நீதிபதிகள் தாங்கள் வாழும் சமூகத்தில் தங்களை கரைத்துக் கொண்டவர்களாய் வாழ வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மனிதனின் வலியையும், வேதனையையும் உள்வாங்கிக் கொண்டு பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக தீர்ப்பு வழங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களை சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டு ஏசி அறைகளில் புத்தகங்களுக்குள் புதைந்துகொண்டு வேற்றுகிரவாசிகளைப் போல வாழ்ந்தால், அவர்கள் கொடுக்கும் தீர்ப்புகளின் லட்சணம் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்புகளைக் காட்டிலும் எந்த வகையிலும் மேம்பட்டதாய் இருக்க முடியாது. சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயஸ், யூ.யூ.லலித்  ஆகியோர் அளித்த தீர்ப்பு  அப்படித்தான் இருக்கின்றது. இந்த நீதிபதிகள் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தை அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஏற்படுத்துகின்றது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டபடி வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும், முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

una

 நீதிபதிகளுக்கு ஆதிக்க சாதி அப்பாவிகள் மீது பீறிற்றுக் கொண்டு வரும் பாசம், எப்போதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்திய சமூகம் இன்று வரையிலும் கடைபிடித்துவரும் கொடுமையான சாதிய தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வந்ததுண்டா? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தவறாக பதியப்படுகின்றன என வேதனைப்படும்  நீதிபதிகள், இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே குடிவைத்து கேவலப்படுத்துவதற்காக வேதனைப்படவில்லையே. இந்திய சட்டம் அனைத்து மனிதர்களையும் சரிசமமாக பாவிக்க வேண்டும் என்கின்றது. ஆனால் அப்படி சட்டப்படித்தான் மனிதர்கள் இந்தியாவில் சரிசமமாக நடத்தப்படுகின்றார்களா என்று நீதிபதிகள் எப்போதாவது தங்களது ஏசி அறைகளில் இருந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார்களா? பார்த்தால்தானே தெரியும் இன்னும் பதியப்படாமல் கோடிக்கணக்கான வன்கொடுமை வழக்குகள் இருக்கின்றன என்பது.

   புகார்கள் தவறாக வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் கொடுக்கப்படுகின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் யார்தான் புகார் கொடுக்காமல் இருக்கின்றார்கள்? ஏன் அரசாங்கமே தனக்குப் பிடிக்காதவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுப்பதில்லையா? போராட்டக்காரர்களை ஒடுக்க சம்மந்தமே இல்லாமல் குண்டர் சட்டத்தையும், தேசியப் பாதுகாப்பு சட்டத்தையும் பயன்படுத்துவதில்லையா? அதற்காக இதுவரை நீதிமன்றம் எத்தனை அரசியல்வாதிகளை தண்டித்து இருக்கின்றது. அதையெல்லாம்  நீதிமன்றங்கள் வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தன. அதனால் யாரோ ஒருவர் தவறாகப் புகார் கொடுக்கின்றார் என்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே பயனற்றுப் போகும் அளவுக்கு அதன் மீது நீதிபதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது நீதிபதிகளின் சாதிய உளவியலைத்தான் நமக்குக் காட்டுகின்றது.

 புகார் கொடுத்தால் அது உண்மையா பொய்யா என  விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள்  சொல்வதில் இருந்தே, மற்ற குற்றங்களையும் சாதிரீதியாக இழைக்கப்படும் குற்றங்களையும் ஒரே தன்மையில் வைத்து நீதிபதிகள் பார்க்கின்றார்களா என்ற கேள்வியும் இயல்பாக எழுகின்றது. ஒருவரை தன்னைவிட தாழ்ந்தவன் என்று சொல்லி சாதி ரீதியாக இழைக்கப்படும் குற்றங்கள் அதன் இயல்பிலேயே மனித உரிமைக்கு எதிரானது, ஜனநாயகமற்றது என்ற அடிப்படை புரிதல்கூட இந்த மேட்டுக்குடி நீதிபதிகளுக்கு இருப்பதில்லை.

  பிறப்பின் அடிப்படையில் தனக்கு அதிகாரம் உள்ளது என்ற மமதையில் தன்னுடன் வாழும் சகமனிதனை சாதிப் பெயரை சொல்லி இழிவாகத் திட்டுவது, அவனது உரிமைகளைப் பறிப்பது, காலில் செருப்பு போடக்கூடாது, கையில் வாட்ச் கட்டக்கூடாது, வேட்டியை மடித்துக் கட்டக்கூடாது, தோளில் துண்டு போட்டு நடக்கக்கூடாது, ஆதிக்க சாதிக்காரர்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் போது வண்டியில் இருந்து இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என நிர்பந்திப்பது, பொதுகுழாயில், பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடுப்பது, செத்த மாட்டைத் தூக்கவும், இழவு செய்தி சொல்லவும் கட்டாயப்படுத்துவது, பறை அடிக்க கட்டாயப்படுத்துவது, மலம் அள்ள கட்டாயப்படுத்துவது, தாழ்த்தப்பட்டவன் என்ற காரணம் சொல்லி முடிவெட்ட மறுப்பது, தேனீர் கடையில் இரட்டை டம்ளர் பயன்படுத்துவது. ஆதிக்க சாதியினரின் காடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்துவது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என தினம் தினம் நாம் பார்க்கும் இத்தனை சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இவை எல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அரசும், காவல்துறையும், நீதிமன்றமும், பொதுச்சமூகமும் எந்தவித கூச்சமும், அருவருப்பு உணர்வும் இன்றி இதைக் கடந்துபோய் கொண்டுதான் இருக்கின்றன.

  தலித்துகளிலேயே ஏதோ சில உணர்வு பெற்ற, தன்னை தீண்டாமைக் கொடுமை செய்ய எவனுக்கும் உரிமையில்லை என்று இந்திய அரசியல் சட்டம் தனக்கு கொடுத்துள்ள உரிமையை உத்திரவாதபடுத்திக் கொள்ள முயலும் நபர்கள் தான் துணிந்து காவல்துறையில் புகார் கொடுக்கின்றார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் மீது இந்த வெட்கம் கெட்ட சமூகம் இழைக்கும் அநீதிகளை சகித்துக் கொண்டு புழு, பூச்சிகளைப் போல வாழ கற்றுக்கொண்டு, வாழ்ந்தும் வருகின்றார்கள். அப்படி ஒன்று இரண்டு பேர் கொடுக்கும் புகார்கள் கூட ஆதிக்க சாதி வெறியர்களை அச்சுறுத்துகின்றது என்றால், அதற்கு நீதிமன்றம் சாமரம் வீசுகின்றது என்றால், மாற்றம் கொண்டுவர வேண்டியது சட்டத்தில் அல்ல; அதை மதிக்காமல் தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல அதை வளைக்க நினைக்கும் நீதிபதிகளையும் அவர்களை நியமிக்கும் ஆட்சியாளர்களையும் தான்.

 பொதுவாகவே வன்கொடுமை தடுப்புச் சட்டதின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. “ஒடுக்கப்பட்ட பட்டியல்சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள், கடந்த 2016 வரையிலான பத்தாண்டுகளில் 746 சதவிகிதம் அதிகரித்துள்ளன; இதே காலகட்டத்தில், பழங்குடியினருக்கு எதிரான குற்றம் 12 மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறது இண்டியா ஸ்பெண்ட் நிறுவனத்தின் பகுப்பாய்வு! பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2006-ல் ஒரு இலட்சம் பேருக்கு 2.4 எனும் அளவில் இருந்தது, 2016-ல் 24.3 ஆக அதாவது எட்டு மடங்கு அதிகரித்தது. ஆனால் பட்டியல் சாதியினர் மீதான வழக்குகளில் விசாரித்து முடிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவற்றின் அளவு 99 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பழங்குடியினர் வழக்குகளில் நிலுவையின் அளவு 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  மேலும் குற்றம்சாட்டப்படும் நபர்களில் விசாரணையின் முடிவில் அதிக அளவில் விடுவிக்கப்படுவதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2006ம் ஆண்டில் 72 சதவிகிதம் அளவு குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலைமையானது, 2016ம் ஆண்டிலும் பெரிய மாற்றம் இல்லாமல் 74 சதவிகிதமாக ஏறுமுகமாவே இருந்தது”(நன்றி;விகடன்). உண்மை நிலை இவ்வாறு இருக்க ஆதிக்கசாதி வெறியர்களும் அவர்களின் மனச்சாட்சியாய் விளங்கும் நீதிபதிகளும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்று கூக்குரல் இடுவது எப்படியாவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விடவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.

  உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் குறிப்பாக பிஜேபி ஆளும் ம.பி மற்றும் உ.பி மாநிலங்களில் நடந்த தலித்துக்களின் போராட்டத்தை 11 பேரைக் கொன்று பாசிச பிஜேபி அரசுகள் தலித்துக்களின் மீதான தங்களது வெறியை தீர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தீபக் மிஸ்ரா மீண்டும் தீர்ப்புக் கொடுத்த நீதிபதிகளிடமே அனுப்பி, தான் யார் என்பதைக் காட்டியிருக்கின்றார். அதனால் வெளிப்புற அழுத்தம் இல்லாமல் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை கைவிடும் என்றோ, இல்லை பிஜேபி அவசரச் சட்டம் கொண்டுவந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9 வது அட்டவணையில் சேர்க்கும் என்றோ நாம் நினைத்தோம் என்றால், நாம் ஏமாந்துதான் போவோம். இந்தியாவில் ஒரு வாரத்துக்கு 13 தலித்துகள் கொலை செய்யப்படுகின்றார்கள், 5 தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன, 6 தலித்துகள் கடத்தப்படுகின்றார்கள். இது எல்லாம் இவர்கள் தலித்துக்கள் என்பதாலேயே நிகழ்த்தப்படுகின்றன. வன்கொடுமை தடுப்புச்சட்டம் நடைமுறையில் நீர்த்து போகாமல் இருக்கும் போதே இது எல்லாம் கேட்பார் யாருமின்றி நடைபெறுகின்றது என்றால், இங்கே கோகுல்ராஜ்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதும், சங்கர்கள் வெட்டி வீழ்த்தப்படுவதும் ஆதிக்க சாதி வெறிநாய்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆகிவிடும். அதைத்தான் சாதி சாக்கடையில் படுத்துருளும் பன்றிகள் விரும்புகின்றன.

 எனவே தலித் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று இந்தக் கேடுகெட்ட தீர்ப்புக்கு எதிராகவும், இது போன்ற தீர்ப்புகள் கொடுக்கும் அளவுக்கு நீதித்துறையை சீரழித்து வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலுக்கு எதிராகவும் கடுமையாகப் போராட வேண்டும். இல்லை என்றால் தலித்துக்களை கொல்வதற்கு எங்களுக்கு இந்துமத தர்மப்படி உள்ள உரிமையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று தலித்துக்களின் தாலி அறுப்பதற்கென்றே கட்சி நடத்தும் கழிசடைகள் எல்லாம் கோரிக்கை வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

- செ.கார்கி