மோடி பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகியிருக்கின்றதோ இல்லையோ தேசவிரோதிகள் எக்கச்சக்கமாக பெருகியிருக்கின்றார்கள். வந்தே மாதரம் பாட மறுக்கும் தேசவிரோதிகளும், ராமனை ஏற்றுக்கொள்ளாமல் விபச்சார விடுதியில் பிறந்த தேசவிரோதிகளும், கோமாதா கறி தின்னும் தேசவிரோதிகளும், இன்னும் இந்தியை எதிர்க்கும், சமஸ்கிருதத்தை எதிர்க்கும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளும் இந்தியாவின் வடக்கு தொடங்கி தெற்கு வரையிலும், கிழக்கு தொடங்கி மேற்கு வரையிலும் மோடி அரசு உருவாக்கியிருக்கின்றது. மோடி ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கின்றது என அறிவிக்கும் போது இந்தியாவில் புதிதாக சில பல தேசவிரோதிகளும் சேர்ந்தே உருவாகப் போகின்றார்கள் என்பதாகத்தான் அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன்படியே மோடி தனது பம்மாத்து திட்டங்களால் இந்தியாவை உலகிலேயே தேசவிரோதிகள் அதிகம் வாழும் நாடாக மாற்றியிருக்கின்றார். ஆனால் இது போன்ற பெருமைகளால் மோடி திருப்தி அடைபவர் கிடையாது.

armed protection for tomatoes

மோடி ஆட்சி எவ்வளவுவோ இழிந்த நிலைக்குச் சாமானிய இந்திய மக்களை தள்ளியிருக்கின்றது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின் எந்தத் துறையும் அவரால் வளர்ச்சியடையவில்லை. அனைத்துத் துறைகளிலும் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன சேவைத் துறை உட்பட. அதிலும் விவசாயிகள் பிரச்சினை என்பது மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட செய்தியாக மாறியிருக்கின்றது. மாட்டின் மீது காட்டப்பட்ட அக்கறையில் ஒருசதவீதம் அதை வளர்க்கும் விவசாயிகள் மீது காட்டப்பட்டிருந்தால் கூட இத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்க மாட்டார்கள். சென்ற 2016 ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 11400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர் என்று மக்களவையில் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். அவரைப் பொருத்தவரை அது வெறும் ஒரு புள்ளிவிவரக் கணக்கு அவ்வளவுதான். இன்னும் தற்கொலைகளின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தால் கூட அதற்காக ராதாமோகன் சிங் கவலைப்பட போவதில்லை. விவசாயத் துறையில் எந்தவித அடிப்படை கட்டுமானத் திட்டங்களும் மோடி அரசால் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயத்திற்கு என்று ஒதுக்கப்படும் குறைந்தபட்ச தொகையைக் கூட உர நிறுவனங்களும், பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் மானியம் என்ற பெயரில் தின்றுவிடுகின்றனர்.

ஒரு திட்டமிட்ட விவசாய உற்பத்தி என்பதை நோக்கிய செயல்பாடுகள் இல்லாமல் போனதால் அதிகப்படியான விளைச்சலால் விலைவாசி மிகக் கடுமையாக குறைந்து விவசாயிகள் பெருமளவு நட்டமடைவது தொடர்ந்து நடந்து வருகின்றது. உற்பத்தி அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை கடுமையாகக் குறைந்து அவற்றை விவசாயிகள் சாலைகளில் கொட்டும் அவலத்தைப் பார்க்கின்றோம். இதேபோன்று தக்காளி விலையும் விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என விற்கப்படும்போது விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்கின்றார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்று சின்ன வெங்கயாம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக உயர்ந்து சாமானிய மக்களை பெரும் சித்தரவதை செய்து வருகின்றது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 முதல் 100 ரூபாய்வரை விற்கப்படுகின்றது. அதேபோல தக்காளி கிலோ 70 முதல் 100 ரூபாய்வரை சில்லரை விற்பனையில் விற்கப்படுகின்றது.

சின்ன வெங்காயமும், தக்காளியும் இல்லாமல் அநேகமாக எந்தக் குழம்பு வகைகளையும் நம்மால் செய்ய முடியாது. இவற்றின் கடுமையான விலையால் இன்று சாமானிய நடுத்தர வர்க்க மக்கள் கூட அவற்றை தேவையான அளவு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். வருமானத்தின் பெரும்பகுதியை உணவு தேவைக்காகவே செலவு செய்ய நேரிட்டால் மற்ற அடிப்படைவசதிகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. மழை இல்லாததாலும், வறட்சியாலும் போதிய உற்பத்தி இல்லாததால் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்வது நிச்சயம் ஏமாற்று நாடகமே ஆகும். திட்டமிட்ட விவசாய உற்பத்தி என்ற ஒன்றைப் பற்றி நமது ஆளும்வர்க்கத்திற்கு எந்தக் கவலையும் எப்போதும் இருந்தது கிடையாது. குறைந்தபட்சம் கூடுதலான மகசூல் கிடைக்கும் போது அவற்றை மொத்தமாக சந்தைகளில் குவித்து விலை வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க அவற்றை சேமித்து வைக்கும் கிடங்குகளாகவது முறையாக இருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. இப்படி எதுவுமே செய்யாமல் இருப்பதன் நோக்கம் விவசாயிகளை விவசாயத் துறையில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றுவதற்காகவும் அவர்களை தற்கொலை செய்துகொள்ள நிர்பந்தப்படுத்துவதற்காகவும் மட்டுமே ஆகும்.

இப்படி கடுமையான விலைவாசியைச் சாமானிய குடிமகன் எதிர்கொள்ள நேரும்போது என்ன நடக்கும் என்று நாம் பல நாடுகளில் பார்த்திருக்கின்றோம். மெக்சிகோ, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உணவு கலகங்கள் நடந்தன, அந்த மக்களின் அடிப்படை உணவான மக்காச்சோளமும் அதில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்ததால் அந்த மக்கள் உணவு கலகங்களில் ஈடுபட்டனர். தற்போது இந்தியாவும் மோடியின் ஆட்சியில் அப்படியான ஒரு நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கின்றது. கடந்த 20 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஹிசார் காய்கறிச் சந்தையில் 300 கிலோ தக்காளியைக் கொள்ளையடித்துள்ளனர். இதனால் பயந்துபோன பிஜேபி அரசு இன்று மத்தியப் பிரதேசத்தில் தக்காளியை போலீஸ் பாதுகாப்போடு விற்பனை செய்து கொண்டிருக்கின்றது. தக்காளி திருடர்களிடம் இருந்து வியாபாரிகளைப் பாதுகாக்கும் நிலைக்கு இன்று பிஜேபி அரசு நாட்டை மாற்றியுள்ளது.

உணவுப் பொருட்களை திருடி தின்னும் அளவுக்கு ஒரு நாடு மாறியிருக்கின்றது என்றால் அந்த நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அர்த்தம். இன்று தக்காளிக்குப் போலீஸ் பாதுகாப்பு போடும் அரசு நாளை சின்ன வெங்காயத் திருட்டை தடுக்க போலீஸ் பாதுகாப்புப் போடும் நிலைக்கு வரலாம். விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க திராணியற்ற ஒரு அரசாங்கம், விவசாயிகளை தற்கொலையை நோக்கி ஓட ஓட விரட்டி அடிக்கும் ஒரு அரசாங்கம், கடைசியில் எங்கு வந்து நிற்க வேண்டுமோ அங்குதான் இன்று வந்து நிற்கின்றது. ஒரு பக்கம் பெருமுதலாளிகளை சாமானிய மக்களின் கோபத்தில் இருந்து பாதுகாக்க தன்னுடைய படைகளைப் பயன்படுத்திய அரசு இன்று இன்னும் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. மோடி ஆட்சி முடிவதற்குள் தக்காளி திருடர்களிடம் இருந்து மட்டும் அல்லாமல் அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் இந்திய மக்கள் திருடித் தின்னும் நிலை வரலாம். குறிப்பாக பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்திலும் இந்தச் சூழ்நிலை மிக வெளிப்படையாகத் தெரிகின்றது.

மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றார் என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஒரு சாதாரண தக்காளி திருடர்களைக் கண்டே அஞ்சி நடுங்கி அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடும் இந்த அரசு ஒட்டுமொத்த சாமானிய இந்திய மக்களும் ஒருவேளை சோற்றுக்காக திருடித்தின்னும் நிலை வந்தால் என்ன செய்யும் என்று தெரியவில்லை. ஒரு மோசமான கட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது. பசு பாதுகாவலர்கள் போன்று தக்காளி பாதுகாவலர்கள், வெங்காயப் பாதுகாவலர்கள் என பல பாதுகாவலர்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தக்காளியை திருடித் தின்றவர்கள் ஒரு நக்சலைட்டாகவோ, மாவோயிஸ்ட்டாகவோ, பாகிஸ்தான் அல்லது சீன கைக்கூலியாகவோ கூட இருக்க வாய்ப்புள்ளது. எனவே தேசபக்தர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து இந்தச் சதியை முறியடிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

- செ.கார்கி