வெண்மைப் புரட்சி

கடந்த தொடரில் சொன்னபடி, பசுமைப் புரட்சி எந்த அளவுக்கு மக்களின் பசி,பட்டினியைத் தீர்க்க உதவியதோ அந்த அளவிற்கு வெண்மைப் புரட்சியும் விவசாயிகளின் வறுமையை சிறிது குறைக்க உதவியது.பால் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியாவை முப்பதாண்டு காலத்தில் உலகின் முதன்நிலை பால் உற்பத்தி நாடாக மாற்றியது. எந்த நாடு, அடுத்த நாடுகளிடமிருந்து பால் பவுடருக்காக கையேந்தி காத்திருந்ததோ அந்த நாடு இப்போது, தன் தேவைக்கும் அதிகமான பால் மற்றும் பால் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.தற்போது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் பால் அருந்துவதாகக் கொண்டால் கூட, தினமும் ஒவ்வொருவருக்கும் 322 கிராம் பால் கிடைக்கும். இது, உலக சராசரியான 294 கிராம் என்பதை விட அதிகம்.கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 155 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும், இது உலக பால் உற்பத்தியில் 18 சதவீதம் ஆகும்.இப்படி பாலுக்கு வழியில்லாமல் தவித்த ஒரு நாடு, இன்று பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க காரணம் “Operation Flood” ஆகும்.  

beef 300காட்டில் வேட்டையாடித் திரிந்த மனிதன், வேளாண்மை பழகிய பின்னால், அந்த விவசாய வேளைகளில் உதவும் பொருட்டு கால்நடைகளை பழக்க ஆரம்பித்தான். எருது,காளை,பசு,ஆடு உள்ளிட்ட கால்நடைகள் காட்டுச் சூழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை அண்டிப் பிழைக்க ஆரம்பித்தன. மனிதனுக்கும் நிலத்தை உழுவதற்கும் தண்ணீர் இறைப்பதற்கும் மாட்டினங்கள் தேவைப்பட்டன.ஆரம்பத்தில் இறைச்சியை மட்டுமே உண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் பின்னால் தாவர உணவுகளை உண்ணத் தொடங்கி, அதன் பொருட்டு வேளாண்மையும் பழகி,அதற்காக கால்நடைகளை துணை கொண்ட பின்னால் நாடோடி வாழ்வை விடுத்து நிலையான வாழ்வை வாழ ஆரம்பித்தான். பின்னாளில் கால்நடைகளின் பால் மற்றும் பால் பொருட்களை உண்ணத் தொடங்கிய பின்னால் கால்நடைகளை வளர்ப்பதற்கென்றே ஒரு மக்கள் குழு உருவானது.

வேளாண்மையின் மூலம் ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மக்கள் கூட்டத்திலிருந்து, கால்நடைகளை வளர்ப்பதற்க்கென்று ஒரு கூட்டம் மேய்ச்சலுக்காக திரும்பவும் நாடோடி வாழ்க்கை வாழ ஆரம்பித்தது. இவர்கள் “மேய்ச்சல் நாடோடிகள்” எனப்பட்டனர். ( இப்படி மேய்ச்சல் நாடோடிகளாக இந்தியாவில் நுழைந்தவர்கள் தான் வட இந்தியாவில் வாழும் ஆரிய இன மக்கள்) அந்த நாடோடிகள் கால்நடை மந்தைகளை கூட்டம் கூட்டமாக மேய்த்துக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து, அவற்றின் இறைச்சியையும் பாலையும் உண்டு வாழ ஆரம்பித்தனர். இப்படி, நிலமுள்ள விவசாயிக்கு விவசாயத்தில் உதவியாகவும், பாலுணவிற்கான ஆதாரமாகவும் அதே சமயத்தில் நிலமற்ற மேய்ச்சல் நாடோடிகளுக்கு பால் மற்றும் இறைச்சியத் தரும் ஆதாரமாகவும் கால்நடைகள் மாறின. வேளாண்மையும் மேய்ச்சலும் நிலை பெற்ற பின்னர் கால்நடைகள் செல்வத்தின் குறியீடாக மாறின. செல்வந்தனின் மதிப்பு அவனுக்கு இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்தது. பெரும் வேளாண் நிலமும் பெரும் எண்ணிக்கையிலான கால்நடை மந்தைகளையும் கொண்டிருந்தவன் குறிப்பிட்ட மக்கள் குழுவின் தலைவன் ஆனான். அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு சொந்தக்காரனாக இருந்தவன் பெரும் செல்வந்தனாகப் பார்க்கப்பட்டான்,கூட்டத்திற்கு தலைவனானான். இன்னும் சொல்லப்போனால் கால்நடைகளின் செல்வ வளத்தைப் பொறுத்து மனைவிமார்களைச் சேர்த்துக் கொண்டான்.

இப்படி, “ஆநிரை வளர்ப்பு” அரச வாய்ப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு செல்வக் குறியீடாக இருந்ததால் அரசர்களுக்குள் போர் ஏற்படும்போது முதல் செய்கையாக இருந்தது “ ஆநிரை கவர்தல்”. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க நினைக்கும் மன்னன் முதலில் தன் படைக்குழுக்களை அனுப்பி அந்த நாட்டின் கால்நடை மந்தைகளிலிருந்து சில பல கால்நடைகளைக் கவர்ந்து வரச் செய்வான். இப்படி களவு போன கால்நடைகளை மீட்கும் பொருட்டு எதிர் நாட்டு மன்னன் தன் படைகளை திரட்டிக் கொண்டு போருக்கு செல்வான். இறுதியில் வெற்றி பெரும் தலைவனுக்கு தோற்ற நாட்டின் கால்நடைகளும் தோற்ற மன்னனின் மனைவிமார்களும் சொந்தமாகி விடுவர். தோற்ற தலைவன் பெரும்பாலும் கொல்லப்படுவதும் அல்லது நாட்டை விட்டு துரத்தப்படுவதும் வழக்கம்.

இப்படியாக பாமரன் முதல் தலைவன் வரை, கால்நடைகள் வளர்ப்பு மனிதனின் வாழ்வில் அத்தியாவசியமானது.பின்னாளில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் போக மீதமிருந்த பாலையும் இறைச்சியையும் சுற்றி வாழும் மக்களுக்கு விற்று பொருளீட்டும் விதமாக கால்நடை வளர்ப்பு வியாபாரமாக மாறியது.பெரிய அளவில் தொடர்புகளற்ற, போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் அந்தந்த ஊர்களில் வளர்த்த கால்நடைகளை அவற்றின் பாலை தனக்கும்,தன் குடும்பத்திற்கும் போக மீதமுள்ளவைகளை சுற்றி உள்ளவர்களுக்கு பண்டமாற்று முறையில் விற்று தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் தன் தேவைக்கும் அந்தப் பகுதி தேவைக்கும் போக மீதமிருந்த பாலை செய்வதறியாது வீணாக்கினர் அல்லது வீணாய் போனது. அதையொட்டி பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வீணாகாமல்,சேமித்து வைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய ஆரம்பித்தனர். அந்த முயற்சியில் மனிதர்களுக்கு தற்செயலாகக் கிடைத்த வழிமுறைதான் நொதித்தல், அதன் மூலம் கிடைத்த தயிர். ஆக அடுத்தடுத்து அறிவியல் வளர கால்நடைகளை இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்ப்பது சமூகத்தில் ஒரு பொருளாதார முறையாக மாறிப்போனது. ஒரு காணி நிலம் இருப்பவனுக்கு இரண்டு எருதும் இரண்டு பசுக்களும் சொந்தமாக இருப்பது அவசியமானது. எருதுகள் நிலத்தை உழுவதற்கும் தண்ணீர் கவளைகளை இறைப்பதற்கும் அவசியமானது.பசுக்கள் தரும் பாலை தன் குடும்பத் தேவைக்கும், மீதமுள்ள பாலை விற்று சிறிதளவு பொருளாதாரத் தேவையையும் பூர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு பெரும் பயனாய் இருந்ததனால் மனிதர்களும் கால்நடைகளை சிரத்தையோடு கவனித்து வளர்த்து வந்தனர். பால் கொடுக்கின்ற வரை வளர்ப்பதும் அதற்குப் பின்னால் இறைச்சிக்கு விற்றுவிட்டு அடுத்த மாட்டை வாங்கி வளர்ப்பதும் வழக்கமாகிப் போனது. இப்படி மனிதர்களுக்கு கால்நடைகள் பயனளிப்பதும் அந்த காரணத்திற்காக மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பதும் ஒரு சுழற்சி முறையாகிப் போனது.

மக்கள் தொகைப் பெருக பெருக பால் மற்றும் இறைச்சித் தேவையும் பெருகியது. அதே நேரத்தில் பாலைப் பாதுகாக்கும் வழி தெரியாமலும் பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி இடத்திலிருந்து தேவையுள்ள சந்தைப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தாலும் மாடுகளை வளர்த்த விவசாயிகள் தொடர் வறுமையில் உழன்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவிலும் அதற்குப் பிந்தைய சில பத்தாண்டு கால இந்தியாவிலும் தொடர் பஞ்சங்களால் விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் தாள முடியாத வறுமையில் உழன்றனர். பஞ்சகாலத்தில் கால்நடை வளர்ப்பும் அவர்களுக்கு இலாபகரமாக அமையவில்லை. அந்த நேரத்தில் அவர்களுக்கு கை கொடுக்க முயன்ற முயற்சிதான் “ வெண்மைப் புரட்சி”. வெண்மைப் புரட்சியின் அடிப்படை குஜராத் மாநிலத்தில் ஆரம்பித்தது. அபரிதமான பாலை உற்பத்தி செய்த இடமாக இருந்த அமுல் எனும் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் சில தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பாலுக்கு சரியான விலை கிடைக்காமல் வறுமையில் வாடினர். அவர்களின் வறுமையை நீக்க அந்த பகுதியை சார்ந்த திருபுவன் தாஸ் என்பவர் சர்தார் பட்டேலின் ஆலோசனையோடு ஆரம்பித்ததுதான் Anand Milk Producer Union Limited ( Amul) எனும் கூட்டுறவு சங்கம். இதன் அடிப்படை பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம்.

முதலில் 5 கூட்டுறவு சங்கங்களோடு ஆரம்பித்த நிறுவனம் பின்னால் கெய்ரா மாவட்டம் முழுவதுக்குமான பால் கூட்டுறவு நிறுவனமானது. இதன் மூலம் பாலுக்கான விலையை பெற்றுக் கொள்ளும் விவசாயி கூடுதலாக தான் கொடுத்த பாலின் அளவுக்கேற்ப, அந்த நிறுவனம் ஈட்டும் இலாபத்தின் ஒரு பகுதியிலிருந்து பயனடைவார். இப்படி தான் விற்ற பாலுக்கும் மேலாக இலாபத்திலும் பங்கு கிடைத்ததால் விவசாயிகள் உற்சாகத்தோடு கூட்டுறவு பால் உற்பத்தி முறைக்கு ஆதரவு அளித்தனர்.வெறும் நான்கு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களோடு தொடங்கிய பால் உற்பத்தி இன்று 130000 பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களைக் கொண்டு உலகின் முதன்நிலை பால் உற்பத்தி நாடாக உள்ளது. இப்படி பால் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அதன் மூலம் தற்சார்பு கிராமப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கவும் தொடங்கப்பட்ட “ Operation Flood” திட்டம் அதன் இலக்கை அடைந்துவிட்டதொடு மட்டுமல்லாமல் அடைந்த வெற்றியினைத் தக்க வைக்கவும் பணியாற்றிக் கொண்டு வருகிறது. NDDB ( National Dairy Development Bord” எனும் தேசிய பால் வளர்ச்சிக் கழகம் அதன் பணியினை செவ்வனே செய்து வருகிறது. குஜராத்திலே உருவான “அமுல் மாடல் – Amul Pattern) எனும் முறையினை நாடு முழுதும் விரிவாக்கம் செய்து அந்தந்த மாநிலங்களில் கூட்டுறவு பால் உற்பத்தி மையங்களை நிறுவி விவசாயிகள் பயன்பெற உதவி வருகிறது.

இப்படி பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வெகு காலம் உழைக்க வேண்டியிருந்தது. முதலில் குறைந்த பட்ச ஆதார விலை கூட கிடைக்காமல் அல்லாடிய விவசாயிகளுக்கு ஆதார விலையை உறுதி செய்ய ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் பின்னாளில் முதன்நிலை பால் உற்பத்தி நாடு என்ற பெயரெடுக்க காரணமாக அமைந்தன. இதற்காக பால் உற்பத்தி முறைகள் சில குறிப்பிட்ட மாறுதல்களைப் பெற்றுள்ளன. குறைந்த அளவு பால் கொடுக்கும் நாட்டு மாடுகளோடு அதிக அளவு பால் கொடுக்கும் வெளிநாட்டு ஜெர்சி உள்ளிட்ட மாடுகளைக் கலப்பு செய்து நம் நாட்டு சூழலுக்கு ஏற்ப புதிய கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன.இந்த கலப்பினங்கள் அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்த தரமான பாலை, நாட்டு மாடுகளை விட அதிக அளவில் உற்பத்தி செய்தன. நாட்டில் பாலின் தேவை அதிகரிக்க அதிகரிக்க பாலின் உற்பத்தியும் அதிகரித்தது. இதற்கு காரணம் கலப்பின மாடுகளே. எப்படி நவீன விவசாயம் நம் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறதோ அதுபோல கலப்பின மாடுகள் தரும் பால் தான் நம் மக்களின் தேவையை ஈடுகட்டுகிறது. கலப்பின மாடுகளே வேண்டாம் நம் நாட்டு மாடுகளே போதும் என்று முடிவெடுத்துவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் நம் நாடு பாலுக்கு வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்க வேண்டி வரும்.

எப்படி இயற்கை வேளாண்மை, ஆர்கானிக் பொருட்கள் என்று நம் மக்கள் மயக்கப்படுகிறார்களோ அப்படிப்பட்ட மயக்கும் சொற்கள் தான் “நாட்டு மாடுகள்”, “A1, A2 பால்”, “நாட்டு மாட்டின் பால் மருத்துவ குணம் கொண்டது” போன்றவை. பசு புனிதம், கோமாதா குலமாதா என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு தெரியாது நாம் குடிக்கும் பாலில் பெரும்பகுதி எருமையிடம் இருந்து கிடைக்கிறது என்பது. குடிக்கும் பாலுக்கு அவர்கள் நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால் அவர்கள் “எருமை வதை தடுப்பு சட்டம்” தான் கொண்டுவர வேண்டும், பசுவதை தடுப்பு சட்டம் அல்ல. இல்லையில்லை நாட்டு மாடுகள் தான் ஆரோக்கியம், அதற்கு திமில் உண்டு, வெளிநாட்டு மாடுகளுக்கு திமிலில்லை என்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது உலகின் உள்ள எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.கால,தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப அவர்களின் தோற்ற அமைப்பு மாறுகிறது. ஆனால் அடிப்படையில் எல்லோரும் மனிதர்களே. அது போலதான் எல்லா மாடுகளும் மாடுகளே, அந்தந்த இடத்தின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப அவற்றின் தோற்றம் மாறுகிறது.

அடுத்து வரும் நிறைவுப் பகுதியில் இன்னும் விளக்கமாக A1 மற்றும் A2 பால் பற்றியும் காவிகளின் பொய் பிரச்சார நோக்கங்கள் பற்றியும் இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் சந்தைகளில் மாடு விற்க வாங்க தடை மூலம் அவர்கள் நிறைவேற்றத் துடிக்கும் சமூக அவலங்களைப் பற்றி பார்ப்போம்.              

தொடர்வோம்!

- கோ