தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. தமிழகம் இயல்பு நிலையை நோக்கி மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டு இருக்கின்றது. கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு நகர்ப்புறங்களை நோக்கி உயிர்வாழ விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் விவசாயிகள், விவசாயக் கூலிகள், சொந்த ஊரில் பிழைப்பதற்கு வழியற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பெருநகர்ப்புறத்தின் நாகரிக வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கூலி அடிமைகள் என அனைவரும் ஒரு பெரும் கொண்டாட்டத்திற்குப் பிறகு மீண்டும் தங்களை அடிமைகளாக ஒப்புவித்துக் கொள்ள பேருந்துகளிலும், ரயில்களிலும் முண்டியடித்துக் கொண்டு தங்களை இருக்கைகளில் திணித்து கொள்ள பெரும் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். நரகாசூரனின் மரணத்தை விமர்சையாகக் கொண்டாடிவிட்டு கையில் சேர்த்து வைத்திருந்த ஒரு பெரும் தொகையை சென்னை சில்க்ஸ்சிலும், சரவணா ஸ்டோரிலும், அடையாறு ஆனந்தபவனிலும், ஐயங்கார் பேக்கரிகளிலும், பட்டாசுக் கடைகளிலும், சாராயக் கடைகளிலும் கொடுத்துவிட்டு மகாவிஷ்ணுவை திருப்தி அடைய வைத்த மனநிறைவுடன் மீண்டும் ஒரு பெரும் கொண்டாட்டத்துக்குப் பணம் சேர்க்க கூலி அடிமைகள் கிளம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பணி கொண்டாடுவதுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதற்கப்புறம்?

diwali residue

தீபாவளி செரித்துத் துப்பிய கழிவுகள் ஊர் முழுவதும் இறைந்து கிடக்கின்றது. பார்த்த இடமெல்லாம் பட்டாசுக் குப்பைகள், சாராய பாட்டில்கள், முழுவதுமாக தின்னாமல் ஓவர் மப்பில் விட்டுச் செல்லப்பட்ட பலவித சைடிஸ்கள் என தமிழகமே ஒரு மாபெரும் குப்பைத் தொட்டியாய் மாற்றப்பட்டுள்ளது. வழக்கம் போல இதையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டிய சுமை முழுவதும் துப்புரவுத் தொழிலாளிகள் மீதுதான் விழுந்துள்ளது. நரகாசூரனின் வாரிசுகளின் மலத்தை மட்டும் அள்ளாமல் அவர்கள் பொறுக்கித்தனமாக, காலித்தனமாக நடந்துகொண்டதன் எச்சங்களையும் அந்த அப்பாவி துப்புரவு தொழிலாளிகள்தான் தற்போது சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மதுரையில் மட்டும் 100 டன் தீபாவளி கழிவுகள் சேர்ந்திருக்கின்றது. இதை அகற்ற துப்புரவு தொழிலாளிகளுக்கு ஒருவாரம் இலக்கு நிர்ணயக்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் இதுவரை 80 டன் பட்டாசு குப்பைகள் அள்ளப்பட்டிருக்கின்றது. இன்னும் தமிழ்நாட்டில் ஓவ்வொரு நகரமாக கணக்கிட்டால் இந்தப் பட்டாசுக் குப்பைகள் பல ஆயிரம் டன்களை கண்டிப்பாகத் தாண்டும். இதை எல்லாம் இன்னும் சில நாட்களுக்குள் அள்ளி முடிக்க துப்புரவுத் தொழிலாளிகளுக்கு இப்போதே கெடு நிர்ணயிக்கப்பட்டாகி விட்டது. தீபாவளி ஒருபக்கம் பணக்கார முட்டாள் கும்பலுக்கு மகிழ்ச்சியையும், மற்றொருபக்கம் துப்புரவு பணியாளர்களுக்குப் பெரும் துன்பத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றது.

இந்த மானங்கெட்ட தீபாவளிப் பண்டிகையால் அதிகம் பாதிக்கப்படுவது துப்புரவுப் பணியாளர்கள்தான். அதிலும் குறிப்பாக அதில் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் அருந்ததியர்கள்தான். எனவே தீபாவளி பண்டிகைக்கு எதிராக மிகத் தீவிரமாக போராட வேண்டியதும், அதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கின்றது. ஆனால் இதை அவர்களைக் கொண்டு செய்ய முடியுமா? பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்களாய், பார்ப்பனிய சடங்குகளை ஏற்றுக் கொண்ட பிற்போக்குவாதிகளாய் இருக்கும் அந்த மக்களை எப்படி தீபாவளிக்கு எதிராக போராட வைப்பது என்பது உண்மையிலேயே பெரிய விடயம்தான். ஆனால் அதை சத்தமில்லாமல் சாதித்துக் காட்டி இருக்கின்றது ஆதித் தமிழர் பேரவை. ஆம் அது நடந்தது உண்மை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சுயமரியாதையும், தன்மானத்தையும் இழந்து பார்ப்பன அடிமைகளாய் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி தமிழ்மக்களை எப்போதும் சூத்திரப் பயல்களாக இருக்க வழி செய்து கொண்டிருக்க, இந்துமதத்தால் பஞ்சமர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள் என்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களால் மலம் அள்ள நிர்பந்திக்கப்பட்ட மக்கள் தீபாவளியைக் கொண்டாட மறுத்து அதற்கு எதிராக அணிதிரண்டார்கள் என்பது சாதாரண செய்தி அல்ல.

ஊரே மானங்கெட்டு நரகாசூரனின் மரணத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் ஆதித்தமிழர் பேரவை 'தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம்' என்ற ஒன்றை 18/10/2017 அன்று நடத்தி பார்ப்பன முட்டாள்தனத்திற்குச் சவுக்கடி கொடுத்திருக்கின்றார்கள். இதற்காக நாம் இரா.அதியமான் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றோம். இந்த நிகழ்வு தமிழக அளவில் மிக முக்கியமானதாகும். ஓட்டுப் பொறுக்குவதற்காக அரசியல் கட்சிகள் எல்லாம் பார்ப்பன அடிமைத்தனத்தை திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்க இந்தச் சமூகத்தில் மிகவும் கீழ்மைப்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதித்தமிழர் கட்சி ஓட்டுவங்கியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும். மேலும் இந்த நிகழ்ச்சியில் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தோழர் பாலபாரதி அவர்களும் கலந்துகொண்டு தீபாவளிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியது மிக முக்கியமான ஒன்றாகும்.

கட்சி நடத்துவதன் நோக்கம் மக்களை முட்டாள்தனத்தில் இருந்தும், பிற்போக்குத்தனத்தில் இருந்தும் மீட்டெடுப்பதற்காக அல்லாமல் பொறுக்கித் தின்பதை மட்டுமே வேலையாக செய்துகொண்டு, மேலும் மக்களை தங்கள் பங்கிற்கும் முட்டாள்தனத்தில் சிக்க வைப்பதை செய்துகொண்டிருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்த மடப்பயல்களுக்கு மத்தியில், ஆதித் தமிழர் கட்சி தலைநிமிர்ந்து நிற்கின்றது. தீபாவளிக்கு தமிழ்நாட்டில் வாழ்த்துச் சொன்ன ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவனும் அது விஜயகாந்தாக இருந்தாலும் சரி, அன்புமணியாக இருந்தாலும் சரி மானமற்றவர்கள் என்பதையும், இதுபோன்ற பார்ப்பன அடிமைகள் எல்லாம் நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தைப் பார்ப்பன பயங்கரவாதத்தின் விளை நிலமாக மாற்றிவிடுவார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக முக்கியமானது தன்மானமும், சுயமரியாதையுமே ஆகும். தன்னுடைய இன இழிவிற்குக் காரணம் இந்தப் பார்ப்பன இந்துமதமே என்று அவர்களுக்குப் புரியும்படி செய்துவிட்டால், நிச்சயம் அந்த மக்கள் அதில் இருந்து விடுதலை அடையும் வழியை அவர்களே தேடிக்கொள்வார்கள். அந்தப் பணியை அதியமான் அவர்கள் மிகச் சிறப்பாக முன்னெடுத்திருக்கின்றார். இதை மற்ற தலித் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். ஆண்ட பரம்பரை கதைகளைப் பேசி பார்ப்பன இந்துமதத்தில் அந்த மக்களை தொடர்ந்து இருத்தி வைக்க மோசடியாக முயற்சி செய்யாமல் பார்ப்பன இந்துமதக் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தி அந்த மக்களை முற்போக்குவாதிகளாய் இந்துமத எதிர்ப்பாளர்களாய் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அது போன்ற முயற்சிகளுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் அடிகோலாக அமையும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்ன இனத் துரோகிகளும், முட்டாள்பயல்களும் கையில் துடைப்பைக் கட்டையுடன் சாலைகளில் வந்து குப்பைகளைக் கூட்டி அள்ளப் போவது கிடையாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மானமற்ற பண்டிகைகளை எந்த வித கேள்விக்கும், பகுத்தறிவுக்கும் உட்படுத்தாமல் கொண்டாடிவிட்டு எந்தவித குற்ற உணர்வும் இன்றி ஊரெல்லாம் குப்பை மேடாக மாற்றுவதுதான். இப்படி செய்யும் எவனுக்கும் முதலாளிகள் கழிவுகளைக் கொட்டி ஆற்று நீரை நாசம் செய்துவிட்டார்கள், தொழிற்சாலைகளை அமைத்துக் காற்றை மாசுபடுத்திவிட்டார்கள் என்று குற்றம் சொல்ல எந்த யோக்கியதையும் இல்லை. தன்னளவில் இந்த மண்ணையும், காற்றையும் நாசம் செய்யும் அயோக்கியன் அடுத்தவனைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தார்மீகத் தகுதியை இழக்கின்றான். சென்னையில் மட்டும் காற்றுமாசு வழக்கத்தைவிட இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கின்றதாம். திருவல்லிக்கேணியில் ஒரு கனமீட்டருக்கு 597 மைக்ரான் காற்று மாசுபட்டுள்ளதாம். இது அனுமதிக்கப்பட்ட அளவான 100 மைக்ரானைவிட 5 மடங்கு அதிகமாகும். அதேபோல பெசன்ட்நகரில் 387 கிராம் நுண்துகள்களும், நுங்கம்பக்கத்தில் 541 கிராம் நுண்துகள்களும் மார்வாடிகள் அதிகம் வாழும் சவுகார்பேட்டையில் 777 கிராம் நுண்துகள்களும் இருந்திருக்கின்றன. இது எல்லாம் இன்னும் சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை.

இதனால் பாதிக்கப்படப் போவது அனைத்து மக்களும்தான். தீபாவளி என்ற முட்டாள்தனமான பண்டிகையைக் கொண்டாடி கொட்டம் அடித்துவிட்டு காற்றையும், மண்ணையும் நாசம் செய்யும் அயோக்கியர்கள் இதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்களா? இல்லை தீபாவளி கொண்டாடச் சொல்லி வாழ்த்துச் சொன்ன மானங்கெட்ட கழிசடைகள் இதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? எவனும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டான். இப்படி மண்ணையும், காற்றையும் நாசம் செய்து கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுபோட துணைநிற்கும் ஒவ்வொருவனும் இழவுவிட்டில் கன்னம் போடுபவனைவிட மோசமான அயோக்கியர்கள் என்றும், இது போன்ற வெட்கம் கெட்ட சுயமரியாதையற்ற பேர்வழிகள் இந்தப் பூமிக்கே அச்சுறுத்தலானவர்கள் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- செ.கார்கி