ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல மரபார்ந்த கூறுகளை உடைத்தெறிந்து இருக்கின்றது. கட்சி, சின்னம், தனி நபர் பிம்பம் போன்றவற்றை மட்டுமே சார்ந்து தீர்மானிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை இது மாற்றி அமைத்து இருக்கின்றது. அதிமுகவும், திமுகவும் தங்களிடம் மக்களுக்கு நன்றாக பரிச்சயப்பட்ட சின்னத்தையும், கட்சியையும், கவர்ச்சிமிக்க தலைவர்களையும் வைத்திருந்தும் தோற்றிருக்கின்றன. குறிப்பாக திமுக கட்டுத்தொகையை இழந்திருக்கின்றது. மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தும் திமுகவிற்கு இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டு இருப்பதற்கு வெறும் பணம் மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனும், அதிமுகவும் மிக அதிக அளவில் பணம் கொடுத்துத்தான் ஓட்டுக்களை வாங்கினார்கள் என்று சொன்னால், நிச்சயம் மக்கள் அதை ஏற்றுக் கொண்டு திமுகவின் படுதோல்வியை பணத்தால் நடந்த ஒரு நிகழ்வாக எண்ணி கடந்துபோய்விட மாட்டார்கள். தேர்தல் அரசியலை தீர்மானிப்பதில் பணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் அளவிற்கு அதை மாற்றியதில் திமுகவின் பங்கு கணிசமாக இருக்கின்றது.

ttv dhinakaran 400

இந்தத் தேர்தலில் பணம் கொடுக்கவில்லை என்று சொல்வதன் மூலம் இதற்குமுன் நடந்த தேர்தலில் எல்லாம் திமுக பணம் கொடுக்காமலேயே வெற்றிபெற்றுவிட்டது என்பது அர்த்தமல்ல. கட்சித் தலைமையில் இருப்பவர்கள் மிகப் பெரிய பொய்யர்கள் என்பதைத்தான் அவர்களின் பேச்சுக்கள் மூலம் மக்கள் அறிந்து கொள்கின்றார்கள். ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் ஓட்டுபோடுவதற்கு பணம் வாங்கியிருக்கின்றார்கள். சில இடங்களில் பணம் வந்து சேரவில்லை என்று மக்கள் போராட்டம் எல்லாம் செய்த வரலாறு உண்டு. எனவே வெற்றிபெற்றுவிட்டால் மக்கள் தங்களைத்தான் ஆதரிக்கின்றார்கள் என்று சொல்வதும், தோற்றுவிட்டால் பணநாயகம் வென்றுவிட்டது என்று சொல்லி தங்களின் தோல்விக்கு நியாயம் கற்பிப்பதும் பொய்யர்களின் வாடிக்கையாகி விட்டது.

இந்தத் தேர்தலில் மிகக் கேவலமான முறையில் பிஜேபி தோற்றதை பல முற்போக்குவாதிகள் கொண்டாடி வருகின்றார்கள். சமூக வலைதளங்களில் எல்லாம் பிஜேபியை தெறிக்கவிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சில நாட்களுக்கு காவிப் பண்டாரங்கள் எல்லாம் சமூக வலைதளங்களின் பக்கம் தலைவைத்துப் படுக்க முடியாதபடிக்கு ஓட, ஓட விரட்டியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உத்திரப்பிரதேசத்தில் சிக்கந்தரா சட்டபேரவைத் தொகுதிக்கும், அருணாச்சலப் பிரதேசத்தில் லிகாபாலி மற்றும் பாக்கி-கெசாங் சட்டபேரைவைத் தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஜேபி, தமிழ்நாட்டில் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கி, ஊரே சிரிக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றது. அந்தக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கரு.நாகராஜன் வெறும் 1417 ஓட்டுக்களை மட்டுமே பெற்று நோட்டாவிடம் தோற்றிருக்கின்றார். இந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு 2373 வாக்குகள் கிடைத்துள்ளன.

அடுத்து நோட்டாவைவிட இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 1487 ஓட்டுக்கள் அதிகம் பெற்று நான்காவது பெரிய கட்சியாக(!) உருவெடுத்துள்ளது. தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு, தொண்டை தண்ணீர் வற்றக் கதறிய சீமானை ஏன் ஆர்.கே.நகர் மக்கள் புறக்கணித்தார்கள் என்பது ஒரு வரலாற்றுக் கேள்வி. சில ஊடகங்கள் இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைக் கைப்பற்றும் என்று ஆரூடம் சொல்லின. ஆவர்கள் சொன்னது போலவே, போனதேர்தலைவிட இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை கைப்பற்றி இருக்கின்றது. இப்படியே போனால் சுத்தமான அக்மார்க் தமிழினுக்குப் பிறந்த சாதித் தமிழனின் ஆட்சி மலர்வதற்குள் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தம்பிப் பிள்ளைகள் எல்லாம் தாத்தா பிள்ளைகள் ஆகி, பேத்தி பேரப் பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள்.

இந்தத் தேர்தலில் பிஜேபியின் தோல்வியைக் கொண்டாடுவது போலவே, தினகரனின் வெற்றியை சில பெரியாரிஸ்ட்கள் கொண்டாடி வருகின்றார்கள். தினகரனின் வெற்றி பெரியாரிய மண்ணுக்குக் கிடைத்த வெற்றி என்றுகூட சொல்கின்றார்கள். உண்மையிலேயே இவர்கள் எல்லாம் பெரியாரைப் படித்து, புரிந்து அவரின் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களா என்று சந்தேகமாக உள்ளது. தினகரன் போன்ற ஒரு கீழ்தரமான ஊழல் பேர்வழியை, தமிழ்நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளையடித்து, தமிழ் மக்களை ஒட்ட சுரண்டிய மாஃபியா கும்பலை ஆதரிப்பது என்பது அடிப்படையில் பெரியாரின் கொள்ளைகளுக்கே முரணானது. பெரியார் இருந்திருந்தால் என்ன நிலைப்பாட்டை எடுப்பாரோ, அந்த நிலைப்பாட்டை எடுப்பதுதான் உண்மையான பெரியாரிஸ்ட்களின் வேலையாகுமே தவிர, தான்தோன்றித்தனமான நிலைப்பாட்டை எடுத்து ஊழல்வாதிகளையும், கொள்ளைக் கும்பலையும் விமர்சனம் எதுமற்று ஆதரிப்பது அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி மிகப்பெரிய பொருளாதார மோசடிகளை செய்த கும்பலை ஆதரிப்பது பெரியார் ஏற்றுக்கொண்ட சமதர்ம கொள்கைக்கு விரோதமானது ஆகும்.

தினகரனின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய வெற்றி அல்ல, அது வெட்கப்பட வேண்டிய வெற்றி. மக்களின் மனங்கள் எந்த அளவிற்கு அரசியல் அற்ற அற்பத்தனத்தில் மூழ்கி இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. எந்த அடிப்படையில் ஆர்.கே.நகர் மக்கள் தினகரனை பெரும்பான்மையாக வெற்றி பெற வைத்தார்கள் என்று நினைக்கும் போது அச்சமும், பீதியும் சூழ்ந்து கொள்கின்றது. தினகரனுக்கு என்று என்ன அரசியல் இருக்கின்றது, என்ன கோட்பாடு இருக்கின்றது? தமிழ்நாட்டுக்கே தெரிந்த செய்தி மன்னார்குடி மாஃபியா கும்பல் ஒரு திருட்டுக்கும்பல் என்பது. அதற்கு சாட்சியாகத்தான் சசிகலா சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றார். அப்படி இருந்தும் தினகரனை மக்கள் தேர்ந்தெடுத்ததானது முற்போக்கு அரசியல் பேசும் அனைவருக்கும் கிடைத்த சவுக்கடியாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

வழக்கமாக தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பேசும் அமைப்புகள் கூட இந்தத் தேர்தலில் அப்படி எதையும் ஆர்.கே.நகரில் செய்ததாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும். அப்படி தேர்தல் அரசியலை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்ட பெரியாரிஸ்ட்கள் தான் தினகரனைக் கொண்டாடுகின்றார்கள். பிஜேபியின் படுதோல்விக்கு தமிழ்நாட்டில் சாமானிய மக்களிடம் கூட இருக்கும் பார்ப்பன எதிர்ப்புணர்வுதான் காரணம் என்று சொன்னால், தினகரனின் வெற்றி அதற்கு எதிரானதாகப் பார்க்கப்பட வேண்டும். திருடர்களையும், ஊழல் பேர்வழிகளையும், மோசடி பேர்வழிகளையும், அயோக்கியர்களையும் ஒருநாளும் பெரியார் ஆதரித்தவர் கிடையாது. ஆனால் இன்று அவரைக் கடைபிடிப்பதாய் சொல்லும் பல பேர் இதற்கு விதிவிலக்காய் இருக்கின்றார்கள்.

கம்யூனிஸ்ட்கள் இந்தத் தேர்தலில் தனித்து நிற்காமல் மதவாதசக்திகளை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி வைப்பதாய் சொன்னார்கள். அவர்கள் கூட்டணி வைப்பதற்கான சாக்காகவே இதை எடுத்துக் கொள்ள முடியும். அவர்கள் கூட்டணி வைத்தாலும் வைக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் பிஜேபியால் எந்தக் காலத்திலும் ஒரு எம்.எல்.ஏ சீட்டைக்கூட பெற முடியாது என்பதுதான் உண்மை. அடிப்படை கட்டுமானமே இல்லாத ஒரு கட்சி, ஊருக்கு ஒரு பத்துப் பேரைக் கூட கட்சி உறுப்பினராக பெற்றிருக்காத ஒரு கட்சி வெற்றிபெற்றுவிடும் என்று அஞ்சுவது பேதமை ஆகும். அப்படியே ஒரு நிலை ஏற்படும் என நினைத்தால் அதற்காக தீவிரமான களப்பணி செய்வதுதான் நேர்மையான செயலாக இருக்க முடியுமே அன்றி, கட்சியை கூட்டணி என்ற பெயரில் அடமானம் வைப்பதல்ல. பிஜேபியை வீழ்த்த கூட்டணி வைத்த திமுகவே தோற்றிருக்கும் போது, அதனால்தான் பிஜேபி தோற்றது என சொன்னால் அது கேலிக்கூத்தானது ஆகும். அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வருவதற்கு காலம் இடம்கொடுத்தாலும் அதைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவதற்குத் திராணியற்ற நிலையில்தான் தமிழக கம்யூனிஸ்ட்கள் இருக்கின்றார்கள்.

மரபான கட்சியோ, சின்னமோ இல்லாமலேயே வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு தமிழகம் மாறி இருக்கின்றது. அதை ஊழல்வாதிகளும், ஊர்க்குடி கெடுத்தவர்களும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதைத்தான் தீவிரமாக காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஊழல் , சாதி, மதம், பணம் போன்றவற்றை தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தும் கழிசடை அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்று உண்மையில் விரும்புவர்கள், மக்களிடம் அதற்கான சிந்தனைப் போக்கை உருவாக்க தீவிரமாக களப்பணியாற்ற வேண்டி இருக்கின்றது. மக்களுக்கு உண்மையாக இருப்பவர்கள் யார் என்பதை அவர்கள் மக்களிடேயே நிரூபிக்க வேண்டி இருக்கின்றது. அதன் மூலம் தான் மக்களையும் உண்மையானவர்களாய், நேர்மையானவர்களாய் இருக்க நாம் பயிற்றுவிக்க முடியும்.

- செ.கார்கி