இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்து கொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் = பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் வெகுஜன வூடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தை பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாக செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன.

தற்கொலை தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக்கைதிகள் கொல்லப்படுவது, போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை ( சில மூடர்கள் விதி விலக்கு). உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்பு படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், பாக். கூலிப்படைகளால் நிற்க வைத்துக் கொல்லப்படும் காஷ்மீரி ஹிந்துவாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வலியும், வேதனையும், மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். காலம் காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகளும், திட்டமிட்ட அட்டூழியங்களும் தான் உலக தாதா அமெரிக்கா முதல் சிங்களப் பேரினவாத இலங்கை வரை உலுக்கியெடுக்கும் இன்றைய பயங்கரவாததின் ஆணி வேர். உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள் என்பது கசப்பான உண்மை.

இதற்கு அடிப்படையான காரணம் தற்போதைய உலக சூழலில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளும், படுகொலைகளும், அட்டூழியங்களும் பெரும்பாலும் நடப்பது இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.( உதாரணமாக பாலஸ்தீனம், செசன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், காஷ்மீர்). எந்த இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாத பாலஸ்தீன இளம்பெண் ஒருவரின் கண் முன்னால் அவரது பெற்றோரும், சகோதரர்களும் துடிக்க துடிக்க இஸ்ரேலின் ராணுவத்தால் கொல்லப் படுகிறார்கள். இந்த வெறிச்செயலுக்கு பழி தீர்க்க வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுக்காக மனித வெடி குண்டாக, தற்கொலை போராளியாக மாறுகிறாள் இந்த பெண். இதில் மதத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நியாயமான முறையிலான கோரிக்கைகள் ஏற்கப்படாத போது போராட்டங்கள் நசுக்கப்படும் போது மனித உரிமைகள் மீறப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் ஆயுத போராட்டத்துக்கும் வன்முறைக்கும் தள்ளப்படுகிறார்கள்.( PLO, LTTE, HAMAS, IRA என நீள்கிறது இந்தப்பட்டியல்).

ஊடகங்களாலும் அரசுகளாலும் பயங்கரவாதிகள் ஆக பார்க்கப்படும் இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் இந்தப் பிரச்னை பூமிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களால் போராளிகளாக போற்றப்படுகிறார்கள். ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் மத அடிப்படையில் பார்க்கப்படக்கூடாது. ஆக்கிரமிப்புகளுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக போராட முஸ்லீமாகவோ, ஹிந்துவாகவோ இருக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த யாராக இருந்தாலும் கொல்லப்பட்டு வேரறுக்கப்படும்போது எதிர்த்துப்போராடுவார்கள். தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் ஆயுத போராட்டத்துக்கும் வன்முறைக்கும் தள்ளப்படுகிறார்கள். உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் தற்கொலை தாக்குதல்களும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கெதிராக நடத்தப்பட்ட மும்பை, கோவை குண்டு வெடிப்புகளும் மிகச்சரியான உதாரணங்கள்.

ஈழத்தில் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான LTTE ன் தற்கொலை தாக்குதல்களும், வடக்கு அயர்லாந்தில் IRA ன் தாக்குதல்களும், ஸ்பெயினில் தனி நாட்டுக்காக போராடும் ETA-ன் குண்டு வெடிப்புகளும், ஹிந்து பயங்கரவாதம், கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றா ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றது? ஈராக்கில் புஷ்ஷும், டோனி ப்ளேரும் நடத்தும் ஆக்கிரமிப்பு போரும், வான் தாக்குதல்களும், குண்டு வீசி குழந்தைகள் கொல்லப்படுவதும் கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றா கூறப்படுகிறது?ஆக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் வன்முறைகள் தங்கள் சார்ந்த சமயங்களின் முத்திரை குத்தப்படாதபோது, மத அடையாளப்படுத்தப்படாத போது இஸ்லாமிய மக்களின் போராட்டங்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதாக விஷ முத்திரை குத்தப்படுகிறது. இத்தகைய அவதூறுப்பிரச்சாரங்களையும், விஷக்கருத்துக்களையும் நடுநிலையாளர்களுடன் இணைந்து இஸ்லாமிய மக்கள் முறியடிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மேற்சொன்ன போராட்டங்கள் தவிர்த்து ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்காய்தாவின் “உலகளாவிய இஸ்லாமிய அகிலம்” “(இஸ்லாமிய சர்வ தேசியம்)” என்கின்ற அதி விபரீதமான குறிக்கோளுக்காக எகிப்து, இந்தோனேஸியாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எல்லா முஸ்லீம்களாலும் முக்கியமாக சிறுபான்மை இந்திய முஸ்லீம்கள் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று. (ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பது தனியாக கட்டுரையாக எழுதப் பட வேண்டிய விஷயம்) மதசார்பற்ற, ஜனநாயக அமைப்பு முறையின் அடித்தளத்துக்கு வேட்டு வைக்கும் இஸ்லாமிய சர்வ தேசியம் கோட்பாடு மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி வன்முறையை தூண்டி மதவெறிக்கு மக்களை காவு கொடுக்க வைக்கும் முயற்ச்சியாகும். இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகண்ட பாரதக் கனவின் இஸ்லாமிய வடிவமாக இருக்கும் அல்காய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய அகிலம் கோட்பாடு, ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்ட உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய அடித்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.

அல்காய்தா போன்ற சிறு எண்ணிக்கையிலான மத அடிப்படை வாத இயக்கங்கள் கோடிக்கணக்கான உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகளும் அல்ல அவர்களின் சித்தாந்தங்களை பின்பற்றவேண்டிய கட்டாயமும் முஸ்லீம்களுக்கு இல்லை. இந்த இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு உலக முஸ்லீம்களின் அங்கீகாரமோ, ஆதரவோ இல்லாத போது இவர்களின் வன்முறை இஸ்லாமிய பயங்கரவாதம் என அழைக்கப்படக் கூடாது. ஏதோ முல்லா முஹமது ஒமரும், ஒசாமாவும் தான் உலக முஸ்லீம்களின் தலைவர்கள் போல மீடியாக்கள் ஒப்பாரி வைப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர்களின் வன்முறை இஸ்லாமிய பயங்கரவாதம் என பொதுவான பதம் மூலம் தவறாக அடையாளப் படுத்தக்கூடாது. இவர்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதற்கான வாய்ப்பை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மத அடிப்படையிலான வன்முறை செயல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளில் முஸ்லீம்கள் மேல் அடக்கு முறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், தனி நபர்களை கண்காணித்து உளவு பார்ப்பதற்கும் வழி வகுத்தன. இப்போதைய சூழலில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டங்களும், அல்காய்தாவின் குண்டு வெடிப்பு தாக்குதல்களும் வெவ்வேறான நோக்கங்களுக்காக நடத்தப்படுபவை என பிரித்தரியப்படாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதாக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

பாலஸ்தீனம், செசன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், இங்கெல்லாம் என்ன நடந்து கொண்டிருக்கின்றது, தினம் தினம் இம்மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன, மனித உரிமை மீறல்கள், வான் வழித் தாக்குதல்கள், மரணங்கள்,துயரங்கள் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு ஏதோ பொழுது போக்கிற்காக இங்குள்ள இஸ்லாமிய மக்கள் தாக்குதல்களை நடத்துவது போல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை பரப்புகின்றன. ஆனால் ஆக்கிரமிப்புகளும், படுகொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிரான மக்களின் எதிர்ப்புகளை மறைத்து விட்டு அடிப்படையான காரணங்களை மறைத்து விட்டு நுனிப்புல் மேய்கின்றார்கள் அல்லது செய்திகளை வடிகட்டி முஸ்லீம்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ஊடகத்துறையில் உள்ளவர்கள். வாழ்வுரிமைப் போராட்டங்கள் ஏதோ சாதாரணமான சட்டம்- ஒழுங்கு பிரச்னையாக சித்தரிக்கப்படக் கூடாது.

அதிகரித்துவரும் இத்தகைய தாக்குதல்களின் ஊற்றுக்கண்களாக உள்ள கீழே பட்டியலிட்டுள்ள அடிப்படையான காரணங்கள் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்

1.பாலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

2.செசன்யாவில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் முடிவுக்கு வருவது.

3.ஈராக் மேலாண ஆக்கிரமிப்பு விலக்கப்பட்டு அநியாயமான ஏகாதிபத்தியபோர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4.தீர்க்கப்பாடமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னை காஷ்மீர் மக்களுக்கு (முஸ்லீம்கள் + ஹிந்துக்கள்) நியாயமான ஏற்புடையதான சுமுகமான தீர்வு.

இடதுசாரி கம்யூனிச சித்தாந்தத்தை கண்டு அஞ்சிய மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு தற்போது இஸ்லாம் ஒரு மிகப்பெரிய சக்தியாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. இஸ்லாத்தை எதிர்கொள்ள சதிகளும், மீடியாக்கள் மூலம் நடத்தப்படும் அவதூறுகளும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் எதிர் கொள்ளும் இந்த அவலங்கள், மீடியாக்களின் அவதூறுகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால், இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிக்கும், ஆதரிக்கும் மார்க்கம் அல்ல என்பதை முஸ்லீம் அல்லாத ஏனைய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் அமெரிக்கா மற்றும் அதன் கைக்கூலிகளின் மக்கள் விரோத ,ஜனநாயக விரோத கொள்கைகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், அட்டூழியங்களுக்கு எதிராகவும், அநியாயமான மக்கள் விரோத அரசுகளுக்கும், மத அடிப்படையில் வன்முறையை தூண்டும் இயக்கங்களுக்கு எதிராகவும் அகில உலகிலும் உள்ள உழைக்கும் இஸ்லாமிய மக்கள் புரட்சிகர, ,ஜனநாயக, மதசார்பில்லாத, மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் பாப்ரி, மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது, மும்பை, குஜராத் கோயம்புத்தூரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மதக்கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டது, சிறுபான்மையினரின் சொத்துக்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது, தீர்க்கப்பாடமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னை, மதவெறி இயக்கங்களின் சிறுபான்மை துவேசம்,அரசு மற்றும் காவல்துறை அடக்குமுறைகள், இஸ்லாமிய அடித்தட்டு மக்களின் வறுமை வேலை இல்லாமை இவை எல்லாம் இஸ்லாமிய இளைஞர்களை எதிர் தீவிரவாதத்தில் உந்தித்தள்ளிய முக்கியமான காரணங்கள். சரியான அரசியல் தலைமை வழி காட்டுதல் இல்லாமல், ஓட்டுபொறுக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதையே கொள்கையாகக் கொண்ட சுயநலம் பிடித்த அரசியல் கட்சிகள் மூலமாக தங்கள் பிரச்னைகள் தீரும் என பாமர இஸ்லாமிய மக்கள் நம்புகின்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான மதவெறி இயக்கங்களின் தாக்குதல்களை முறியடிக்க அல் உம்மா, ஜிஹாத் கமிட்டி, SIMI, போன்ற முஸ்லீம் எதிர் தீவிரவாத இயக்கங்களில் இணைந்து குண்டு வெடிப்புகள் நடத்துவதுதான் தீர்வு என குறைந்த எண்ணிக்கையிலான இஸ்லாமிய இளைஞர்கள் மிகத்தவறான வழியினை பின்பற்றுகிறார்கள். ஆக நிதர்சனம் என்னவென்றால் சிறுபான்மை எதிர் தீவிரவாத இயக்கங்களாலோ, ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளாலோ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கவோ, முறியடிக்கவோ முடியாது. மாறாக இஸ்லாமிய அடித்தட்டு மக்கள் இடதுசாரி, புரட்சிகர இயக்கங்கள், தலித் அமைப்புகள்,மனித உரிமை இயக்கங்கள்,ஜனநாயக, மதசார்பில்லாத சமுக நல இயக்கங்களுடன் ஒரு அணியில் திரண்டு நின்று தங்களை வேரறுக்க துடிக்கும் மத வெறியற்களை எதிர் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக மதவெறிக்கு எதிரான போராட்டத்தை சிறுபான்மை எதிர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்து பரந்துபட்ட அடித்தட்டு மக்கள் முன்னெடுத்துச் செல்லலாம். ஏனென்றால் பெரும்பான்மை மத வெறிக்கு எதிரான போராட்டமானது ஒன்று இரண்டு குண்டு வெடிப்புகளால் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை கிடையாது மேலும் வன்முறைக்கு எதிர் வன்முறை நிரந்தர தீர்வு அல்ல என்பதே உண்மை. 

- இஸ்ஸத்