மகராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில், கொஞ்சமாக நிலங்களை வைத்திருந்த ஒரே காரணத்திற்காக ஒரு தலித் குடும்பத்தின் மீது ஒரு கிராமத்தின் மொத்த சாதி இந்துக்களும் (முதியவர்/இளைஞர்/சிறுவர்கள் உட்பட) ஒன்று கூடி உச்சகட்ட வன்முறையை ஏவியிருந்தார்கள். அந்த தலித் குடும்பத்தின் இரண்டு பெண்களையும், சாதிவெறிக் கும்பல் நிர்வாணப்படுத்தி, வல்லுறவுக்குள்ளாக்கி, அடித்துக்கொன்று அப்பெண்களின் பிணங்களை கால்வாயில் வீசி வெறியாட்டம் நிகழ்த்தியிருந்தது. சாதி இந்துக்களுக்கு ஆதரவாக இக்கொலை வழக்கை பதிய மறுத்த காவல்துறையையும், ஆதிக்க சாதியினரையும் எதிர்த்து 2007ல் மாபெரும் தலித் எழுச்சி நிகழ்ந்தது. பெண்கள்,குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கனக்கான தலித்துகள் வீதிகளில் திரண்டு எழுப்பிய போராட்டக்குரலால் நாக்புரி உட்பட பல்வேறு இடங்களில் கலவரங்களும் நிகழ்ந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியைக் கண்டு நடுங்கிய மகாராஷ்டிர அரசு உடனடியாக கயர்லாஞ்சி படுகொலை வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்புலனாய்வுத் துறையை அமர்த்தியது!.

Jignesh Mevani

அதற்குப் பிறகு வந்த 2007 டிசம்பர் 6'ந்தேதி அண்ணலின் பிறந்தநாளை வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரும் பதட்டத்துடன் "மாபெரும் முற்றுகைக்குத் தயாராகுங்கள்”-“பதட்டமும், குழப்பமும் நிறைந்த இச்சூழலை எப்படி எதிர்கொள்வது?”-“மிகப்பெரும் மாற்றத்திற்கு அணியமாகும் தலித் மக்கள்”- “இன்றைய தினம் செவ்வாய்க் கிழமையை விட மோசமென்றா நினைக்கிறீர்கள்?”-“அச்சமூட்டும் வன்முறை: ஒரு கொடுங்கனவு” இப்படியெல்லாம் தலைப்பிட்டு எழுதின.

அம்பேத்கரின் ஒவ்வொரு நினைவுதினத்திற்கும் மும்பையில் தலித் மக்கள் ஒன்றுகூடுவதும்,கட்டுக் கோப்புடன் நினைவஞ்சலி செலுத்துவதும் வாடிக்கைதான் எனினும், கயர்லாஞ்சி கலவரத்தைக் கண்டு கலக்கத்திலிருந்த ஆங்கில வட இந்திய ஊடகங்கள் மாபெரும் தலைவரின் நினைவு நாளை கொடுங்கனவு நாளாக அறிவித்தது. ஆனால், கடலாக திரண்ட தலித் மக்கள் மிகுந்த கட்டுக்கோப்புடன் அம்பேத்கரின் 50வது நினைவு தின அஞ்சலிகளை செலுத்திச் சென்றார்கள்.

கயர்லாஞ்சி எழுச்சிக்குப் பிறகு இத்தனை கால இடைவெளியில் வடஇந்திய/ ஆங்கில ஊடகங்களை வயிறு கலக்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானியும், மாட்டிறைச்சி சம்பவத்தில் அவர் தலைமையில் நிகழ்ந்த தலித்துகளின் குஜராத் எழுச்சியும் என்றால் அது மிகையல்ல, வடஇந்திய/ஆங்கில ஊடகங்களுக்கு 2007லிருந்தே கிளம்பிய பதட்டம், மேவானியின் வரவால் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. மேவானியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்த ஊடகங்கள் ஒருவித பதட்டத்துடனேதான் அணுகுகின்றன. தலித்துகளின் எழுச்சியை ஒருபோதும் அனுமதிக்காத இந்திய அமைப்பின் கைக்கூலிகளான இந்த ஊடககங்கள் தொடர்ந்து மேவானியின் மீது எந்தத் தவறைச் சுமத்தலாம் எனக் காத்துக் கொண்டே இருக்கின்றன.

இந்திய பாசிச அரசின் வெளிப்படையான விளம்பர ஊடகமான ரிபப்ளிக் டிவி மீதான தன் அதிருப்தியை மேவானி தெரிவிக்கிறார். தான் அணுவளவும் நம்பிக்கை கொண்டிருக்காத ஒரு பத்திரிக்கைக்கு தன்னால் பேட்டியளிக்க முடியாது என ஒரு தலைவர் குறிப்பிடுவது அவரின் தனிமனிதச் சுதந்திரம். அவர் அதை அறிவித்ததோடு இல்லாமல், ஊடககாரர்களுக்கு அதில் விருப்பமில்லையெனில் தான் விலகிக் கொள்வதாகச் சொல்லி அவரே முதலில் அந்த பத்திரிக்கையாளர்ச் சந்திப்பிலிருந்து வெளிநடைப்பைச் செய்கிறார். ஆனால், ஊடகவியலாளர்கள் தாங்கள் ஒற்றுமையுடன் மேவானியை எதிர்த்து வெளிநடப்பு செய்ததாக கதையளப்பதோடு ஊடகங்களை மேவானி எனும் தன்னெழுச்சி மிக்க தலைவருக்கு எதிராகவும், தலித் எழுச்சி எதிராகவும் நிறுத்துகிறார்கள்.

ஜனநாயகத்தின் எல்லைக்குள் நின்று தன் எதிர்ப்பைக் காட்டிய ஓர் இளம்தலைவருக்கு எதிராக அடிப்படை ஊடக அறமில்லாமல் வெறுப்பரசியலைக் கொட்டும் இந்த ஊடகவியலாளர்கள்தான் அண்ணலின் நினைவுதினக் கூட்டத்தினை கொடுங்கனவாக சித்தரித்தவர்கள். அண்ணலின் வழியில், அவரின் கோட்பாடுகளைத் கொண்டு எழுச்சியடைந்து வரும் மேவானியின் மீதும் பல்வேறு அவதூறுகளை எழுப்ப கண்களின் எண்ணெய் ஊற்றியபடி விழித்துக்கொண்டு காத்திருப்பவர்கள். இவர்கள் என்ன உளறிக்கொட்டினாலும், மேவானியின் உயரத்தை எதனாலும் நிறுத்த இயலாது. ஜிக்னேஷ் மேவானி அம்பேத்கருக்கு பிறகான இந்திய தலித்துகளின் முகம், சாதியொழிப்பின் நம்பிக்கை.

- கர்ணாசக்தி