ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தற்காலிகமாக வெற்றி பெற்று இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, ஆலை பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் நிம்மதியாக தங்களை அசுவாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த நிம்மதி தொடர்ச்சியாக நீடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென 2010 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சென்று முறியடித்தது. அதே போல 2013 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த விபத்தை ஒட்டி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆலையை நிரந்தரமாக மூட உத்திரவிட்டார். இந்த உத்திரவையும் டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உதவியுடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் முறியடித்தது. மேலும் மோடி அரசு பதவியேற்றதும் பசுமை ஒழுங்குமுறை விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களால் பெரும் நிறுவனங்கள் மிக எளிதாக சுற்றுச்சூழலை அழிக்கும் தொழிற்சாலைகளை நடத்த ஊக்குவிக்கப்பட்டன.

tuticorin police attack 2

இப்போது மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மே 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடைவிதித்து, விரிவாக்கப் பணிகளை துவங்கும் முன் மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் தரப்பில் தாங்கள் ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைப்பிடம் இருந்து தொழிற்சாலையில் உற்பத்தியை இரட்டிப்பாக்க ஒப்புதல் பெற்றுவிட்டோம், அதனால் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.

நாம் இந்தப் பிரச்சினையை கூர்ந்து கவனித்தோம் என்றால் மாநில அரசு, நீதிமன்றங்கள், பசுமைத்தீர்ப்பாயங்கள் என அனைத்துமே இந்தப் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற கபட விளையாட்டுகளை அரங்கேற்றியதை புரிந்துகொள்ள முடியும். ஸ்டெர்லைட்டால் ஒருபோதும் போராடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது. ஆனால் நீதிமன்றங்களையும், பசுமைத் தீர்ப்பாயங்களையும், அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் அதனால் மிக எளிதாக விலைக்கு வாங்க முடியும். அதனால்தான் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க ஆட்சியில் இருந்த ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் தனிச்சட்டம் இயற்ற முயலவில்லை. வேண்டுமென்றே பிரச்சினையை நீதிமன்றங்களிடம் தள்ளிவிட்டார்கள். இப்போதுகூட உயர்நீதிமன்றத்தால் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று கூச்சமே இல்லாமல் உத்திரவிட முடிகின்றது.

தூத்துக்குடி மக்கள் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கின்றார்கள். 13 பேரை ஸ்டெர்லைட்டுக்காக அரசு கொலை செய்திருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழகமே ஸ்டெர்லைட்டை மூடு என உரக்கச் சொல்கின்றது. ஆனால் நீதிபதிகள் இதை எதையுமே கருத்தில் கொள்ளாமல் மக்களிடம் கருத்து கேள் என்கின்றது. ஏன் மக்களின் கருத்து என்னவென்று நீதிபதிகளுக்குத் தெரியாதா? குறைந்தபட்சம் நாளிதழ்கள் படிக்கும் பழக்கமும், தொலைக்காட்சிகளில் செய்தி பார்க்கும் பழக்கம் கூட இல்லாதவர்களா நீதிபதிகள்? நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அவர்களால் மக்களிடம் கருத்து கேள் என்று உத்திரவிட முடிகின்றது என்றால், நாம் ‘ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கின்றது' என்ற மார்க்சின் வார்த்தைகளைத்தான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கின்றது.

சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மட்டுமே உள்ள நீதிமன்றங்கள், ஓர் இயந்திரம் போன்று செயல்படுவதில் எந்த ஆச்சாரியமும் இல்லைதான். அங்கே போய் நாம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் இத்தனை ஆண்டு காலமாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த ஆலையை மூட வேண்டும் என திமுகவோ, இல்லை அதிமுகவோ மனதார விரும்பியிருந்தால் நிச்சயம் அதற்காக சட்டசபையில் சட்டமியற்றியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய ஓட்டுப் பொறுக்கிகள் ஒருபோதும் விரும்பியதில்லை. பெருநிறுவனங்கள் தரும் ரத்தக்காசில் கட்சி நடத்தும் கும்பல்களால் எப்படி அப்பாவி மக்களின் கண்ணீரைப் பற்றி கவலைப்பட முடியும்? ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவனும் பெருங்கோடீஸ்வரனாக, சொகுசுப் பேர்வழிகளாக, பல தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், திரைப்பட நிறுவனங்கள், சாராய ஆலைகளின் முதலாளிகளாக இருக்கும்போது இவர்கள் தன்னைப் போன்றே அதிகார வர்க்க முறைகேடுகள் செய்து வாழும் தன்னுடைய சக பிராணியை வேட்டையாடுவர்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அடிப்படையில் இந்தக் குற்றக்கும்பலுக்கு மக்களின் பிரச்சினைகளில் போராடவோ, இல்லை கருத்து சொல்லவோ எந்தத் தார்மீக யோக்கியதையும் இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இந்த அமைப்பு முறையில் தன்னைக் கொல்பவனிடமே கிடாக்கள் கருணை மனுவை அளிக்க நிர்பந்திக்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியர், ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலி என்பது ஊரறிந்த உண்மையாக இருந்தாலும், மக்கள் அந்தக் கைக்கூலியிடமே கருணை மனு கொடுக்க நிர்பந்திக்கப்படுகின்றார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்காக தங்களை படுகொலை செய்த அரசிடம் இருந்தே நிவாரணத் தொகையை பிச்சை வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். தங்கள் மண்ணையும், காற்றையும் நாசமாக்க உடந்தையாக இருந்த கொலைகாரக் கும்பல் போடும் இலவச உணவை மான வெட்கத்தை விட்டு திங்கும் நிலைக்கு அவர்களை தரம் தாழ்த்துகின்றார்கள். நேற்றுவரை கொலைகாரக் கும்பலாக பார்க்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எந்தவித குற்ற உணர்வும் இன்றி, மருத்துவமனைக்குச் சென்று இன்னும் சாகாமல் உயிரோடு போராடிக்கொண்டு இருப்பவர்களை சந்தித்து நலம் விசாரிக்கின்றார்கள். இதுதான் இந்த அமைப்புமுறை தோற்றுவிக்கும் வெட்கம்கெட்ட தன்மை. அது தனது வெட்கம்கெட்ட தன்மையை ஆயுத பலத்தின் மூலம் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது. செருப்பால் அடித்துவிட்டு சோறுபோட்டாலும் நீங்கள் சிரித்துக்கொண்டே சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். அதுவே இந்த ஜனநாயக அமைப்பில் மிகப்பெரிதாக கொண்டாடப்படும் விழுமியங்கள்.

இருந்தாலும் ஒரு மாற்று அரசியலுக்கு மக்கள் தயாராகாதவரை இந்தச் சீரழிவுப் போக்கை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பதை முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பாகவும், அரசு பயங்காரவாத எதிர்ப்பாகவும் மாற வேண்டும். இந்த மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் என்றால், அதற்கு வேதாந்தா போன்ற தரகு முதலாளிகளையும், அவன் வீசும் எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு இங்கே சொந்த நாட்டு மக்களை கடித்துக் குதறும் அடிமை நாய்களையும் எதிர்த்தால் மட்டுமே முடியும் என்ற சிந்தனைக்கும், புரிதலுக்கும் இன்று தூத்துக்குடி மக்கள் மட்டுமில்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் வந்திருக்கின்றார்கள் என்றால், அதற்கு அந்த மக்களோடு கலந்து பணியாற்றிய, நமக்குத் தெரியாத, அரசு குறிப்பிடும் தீவிரவாதிகளே காரணமாவார்கள். இன்று அந்தத் தீவிரவாதிகள் தான் அரசுக்கும், அவர்களை இயக்கும் பெருமுதலாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள். அவர்கள் தான் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என அனைத்து நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டி இந்த உலுத்துப்போன கட்டமைப்பை இடித்துத் தள்ள மக்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இந்தச் சீரழிந்துபோன அதிகார வர்க்கத்தால் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால் இப்போது தீவிரவாதிகள் தமிழ்நிலத்தின் அனைத்து மண்களிலும் அமோகமாக விளையும் பயிராக மாறியிருக்கின்றார்கள். அவர்களை அரசாங்கமே தன்னுடைய பயங்கரவாதத்தால் மிகச் செழிப்பாக வளர்த்துக் கொண்டிருக்கின்றது. இனி தமிழ் மண்ணில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு நாசகார திட்டத்தையும் நிச்சயம் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை தீவிரவாதிகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அந்தத் தீவிரவாதிகளுக்குப் பயந்தே இன்று தமிழக அரசு கூட ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் தங்கள் மனங்களில் எப்போதுமே தீவிரவாதிகளுக்கு இனி தனியிடம் கொடுப்பார்கள். தீவிரவாதிகளின் பணி இன்னும் தூத்துக்குடியில் முடிந்துவிடவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தி தன் சொந்த நாட்டு மக்களைக் கொல்ல உத்திரவிட்ட துரோகிகள் இன்னும் நிம்மதியாக இருக்கின்றார்கள். அரசு, தூத்துக்குடி தனித்துணை வட்டாட்சியர் சேகர் கொடுத்த உத்திரவின் பேரிலேயே சுடப்பட்டதாக பிரச்சினையை மடைமாற்றி உண்மையான சதிகாரர்களை தப்புவிக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றது. எப்படி ஆளுநர் சம்மந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை நிர்மலா தேவியோடு நிறுத்திக் கொள்ள முயலுகின்றதோ, அதே போல ராஜ்நாத்சிங், கிரிஜா வைத்தியநாதன், எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் என பலபேர் சம்மந்தப்பட்ட இந்தப் பிரச்சினையை தனித்துணை வட்டாட்சியருடன் முடித்துவிடலாம் என இந்த அரசு நினைக்கின்றது. கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் உயிருக்கும் நீதி கிடைப்பதற்கும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக சட்டப்படியே மூடவும் மீண்டும் தூத்துக்குடி மக்கள் களமாடியே ஆகவேண்டும். அதனால் பெயரில்லாத அந்தத் தீவிரவாதிகளின் பணி இத்தோடு முடிந்துவிடவில்லை.

- செ.கார்கி