எங்களுடைய தியாகி திலீபன், 'தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வுதான் வெற்றிக்கு அடிப்படை' என்று எப்போதும் கூறுவார். தமிழ் மக்கள் ஆச்சரியத்தோடும் வியப்போடும் பார்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழீழ இனச்சிக்கல் குறித்து பல நாடுகளின் கோட்பாடுகள் அறிக்கைகளாக அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகளாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழீழ இனச் சிக்கலானது உலக அரங்கில் ஒரு முதன்மைச் சிக்கலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைகளை நாம் பல கோணங்களில் பார்க்க வேண்டும்.

முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியத் தடையின் அறிக்கை
இரண்டாவதாக இணைத் தலைமை நாடுகளின் மிகவும் காத்திரமான அறிக்கை
மூன்றாவதாக இங்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சரின் அறிக்கை.
நான்காவதாக நெதர்லாந்து தூதுவரின் காட்டமான அறிக்கை என்று வந்திருக்கின்றன.

இந்த அறிக்கைகளுக்கு இடையே சில சொற்கள் கவனமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தடையானது விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்றும் இரு தரப்பையுமே கடுமையாகக் கண்டித்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகள் தடை பற்றிய சொற்கள் மிகத் தெளிவற்று இருப்பதாகவும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். டோக்கியோவில் நடந்த மிக மிக முக்கியமான இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் பின்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சொற்றொடர் ஒன்று கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் முறைமையான சட்ட ரீதியான வேணவாக்கள் சிறிலங்கா அரசால் கவனத்தில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவனமான சொற்பிரயோகம். வேணவா என்பதுதான் தமிழ் மக்கள் நீண்டகாலம் பயன்படுத்தி வந்த சொல். அது இன்றைக்கு உலக அரங்கிலே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் நெதர்லாந்து தூதுவர் அறிக்கை ஒன்றும் வந்துள்ளது. ஏனைய தூதுவர்களை விட மிக வெளிப்படையாக பகிரங்கமாக கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்க மறுத்தால் சிறிலங்கா அரசாங்கமும் போராளிகள் குழுவும் சர்வதேச அளவில் ஓரம் கட்டப்படும் நிலை உருவாகும் என்று அவர் கூறுகிறார். மேலும் நாங்கள் மனிதாபிமான உதவிகளை நிறுத்தாவிட்டாலும் கூட இராணுவ உதவிகளை நிறுத்துவோம் என்று கடுமையான சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா யுத்தத்தில் மூழ்கும்போது சர்வதேசத்திலிருந்து ஓரம்கட்டப்பட்டு விடும். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதைவிட இது மிகவும் முக்கியமானது என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார். அதேபோல் சிறிலங்காவில் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கடைசியாக சந்தித்த அமெரிக்காவின் ரிச்சர்ட் பெளச்சர், ஒருவகையான ஏமாற்றம், விரக்தியான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். தங்களது இராணுவ உதவி என்பது எல்லோரும் கூறுவது போல் போருக்கானதாக அமையாது என்று திரும்ப திரும்ப அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். 'நாங்கள் இராணுவத் தீர்வை இலங்கைத் தீவில் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்' என்ற சொல்லை அவர் திரும்ப திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் சர்வதேசத்தின் 'அழுத்தம் கொடுக்கிற' இராஜதந்திர உத்தி என்று பார்க்கிறோம். இலங்கைச் சிக்கலில் இத்தகைய அழுத்தம் கொடுக்கிற பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்ற கருத்தை முன்வைக்கிறோம்.

டோக்கியோவில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வன்முறையை, பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் பேச்சுவார்த்தைக்கு உடனே திரும்ப வேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் செல்வதற்கான ஒரு அரசியல் சமரசத்துக்கு தயாராக வேண்டும் என்று விடுதலைப் புலிகள் செய்ய வேண்டியவனாவாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களினது சட்டரீதியான முறைமையான வேணவாக்களை நிறைவேற்ற வேண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களை ஒடுக்க வேண்டும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பாக கருணா குழு, ஈ.பி.டி.பி. குழுவை ஒடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டியதான பட்டியலை இணைத் தலைமை நாடுகள் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை விட சிறிலங்கா அரசாங்கத்துக்கு இணைத் தலைமை நாடுகள் கொடுத்திருக்கும் ஒரு அழுத்தம் என்றுகூட நாம் சிந்திக்கலாம். மேலோட்டமாக பார்த்தால் இது உண்மையாகத் தோற்றமளிக்கிறதுதான். ஆனால் இலங்கைத் தீவிலே ஒரு தீர்வைக் காண்பதற்கான அழுத்தத்தை இதுவரை எந்த சக்தி செலுத்தியது? என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.

இப்போதும் போல் 1983 ஆம் ஆண்டுகளில் படுகொலைகள் நடந்த போது இந்திய அரசு நேரடியாகத் தலையிட்டு காட்டமான அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கைகளை சிங்கள அரசு ஜே.ஆர். அரசு புறந்தள்ளிய போது ஒருவித இரகசிய பயிற்சித் திட்டங்களை இந்தியா உருவாக்கி அந்தத் திட்டத்துக்கு ஊடாக தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதன் மூலம் சிறிலங்கா அரசை பணிய வைக்க மேற்கொள்ளப்பட்டவற்றை அறிவோம். இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானதும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டு அது கைவிடப்பட்டதும் அறிவோம்.

உண்மையான அழுத்தத்தை சிங்களத்தின் மீது உலகம் செலுத்தவில்லை. பாலஸ்தீன அரசாங்கப் பொறுப்பேற்றுள்ள ஹமாஸ் நிர்வாகத்துக்கான உதவிகளை நிறுத்தியதைப் போல் முற்றாக சிங்களத்துக்கு சர்வதேசம் நிறுத்தப் போவதில்லை. சர்வதேச சமூகமான இராணுவ உதவியைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறுவது ஒரு பம்மாத்து. ஏனெனில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளை வேண்டிய அளவு கொடுத்து அதனை மிகப் பெரிய கொலை இயந்திரமாக மாற்றி வைத்துள்ளனர். அப்படிச் செய்தவர்கள் இப்போது வெளியிடுகிற அறிக்கைகள் சிறிலங்காவை பாதிக்கும் என்பது ஏற்க முடியாது.

இந்த அறிக்கைகளுக்கூடாக சிறிலங்காவிடம் இந்த உலகம் எதனை எதிர்பார்க்கிறது? சிறிலங்காவுக்கு உலகத்தால் போடப்படுகிற அழுத்தங்கள் ஒருபோதும் பயனளிக்காது. அந்த அழுத்தம் செலுத்தப்படுகிற சூழலில் ஒருவித பொறிமுறையை சிங்களம் உருவாக்கிக் கொண்டுதான் வருகிறது. ஜே.ஆர். அல்லது சந்திரிகா அல்லது மகிந்த ராஜபக்ச என யாராக இருந்தாலும் இந்த மாதிரியான அழுத்தங்கள் வருகின்ற போது திடீரென குத்துக்கரணம் அடித்து தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவார்.

இப்போது மகிந்தரும் அதேபோல் உடனடியாக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார். பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி, ஒருவகையிலும் இல்லாத புதிய தீர்வை முன்வைக்கப் போவதாகக் கூறியுள்ளார். தனக்கே உரித்தான அந்தத் தீர்வை உருவாக்க பல கட்சியினரை கொண்ட குழுவை ஏற்படுத்தி அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்படும் என்று அணுகுண்டையும் போட்டுள்ளார்.

அரசியல் யாப்பு மாற்றம் என்பது சிறிலங்காவில் ஒருபோதும் நடக்காது என்பது எல்லோரும் நன்கறிந்த விடயம். சிறிலங்காவின் அரசியல் யாப்பை மாற்றுவது என்பது உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதற்குச் சமமானது.

இந்த உத்தியின் மூலமாக உலகத்தின் அழுத்தங்களை செயற்படுத்தவிடாத ஒரு இடைவெளியை மகிந்தர் உருவாக்கத் தயாராகிவிட்டார்.

இந்தியா அழுத்தம் கொடுத்த போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமெரிக்கச் சார்பு நிலையை எடுத்தார். இப்போது மகிந்தர் இரு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். ஜே.வி.பியானது மகிந்தரோடு இணைந்து அரசாங்கத்தில் சேர்ந்து தீர்வுக்கு ஒத்துழைக்குமா? மகிந்தரை இடையிலே காலை வாரிவிட்டு அவரை துரோகி என்று பட்டம் சூட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுமா? என்பவை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமெரிக்கா உதவிகளைச் செய்யாதுவிட்டால் சீனா, பாகிஸ்தானோடு உறவுகளைப் பேணுவதன் மூலம் உதவிகளைப் பெற முடியும் என்கிற நிலைப்பாட்டை மகிந்தர் கொண்டிருப்பதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரமாக அழுத்தங்களைச் செலுத்துகின்றன. இப்படியான ஒரு சர்வதேச சிக்கலாக இது நீடிக்கின்ற போது தமிழரது மனங்களைப் பாதித்து தமிழீழச் சிக்கலை நீண்ட காலத்துக்கு இழுத்துச் செல்லக் கூடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்றைக்கு இந்த உலகம் மிகவும் காத்திரமான சொற்களுடன் கூடிய அறிக்கைகளை வெளியிட்டாலும் கூட மிகுந்த சிக்கலுக்குள் உலகம் சிக்கி நிற்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இதுவரையில் உண்மையிலேயே அழுத்தம் கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே. புலிகளால் மட்டுமே இது முடிந்தது. விடுதலைப் புலிகளின் போர் ஆற்றலினால்தான் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்கு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான் உலகம் பாராட்ட வேண்டும். ஆனால் புலிகளுக்குத் தடை விதிக்கிறார்கள். அதுபற்றி நாங்கள் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஐரோப்பிய நாடுகள் தடை செய்த போது நார்ட்டிக் நாடுகள் எதிர்த்ததாக தெரிகிறது. ஐரோப்பிய நாடுகள் செய்தியை வெளியிட்ட செய்தியாளர் சொன்னார் தங்களுக்குள்ளேயே குழப்பம் இருக்கிறது தடையால் எதிர்பார்த்த பயனடைய முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது என்றார். சிறிலங்கா அரசாங்கத்தால் எத்தகைய அழுத்தத்தைச் செலுத்த முடியும் என்பதற்கான விடையை இந்த உலகத்தால் கூற முடியுமா? அப்படிக் கூறினால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

இன்று தமிழர் நிலப்பரப்பில் தமிழ் மக்கள் தற்காப்புப் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தத் தற்காப்பு நிலைக்கு அப்பால் நாங்கள் தாக்குதல் நிலைக்குச் சென்றால்தான் இந்த சிங்களம் எத்தகைய தீர்வுக்கு வரும் என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த உண்மையை உணராது தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இந்த உலகம் செயற்பட்டால் சிறிலங்கா அரசாங்கம் மேலும் மேலும் பலமடைந்து சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டுச் செல்லும். அப்போது உலகம் மூக்கறுபட்டு நிற்கும் என்பதை முன்கூட்டியே கூறுகிறோம்.

இங்கே இனி நடக்கப்போகிற துன்பங்களுக்கு உலகம் ஒருவகையில் பொறுப்பேற்கப் போகிறது என்று கடந்த முறை கூறியிருந்தோம். ஆகவே உலகம் விரைந்து செயற்பட்டு என்ன வகையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று விரைந்து முடிவெடுத்து அந்த அழுத்தத்தைக் கொடுக்கின்ற போது அது பயனளிக்கிறதா இல்லையா என்று பார்த்ததன் பின்னர் புலிகளினது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவை தர்க்க ரீதியானவை யதார்த்தப்பூர்வமானவை என்பதையே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஆகவே புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யப் போகிறதா? அல்லது சிறிலங்கா மீது பொருண்மிய தடை விதிக்கப் போகிறதா? அல்லது வெறுமனே அறிக்கை விட்டு காத்திருக்கப் போகிறார்களா? என்ற கேள்விகள் வரலாற்றில் பெறுமதியான கேள்விகள்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஏற்கெனவே அறிந்த தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டு தங்கள் வாழ்வையும் தேசத்தையும் காத்திட எதனை எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தமிழீழ மக்களின் இறுதிச் செய்தி.

Pin It