Karunanidhiஆயிற்று 13 அண்டுகள். தி.மு.க.விலிருந்து கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு புரட்சிப்புயல் வைகோவை வெளியேற்றியபோது பொங்கிய ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. தி.மு.க. எங்களுக்கா, உங்களுக்கா என மல்லுக்கட்டி நின்றோம். தேர்தல் ஆணையம், அறிவாலயத்திற்கே கட்சியும் கொடியும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தபோது, இனிக் கறுப்பு சிவப்புக் கரை வேட்டியை கட்டமுடியாதே எனக் கதறி அழுத வைகோவின் ஆயிரக்கணக்கான தம்பிமார்களில் நானும் ஒருவன்.

கறுப்பும் சிவப்பும் வெறும் நிறங்களாக எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுடைய தோலும், அதனுள் ஓடும் குருதியுமாகவே அறிந்திருந்தோம். அதனை இழக்கிறோமே என்று எங்களின் குருதிக் கொந்தளிப்பு அதிகமானதை அறிந்துதானோ என்னவோ, புதிதாகத் தொடங்கிய ம.தி.மு.க.வில் சிவப்பு நிறத்தைக் கூடுதலாகச் சேர்த்து மேலும் கீழும் சிவப்பு, நடுவில் கறுப்பு என கொடியமைத்தார் வைகோ. எப்படியிருந்தாலும் கறுப்பு சிவப்பிலிருந்து எங்களை நிரந்தரமாகப் பிரிக்க முடியாது. ஆனால் தற்காலிகமாகவாவது பிரித்து விடலாம் எனக் கணக்குப் போட்டுச் செயல்படுகிறது ஜெயலலிதா அரசாங்கமும் அதனிடம் சம்பளம் வாங்கும் உளவுத்துறையும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்குமிடையிலான பிரிவும் பிளவும் பங்காளிச் சண்டையைப் போன்றது. வெட்டுக்குத்து இருக்கும், விளாசல்கள் இருக்கும், உன்னை விட்டேனா பார் என்ற பாய்ச்சல் இருக்கும். அதுவும் திராவிட இயக்கங்களுக்கு இது புதிதல்ல. பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்தபோது, ‘கண்ணீர்த்துளி பசங்க' என்று ஆரம்பித்து அய்யா கொடுத்த வசவுகளையெல்லாம் திரும்ப ஒலிபரப்பினால் காது தாங்காது. அவை யெல்லாம் கோபத்தின் வெளிப்பாடு. உணர்ச்சிக் கொந்தளிப்பு. அதற்காகப் பெரியாரும் அண்ணாவும் கடைசி வரைக்கும் எதிரிகளாகவே இருந்துவிட்டார்களா? மனைவியின் மரணத்தையே தனது பொதுவாழ்வுக்கான சுதந்திரம் எனக் கருதிய அய்யா அவர்கள், அண்ணாவின் மரணத்தில்தான் கதறிக் கதறி அழுதார் என்பதை திராவிட இயக்கம் மறந்துவிட வில்லை. பெரியார் திட்டிய ‘கண்ணீர்த் துளி'யைவிட, அவர் சிந்திய கண்ணீர்த்துளிதான் வரலாற்றின் பக்கங்களில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்கும் நடந்த சண்டைகளைப் புதிதாக விளக்கத் தேவையில்லை. கொலைகாரன் என ஒரு தரப்பின் குற்றச்சாட்டு, வெள்ளைப்புடவை கட்ட வேண்டியிருக்கும் என இன்னொரு தரப்பின் கோபாவேசம் இவற்றை மறைக்க முடியாதுதான். ஆனால், மனம் வைத்தால் மறக்க முடியும். அதனால்தான் வைகோ சொன்னார், ‘அந்தக் காயம் ஆறிவிட்டது. ஆனால் வடு அப்படியே இருக்கிறது' என்று. உண்மைதான். இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் மாறாத வடு வைகோ நெஞ்சில் மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றிலும் பதிந்தே இருக்கிறது. அந்த வடுவை மீண்டும் கீறிப்பார்க்கச் சூழ்ச்சியாளர்களும், இன எதிரிகளும் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரு கட்சிகளின் தலைமையும் பலியாகப் போகின்றனவா என்பதுதான் உண்மையான திராவிட இயக்க உணர்வுள்ள தொண்டர்களின் மனத்தில் உள்ள கேள்வி.
Vaikoபங்காளிச் சண்டை தீர்க்க முடியாததா? சொத்துப் பங்கீட்டில் சிக்கலில்லாமல் பார்த்துக் கொண்டால் பங்காளிப் பிரச்சினைக்கு இடமேது? தொகுதிப் பங்கீட்டில் சரியாக நடந்துகொண்டால் அரசியல் பங்காளிகளுக்குள் அடிதடி ஏது? கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து உண்மையைப் பேசுவோம். வைகோவுடன் 9 மாவட்டச் செயலாளர்களும், கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி வரையிலும் கணிசமான தி.மு.க. தொண்டர்களும் பிரிந்து போனது ஏன்? ஒவ்வொரு பகுதியிலும் கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டிதானே! கோட்டைக்கான அதிகாரப் போட்டிகூட அல்ல. பட்டுக்கோட்டையில் கட்சிக்கான அதிகாரப் போட்டியில் உடன் பிறப்புகளுக்குள்ளேயே மோதல் எற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாக வில்லையா? ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தரப்பின் கை ஓங்கியிருந்ததும் இன்னொரு தரப்பு ஒடுங்கியிருந்ததும்தானே இந்த பங்காளிப் பிளவை பெரிதாக்கியது. 13 ஆண்டுகாலம் தனிக் கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்தபோதும் இன்றுவரை சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்பில்லாமல் இருப்பதும் இந்தப் பிளவை பெரிதாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அண்ணன் - தம்பி என்பது சொல்லளவில் இல்லாமல், செயலில் இருக்க வேண்டும் என வைகோவின் தொண்டன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

தம்பிகள் பல்லக்குத் தூக்குவதும் அண்ணன்கள் அமர்ந்து வருவதும் தலைமையில் மட்டுமல்ல கிளைக் கழகங்கள் வரை நீடிக்க வேண்டுமென்றால் பங்காளிச் சண்டை தீரவே தீராது. தம்பிகளுக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்பது கலகமல்ல. உரிமை! எந்தக் காரணத்திற்காக பிரிந்தோமோ, அதே ஏற்றத்தாழ்வு சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கும் என்றால் இணைந்து செயல்படுவது எப்படி சாத்தியம்? அதனால்தான் கௌரவமான தொகுதிகள் என்ற குரல் ஒலிக்கிறது. இதில் தவறு என்ன? இந்த உரிமைக் குரலை கலகக் குரலாக சித்திரிக்கச் சில குள்ளநரிகள் முயல்கின்றன. அதற்கு முன்னாள் தலைவரும் இந்நாள் தலைவருமான நீங்கள் இருவரும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னைப் போன்ற தொண்டர்களின் பணிவான கோரிக்கை.

உளவுத்துறையின் நாரத கானத்துக்கு மகுடிப் பாம்பாக மயங்கி, பிளவுக்கு காரணமாக அமைந்துவிட்டால் அது இத்தனை நாள் காத்து வந்த பெருமையை அழித்து விடும். முன்னாள் தலைவர் கலைஞரின் ராஜதந்திரமும் அரசியல் அணுகுமுறையும் நாம் அறிந்தவை தாம். இன்று அவரால் இவையெல்லாம் நமக்கு பாதிப்பை உண்டாக்குவனவாக நினைக்கிறோமோ, அவையெல்லாம் அன்று நாமும் சேர்ந்து சாணக்கியத்தனம் எனப் புகழ்ந்தவர்கள்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவரது அணுகுமுறையிலேயே நாமும் அவரிடம் சீட்டுகளைப் பெறுவதே 13 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் கற்ற ராஜதந்திரமாக இருக்க முடியும். அது பாராட்டுக்குரியதும்கூட.

அதை விட்டுவிட்டு, அ.தி.மு.க. பக்கம் சென்றால் சீட்டும் கிடைக்கும் நோட்டும் கிடைக்கும் என புளகாங்கிதமடைந்து பேசுவது, ‘அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி' என்கிற நமது அடிப்படைக் கொள்கைகளின் அடிவயிற்றில் அரிவாளால் ஒங்கிப் போடுவதாக அமைந்துவிடும். எந்த விதத்தில் அ.தி.மு.க. தலைமை, கூட்டணி உறவுக்குப் பொருத்தமானது என்பதை யோசிக்க வேண்டியது நமது கடமை. நமது உயிரனைய கொள்கைகளில் ஒன்றிலேனும் துளியளவு உடன்பாடாவது அ.தி.மு.க.வுக்கு உண்டா? சேது சமுத்திரத் திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் சிம்ம கர்ஜனை செய்தவர் நமது தலைவர் வைகோ. இன்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கியிருக்கும் நிலையில் அதற்கு எதிராகக் கடற்கரைப் பகுதியெங்கும் கலவரத்தை விதைத்துக்கொண்டிருப்பது அ.தி.மு.க. தலைமை.

Chandrika with Jayalalithaஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு ஆலைகள் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடாது எனக் குரல் கொடுத்துப் போராடியவர் நமது தலைவர். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாமிரபரணி தண்ணீரையும் அள்ளிக் கொடுத்து, தமிழக மக்களை தாகத்தில் தவிக்க விடுவது அ.தி.மு.க. தலைமை. தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது நமது உயிர்மூச்சுக் கொள்கை. ஈழத்தமிழர் நலனுக்காகப் போராடுபவர்களை ஒடுக்க நினைப்பவர்களுடன் கைக்கோத்துக் கொண்டு செயல்படுவதே தனக்குப் பெருமை என நினைப்பது அ.தி.மு.க. தலைமை.

எந்தவிதத்திலும் ஒட்டோ உறவோ இல்லாத ஒரு தலைமையிடம் சீட்டுக்கும் ஒட்டுக்கும் யாசகம் கேட்டு நிற்பது என்பதை மானமுள்ள இயக்கத்தினரால் சிந்திக்கக்கூட முடியாதே! வென்றாலும் தோற்றாலும் கொள்கையே மூச்சு, தலைவர் வைகோவே எங்கள் இதயத்துடிப்பு என வாழ்கிற இலட்சோபலட்சம் ம.தி.மு.க. தொண்டர்கள் எப்படி அ.தி.மு.க.வுடனான உறவை ஏற்பார்கள்? உயிரினும் மேலான தலைவரை 500க்கும் அதிகமான நாட்கள் பொடா சிறையில் தள்ளிய ஒருவரை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால், தமிழக மக்கள் எள்ளி நகையாடமாட்டார்களா? நெருக்கடிக் காலச் சிறையில் தள்ளிய இந்திராகாந்தியுடன் கலைஞர் கூட்டணி வைக்கவில்லையா என்ற வாதத்தை வைக்கலாம். அன்றைய தலைவர் செய்த தவற்றை, இன்றைய தலைவரும் செய்ய வேண்டும் என்பது அரசியல் நியதியா? இந்திரா காந்தியுடன் வைத்த கூட்டணியால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா பயனடைந்தார். சட்டமன்றத் தேர்தலில் கலைஞரால் வெற்றிபெற முடிந்ததா? மக்கள் புறக்கணித்தார்கள் என்பதுதானே வரலாறு.

கலைஞர் நம்மை வளரவிட மாட்டார் என்ற கருத்து பரப்பப்படுகிறது. அதற்காக ஜெயலலிதா என்ன ம.தி.மு.க.வை தண்ணீர் ஊற்றி வளர்த்து விடுவாரா? தனது எதிரியை ஒழிக்க வேண்டும் என்பதற்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்வார். சீட்டாட்டத்தில் பயன்படும் ஜோக்கர் சீட்டா ம.தி.மு.க.? 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் அனுபவித்த கொடுமைகளை வேரறுக்க வேண்டிய பொறுப்பு, மகத்தான அரசியல் இயக்கமான ம.தி.மு.க.வுக்கும் இருக்கிறது. மக்கள் பக்கம் நாம் நிற்க வேண்டாமா? இன்றைய அரசியல் சூழலின்படி, கலைஞரால் கட்டுண்டிருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் மாறும். அதுவரை காத்திருப்போம். அவசரப்பட்டு அ.தி.மு.க. உறவு என்று குரல் கொடுத்து, ம.தி.மு.க.வும் ஒரு சராசரி அரசியல் கட்சிதான் என மக்களிடம் பெயர் வாங்காதிருப்போம்.

கண்ணீருடன்,
க. இளமாறன்
ம.தி.மு.க. தொண்டன், சிவகாசி