ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வின் வாங்கு வங்கி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்தும், சிலாகித்தும் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. இதில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தொடங்கி, திராவிட மற்றும் பொது உடைமை இயக்கத்தினரும் அடங்குவர்.

எப்போதும் ஒரு தொகுதியின் தேர்தலை அதுவும் இடைத்தேர்தலை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனம் குறித்து ஒரு புரிதலுக்கு வர முடியாது என்பது நாம் யாவரும் அறிந்ததே என்ற அடிப்படையில் பா.ஜ.கவின் தோல்விக்கு எதிரான இந்தக் கொண்டாட்டங்களும், அவதானிப்புகளும் மிகைபடுத்தப்படுவதாகவே எனது எண்ணம்.

bjp in west bengal

பொதுவாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் என்பது என்னைப் பொருத்தமட்டில் அங்கீகரிக்கப் படாத அ.தி.மு.க வின் உட்கட்சித் தேர்தலைப் போன்றதே. அங்கு நடக்கும் களேபரங்களுக்கு மக்கள் முன்வைத்த தீர்வே இந்த ஆர்.கே நகர் தேர்தல். இது எந்த வகையிலும் தமிழகம் முழுமைக்கும் பொருந்தாது. இன்றோ, நாளையோ கவிழப் போகும் இந்த மைனாரிட்டி அமைச்சரவையினை வைத்துக் கொண்டு மாற்றுக் கட்சியை தேர்வு செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற புரிதலில் மக்கள் உள்ளபோது தி.மு.க வோ, பா.ஜ.கவோ தோல்வி அடைவதில் ஓர் ஆச்சர்யமும் இல்லை. இதில் பண மழை வேறு.

ஆர்.கே நகர் தேர்தலில் பா.ஜ.கவை கேலி பேசும் சி.பி.எம், சி.பி.ஐ வகையறாக்கள் மேற்கு வங்க ஷாபாங் சட்டமன்ற இடைத்தேர்தலை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கனவே எம்.எல்.ஏ வாக இருந்த காங்கிரசின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான மனாஸ் பூனியா திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து ராஜ்ஜிய சபா எம்.பி ஆகிவிட்ட பின்னால், அவரின் மனைவி கீதாராணியை நிற்கவைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆர்.கே நகர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்றே தான் ஷாபாங் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிக்கப்பட்டபோது ஓர் ஆச்சர்யம் இருந்தது. அது அந்தத் தொகுதியில் பி.ஜே.பி பெற்ற வாக்கு சதவீதம். இந்தத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1.3% வாக்குகள் வாங்கியிருந்த பா.ஜ.க, இந்த இடைத்தேர்தலில் 18.08% வாக்குகளை வாங்கியிருக்கிறது. 2011 அதே தேர்தலில் 44.41% வாக்குகள் வாங்கியிருந்த சி.பி.எம், இப்போது 20.25% வாக்குகளையே வாங்கியிருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இந்தத் தொகுதி காங்கிரசின் செல்வாக்கு மிகுதியான தொகுதிதான் என்றாலும் கூட, சி.பி.எம் இவ்வளவு குறைவான வாக்குகளை எப்போதும் வாங்கியதில்லை. மேலும் 1987ல் இந்தத் தொகுதியில் சி.பி. எம் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு ஆக.13ல் நடந்த மேற்கு வங்க 7 நகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தம் 148 வார்டுகளில் 140 வார்டுகளை திரிணாமுல் கைப்பற்றிய செய்தி நாம் அறிந்ததே. அதேபோல பா.ஜ.க 6 இடங்களை வென்றதும், கணிசமான வாக்குகளை வாங்கியதும் நாம் அறிந்ததே. இது வரவிருக்கும் ஒட்டுமொத்த உள்ளாட்சித் தேர்தலிலும் 2018(ஏப்-மே) இந்தப் போக்கு கணிசமாக எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் மம்தாவின் அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்குப் பயந்துதான் மம்தா பானர்ஜி வீட்டுக்கு ஒரு பசுமாடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை சி.பி.எம் மின் மேற்கு வங்க மாநிலச் செயலர் சூர்ஜா கன்டா மிஸ்ரா 'பசு அரசியல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுக்க வெறும் 4.06% வாக்குகளை வாங்கிய பா.ஜ.க, 2014 மக்களவைத் தேர்தலில் 17% சதவீத வாக்குகளை அள்ளியது. பிற்பாடு 2016 சட்மன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி சற்று குறைந்திருந்தாலும் அதன் பழைய வாக்கு புள்ளிவிவரங்களில் இருந்து 5.92% கூடுதலாக வாங்கியது என்பது இடதுசாரிகளுக்கும், மம்தாவுக்கும் அச்சத்தை அதிகமாக்கி உள்ளது உண்மை. பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் 'வங்கத்தை காவி மயமாக்கும்' திட்டம் குறித்த செயல்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

தேசிய விடுதலைப் போராட்டம் தொடங்கி ஒரு மறுமலர்ச்சி என்னும் வடிவில் வங்கம் எப்போதும் இந்திய அரசியல் வானில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை ஆற்றியே வந்துள்ளது. சி.பி.எம் முழு வடிவம் பெற்ற கல்கத்தா பேராயம், நக்சல்பாரி எழுச்சி, மூன்று தசாப்தங்கங்களுக்கு மேலாக உறுதியாகத் தொடர்ந்த சி.பி.எமின் ஆட்சி என்று மேற்கு வங்கத்தின் முன்னோடிப் பாத்திரம் அதிகம். அத்தகு வங்கத்தை காவி ஆட்கொண்டு விடுமானால் அதற்காக சனநாயக சக்திகளும், இடதுசாரிகளும் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏற்கனவே மம்தாவிடம் கோட்டையைப் பறிகொடுத்து விட்டு வாய்ப்புக்கு வழிதேடியபடி இருக்கும் சி.பி.எம் வகையறாக்கள் பா.ஜ.க.விடமும் தனது ஆளுமையை இழந்துவிடக் கூடுமானால் அதன் விளைவுகள் பாரதூரமானது மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கக் கூடியது. தங்களின் வெகுசன இயக்கங்கள் கொடுக்கும் மயக்கங்களில் இருந்து விடுபட்டு , சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள முன்னணிகள் யோசிக்க வேண்டும். மக்களின் மனதிலிருந்து நாம் அந்நியமானதற்கான அடிப்படையை யோசித்தாக வேண்டும். அது நந்திகிராமா, பாராளுமன்றவாதமா, தங்களுக்குள் ஓர் ஐக்கியமற்ற போக்கா - என யாவற்றையும் யோசிக்க வேண்டும். அது கூடாவிடில் இந்தியாவை விடுங்கள், நம்மால் நம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.

- பாவெல் இன்பன்