ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது என்கிற மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பதில் உள் நோக்கம் அடங்கியுள்ளது.

Tamilnadu school studentsஇனி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும்; ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகின்றார், இதற்கான காரணமாக அவர் சொல்வது தான் மிக்க வேடிக்கையாக உள்ளது.

அதாவது,முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் திட்டம் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து மாணவர்களும் சுலபமாக தேர்ச்சி பெற்று விடுகின்றனர் என்றும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான்.

உண்மையான தேர்வை சந்திக்கின்றனர் என்கிறார், இது கேட்பதற்கு அக்கறையுடன் கலந்த நியாயமாக தெரிந்தாலும், இதன் பின் உள்ள உள் நோக்கம் மறுபடியும் கல்வியை குலக்கல்வி முறைக்கு இழுத்து செல்வது தான் என்று அப்பட்டமாக வெளிப்படுகின்றது, மிகச் சரியாக சொல்ல வேண்டுமானால் குலக்கல்வி முறை என்ற சொல்லாடலை விட குலத்தொழில் முறை என்று தான் சொல்ல வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் சொன்னதைப் போல், இதன் முலம் ஐந்தாம் வகுப்பு மற்றும்  எட்டாம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களை, படிப்பில் பின்தங்கியவர்களுக்கு ஏற்ப தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் என்ற பெயரில் கிராமத்து மற்றும்  சமுகத்து பின் தங்கிய பிள்ளைகளை படிப்பில் பின்தங்கியவர்கள் என்று முத்திரை குத்தி மேலும் படிக்க விடாமல் அவர்களுக்கு தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் என்ற பெயரில் அவர்களின் பொது கல்வியை தடுப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும்.

மத்திய அரசிற்கு  உண்மையிலே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் இந்த அறிக்கையை  விடுத்து மாணவர்களுக்கு  படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட வேறு எதாவது முயற்சியை செய்யலாமே.

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி பெறும் திட்டம் அரசு பள்ளிகளில் இருப்பதால், மாணவர்களின்  கற்றல் திறன் மேம்படாமலே தேர்ச்சி பெற்று விடுகின்றனர் என்பது தான் இவர்களுடைய வாதமே, சரி அப்படி உண்மையிலே இவர்களுக்கு கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்கள் மீது அக்கறை இருக்குமேயானால், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும்  அவர்களின் கற்றல் குறைபாட்டை கண்டறிய அரசு ஆசிரியர்களுக்கு இதற்கான சிறப்பு பயிற்சி ஏன் கொடுக்ககூடாது?

அவ்வாறு கண்டறிந்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களின் கற்றல் திறனை ஏன் மேம்படுத்தக் கூடாது?

அதுமட்டுமின்றி, ஒரு வகுப்பிற்கு 20 பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று சொல்கின்றது நம் கல்விச்சட்டம் ஆனால் இப்போது பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இதற்குநேர் மாறாக உள்ளது.

இதையேல்லாம் சரி செய்வதை விடுத்து,  ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது  என்று அமுல்படுத்துவதென்பது  மாணவர்களுடைய கல்வியறிவை தடுப்பதே தவிர வேறேதும் இல்லை, இதனால் குறிப்பாக கிராமப்புற மாணவர்களும்  சமூக ரீதியாக பின் தங்கியுள்ள  பிரிவினரும் பெரும்பாலும் பாதிக்கப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது என்னும் சூழ்ச்சியின் பிண்னனியை   மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர் இந்தியா பல்வேறு மாணவர்கள் மற்றும் பெற்றொர்களை ஒருங்கிணைத்து களமிறங்கும்.

கல்வி என்பது அனைத்து சார்பு மக்களின் அடிப்படை உரிமை,  அந்த உரிமைக்கு ஏதேனும் பங்கம் ஏற்படுமாயின், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மாணவர்களின் உரிமைக் குரலாக மாணவர் இந்தியா தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

-       அப்சர் சையத், மாநில துணை செயலாளர், மாணவர் இந்தியா