பாஜகவின் தேர்தல் உத்திகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. தனது சாதனைகளையோ எதிர்க்கட்சியின் தவறுகளையோ சொல்லி பிரச்சாரம் செய்வது ஒரு வகை. விமர்சனம் மூலமொ, தனிநபர் எதிர்ப்பு விமர்சனம் மூலமோ பிரச்சாரம் செய்வது ஒருவகை. ஆனால் பாஜகவோ இது எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக பிரச்சாரம் செய்வதைத்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் துவங்கி தற்போதைய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரைக்கும் பின்பற்றுகிறது. அந்த யுத்தியை முன்நின்று வழிநடத்திக் கொண்டு செல்வது வேறுயாருமல்ல, நமது பிரதமரேதான்.

modi yeddyurappa parivarthana bengaluruஇடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிப் பேசுவது மோடிக்கு கைவந்த கலை. ஆசிஃபா பற்றி இங்கிலாந்தில் பேசிய பிரதமர் கற்பழிப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பேசிவிட்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தலித் பெண்கள் கற்பழிப்புக்கு காங்கிரஸ் என்ன பதில் வைத்திருக்கிறது என்று கூசாமல் மாற்றிப் பேசினார்.

மதத்தை வைத்து பிளவுடுத்தி, அச்சுறுத்தி வாக்குளை கவர்வது பாஜகவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இப்போது அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பொய்யைச் சொல்லி அல்லது வரலாற்றை மாற்றிக் கூறி மக்களை குழப்புவது. இப்படி பொய்யானவற்றை சொல்லி ஓட்டுப் பிச்சை பெறுவதில் மோடி பிசியாக இருக்க, அவரது தொண்டர்பொடிகளோ பாஜகவின் ஸ்பெசாலிட்டியான ஃபோட்டோஷாப், பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் இவற்றைக் கொண்டு வாக்காளர்களை ஏமாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இப்படி செய்யும் எதிலுமே மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிடுகின்றனர். சீக்கிரமே அவர்களது புளுகுமூட்டைகள் அவிழ்ந்துவிடுகிறது.

ஆனால் இப்படி அவர்கள் அவிழ்த்துவிடும் பொய், புரட்டுகளை நிரூபிப்பதிலே எதிர்முகாமில் இருப்பவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுவிடுவதால் ஆக்கப்பூர்வமான பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாமல் பாஜகவிற்கு சாதகமாகவும் மாறிவிடுகிறது.

நேற்றைய தினம் நடந்த ஒரு பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் கரியப்பா, திம்மையா இருவரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றிய தவறான தகவல்களை கூறியிருக்கிறார். வரலாறு முக்கியம் பிரதமர் அவர்களே என்று வரலாற்றாய்வாளர்கள் பலரும் மோடியை விமர்சித்து எழுதியிருக்கின்றனர். சமீபத்தில் பாராளுமன்றத்திலும் ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி, பெனசீர் பூட்டோ பற்றிய தவறான தகவல்களை சொல்லி சமூக வலைத்தளங்களில் இழிப்பிற்கும், பழிப்பிற்கும் ஆளானார். ஆனால் அதையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அடுத்த பொய்யை நோக்கி சென்றுவிடுவதுதான் அவரது வெற்றியின் இரகசியம்.

மோடியின் பக்தர்கள் கர்நாடக தேர்தலில் சில கோல்மால் காரியங்களை செய்ய முயற்சித்து மாட்டிக்கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் இருக்கும் ஊழல் அரசை அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவது போன்ற ஒரு பிரச்சார வீடியோவே சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். சொந்த கட்சியை ஊழல் ஆட்சி என்று ராகுல் வர்ணிக்கிறார் என்க பரப்புரையை காங்கிரசார் முறியடித்தனர். அந்த வீடியோவில் ராகுலுக்கு பின் இருக்கும் பதாகையில் 2013 ஏப்ரல் மாதத்தில் அந்த நிகழ்வு நடந்ததாக இருந்தது. அப்போது இருந்த எடியூரப்பாவின் ஆட்சியைத்தான் ராகுல் விமர்சித்ததாக நிரூபிக்கப்பட்டது. இப்போது தங்களது முதல்வர் வேட்பாளர் பற்றிய விமர்சனத்தை பாஜகவினரே பரப்பியிருப்பது நகைப்புக்குரியதாகிருக்கிறது.

காங்கிரசின் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் இடுவது போன்ற வரு வீடியோவைப் பரப்பினார்கள். ஆனால் அந்த வீடியோவில் எங்கும் காங்கிரசின் கொடி இருப்பதாகத் தெரியவில்லை. அது தேர்தல் பிரச்சாரம் போலும் இல்லை. அந்த காணொலியும் பொய் என்று காங்கிரஸ் நிரூபித்திருக்கிறது. எங்கேயாவது கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் வந்தால் அது யாரால் எழுப்பப்பட்டிருக்கிம் என்பதை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைக் கேட்டால் சொல்வார்கள்.

இப்படி பொய்யையும், புரட்டையும், தவறான வரலாறுகளையும் சொல்லி வாக்காளர்களை குழப்பி அந்த குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மோடியும், பாஜகவினரும் முயன்று வருகின்றனர். அந்த முயற்சிகளுக்கு சரியான பதில்கள் காங்கிரசால் தரப்பட்டாலும் கூட மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இருபத்தைந்து வருடங்கள் நல்லாட்சி வழங்கிய இடதுசாரி அரசை இதே மோடியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பித்தான் திரிபுரா மக்கள் தூக்கியெறிந்தார்கள் என்பதை சமீபத்திய வரலாறு நமக்கு பாடம் உணர்த்துகின்றது.

அதே சமயத்தில் பொய்யைக் கூறி ஆட்சிக்கு வந்த திரிபுரா முதல்வரின் இலட்சணத்தைப் பார்த்து நாடு சிரிக்கிறது. அப்படிப்பட்ட முதல்வர் தங்களுக்கும் வேண்டுமா என்பதை கர்நாடக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

- அபுல் ஹசன்