பிரபல போலிச் சாமியார் காஞ்சி ஜெயேந்திரன் தன்னுடைய 83 வயதில் செத்துப் போனதானது நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளின் மனங்களை உலுக்கி இருக்கின்றது. பொறுக்கித் தின்பதற்காகவே அரசியல் கட்சி நடத்துபவர்களும், பொறுக்கித் தின்பதற்காகவே அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இருக்கின்றார்கள். இன்னும் சில பேர், மடத்திற்கு வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதில் லோக குருவாக இருந்தவரின் மறைவால் பெரும் அதிர்ச்சிடைந்து இருப்பதாக தங்கள் தாங்க முடியாத மனத்துயரை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் என அனைவருமே இந்தப் போலிச் சாமியாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருக்கின்றார்கள். பார்ப்பன பகுத்தறிவுவாதி கமலும் தன்னுடைய அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் தெரிவித்து இருக்கின்றார். இதைத்தான் ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பார்கள் போல. நாட்டில் உள்ள பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகள் அனைவருமே இதை நாட்டிற்கே பேரிழப்பு என்பது போல சித்தரித்து வருகின்றார்கள்.

jayendran with policeஇவன் ஏதோ சாதி பார்க்காதவன் என்றும், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவன் போன்றும் பார்ப்பனப் பத்திரிகைகளான தமிழ் இந்து, தினமலர், தினமணி, இன்னும் சில சூத்திரப் பத்திரிகைகளும் கங்கணம் கட்டிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு இருக்கின்றன. பக்கம் பக்கமாக அண்டப் புளுகுகளையும், ஆகாச புளுகுகளையும் எழுதி விடுவதாலேயே வரலாற்றை மறைத்து பொய்யாக்கிவிட முடியாது என்பது இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

செத்துப் போன இந்தப் போலிச் சாமியார் மட்டுமல்ல, இவனுக்கு முன்பிருந்த சாமியாரும் சாமானிய மக்களிடம் எப்படி சாதிவெறியோடு நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்க்கும் முன், இந்த நாட்டு மக்களால் மிகவும் போற்றப்படும் காந்தியிடமும் , இந்திராகாந்தியிடமும் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்தால் இவர்களின் உண்மையான யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

“காந்தியார் பெரிய சங்கராச்சாரியாரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார். பெரிய சங்கராச்சாரியும் பாலக்காட்டிலே சந்திக்க ஒப்புக் கொள்கின்றார். சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் ஒரு மாட்டுக் கொட்டடியிலேதான் காந்தியாரைச் சந்திக்கின்றார். மாட்டுக் கொட்டடி சந்திப்பில் தான் தீட்டு இருக்காது என்பதற்காக காந்தியார், சந்திரசேகரேந்திர சங்கராச்சரியாரைச் சந்திக்கின்றார். காந்தியாருக்கு இந்தி தெரியும், பெரிய சங்கராச்சாரியாருக்கும் இந்தி தெரியும். ஆனால், இந்தியில் சங்கராச்சாரியார் பேசவில்லை. சமஸ்கிருதத்தில்தான் நான் பேசுவேன் என்று சங்கராச்சாரியார் சொல்லுகின்றார். காந்தியாருக்குச் சமஸ்கிருதம் தெரியாது. மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துதான் அவர்களுடைய உரையாடல் நடைபெற்றது. இந்தச் செய்தி எதிலேயிருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். ஆயிரம் பக்கங்களுக்கு மேற்கொண்ட நூல். மதுரையில் உள்ள காந்தி நிதியினால் காந்தியார் நூலகத்தினரால் வெளியிடப்பட்ட நூல் 'தமிழ்நாட்டில் காந்தி' என்ற நூலிலே இந்தச் செய்தி அப்பட்டமாக இருக்கின்றது”. (காஞ்சி சங்கராச்சாரியர்களின் மீது கொலை வழக்கு - ஏன்? எதற்கு? எப்படி? - கி.வீரமணி)

“இவர்கள் விதவைகள் முகத்தில் விழிக்க மாட்டார்கள். ஆனால் இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது மறைந்த சங்கராச்சாரியாரைப் பார்க்க விரும்பினார். இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நடுவிலே நீர் இருந்தால் தீட்டு போய்விடும் என்று சொல்லி ஒரு சிறிய கிணற்றின் ஒருபுறமாக சங்கராச்சாரியாரையும், மறுபுறமாக இந்திரா காந்தி அம்மையாரையும் அமர வைத்தார்கள்….”.(இந்து தேசியம் - தொ.பரமசிவன்). இவ்வளவு கீழ்த்தரமாக சாதிவெறியுடனும், ஆணாதிக்கத்துடனும் நடந்துகொண்டது இப்போது செத்துப்போன ஜெயேந்திரனுக்கு முன்பிருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவன். இவன் தான் மாதவிலக்கான பெண்களால் சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுகின்றது என்ற 'அரிய அறிவியல் உண்மை'யைக் கண்டுபிடித்தவன்.

சந்திர சேகரேந்திரன்தான் சாதிவெறி பிடித்தவன், ஆணாதிக்கம் செலுத்தியவன்; ஜெயேந்திரன் அப்படி கிடையாது என்று சொல்பவர்கள் பார்ப்பன சுப்பிரமணிய சுவாமியை தனக்கு சரிசமமாகவும், சூத்திர பொன்.ராதாகிருஷ்ணனை தரையிலும் உட்கார வைத்து இழிவுபடுத்திய புகைப்படமே பெரிய சாட்சி. ஜெயேந்திரனின் ஆணாதிக்க பாலியல் சேட்டைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எழுத்தாளர் அணுராதா ரமணன் சங்கரமடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அம்பலப்படுத்தியதை படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஹார்லிக்ஸ் சியாமளாவிடமும், சொர்ணமால்யாவிடமும் கேட்டால் இன்னும் கொஞ்சம் லோக குருவின் ஆன்மீக சேவைகளை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் ஜெயேந்திரன் கைதை ஒட்டி சங்கர மடத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆபாசப் பட குறுந்தட்டுகள் இவர்கள் சங்கரமடத்தில் எந்த மாதிரியான ஆன்மீக சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்ட போதுமானது.

அடுத்து இவன் எப்போதாவது தலித்துகளை தனக்கு சரிசமமாக அல்ல, ஒரு மனிதராகவேனும் மதித்து இருக்கின்றானா என்று பார்ப்போம். காஞ்சிபுரத்துக்கு அருகில் கூத்தரப்பாக்கம் கிராமத்திலே தலித்துகள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய உரிமை கேட்டதற்கு சங்கராச்சாரி கட்டைப் பஞ்சாயத்திற்குப் போனார். “நீங்கள் தனிக் கோயில் கட்டிக்கொள்ளுங்கள்” என்றார். கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு வருகிற பொழுது, தலித் மக்கள் பெரிய சாமியார் வருகிறதால் உணர்ச்சி வசப்பட்டு காலைத் தொட்டுவிட்டால் என்ன செய்வது என்று காலிலே பட்டுத்துணி கட்டிக்கொண்டுதான் நின்றார். (மேற்படி நூல்)

இந்தளவிற்கு சாதிவெறியுடனும், ஆணாதிக்க வக்கிரத்துடனும் நடந்துகொண்டது மட்டும் அல்லாமல் மடத்தில் தான் செய்யும் காலித்தனங்களை அம்பலப்படுத்திய சங்கர்ராமனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கும் இவன் மேல் உண்டு. இப்படிப்பட்டவனை ஒருவன் 'மகா பெரியவாள்' என்று சொல்கின்றான் என்றால், அவனின் யோக்கியதையும், நேர்மையையும் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம். ராமஜெயம் கொலை வழக்கை கண்டுபிடிக்க எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்று சொல்லும் தமிழக காவல்துறை அனைத்து ஆதாரங்களும் இருந்தும், இந்தப் பொறுக்கியை கொலை வழக்கில் இருந்து திட்டமிட்டு தப்ப வைத்தது. அனைத்து சாட்சியங்களையும் மிரட்டிப் பணிய வைத்து தான் ஒரு லோக ரவுடி என்பதை ஜெயேந்திரன் அனைவருக்கும் காட்டினான்.

சாதிய வர்ணாசிரம தர்மத்தின் குறியீடுதான் சங்கரமடம். சங்கரரால் ஏற்படுத்தப்பட்ட நான்கு மடங்களான சிருங்கேரி, துவாரகை, பூரி, பத்ரிநாத் போன்ற மடங்களை விட, போலி மடமான காஞ்சி சங்கரமடம் புகழ் பெற்றதற்குக் காரணம் அது அரசியல் தரகு வேலையில் கொடிகட்டிப் பறந்ததுதான். பார்ப்பானின் தயவு இல்லாமல் அரசியலில் வெற்றிபெற முடியாது என்ற சனாதன சிந்தனையில் ஊறிப் போன உலுத்தர்கள் பைசா பிரசோசனம் இல்லாத இவனை ஏகத்துக்கும் ஏற்றியும், போற்றியும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டார்கள். பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தக் காமவெறியனுக்கு புனிதர் பட்டம் கட்டும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகின்றன. அனைத்துப் பார்ப்பனப் பத்திரிகைகளும் இவனது மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் செய்தி போட்டதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சி சங்கரமடம் தமிழகத்தின் அவமானச் சின்னமாகும். தமிழர்களை பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரர்கள்) என்பதையும், தமிழ் நீஷ பாஷை என்பதையும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் மடமாகும். தன்னுடைய இனத்தையும், மொழியையும் அவமானப்படுத்தியவனைக் கொண்டாடும் சமூகம் எப்படி மானத்தோடு வாழமுடியும்? மானமுள்ள தமிழ்மக்கள் ஜெயேந்திரனின் மரணத்திற்காக ஒரு துளி அளவும் வருத்தப்படத் தேவையில்லை. இந்த மண்ணின் மொழியையும், இனத்தையும் கேவலப்படுத்திய, கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் இந்த மண்ணின், மக்களின் விரோதியே. அத்தகைய விரோதிகளுடன் உறவு வைத்திருக்கும் இனத் துரோகிகள் தான் இன்று ஜெயேந்திரனின் மரணத்திற்காக வருந்துகின்றார்கள். அவர்களுக்கு தங்களது இனம், மொழி அவமானப்படுத்தப்படுவதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. நக்கிப் பிழைக்கும் நாய்களிடம் இருந்து நாம் தன்மானத்தையும், சுயமரியாதையையும் எதிர்பார்ப்பது தேவையில்லைதான்.

- செ.கார்கி