மகன் ஒரு நாள் விடுதலை பெறுவான் என்று குணசேகரனும் அற்புதம்மாளும் காத்திருக்கிறார்கள். சம்பவத்தை விசாரித்த சி.பி.ஐ. உயரதிகாரி பல வருடங்களுக்குப் பிறகு, வழக்கில் தீர்மானிக்கும் விஷயமாக பயன்படுத்தப்பட்ட - பேரறிவாளன் எழுதிக் கொடுத்தார் என்று சொல்லப்படும் வாக்குமூலத்தில் முறை மீறினேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டதும் பரிசீலிக்கப்படவில்லை.

(மங்களம், ஜூன் 11, 2018)

தமிழாக்கம் - யூமா வாசுகி