எதுவும் தோன்றா பெரும் தவிப்போடு அமர்ந்திருக்கிறேன்.  

நினைக்க நினைக்க ஊறும் பெரும் கோபத்தின் வழியே இக்கட்டுரையை கனத்த விரல்களின் படபடப்போடு எழுதுகிறேன். இதயத்துடிப்பின் ஓசையை பெருந்துக்கமாக  உணர்கிறேன். உணர்தலின் பொருட்டு எதிர்பக்கமும் என் பக்கமென இருக்கிறது காயமும் வலியும்.
 
சமீபமாக நம்மை சுற்றி என்னவெல்லாமோ நடக்கிறது. முச்சந்தி சிரிக்க முன்றாம் உலகப் போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று நம்புகிறேன். கற்பனைக்கு மீறிய கொடிய காட்சிகளை எல்லாம் அலைபேசி திரையில் ரத்தம் சொட்ட காண்பது மெய் வருந்தும் கூலி எனக் கொள்கிறேன்.
child abuse
 
நொடிக்கு நொடி வந்து விழும் காணொளிகளில்.... புகைப்படங்களில்...... காட்டுமிராண்டித்தனத்தின் உச்ச கட்டத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் மானுடத்தின் கடைசிக் கனவுகளை போல கையறு நிலையில் யார் விட்ட சாபமென இருக்கிறோம்....? ஆட்சியும் சரி இல்லை. ஆள்பவர்களும் சரி இல்லை. எங்கும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நல்ல திட்டங்கள் இல்லை. தண்ணீர் இல்லை. விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. நல்ல படிப்பு இல்லை. நல்ல பாலங்கள் இல்லை. நீர்வளம் நிலவளம்... உயிர் வளம் உணவு வளம் என்று எதுவும் கட்டுப்பாட்டில் இல்லை. எதை பற்றிய எந்தக் கவலையும் இல்லை. கட்டு காட்டாய் பணம் பதுக்கி வைப்பது ஒன்றே அரசிலமைப்பு சட்டமான பின் தூக்கில் தொங்குவதுதானே முறை இந்த அரசியல் சாசனத்துக்கு.
 
வீட்டுக்குள் இருக்கும் உறவுகளை நம்ப முடியவில்லை. பக்கத்து வீட்டு பையனை நம்ப முடியவில்லை. பள்ளி வாத்தியார்களை நம்ப முடியவில்லை. நாகரிகம் வளர வளர  நம்பிக்கை அற்று போகிறது வாழ்வின் முறை. கிட்டத்தட்ட எல்லாருமே மன உளைச்சலிலும்...... மன அழுத்தத்திலும்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பாலியல்  வறட்சி மிகுந்த நாடாக நம் நாடு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகை அல்ல. பாலியல் பற்றிய போதிய அறிவும்.. புரிதலும் இல்லாமை பெரும் தவறுகளை நிகழ்த்துகிறது. இன்னமும் எவனோ போட்ட திட்டத்தை படித்துக் கொண்டிருப்பதன் விளைவு அது. எதுவெல்லாம் இவ்வாழ்வை சீரமைக்க ஏதுவாக இருக்குமோ அதை எல்லாம் பாட திட்டத்தில் கொண்டு வந்து அறியாமையை போக்குவது தானே சான்றோரின் வேலை. சரி.......சான்றோன் எவன் ஆட்சியில் இருக்கிறான்....?!  இன்னமும் சாதியும் மதமுமே ஆட்சி செய்தால் எது விளங்கும்....? அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு கிளம்பும் எல்லாமும் எதிர்வினையாகவேதான் இருக்கும். இருக்கிறது. எல்லாமே நக்கலும் நையாண்டியுமாகவே போய் விட்டது. காலாய்த்தலின் வழியாக ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஆபத்து தான் என்று கூற முடியும். 
 
அடி மட்டத்தில் இருந்து ஆளும் மட்டம் வரை அறத்தை தொலைத்த சமூகமாக மாறி விட்டோம். மன உளைச்சலில் முகநூலிலும் வாட்சப்பில் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதை உணர்வு பூர்வமாக அணுகையில் உண்மையோடு பொய்மையும் கலந்த கற்பனையின் நிறம் நிஜத்தை சொட்டிக் கொண்டிருக்கிறது. இங்கு நிஜம் என்பது எழுதுபவனின் சாயல். இயலாமையின் சாயலும் கூட.
 
ஒரு எட்டு வயது சிறுமியை கோவிலுக்குள் கிட்டத்தட்ட ஒரு வாரம் அடைத்து வைத்து வன்புணர்வு செய்ய எப்படி அந்த மனிதர்களால் முடிந்தது. எட்டு நாளும் காவல் துறை எதை புடுங்கிக் கொண்டிருந்தது என்றும் தெரியவில்லை. கோவில் கொண்ட கடவுளும் எதை புடுங்கிக் கொண்டிருந்தது என்றும் தெரியவில்லை. எல்லா புடுங்கிகளும் சேர்ந்து ஒரு பிஞ்சை இந்த பூமியில் இருந்து அநியாயமாய் அத்துமீறலாய்... புடுங்கி போட்டு விட்டார்கள். 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நண்பனை வர வைத்து "யான் பெற்ற இன்பம் நீயும் பெறுக" என செய்து........இதை கண்டு பிடிக்க போன காவலரும் "ஆனது ஆச்சு... ஏலோடு எட்டு" என அந்த தருதலையும் அதே வேலையை செய்கிறது என்றால்... நம் இறையாண்மையை எதில் கொளுத்தி போட...?
 
இது காந்தியும்... பகத்தும் வாழ்ந்த நாடுதானே....!
 
திக்கென்று எழுந்தமர்ந்து கொள்ளும் நிஜத்தின் கோரப்பிடி கழுத்திறுக்கும் சுவாசத்தில்.... இப்பெரும் தேசம் அம்மணமாய் வெறும் கோடுகளால் கிழிக்கப்பட்ட வரைபடமோ என்றொரு அச்சம் கம்பளி பூச்சிகளாக உயிர் எங்கும் ஊறுகிறது.
 
சட்டம்.. ஒழுங்கு... காவல்.. எல்லாமே சிலரின் வாழ்வுக்கென்றால்.. மற்றவன் எல்லாம்... எதை மூடிக் கொண்டு போவது. தலைமைக்கு உலகம் சுற்றவே நேரம் போதவில்லை. அல்லக்கைகளுக்கு அவிழும் அண்டர் வியர்களை இழுத்துப் பிடிக்கவே நேரம் போதுவதில்லை... பிறகெங்கே நாடும் நாட்டு வளர்ச்சியும்....
 
அப்படியே திரும்பினால் மாதா பிதா குரு.........மூன்றாம் இடத்தில் இருக்கும் சனியன் ஒன்று அலைபேசியில் ஆசை வார்த்தை பேசி மாணவிகளை படுக்கைக்கு அழைக்கிறது. படிக்க அனுப்பினால்... படுக்க அழைக்கும் இக் கேடுகெட்ட பச்சைத்தனங்களை எந்த ரப்பரால் அழிப்பது. வறுமைக் கோட்டையே அழிக்க முடியாத தரித்திர நாட்டில்... வித விதமான கோடுகளால் கோலம் போடும் இத்தகைய பெண்களை நடு ரோட்டில் தூக்கில் இட்டால் தான் என்ன....? பெண்கள் தான் பெண்களின் மறுமலர்ச்சிக்கும்.......வாழ்வின் உயர்வுக்கும்.... பெண் விடுதலைக்கும் தடைக்கல்லாக இருக்கிறார்கள். என்ன தான் செய்ய போகிறோம். ஆட்சியும் அதிகாரமும் ஆணவமும்... ஆதிக்கமும் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருப்பொருளை யார் உடைப்பது. அப்பெண் வெறும் கைக்கூலியே. பின்னணியில்.... யார் யார் முகமற்று முண்டமாக இருக்கிறார்களோ  தெரியவில்லை. இத்தனை பெரிய அச்சுறுத்தல்களோடுதான் நாம் வாழ வேண்டி இருக்கிறது. நம் பிள்ளைகள் பள்ளிக்கோ.... கல்லூரிக்கோ..... பணிக்கோ சென்று திரும்பவேண்டி இருக்கிறது. 
 
இப்படி திட்டி திட்ட எழுதி விட்டு குப்புறப் படுத்து காலாட்ட போகிறோமோ... காசு வாங்கி ஓட்டு போட்ட மானங்கெட்ட ஜென்மங்களுக்கு இதை பற்றி எல்லாம் பேச தகுதியே இல்லை என்று நம்மை நாமே செருப்பால் அடித்துக் கொண்டு சிரிக்க போகிறோமோ......?  பாரத மாதா தலை கவிழ்ந்து நிற்பதைக் காண சகியாத மனமே இப்படி புலம்பி தீர்க்கிறது.  
 
இன்னும் கொஞ்ச நாளில் தண்ணீர் இல்லாமல் போய் விடுமே...... அதற்கு என்ன பண்ணலாம் என்று யோசிக்க துப்பு இல்லை... 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறது அரசு. அப்படியே சாந்தி முகூர்த்தமும் நடத்தி வைத்தால்... இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.  மானங்கெட்ட அரசியல்வாதிகளை என்ன தான் செய்வது.....?
 
இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வந்த காணொளி ஒன்று இன்னுமோர் அதிர்ச்சியை இன்றைய தினத்தில் சேர்த்துக் கொண்டு என்னை திடுக்கிட செய்தது. 
 
ஒரு வயதான தறுதலை உள்ளாடை இல்லாமல் ஒரு 3 அல்லது 4 வயது சிறுமியை நிர்வாணமாக காட்டுக்குள் படுக்க வைத்து வேலையை ஆரம்பிக்கிறான். அதற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கிழட்டு மூதேவியை அடித்து இழுத்துக் கொண்டு போகிறது பொதுமக்கள் கூட்டம். ஒன்றுமறியா குழந்தை அனிச்சையாய் ஜட்டியை எடுத்து அணிந்து கொள்கிறது. (அந்த சிறுமி ஆடை அணியும் பாவனை.....அச்சுறுத்துகிறது......இது முதல் முறையா அல்லது............!) கண் கொல்லும் காட்சியென கண்டு களைத்து விட்டு தான் சொல்லப்படுகிறது. இதில் விசாரிக்க ஒன்றுமே இல்லை.... அந்த கிழவனை பட்டினி போட்டு சாவடியுங்கள். இது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சி தான். இல்லை என்று எவனும் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி குற்றங்களை மரண தண்டனை ஒன்றே குறைக்கும்..... முதலில் குறைக்காவது செய்வோம்....
 
- கவிஜி