NEET protest

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அப்டவணை, அதிகாரப் பகிர்வு பற்றிக் குறிப்பிடுகிறது. அதன்படி ஒன்றியப் பட்டியல், ( Union list ) பொதுப் பட்டியல் ( Concurrent list ) மாநிலப் பட்டியல் ( State list ) என அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 245 மற்றும் 246 ஆவது பிரிவுகள் மைய மற்றும் மாநில அரசுகள், சட்டம் இயற்றும் முறை குறித்து விளக்குகின்றன.

"இந்தியாவின் அனைத்தும் பகுதிக்கும் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு. அதே போல், மாநிலம் முழுவதற்கும் தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு" என சட்டப் பிரிவு 245 குறிப்பிடுகிறது.

அதன்படி, மைய அரசிற்கு ஏறக்குறைய 100 அதிகாரப் பிரிவுகள் உள்ளன. இது " ஒன்றியப் பட்டியல் " ( மையப் பட்டியல் ) எனப்படுகிறது. பாதுகாப்பு, முப்படை, வெளிநாட்டு உறவு, நாணயம், அணுசக்தி, தொடர் வண்டி, நெடுஞ்சாலை, அஞ்சல் , காப்பீடு, கடல் சார்நிறுவனங்கள், வங்கிகள், தொல்லியல் ஆய்வு, அயல் நாட்டு ஒப்பந்தங்கள் போன்ற அதிகாரங்கள் இந்த ஒன்றியப் பட்டியலில் உள்ளன. , மைய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளுக்கும் பொதுவாகச் சுமார் 57 அதிகாரப் பிரிவுகள் உள்ளன. கல்வி, காடுகள், குற்றவியல் சட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகை, விலைவாசி, தொழில் மற்றும் வணிகம் போன்றவை அடங்கியுள்ள இப்பிரிவு "பொதுப் பட்டியல்" எனப்படுகிறது. இவை தவிர, 61 அதிகாரப் பிரிவுகளைக் கொண்ட, முற்றிலும் மாநில அதிகார வரம்பிற்குட்பட்ட, "மாநிலப் பட்டியல்" தனியே உள்ளது. சட்டம் ஒழுங்கு, காவல் துறை, சிறை, பொது சுகாதாரம், மது, நூலகம், விவசாயம் மீன்வளம் திரையரங்கு தொழிற்சாலைகள் போன்ற அதிகாரங்கள் இதில் உள்ளன.

நாடு விடுதலை அடைந்த பிறகு, மையத்தில் ஆள்வது காங்கிரசாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும், அதிகாரங்களைத் தம்மிடம் குவிப்பதிலேயே கருத்தாக இருந்து வருகின்றன. எனவே மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரத்தைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதிலேயே குறியாக உள்ளன. பொதுப் பட்டியலிலிருந்து பிறகு மையப் பட்டியலுக்குக் கமுக்கமாக மாற்றிக் கொள்வது என்பது அவர்களது திட்டமாக உள்ளது.

கல்வி என்பது முதலில் மாநில அரசிற்குரிய பட்டியலில்தான் இருந்தது. ஆனால் இந்தியாவின் நெருக்கடி கால கட்டத்தில் ( ஜுன் 25 | 1975 முதல் மார்ச் 21 | 1977 வரை ) அரசியல் சாசனத்தில் 42 ஆவது திருத்தத்தை இந்திரா காந்தி கொண்டு வந்தார். அதன்படி சஞ்சய் காந்திக்குப் பிடித்தமான மக்கள் தொகை | குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகச் செயலாக்க அவற்றை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றினார். அதே சமயத்தில், மாநில அரசின் அதிகாரத்திலிருந்த கல்வியை, மையஅரசின் அதிகாரம் மேலோங்கியுள்ள, பொதுப் பட்டியலுக்கு எளிதாக மாற்றி விட்டார். சனநாயகத்திற்கு எதிரான இப்படிப்பட்ட பல்வேறு மாற்றங்களை 42 ஆவது திருத்தத்தின் மூலம் அவர் கொண்டு வந்ததால், இந்தியச் சட்ட வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரியதாக அத்திருத்தம் கருதப்பட்டது.

கல்வி, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாறியதால், கல்வியின் மீதான ஆளுமை இயல்பாக மைய அரசுக்குக் கிடைத்து விட்டது. மைய அரசுக்கு வாய்ப்பான கல்வி மாற்றங்கள், இந்தித் திணிப்பு போன்றவற்றைப் புகுத்த இது உதவியது. அந்த அடிப்படையில்தான் இப்பொழுது "நீட்" தேர்வு திணிக்கப் பட்டுள்ளது.

மைய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளுக்கும் பொதுப் பட்டியலில் உரிமை இருந்தாலும், மைய அரசின் அதிகாரமே அங்கு மேலோங்கி உள்ளது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்டம், மையஅரசின் நிலைபாட்டிற்கு எதிராக இருந்தால், நாடாளுமன்றத்தின் மூலம் அத்தீர்மானத்தை முறியடிக்கும் உரிமை, 254 ஆவது சட்டப் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு, தான் இயற்றிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அச் சட்டத்தை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என 254 ( 2 ) ஆம் பிரிவு வகை செய்கிறது.

அதனால்தான், நீட்டிற்கு எதிரான சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால், இந்துத்துவ அரசு அதை மூலையில் தூக்கி வீசிவிட்டது.

எனவே, இப்பொழுதுள்ள சூழ்நிலையில் "நீட்" நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது ஒன்றுதான் நமக்கு முன்னுள்ள ஒரே வாய்ப்பாகும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்கும். ஓராண்டிற்கு விலக்கு, இரண்டாண்டு விலக்கு என்பதெல்லாம் தமிழக மாணவர்களை ஏமாற்றும் செயலாகும்.

மேலும், நாடாளுமன்ற்த்தின் நிலைக்குழு, "நீட்" நுழைவுத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்குக் கொடுக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

தவிரவும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 15 ( A ) -க்கு 1952 ஆம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் படி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பட்டியலினப் பழங்குடியினரது முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் மாநில அரசின் சிறப்பு ஏற்பாடு எதனையும் யாராலும் தடுக்க முடியாது என உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவ்வகையில், தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமையைத் தடுக்கச் சட்ட ரீதியாகத் தடை ஏதும் இல்லை.

கல்வி வணிகமயமாக்கப்படல், தாய்மொழி வழிக் கல்வி, அண்மைப் பள்ளி, பொதுப் பள்ளி, அனைவருக்கும் தரமான இலவயக் கல்வி போன்ற பல்வேறு சிக்கல்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆனால் இன்று " நீட்" தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அனிதாவை அநியாயமாக " நீட் " தேர்வு பலி வாங்கி உள்ளது. இதற்கு நியாயம் கேட்டு மாணவர்கள் வீதியில் இறங்கி அணி அணியாகப் போராடி வருகின்றனர். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமையாக மாறிவிட்டது.

மிக மிக அரிதான ஒரு வாய்ப்பை வரலாறு இப்பொழுது வழங்கியுள்ளது. தமிழக மாணவர்கள் ஒருக்காலும் இதை நழுவ விடக் கூடாது. எல்லாவித ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து, போராட்டத்தை ஊழித் தீயாக மாற்றி, வெற்றிக்கனியைப் பறித்திட வேண்டும். ஒற்றுமை, ஒற்றுமை - அது ஒன்றே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கே கல்வி உரிமை என்பதை மெய் நடப்பாக மாற்றி அமைத்திட வேண்டும்.