Purampokku Engira Podhuvudaimai

கனவுத் தொழிற்சாலையான திரைப்படத் துறையில், சமூகத்தின், அதன் அரசியலின் உண்மை முகத்தைக் காட்டுகின்ற இயக்குனர்கள் மிகச் சிலரே. அவர்களுள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் குறிப்பிடத்தக்க இடத்தைப் படித்திருக்கிறார். துறைமுகத்தைக் கதைக் களமாகக் கொண்ட “இயற்கை”, ஏழைகளைப் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களைப் பேசிய “ஈ”, இடஒதுக்கீட்டை இடதுசாரி அரசியலோடு சொன்ன “பேராண்மை”போன்ற அவருடைய முந்தைய படங்கள் மிகவும் கவனம் ஈர்த்த படங்களாகும்.

இப்போது வெளிவந்துள்ள “புறம்போக்கு என்கிற பொதுவுடைமை” மரணதண்டைக்கு எதிரான படமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் “விருமாண்டி”படம் மரணதண்டனைக்கு எதிரான படம் என்று பெரியளவில் பேசப்பட்டது. இறுதிக் காட்சியில் தொலைக்காட்சி விவாத வடிவத்தில் கருத்து மட்டுமே சொன்னது. புறம்போக்குப் படம், பேரறிவாளன் வழக்கில் தொடங்கி, அப்சல்குரு, அஜ்மல் கசாப் வழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல், தூக்கிலிடும் மனிதரின் மனப்போராட்டம் என்று படம் முழுக்கவே மரணதண்டனைக்கு எதிராகப் பேசுகிறது. காவல்துறையும், அதிகாரமும் தூக்குத்தண்டனையை நியாயப்படுத்த என்னென்ன வழிகளில் தந்திரங்களைப் பயன்படுத்தும் என்பதை, தூக்கிலிடும் தொழிலாளி எமலிங்கத்தை சம்மதிக்க வைக்கும், சிறை உயர்அதிகாரி மெக்காலே மேற்கொள்ளும் வழிமுறைகளின் மூலம் அழுத்தமாகச் சொல்கிறார்.

இந்தப் படத்தில், தூக்குத்தண்டனை விதிக்கப்படும் போராளியின் பெயர் பாலு, சிறைக்குள் இறந்துவிடும் முதியவரின் பெயர் தமிழ்மாறன், பாலுவின் இயக்கத்தைச் சேர்ந்த சக போராளியின் பெயர் குயிலி - என்பதை நாம் கவனிக்க வேண்டும். தூக்குமேடை பாலு, தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த மாறன், மனித தீப்பந்தமாக மாறி ஆங்கிலேயரின் வெடிமருந்துக் கிடங்கைத் தகர்த்து, வேலுநாச்சியாரின் வெற்றியைச் சாத்தியமாக்கிய, பெண்கள் படைத் தளபதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி உள்ளிட்ட தமிழர்களின் பெருமித வரலாற்றைக் குறியீடாகவேணும் காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

 சிறை நீதிமன்றக் காட்சியில், 12ஆண்டுகள் சிறையில் கழித்த ஆறுமுகம் என்பவரை, குற்றமற்றவர் என்று சொல்லி விடுதலை செய்யும் காட்சி வருகிறது. இது ஏதோ, திரைப்படத்திற்காகக் கற்பனையாக வைக்கப்பட்ட காட்சியன்று. மும்பை ஓசிவாரா காவல்நிலையத்தில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றத்திற்காக, அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பத்தாண்டுகள் கழிந்த நிலையில், அவரைக் கைது செய்து தண்டனை வாங்கித்தந்த, உதவி ஆய்வாளர்  மனசாட்சியின் உறுத்தலால், ஆறுமுகம் நிரபராதி, உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவாளியாக்கப்பட்டார் என்னும் உண்மையை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்ள, ஏறத்தாழ 11 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்தத் தமிழர் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய பெயர் ஆறுமுகம். சொந்த ஊர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகிலுள்ள ராச்சமங்கலம் என்னும் கிராமம். அவருடைய மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள, மகன் கார்த்திக் தாத்தா, பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

வழக்கின் தன்மை அப்படியே சொல்லப்பட்டிருந்தாலும், ஊர் பெயர் மட்டும் மாறியிருக்கிறது. ஆனாலும், இதுபோன்ற பல உண்மைகள் இந்தப் படத்தில் உடைத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பெரியவர் பாத்திரம், கண்பார்வை மங்கிய நிலையிலும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்த, வீரப்பனின் அண்ணன் மாதையனை நினைவூட்டுகிறது.  இப்படிப் பல நினைவூட்டல்களோடு, மரணதண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு மீண்டும் நம்மைத் தட்டி எழுப்புகிறது இந்தப் படம்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பேராண்மை படத்தில், இடஒதுக்கீடு குறித்த வசனங்கள் வரும்போதெல்லாம், படம் நெடுக, தணிக்கை செய்யப்பட்ட ‘பீப்’ ஒலி மட்டுமே கேட்கும். புறம்போக்குப் படத்தில் அதுபோன்ற தணிக்கைச் சத்தம் ஏதும் கேட்கவில்லை. அவர்களுக்கு வேறு எதைக்காட்டிலும், இடஒதுக்கீடுதான் மிகப் பெரிய உறுத்தலாக இருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.

தமிழ் திரைப்படங்களில் இதுவரை யாரும் பேசத்துணியாத, பல நடைமுறை உண்மைகளை உடைத்துச் சொன்ன இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனைப் பாராட்டத் தோன்றுகிறது.

Pin It