மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஈராக் மக்கள் சதாம் குசைனிடம் இருந்து விடுதலை பெற்று அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு. உயிர்களையும் குருதியையும் வீதிகளில் ஓடவிட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி புஷ்ஷின் வார்த்தைகளில் கூறப்போனால் ''மிஷன் நிறைவு பெற்று விட்டது" (mission accomplished). தன் நாட்டு மக்களுக்கு புஷ் இவ்வாறு தான் அறிவித்திருந்தார். ஈராக் போரில் தாம் வெற்றி பெற்று விட்டதாக தனது மக்களுக்கு கூசாது பொய் கூறியிருந்தார்.

Warஇரண்டு முக்கிய காரணங்களுக்காகவே அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்திருந்தது.

1) இராக்கின் பரந்து பட்ட எண்ணெய் வளங்களை கொள்ளை அடிப்பதும் மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தளமாக ஈராக்கை மாற்றுவதும்.

2) இஸ்ரேலின் இரண்டு பிரதான எதிரிகளில் ஒன்றை அழிப்பதும் (ஈரான் இரண்டாவது எதிரியாகும்)

மூன்று வருடங்களின் முடிவில் முதலாவது இலக்கு இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது இலக்கு நிறைவேற்றப் பட்டுவிட்டது. ஒரு காலத்தில் அரபு உலகின் மிக முன்னேற்றம் கண்ட நாடாகவிருந்த இராக் இன்று அழிக்கப்பட்டு விட்டது. துண்டுகளாக உடைந்து விட்டது அல்லது உடையக் கூடிய அபாயமுள்ள உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவம் தங்கள் நிலைகளையும் பெறுமதிமிக்க எண்ணெய் விநியோகக் குழாய்களையும் காத்துக் கொள்வதிலேயே பல சிரமங்களை அடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட "ஒபரேஷன் ஸ்வார்மர்" (operation swarmer) போன்ற வியற்நாமிய யுத்த வடிவத்தையொத்த பிரயோசனமற்ற தேடி அழிப்பு முயற்சி தோல்வியின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியதுடன் உயர் இரானுவ அதிகாரிகளின் கொரில்லா யுத்தத்தை முறியடிப்பதற்கான பாடங்களை கற்றுக் கொள்ள முடியா இயலாமையையும் முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டத் தொடங்கி விட்டது.

மூன்று வருட யுத்தம் முடிவில் 2,300 அமெரிக்க இராணுவத்தின் இழப்பையும் 16,300 இராணுவத்தினரை காயப்படுத்தி யுத்தகளத்திலிருந்து அகற்றியும் 30,000 இராக்கிய பொது மக்களின் உயிரிழப்பையும் தந்துள்ளது. அத்துடன் 15,000 இலிருந்து 18000 ஆயிரம் யுத்தக் கைதிகளையும் அமெரிக்காவின் பிடியில் வைத்திருக்கின்றது. இது சதாம் குசேயின் வைத்திருந்த யுத்த அல்லது அரசியல் கைதிகளின் எண்ணிக்கையையும் விட அதிகமாகும்.

இராக்கிலும் ஆப்ககனிஸ்தானிலுமான இந்த அர்த்தமற்ற யுத்தம் 9.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை (அமெரிக்கா கூறுவதைப்போல்) ஒவ்வொரு மாதமும் விலையாகக் கொள்கின்றது. அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் இயங்குவதற்காக அமெரிக்க திறைசேரி இப்பணத்தை ஜப்பானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கடனாகப் பெற்றுக் கொள்கின்றது. இந்தத் தொகை அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பான CIA, சுதேசி இன குழுக்களின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கூலிக் குழுக்களை ஒப்பந்தக்காரர்கள் என்ற அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும் வழங்கப்படும் இலஞ்சம், கூலி என்பவற்றிற்கான பல மில்லியன் டொலர்களை உள்ளடக்காது என்பது குறிப்பிடத்தக்கத்து.

ஈராக்கின் எண்ணை வளங்களை கையகப்படுத்தும் சுவாரஷ்யமான இந்த யுத்தம் இதுவரை 500 பில்லியன் டொலர்களை விழுங்கியுள்ளது. இது வியற்நாம் யுத்தம் விழுங்கிக் கொண்ட மொத்தத் தொகையிலும் மேலதிகமாக 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (2006 ஆம் ஆண்டு நாணயப் பெறுமதியில்) அதிகமாகும்.

அமெரிக்காவின் ஈராக் மீதான இந்த யுத்தம் ஈரானையும் இஸ்ரவேலையும் பெருமளவில் பயனடைய வைத்திருக்கின்றது. ஈராக் மீதான ஈரானின் ஆதிக்கம் நாளும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. மிகவும் ஆச்சரியமானதும் குறிப்பிடத்தக்கதுமான விடயம் என்னவென்றால் சாத்தானின் அச்சு என்று அமெரிக்காவால் வர்ணிக்கப்பட்ட ஈரானுடன் ஈராக் தொடர்பான (எல்லை மற்றும் ஆயுதக் குழுக்களுக்கான உதவிகளை தடை செய்தல் போன்ற) பொது உடன்பாடுகளை அடைவதற்கான பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான இக்கட்டுக்குள் வாஷிங்டனைத் தள்ளியுள்ளது. மறு வார்த்தையில் சொல்லப் போனால் அமெரிக்காவின் ஈரானின் மீதான ஆக்கிரமிப்பு எண்ணத்தை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.

1980களில் ஈரானை ஆக்கிரமிக்கும் ஈராக்கின் 8 வருட நீண்ட யுத்தத்திற்கு நிதியுதவி அளித்து பின்னின்ற அமெரிக்கா இன்று ஈரான் மெது மெதுவாக ஈராக்கின் பெரும்பகுதியினை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதைத் தடுக்கவியலாது பார்த்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஈரானைப் பின் தளமாகக் கொண்டியங்கும் ஸியா முஸ்லிம் கட்சிகளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

American soldiers died in Iraq warஈராக் போரின் விளைவால் பயனடைந்த இரண்டாவது சக்தியாக இஸ்ரேல் இருக்கின்றது. இஸ்ரேலின் நீண்ட கால இலக்கான ஸ்திரமற்ற பலமற்ற அரபுலகத்தை அப்பிராந்தியத்தில் பேணும் நோக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஈராக் மூன்று பகுதிகளாக உடையும் வாய்ப்பு (வடக்கில் குர்டிஷ், மத்தியில் சன்னி, தெற்கில் ஸியா பகுதிகள்) ஏற்கனவே சிரியாவை ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் நிலமைக்குக் கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்தில் ஈராக்கினால் ஏற்பட்டிருக்கக் கூடிய இஸ்ரேலின் அணு ஆயுத ஏகாதிபத்தியத்துக்கான போட்டி நசிக்கப் பட்டுள்ளது.

அதே நேரம் பலஸ்தீனியர்களால் உருவாக்கப் படக்கூடிய இஸ்ரேலுக்கான பாதுகாப்பு நெருக்கடிகளைக் குறைத்துள்ளதுடன் எண்ணெய் வளம் மிக்க ஒரு பகுதியாக அரைவாசி சுய ஆதிக்கம் பெற்றுள்ள வட ஈராக்கிலுள்ள குர்டிஷ் பிரதேசத்திலும் இஸ்ரேலின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.

மூன்றாவது பயனடைந்தவர் என்று யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது அமெரிக்காவின் ஜன்ம எதிரியான ஒஸாமா பின் லாடனே தான். ஓஸாமா பின் லாடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து சிறு சிறு தாக்குதல்களை அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொண்டு அடைவதற்கு முயற்சி செய்து வந்த இஸ்லாமிய உலகின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கை உடைப்பது என்பதையும் அமெரிக்காவின் பொருளாதார வளங்களை அழிப்பது என்பதையும் ஒட்டு மொத்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை மாதாந்தம் விழுங்கும் ஆப்கானிஸ்தான் ஈராக் யுத்தங்கள் ஒஸாமாவின் எண்னத்தை ஈடேற்றும் வகையிலேயே அமைந்துள்ளன.

இன்று ஈராக், புஷ்ஷின் அரசு பயப்படுவதைப் போலவே உலகெங்கும் உள்ள அமெரிக்க எதிர்ப்பு ஜிகாதிஸ்திகளை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்பாளர் , கவருனர், ஆயுத வழங்குனர் என்ற பல்வேறு பட்ட அவதாரங்களை எடுத்துள்ளது. மிக மோசமான விளைவு என்னவென்றால் அமெரிக்கா தனது பெரு மதிப்பினை இச்சிறிய நவீன காலனித்துவ கொடூர யுத்தத்தை முன்னெடுத்ததன் மூலம் இழந்துள்ளது.

அமெரிக்காவின் நவீன பழமைவாதிகளின், உலகின் ஒரே ஏகாதிபத்திய வல்லரசுக் கனவுகளும் புஷ்- செனேயின் அடாவடி அரசியல் நடைமுறைகளும் ஈராக்கின் புதை மணலில் அமிழ்ந்து கொண்டிருக்கின்றன

- இளந்திரையன்

Pin It