கிட்டத்தட்ட உலகின் அத்தனை இன மக்களும் வசிக்கும் அமெரிக்காவில் ஒரு வேலையிடத்திலோ (தனியாரோ அரசோ) அல்லது கல்வியிடத்திலோ (சிறிய பள்ளி முதல் பெரும் பல்கலைக் கழகங்கள் வரை) எல்லாவற்றிலும் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டம் பன்மயமாக்கல் திட்டம் (Diversity Plan). இதன் படி ஒவ்வொரு இடமும் பல்வகைப்பட்ட மக்களால் நிரம்பியிருத்தல் வேண்டும். அதாவது ஆடவர், பெண்டிர், திறமையுடையோர், அற்றோர், கறுப்பர், வெள்ளையர், மற்ற நிறத்தார், ஊனமுற்றோர், ஊனமில்லாதோர், இன்சொலர், வன்சொலர், நிமிர்ந்து நடப்பவர், சாய்ந்து நடப்பவர், அதிகம் பேசுபவர், பேசாதோர், சிந்திப்போர், சிந்தனைக்குறைவுற்றோர் இப்படியாக எத்தனையை அடுக்க முடியுமோ அத்தனை வகை மக்களையும் ஒவ்வொரு இடத்திலும் கலந்து கட்டி வைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இதனால் என்னென்ன நன்மைகள்:

உதாரணமாக,

1. வெவ்வேறு குழுக்களுக்கிடையேயான மோதல்கள் குறையும்
2. வேலை செய்வோர்/படிப்போரின் மனோநிலை மேம்படுகிறது
3. ஒத்துழைப்பு, கூட்டு வேலைகள் போன்ற ஒருங்கிணைப்புகளுக்கு ஏதுவாகிறது
4. பாரபட்சமற்ற முடிவுகளை எடுக்க முடிகிறது
5. கற்றுத் தருதல் மேம்படுகிறது
6. பன்மயமாயிருக்கும் இடத்தில் கூடி வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கிறது.

இவையெல்லாம் பல வருடங்களின் ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள். இதனாலேயே அமெரிக்கா இத்தகைய திட்டத்தைத் தனது எல்லா நிலையங்களிலும் செயற்படுத்துகிறது. இன்னுமொரு திட்டத்தில் வருடமொன்றுக்கு 50,000 குடிமக்களை (குடும்பத்தோடு) பல்வேறு நாடுகளிலிருந்தும் குலுக்கல் முறையில் அமெரிக்கா தேர்ந்தெடுத்துக் குடியேறிக் கொள்ளுமாறு அழைக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பெயர் Diversity Lottery.

இந்த பன்மயமாக்குதலில் இன்னொரு முக்கியமான அம்சம் பின் தங்கிய நிலையிலிருப்போரை சமூகக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும் பொருட்டு அவர்களுக்கு உள் நுழையும் வாய்ப்புக்களை அதிகரித்தல். இதற்கு முன்னுரிமை (Affirmative Action) என்ற நடை முறையின் மூலம் இனத்தாலும் மற்ற சமூகக் காரணிகளாலும் பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது. அவர்களை வேலையிலமர்த்துவதன் மூலம் பன்மயமாக்குதல் சாத்தியப் படுகிறது. பிரான்சில் பெரும் கலவரங்களைக் கண்ட நாம் அதன் காரணத்தையும் அறிவோம். அதாவது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பார்வையில் “வந்தேறிக் குடிகளான கறுப்பர்கள்” அரசாங்கத்தின் வேலை மற்றும் கல்வியமைப்புக்குள் சுலபமாக அனுமதிக்கப் பட்டு கலக்கப் பட வில்லை. பிரான்சில் பன்மயமாக்கல் திட்டம் என்பது இன்றளவும் பேச்சோடுதான் இருக்கிறது. இத்தகைய விளைவுகளை இந்தியாவும் வருங்காலத்தில் அனுபவிக்க வேண்டாம் என்றால், இப்போதே கசந்து போன உணர்வுகளோடு பின் தங்கியிருக்கும் சமூகத்தின் பலத் தட்டு மக்களையும் ஒவ்வொரு நிலையத்திலும் அனுமதிக்க வேண்டும்.

நேற்று (22, மே 2005) கரன் தப்பார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வளவளவென்றும் தெளிவின்றியும் பதிலிறுத்த அர்ஜூன் சிங், ஒரு இடத்தில் மிகச் சரியான வாதத்தை வைத்தார். இடவொதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் ஏஜெண்டாகக் கரன் தப்பார் கேட்ட கேள்வி: “ஏற்கெனவே ஐ.ஐ.டியில் இடம் கொடுத்தோம், அவர்கள் சரியாகப் படிக்க வில்லை. பிறகு ஏன் மீண்டும் அவர்களுக்கு இடம் தர வேண்டும்?”

உண்மையில் சொல்வதானால் இது மிகவும் அப்பட்டமான இனவெறியனின் கேள்வி என்றே சொல்லலாம். இதற்கு அர்ஜூன் சிங்கின் பதில்: “அவர்கள் தேறவில்லையென்றால் அங்கு ஏதோ பிழை இருக்கிறதென்று பொருள், அதைச் சரி செய்ய வேண்டும்.” இது சரியான பதில். அனுமதிக்கப் பட்ட பிள்ளைகள் ஏன் சரியாகப் படிக்க வில்லை? என்ன விதமான மன உளைச்சல்களோடு அவர்கள் வளைய வர நேருகிறது? என்னோடு படித்த இரு தலித் மாணவிகளை என் நண்பர் சமூகம் எப்படி நடத்தியது, புறக்கணித்தது, எடையிட்டது என்பதை நான் மிக அண்மையிலிருந்து பார்த்திருக்கிற அனுபவத்தில் சொல்கிறேன். அமெரிக்கப் பள்ளிகளில் ஏதோ ஒரு இனத்து மாணவர்கள் தொடர்ந்து சரிவரப் படிக்கவில்லையென்றால் அதற்காக ஆராய்ச்சி நடக்கிறது, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகவியலாளர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து அதனை எப்படி முன்னேற்றலாம் என்று பார்க்கிறார்கள்.

எந்தக் கல்நெஞ்சரும் கரன் தப்பாரைப் போன்றதொரு கேள்வியைக் கேட்டுவிட்டு, சரி அடுத்த ஆண்டிலிருந்து இன்ன பின்புலத்திலிருந்து வரும் மாணவரைச் சேர்க்க மாட்டோம் என்று சொல்வதில்லை. இது அப்பட்டமான சுயநலவாதம். தான் உறிஞ்சி உண்ணும் சமூகத்திலிருக்கும் தாழ்ந்து கிடப்பாரைக் கை தூக்கி விடாமற்செல்லும் அசிங்கமான சுய நலம். சுய நலவாதிகள் என்று பெரும்பாலும் விமர்சிக்கப்படும் அமெரிக்கர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய. உடுப்பையும், எடுப்பையும் அமெரிக்கமயமாக்கும் நாம் அவர்களது மனிதப் பண்புகளை, மற்ற மனிதரை மதிக்கும் நேயத்தைக் கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். (கரன் தப்பார் இன்னொன்று கேட்டார் பாருங்கள், “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தப் பிள்ளைகள் ஏழு வாரங்களாகக் கொடும் வெய்யிலில் வாடுகிறார்களே, அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?” அவரிடம் நான் கேட்பது, “ஐயா தப்பாரே, ஏழேழு தலைமுறைகளாக எங்கள் பிள்ளைகள் வெய்யிலில் சாகிறார்களே இவர்களுக்காக எந்த மந்திரியிடமாவது நீர் பேசியிருப்பீரா?”)

அடுத்ததாக, சிலர் சொல்லும் வெளியேற்றுத் திட்டத்துக்கு (exit strategy) வருகிறேன். அதாவது இட ஒதுக்கீட்டை ஆரம்பிக்கு முன்னரேயே எப்போது, யாருக்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது என்பது குறித்துப் பேச வேண்டும் என்கிறார்கள். அவர் சொல்வது முற்றிலும் பொருத்தமானது. ஒரே விதமான வகுப்பைச் சேர்ந்த ஆட்கள் உயர்ந்த இடத்தில் இருத்தல் தகாது. இது monopoly எனப்படும் ஒற்றையதிகார மையத்தை நிறுவி விடும். மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அவ்விடத்தின் பன்மயமாக்கலும் சிதைவுறும். ஆக இந்த வெளியேற்றுத் திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிக்கலாம், ஆல் இந்தியா ரேடியோ, தலைமைச் செயலகங்கள், அறிவுக் கமிஷன், ஐ.ஐ.டிக்கள்…இங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். மேலே சொன்னேனில்லையா Diversity Lottery, இதில் வெளியேற்றுத் திட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அதாவது இந்தக் குலுக்கலில் இந்தியர்கள் (மற்றும் சில நாட்டவர்கள்) பங்கு கொள்ள அனுமதியில்லை. ஏனென்றால் ஏற்கெனவே அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். 

இன்னொரு உதாரணமாக, அமெரிக்க நிரந்தர வசிப்புக்கு (Permanent Residence) இந்தியர்களும் சீனர்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள். இது ஏற்கெனவே நம் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதாலும் இவர்களது விகிதத்தை அதிகரிப்பது பன்முகத் தன்மையைப் பாதிக்கும் என்பதாலும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை. இத்தகைய நடைமுறையை வெளியேற்றத் திட்டத்தோடு ஒப்பிட்டு, இப்போது அரசு மற்றும் தனியார் துறையில் எந்தெந்த சாதிகள் அதிக அளவில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்தச் சாதிக் காரர்களை எடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது இருப்பவர்களைச் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பன்மயமாக்குதலின் பொருட்டு மற்ற ஆட்களை உள்ளே அமர்த்துதல் வேண்டும். இதனைப் பெருமளவில் விமர்சிக்கப்படும் இந்து அலுவலகத்திலிருந்து தினத்தந்தி அலுவலகம் வரையிலுமோ, அல்லது இன்போசிஸ்ஸிலிருந்து சரவணா ஸ்டோர்ஸ் வரையிலுமோ, நாரத கான சபாவிலிருந்து, வாடிப்பட்டி டிரம்ஸ் கம்பெனி வரையிலுமோ நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அப்படிக் கொண்டு வரும்போதுதான் வெளியேற்றுத் திட்டம் சரியாக வேலை செய்கிறதென்று பொருள். கூடவே வேலை கிடைக்காத பட்சத்தில் எந்தச் சாதிக்காரரும் எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்யும் மனத் திண்மை கொண்டவராக வேண்டும். உதாரணமாக ஒரு உயர்சாதிக் காரர் கக்கூஸ் கூட்ட வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமென்று எத்தனையோ பெரியவர்கள் சொன்னதுதான். நான் மதிக்கும் பகவான் இராமகிருஷ்ணரே கக்கூஸைத் தலையை விட்டுக் கழுவும்போது மற்ற பெருங்கொம்பன்கள் மலக்கூடை தூக்கினால் என்ன? இதுதான் சமத்துவ சமதர்ம சமுதாயம். அப்போதுதான் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எலக்கிய வியாதிகள் கூவிக் கொள்ள முடியும். சட்டையில்லாமல் தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்கும் அதனைப் படம் பிடித்துக் காசு பார்ப்பதற்கு மட்டும் சேரிப் பிள்ளைகள் வேண்டும், கிராமத்துப் பிள்ளைகள் வேண்டும், ஆனால் தேசியத்தின் வளங்களில் தங்களுக்குள்ள நியாயமான உரிமையை அவர்கள் கோரும்போது மட்டும் அவர்களை விரட்டியடிப்பது என்ன விதமான நடைமுறை?

முடிவாக, இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடென்றால், அதனை எல்லா மட்டங்களிலும், தனியாரிலும் பொதுவிலும் பன்மயமாக்க வேண்டும், அதன் போது நலிந்தோருக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் வளர்ச்சியில் உதவித் தூக்கி விட்டுத் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் தாம் சிறுமைப்படுத்தப் படவில்லை என்ற எண்ணத்தோடு நாட்டுப் பணியில் ஈடுபடும் நிலை வர வேண்டும். அதற்கு அவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது இறுக்கப்பட்டிருந்த கரங்கள் நேசக்கரங்களாக வேண்டும் இதுவே சிக்கலும், கலகமுமற்ற சீரான நாட்டை உண்டாக்கும். 

- பா. சுந்தரவடிவேல்

Pin It