சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த 'யார் அழகு? கேரளத்துப் பெண்களா அல்லது தமிழகப் பெண்களா' என்ற நிகழ்ச்சி பெண்ணியவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறித்து ஊடகங்களில் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி, நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய பெண்கள் மீது மிக மோசமான விமர்சனத்தை முன்வைத்தார். இடதுசாரி உயரடுக்குப் பெண்ணியவாதிகள் தான் இந்தத் தடைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். அவர்களைப் பொருத்தவரை அவர்கள் எந்த தலைப்புகளில் விவாதம் செய்தாலும், அதை வாய்முடி மக்கள் கேட்க வேண்டும். அப்படி இல்லாமல் அதை எதிர்த்தால், அவர்கள் மீது இடதுசாரி முத்திரை குத்தப்படும். எப்படி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அரசு மாவோயிஸ்ட், நக்சலைட் என்று முத்திரை குத்தி, அவர்களை பொதுச்சமூகத்தில் இருந்து தனியே பிரித்து தீவிரவாதிகளாகக் காட்ட முற்படுகின்றதோ அதற்கு சற்றும் குறைந்ததில்லை ஆண்டனியின் இந்தச் செயல்.

neeya naanaஊடக அறம் என்றெல்லாம் ஊடகவியலாளர்களால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. எங்கள் ஊடகம் தொடர்ந்து ஊடக அறத்தைக் காத்து வருகின்றது என்று அனைத்து ஊடகங்களும் பெருமையாக சொல்லிக் கொள்கின்றன. நடுநிலையில் இருந்து செய்திகளை வழங்குவதாக அவை தங்களைத் தாங்களே சிலாகித்துக் கொள்கின்றன. ஆனால் நடுநிலை என்ற ஒன்று எப்போதுமே உலகத்தில் இருந்தில்லை என்பது சமூக விஞ்ஞானிகளின் கருத்து. ஒன்று அது ஏதும் அற்ற சாமானிய மக்களின் பக்கம் நிற்க வேண்டும்; இல்லை என்றால் கார்ப்ரேட்டுகளின் பக்கம் நிற்கவேண்டும். வேறு எந்தப் பக்கமும் நிற்க துளியும் வாய்ப்பு கிடையாது. ஊடக நிறுவனம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது, அந்த ஊடகத்தை யார் நடத்துகின்றார்கள் என்பதைச் சார்ந்தது. ஒரு கார்ப்ரேட் ஊடகம் சாமானிய மக்களின் கவலையைப் பேசும் என்றோ, அது கார்ப்ரேட்டுகளின், அவர்களின் அடிவருடியாக உள்ள அரசை விமர்சனம் செய்யும் என்றோ, எந்தச் சாமானிய மக்களும் எண்ண மாட்டார்கள். அப்படி அவர்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் கூட அது மக்களின் கோபத்தைத் தணிக்கவும், அதன் வழியே கார்ப்ரேட்டுகளையும், அவர்களால் நடத்தப்படும் அரசையும் காப்பாற்றவே இருக்கும்.

'நீயா? நானா?' நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக நிறைய கருத்துசொல்லிகள் அப்படி நிறுத்தப்பட்டது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கண்டிக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை கருத்துச் சுதந்திரம் என்பது வரம்பற்றது. எப்போது என்றால் அவர்கள் அண்டிப் பிழைக்கும் கார்ப்ரேட் ஊடகங்கள் தங்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவோ, இல்லை செய்தித்தாள்கள் தங்கள் பத்திரிகையின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவோ செய்யும் மலிவான, ஆபாசமான செயல்களை நியாயப்படுத்த அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் என்ற போர்வை தேவைப்படுகின்றது. ஆனால் அதே வாய் மாவோயிஸ்ட்களோ, இல்லை நக்சல்பாரிகளோ பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றிப் பேசும்போது எப்படி இருக்கும் என்றால், அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள் என்று பேசும். இந்துமத புராண இதிகாசங்களை அம்பலப்படுத்தினால், 'இந்துக்களின் மனதை பெரியாரியவாதிகள் புண்படுத்துகின்றார்கள், இதை எல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. கருத்துசுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டதுதான்' என்பார்கள்.

'யார் அழகு? கேரளப் பெண்களா அல்லது தமிழ்ப் பெண்களா' என்ற தலைப்பை வைத்து விவாதம் செய்யும் ஆண்டனியிடம் ஏன் அப்படி தலைப்பு வைக்கவேண்டும் என்று கேட்டால், தலைப்பைப் பார்க்காதீர்கள், நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தைப் பாருங்கள் என்கின்றார். இது போன்ற தலைப்பை ஆண்டனியின் மூளை சிந்தித்தது தற்செயலானது அல்ல, அது அவரின் ஊடக அறத்தில் இருந்து பிறப்பது. ஸ்டார் விஜய் என்ற தொலைக்காட்சியின் உரிமையாளரான ரூபர்ட் முர்டோச்சுக்கு என்று ஓர் ஊடக அறம் இருக்கின்றது. உலகில் ஐந்து கண்டங்களில் 175 செய்தித்தாள்களையும், 28 வார, மாத இதழ்களையும், ஃபாக்ஸ் டிவி மற்றும் ஸ்டார் குழும சேனல்களையும் வைத்து நடத்தும் ஊடக தாதாவான ரூபர்ட் முர்டோச்சுக்கு ஊடக அறம்தான் என்பதில்லை, பொதுவாகவே அறம் பற்றி கருத்து இருக்காமல் இருக்க முடியாது. லண்டன் குண்டுவெடிப்பு வழக்கு, மற்றும் அமெரிக்க இரட்டைமாடிக் கட்டிடம் தகர்க்கப்பட்ட 9/11 போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் தொலைபேசியை அவரின் நியூஸ் இண்டர்நேசனல் நிறுவனம் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டுக் கேட்டதும், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மூட்டுவலி சம்பந்தப்பட்ட செய்திகளை தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு மூலம் வெளிப்படுத்தியதும் அதைத் தொடர்ந்து அவரது நியூஸ் ஆப் த வோர்ல்ட் பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அவரது ஊடக அறத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகள்.

லண்டன் போலீசுக்கு லஞ்சம் கொடுத்து கணினிமயமாக்கப்பட்ட மொத்த ஆவணங்களையும் கைப்பற்றி, உலகையே நடுங்க வைத்த அறம் தான் ரூபர்ட் மூர்டோச்சின் அறம். இந்த அறத்தைப் புரிந்துகொண்டால் ஆண்டனியின் ஊடக அறத்தை நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். முதலாளிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்கு வால் ஆட்டும் நாய்கள் என்ன செய்யுமோ, அதைத்தான் ஆண்டனி செய்துள்ளார். ஆண்டனி மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக கருத்துச் சுதந்திரம் பேசும் நபர்களின் யோக்கியதையையும் நாம் பார்த்தோம் என்றால், அவர்கள் அனைவரும் அது போன்ற மஞ்சள் பத்திரிக்கையில் வேலை செய்பவர்களாகவும், பத்திரிக்கை முதலாளியின் ஊடக அறத்தைக் காப்பாற்ற தினம் தினம் உழைப்பவர்களாகவும்தான் இருப்பார்கள். தினம் தினம் அக்கிரகாரத்து மாமாக்களின் ஆன்மீகச் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து, கண்ணும் கருத்துமாக வெளியிடும் பார்ப்பன தமிழ் தி இந்துவின் சமஸ்க்கு பார்ப்பனர் என்ற வார்த்தை கசப்பதும், தன்னைப் போலவே மூர்டோச்சின் சிஸ்யப்பிள்ளை ஆண்டனிக்குப் பிரச்சினை என்றவுடன் இனம் இனத்தோடு சேரும் என்ற அடிப்படையில் பார்ப்பன பயங்கரவாதமும், முதலாளித்துவப் பயங்கரவாதமும் ஒன்றிணைவதும் ஊடக அறத்தின் வெளிப்பாடுகள் தான்.

அழகு என்ற வார்த்தையே நம்மைப் பொருத்தவரை விபச்சாரத் தன்மையானது. அழகு என்று ஒன்றைக் குறிப்பிடும்போதே அதற்கு எதிர்நிலையில் அசிங்கம் என்ற ஒன்றை நிலைநிறுத்தி விடுகின்றோம். இதன் மூலம் அசிங்கம் என்று கட்டமைக்கப்பட்ட ஒன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடவும், அதை ஒதுக்கிவைக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். 'யார் அழகு? கேரளப் பெண்களா அல்லது தமிழக பெண்களா' என்ற தலைப்பில் தொக்கிநிற்கும் ஆண்டனியின் பாலியல் வக்கிரம் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஏற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற மூர்டோச்சின் ஊடக அறத்தில் இருந்து பிறந்தது. பெண் என்ற பொதுச்சொல்லில் அனைத்துப் பெண்களையும் அடக்குவது என்பதே முதலாளித்துவ பிற்போக்கு கும்பலின் கயமைத்தனம். மூன்று வேளை எந்தப் பிரச்சினையும் இன்றி வகைவகையாய் தின்றுவிட்டு, ஓய்வு நேரத்தில் ஐபுரோவும், பேசியலும் செய்துகொண்டு, ஆண்களின் கண்ணுக்கு தன்னை அழகாகக் காட்டுவதை மட்டுமே செய்துகொண்டிருக்கும் மேனாமினிக்கிப் பெண்களும் இந்த நாட்டில்தான் உள்ளார்கள், ஒருவேளை சோற்றுக்காக காலை முதல் மாலை வரை செங்கல், ஜல்லி சுமக்கும் கட்டிடத் தொழிலாளர்களாகவும், நுரையீரலை அடைத்து மூச்சு திணறச் செய்யும் பஞ்சாலைகளில் மலிவான கூலிக்கு தங்கள் உயிரை விற்றுக் கொண்டிருக்கும் கூலிகளாகவும், கடும் வெய்யிலில் உடலை உருக்கி வியர்வையை வயலில் தண்ணீராய்ப் பாய்ச்சும் விவசாயத் தொழிலாளர்களாகவும் அழகைப் பற்றிய எந்தச் சிந்தனையும் அற்ற பெண்களும் இந்த நாட்டில்தான் உள்ளார்கள்.

இதில் கேரளப்பெண்கள், தமிழக பெண்கள் என்ற வித்தியாசம் எல்லாம் எங்குமே கிடையாது. உழைத்து வாழும் பெண்களின் நிலை உலகம் முழுவதும் ஒரே போலதான் உள்ளது. தன்னை முழுவதுமாக சிங்காரித்துக் கொண்டு வீட்டில் ஒரு விபச்சாரியைபோல ஆண்களின் போகப் பொருளாக வாழ நிர்பந்திக்கப்பட்ட பெண்கள் தான் பெரும்பாலும் அழகின் மீது அதீத அக்கறை காட்டுபவர்கள். ஆனால் உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட எளிய பெண்கள், அழகு என்ற ஒன்றை எப்போதுமே பெரிதாக நினைக்காதவர்கள். அப்படிப் பார்த்தால் ஆண்டனியின் பார்வையில் எல்லா மேட்டுக்கூடி பெண்களும் அழகானவர்கள், சாமானிய எளிய பெண்கள் எல்லோரும் அசிங்கமானவர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து விளம்பர வருவாயாக பெரும் மூர்டோச்சின் ஊடகங்களுக்கு இந்த மாதிரியான தலைப்பை வைத்தே ஆகவேண்டிய நிர்பந்தம் இருப்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கு எளிய பெண்களின் மன உணர்வுகளைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. ஒன்றை அழகு என்று காட்டுவதன் மூலம், அசிங்கமானது தன்னை அழகாக மாற்றிக்கொள்ள ஏற்கெனவே அழகு என்று முதலாளித்துவம் கட்டமைத்து இருக்கும் நெறிகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிப்பதன் மூலம் அசிங்கமானது தன்னை அழகாக மாற்றிக்கொண்டு இந்தச் சமூகத்தில் முதலாளித்துவம் விரும்பும் நுகர்வு கலாச்சார வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளலாம். இல்லை என்றால் நீங்கள் இந்த முதலாளித்துவ உலகில் வாழ தகுதியற்றவர்கள் ஆகிவிடுவீர்கள்.

அதனால் ஆண்டனியின் முதலாளித்துவ பாலியல் வக்கிரமும், சமஸ்சின் பார்ப்பன பயங்கரவாதமும் அவர்கள் சார்ந்த ஊடக முதலாளியின் அறத்தை அடியொற்றி பிறப்பது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று நம்மிடம் சொல்வார்கள். பதிலுக்கு நீங்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியோ, இல்லை பார்ப்பன பயங்கரவாதத்தைப் பற்றியோ பேசினால் உங்களை கருத்துப் பயங்கரவாதிகள் என்பார்கள். நாம் தான் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், நாய்களின் வாயில் எதற்காக எச்சில் ஒழுகுகின்றது என்று.

- செ.கார்கி