லினக்ஸ் இன்றைய கணினி உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது. உலகத்தின் பெரும் பணக்காரரான மைக்ரோஸாப்ட் அதிபர் பில் கேட்ஸ்க்குத் தூக்கத்தைப் போக்கும் ஒரே விஷயமாக லினக்ஸ் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கல்விக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆர்வம் உள்ள தனி நபர்கள் ஒன்று சேர்ந்து பல நல்ல கணினி நிரல்கள உருவாக்குகிறார்கள். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு இத்தகைய இலவச, கட்டுப்பாடுகள் இல்லாத, எளிதில் மாற்றியமைக்கக் கூடிய சக்தி வாய்ந்த கணினிச் செயலிகள் மிகவும் இன்றியமையாதவை.

Sujathaஎழுத்தாளர் சுஜாதா நவம்பர் 30, 2003 ஆனந்த விகடனில் "கற்றதும் பெற்றதும்" தொடரில் தமிழில் லினக்ஸ் தயாரிக்கும் அவர் முயற்சி பற்றி எழுதியிருந்தார். அந்தத் திட்டத்தில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து அந்த முயற்சிகளின் காரணமாக இப்பொழுது அவர் முன்னின்று நடத்தும் ழ-கணினி திட்டம் தமிழ் பத்திரிக்கைகளில் கவனம் பெற்று வருகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை என்ன என்றால், தமிழில் லினக்ஸ 'உருவாக்குவதற்குப்' புதிதாக அதிக முயற்சி தேவையில்லை. ஏற்கனவே இந்திய மொழிகளிலேயே முதல் முறையாகத் தமிழில் அதிகாரப்பூர்வமாக லினக்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வெளியிடும் குழுவில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து பங்களிக்கலாம், தவறுகளைச் சுட்டிக் காட்டலாம், கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கலாம். தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று சேர்ந்து 'உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட பல அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. உத்தமம் அமைப்பின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள தமிழ் கணினி ஆர்வம் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றார்கள். இந்த அமைப்பு பல பணிகளில் நேரடியாக ஈடுபட அதிகாரப்பூர்வ பணிக்குழுக்களை அமைத்திருக்கிறது. இந்தப் பணிக்குழுக்கள் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கணினி சொற்கள உருவாக்குவது, எழுத்துக்களின் குறியீடுகளை ஒழுங்குபடுத்துவது, தமிழில் இணைய முகவரிகள் அமைப்பது போன்ற பல காரியங்களை முனைந்து செயல்படுத்தி வருகிறார்கள். உத்தமம் அமைப்பு தமிழில் லினக்ஸின் தேவையை உணர்ந்து அந்த நடவடிக்கைகளை ஒருங்கமைக்கவும், அகராதி, தமிழ் எழுத்துரு, குறீயீடுகள் இவற்றை ஒழுங்கமைக்கும் பிற குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அறிந்து, தமிழ் லினக்ஸ்க்காக ஒரு செயல்திட்டக் குழுவை அமைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே பெரிதும் தமிழ்ப்படுத்தப்பட்ட தமிழ் லினக்ஸ் பலராலும் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் இதை தாங்கள் புதிதாக ஆரம்பிப்பதைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் சுஜாதாவும், அவரது ழ-கணினி திட்டமும் சாதனைகள் செய்வதைப் போன்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டம், அதன் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து நான் ழ-கணினி (அப்பொழுது அதன் பெயர் 'தமிழ் பிசி திட்டம்') குழுவினருக்கும், அவர்கள் வாயிலாக சுஜாதாவிற்கும் எழுதினேன். என்னுடைய கடிதத்தை அவர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். பின்னர் பொறுமையாக என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த அவரது நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பினேன். அதன் முழுவடிவம் இங்கே.

* * *
அன்புள்ள திரு சுஜாதா,

பல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்தக் கடிதம் ஒத்திப்போடப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக என்னுடைய வேலை, குடும்பம் இவற்றை நான் சுட்டினாலும் சடைத்ததுவும்தான் (inertia) உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கடிதத்தின் நோக்கம் தங்களுடய "தமிழ் பிசி" என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது. 2002 டிசம்பர் 08 ஆனந்த விகடன் இதழில், மைக்ரோஸாப்டின் பில் கேட்ஸ் இந்திய வருகையை ஒட்டி, திறந்த ஆணைமூலத்தின் சிறப்பைப் பற்றியும், இந்தியாவில் அதன் தேவை குறித்தும் உங்கள் "கற்றதும் பெற்றதும்" தொடரில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையில் நான் உள்ளிட்ட (வெங்கட் ராமன் என்று நீங்கள் குறித்திருந்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் குழுவில் அந்தப் பெயரில் வேறு யாரும் கிடையாது) எங்கள் குழுவைப் பாராட்டியும் இருந்தீர்கள். அந்த முறை, எங்களுடய தமிழ் கணினி நடவடிக்கைகள் தமிழக வெகுஜன ஊடகத்தில் முதன்முறையாக உங்கள் மூலம் கவனத்துக்கு வந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதனால் எங்களுடன் திறமை மிகுந்த தமிழ இளைஞர்கள் சேருவார்கள் என்று நம்பியிருந்தோம் (இன்றுவரை தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு மிக அதிகம்).

அதே கட்டுரையில் "வெளிவரவிருக்கும்" மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் பயன்பாடுகள் கிடைப்பதைக் குறித்தும் எழுதியிருந்தீர்கள். அந்த நேரத்தில் மாண்ட்ரேக் வெளிவந்திருந்தது. என்னுடைய சில தமிழ் லினக்ஸ் நண்பர்கள் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன்னால் அதன் குறுந்தகட்டை அம்பலம் அலுவலகத்தில் உங்களிடம் கொடுத்ததாக விவாதக் குழுவில் எழுதியிருந்தார்கள்.

பிறகு, கடந்த தமிழிணைய மாநாட்டில் (2003) உங்கள் உரை/கட்டுரையில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதில் நீங்கள் பல காலமாக நாங்கள் விவாதித்து வரும் ஒற்றைத் தகுதரம் பிரச்சனையைத் தொகுத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் திறந்த ஆணைமூலத் திட்டங்களை அதிகம் விரித்துச் சொல்லாமல் போய்விட்டீர்கள். சில வாரங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலம் மின்னிதழில் "தமிழ் பிசி" திட்டத்தைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். காசு கொடுத்துப் படிக்க வேண்டிய இணைய தளமான அம்பலத்தில் தளையறு மென்கலன் (Free Software) திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்னாலும் என்னுடைய திறந்த ஆணைமூல நண்பர்களாலும் இயலவில்லை. எனவே, இன்றுவரை அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

கடந்த வாரம் ஆனந்த விகடனில் மீண்டும் "கற்றதும் பெற்றதும்" தொடரில் திறந்த ஆணைமூலத்தைக் குறித்து எழுதினீர்கள். இந்த முறை உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்குத் தன்னார்வலர்கள் தேவை என்ற அழைப்பை விடுத்திருக்கிறீர்கள். இது குறித்த ஆர்வமுள்ளவர்கள் உங்களுடன் (அல்லது உங்கள் குழுவுடன்) தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்தத் திட்டத்திற்கு ரெட்ஹாட் இந்தியா உதவி செய்கிறது (இது வர்த்தக நிறுவனத்தின் பெயர், இதைச் செந்தொப்பியாக ஆக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. "தமிழ் பிசி" என்ற உங்கள் திட்டத்திற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்).

இந்தக் கடிதத்தை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக நான் கருதுவதைக் குறித்த ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மீண்டும் தொடருகிறேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுத LaTeX பயன்படுத்துவதில் தொடங்கி (இதில் என்னுடைய சில பங்களிப்புகளை பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்) இன்றுவரை தொடர்ந்து வருகிறது. லினக்ஸின் துவக்கத்தை அருகிலிருந்து கவனித்தவன் (என்னுடைய படிப்பு கணினி பற்றிக் கிடையாது) என்ற முறையில் லினக்ஸ், தளையறு மென்கலன், பகிர்தலின் அவசியம் பற்றி விளக்கவும், தமிழ் லினக்ஸ்க்குப் பங்களிக்கவும் "ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக் கொள்கிறது" என்ற தொடரை திண்ணை மின்னிதழில் எழுதினேன். லினக்ஸ் ஆவணப்படுத்தும் திட்டத்தின் மூலமாக "தமிழ் லினக்ஸ் - எப்படி" என்ற விளக்கக் கையேட்டை எழுதித் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். தமிழில் முதன் முதல் துவக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் திட்டமான கேடிஈ திட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களித்திருக்கிறேன். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) - பணிக்குழு-7 (தமிழ் லினக்ஸ்) தலைவராக இருக்கிறேன். கடந்த சான்பிரான்ஸிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் (2002) தமிழ்ப் பள்ளிகளில் லினக்ஸ் மூலம் கணினி கற்பித்தலைப் பற்றிய ஒரு திட்டத்தை மாநாட்டின் முக்கிய உரையாக வழங்கினேன். தமிழ் லினக்ஸ் குறித்த செயல்பாடுகளை அறிவிக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் இணைய தளத்தை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.

Tamil linux

இனி தமிழில் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணை மூல நிரலிகளில் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் பற்றி கொஞ்சம்;

1. கேடிஈ மூலமாக தமிழ் முதல் இந்திய மொழி இடமுகமாக வெளிவந்தது. (சிவக்குமார் சண்முகசுந்தரம், வசீகரன், குழு)
2. முனயத்தில் தமிழ் பயன்பாடுகள் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக வடிக்கப்பட்டது. (சிவராஜ், குழு)
3. தமிழ் க்னோம் திட்டம் இந்திய மொழிகளிலேயே முன்னோடியானது. (தினேஷ் நடராஜா, குழு)
4. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக, முற்றிலும் தமிழாலான இடமுகம் கொண்ட மேசைத்தளத்துடன் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளிவந்தது. (பிரபு ஆனந்த், குழு)
5. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக யுனிக்கோட் உருவேற்றி பாங்கோ மூலம் (சிவராஜ், விக்ரம், குழு)
6. ஓப்பன் ஆபீஸ் அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. (லினக்ஸ், மைக்ரோஸாப்ட் இயக்கு தளங்களுக்கு) (முகுந்தராஜ், குழு)
7. சிக்கலான அறிவியல் ஆவணங்களை வடிக்க தமிழ் லேட்டக்ஸ் நான்கு வருடங்களாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. (வசீகரன்)
8. திறந்த ஆணை மூல இணைய உலாவி மோஸிலா முற்றிலும் தமிழ்ப்படுத்தப்பட்டு லினக்ஸ் தவிர மைக்ரோஸாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பல இயக்கு தளங்களுக்குக் கிடைக்கிறது (முகுந்தராஜ், குழு)
9. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அதிகார்வபூர்வ "எப்படி" ஆவணம் தமிழில். (வெங்கட்ரமணன், குழு)
10. இதைத் தவிர பல எழுத்துரு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் எழுத்துருக்களைத் தளையறு மென்கலன் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல செயலிகளும் பயனுதவிக் கருவிகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
11 இவற்றை எல்லாம் எளிதாக விளக்கும் வகையில் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக Knoppix, Demolinux வெளியீடுகளைத் தமிழ்ப்படுத்தி இலவசமாக செய்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கணினியில் லினக்ஸை நிறுவாமலே இயக்கிப் பார்க்க முடியும்.

(வசீகரன்).

இவற்றை முன்னின்று பல்வேறு குழுக்கள் நடத்தி வருகின்றன. இவற்றுக்கென இணையத்தின் வழி இயங்கும் பல விவாதக் குழுக்கள் இருக்கின்றன. இந்த விவாதக் குழுக்களில் பங்கேற்பது எளிது, தன்னார்வலர்கள் தாமாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் முக்கியமானது யாகூ குரூப் தளத்தின் வழி இயங்கும் tamilinix செய்திக் குழு. செய்திகளை அறிவிக்க tamillinux.org என்ற இணைய தளம் இயங்கி வருகிறது. கருவிகளின் சேமிப்பிற்கு உலகெங்கிலும் இருக்கும் பல தொழில்நுட்பர்கள் பயன்படுத்தும் sourceforge.org இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு பல சிறு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் பலவும் காலம் காலமாக உலகெங்கும் இருக்கும் திறந்த ஆணை மூல நிரலர்கள அடியொற்றி திறந்த முறையில், பெரும்பாண்மை கருத்துகளுக்கு மதிப்பளித்து நடத்தப்படுகின்றன.

இவற்றைப் பற்றியெல்லாம் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இவ்வளவு விரிவாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை. இணையத்தில் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களில் தமிழையும் இவற்றையும் இணைத்து நடத்தப்படும் தேடல்களில் இவை குறித்த தகவல்தான் முன்னணியில் வரும். (உதாரணம்: tamil +linux). இந்தத் திட்டங்கள் எதுவும் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அரசமைப்பிடமோ, கல்விக் கூடங்களிடமோ நிதியுதவி பெற்று நடப்பதில்லை.

---

இனி உங்கள் 'தமிழ் பிசி' திட்டத்தின் தேவை, அதன் நடைமுறைகள் குறித்த சில கேள்விகளுக்குத் தாங்கள் விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழில் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடந்துவரும் தன்னார்வத் திட்டங்களைப் புறக்கணித்து தாங்கள் புதிதாக ஒரு திட்டத்தை முன்னின்று நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

2. உங்களுடைய 2002 டிசம்பர் கற்றதும் பெற்றதும் கட்டுரையிலேயே நீங்கள் இந்தத் திட்டங்கள் பலவும் கிட்டத்தட்ட 60% முடிவடைந்த நிலையில் இருப்பதாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இவற்றை முற்றாக நீங்கள் இப்பொழுது புறந்தள்ளக் காரணம் என்ன?

3. தமிழில் லினக்ஸ், கேடிஈ, மொஸிலா, ஒப்பன் ஆபீஸ் என்று பல ஏற்கனவே (இலவசமாகக்) கிடைத்துக் கொண்டிருக்க இவற்றை நீங்கள் திரும்பச் செய்வதாக அறிவிப்பதன் நோக்கம் என்ன?

4. அப்படி ஏற்கனவே சாதிக்கப்பட்டவற்றின் தரத்தில் தங்களுக்கு அதிருப்தி இருந்தால் எளிதில் அணுகக் கிடைக்கும் அந்தக் குழுக்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் வல்லமைகளை அவர்களுக்கு அளிக்க, அவர்களை வழி நடத்த, முயற்சித்தீர்களா?

tamil linux5. திறந்த ஆணைமூல தயாரிப்பு வழியில் "பிளத்தல்" (forking) என்பது மிகவும் பாவகரமான செயலாகக் கருதப்படும். ஒரு திட்டத்தைப் பிளப்பதற்கு முன் அது சம்பந்தமான குழுக்களில் அதைப் பற்றித் திறந்த அறிவிப்புடன் ஜனநாயக முறையில் கருத்துக் கணிக்கப்படும். கருத்து மாறுபாடுகள் அலசப்பட்டு ஒருமித்த முடிவெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தவிர்க்க முடியாத பட்சத்தில் திட்டம் பிளவுபடும். இரண்டு குழுக்களும் மீண்டும் திறந்த வழியில் செயல்படத் துவங்கும். இது போன்ற திறந்த ஆணைமூலத்து இயக்க விதிகளை நீங்கள் அறிவீர்களா? (மேலதிக விபரங்களுக்கு எரிக் ரேமண்ட்-ன் தி கதீட்ரல் அன்ட் தி பஸார்" புத்தகத்தைப் பார்க்கவும்). உங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அந்தப் பாவத்தைச் செய்வதாக அறிகிறீர்களா?

6. ஒருக்கால் உங்களுக்கு இருக்கும் பிரபலத்தின் அடிப்படையிலும், அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் இவற்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் பணபலத்தின் மூலமும் உங்கள் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கும் பரவிக்கிடைக்கும் பல தன்னார்வலர்கள் தாங்கள் பாடுபட்டுச் சேர்த்தப் பணத்தையும் (அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்லர்; எங்களில் சிலர் மாலை நேரங்களில் வேலை செய்து படிக்கும் மாணவர்கள்), தங்கள் நேரத்தையும் செலவிட்டு முன்னெடுத்துச் சென்ற திட்டங்கள் தீய்ந்து போகுமானால் உங்களுக்கு அதனால் பெருமையா?

7. இந்தத் திட்டங்களை முன்னின்று நடத்த நீங்கள் அரசாங்கத்திடமிருந்தும் கல்விக்கூடங்களிடமிருந்தும் பெற்ற மானியங்கள் வழக்கமாக அரசாங்கத் திட்டங்களைப் போல திறந்த முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி (Peer Review Process) பரிந்துரைக்கப்பட்டவையா?

8. அப்படியென்றால் உங்களுடன் கூட மாற்றுத் திட்டங்களை அரசாங்கத்தின் முன் வைத்தவர்கள் யார் என்பதைக் காட்ட முடியுமா? (ரெட் ஹாட், அம்பலம் டிஷ்நெட் போன்ற தனியார்களின் உதவிகளைப் பற்றிக் கேட்கவில்லை).

9. இந்த வாரம் தமிழ்லினிக்ஸ் யாகூ குழுமத்தில் வெளியான அழைப்பின்படி நீங்கள் விரைவில் கேடிஈ தொடர் மொழியாக்கத்தில் ஈடுபடப்போவதாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கும், தங்கள் மானிய உதவியின் கீழ் சம்பளத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் தகுதி/பங்களிப்பு அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

10. அந்தத் தொடர் மொழியாக்க நிகழ்வில் பங்கு பெற்றவர்களுக்குத் தங்கள் கையொப்பமிட்ட புத்தகங்களைப் பரிசாகத் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பலனை எதிர்பாராமல் பங்களித்து வரும் தன்னார்வலர்களை ஏதாவது ஒரு வகையில் பாராட்ட வேண்டும் என்று முயன்றிருக்கிறீர்களா?

11. மானிய உதவியின் கீழ் வேலை செய்பவர்களின் உதவியுடனும், மொழிபெயர்ப்புக்குப் பாராட்டாக புத்தகங்களைப் பெற்றுக் கொள்பவர்களின் துணயுடனும் இந்தியாவில் (தமிழகத்தில்) தளையறு மென்கலன் கொள்கைகள், ஆணை மூலங்களைப் பகிர்தலின் அவசியம், தற்சார்பின் முக்கியத்துவம் இவற்றை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நினைக்கிறீர்களா?

12. மாறாக இது ரெட் ஹாட் நிறுவனத்தின் முழு நேரப் பணியா? அப்படியென்றால் அழைக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெளிவாக்கப்பட்டிருக்கிறதா?

13. உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்கென தனியான மொழியாக்க அகராதியை உருவாக்கி வருவதாக அறிகிறோம். ஏற்கனவே, இணையத்தின் வழி (உத்தமம்) பல்வேறு அறிஞர்கள உள்ளடக்கிய மொழியாக்கக் குழுவின் பரிந்துரைகளை விட்டு விலகக் காரணம் என்ன? (இந்தத் தொகுப்பு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஈழத் அறிஞர்களின் தொகுப்பு இவற்றின் அடிப்படையிலானது). அப்படி அவற்றில் பெரும் பிழைகள் இருப்பதாகக் கருதினால் அந்தக் குழுக்களில் இடம் பெற்று அவர்கள வழி நடத்த முயன்றீர்களா? உத்தமத்தின் குழுக்களில் ஜனநாயக முறையில் பங்கேற்க முடியும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்தானே?

இது குறித்த என்னுடைய (எங்களில் பலருடைய) சந்தேகங்களுக்கு தாங்கள் தனிப்பட்ட முறையிலோ, பொதுவிலோ விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் தனிப்பட்ட முகவரி எனக்குத் தெரியாது என்பதால் தமிழ் பிசியின் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன். இதைத் தாங்களோ, அல்லது தமிழ் பிசி திட்ட நண்பர்களோ தங்கள் பார்வைக்குக் கிடைத்தது என்று உறுதிப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். இல்லாத பட்சத்தில் இது தங்களை அடைய என்னுடைய சென்னை நண்பர்கள் மூலமாக முயற்சி செய்வேன்.

தங்கள் பதிலை எதிர்பார்த்து.
அன்புடன்
வெங்கட்
(http://www.tamillinux.org/venkat/myblog)

----
Dr. V. Venkataramanan
Toronto, Canada
venkat at rogers.com
http://www.tamillinux.org
------------ ---- --------------------
தொடர்பான ஆனந்தவிகடன் பக்கங்கள்

http://www.vikatan.com/av/2002/dec/08122002/av0909.shtml
http://www.vikatan.com/av/2003/nov/30112003/av0907.shtml

இதற்கு அவர் நேரடியாகப் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அவருடைய குழுவினர் இவற்றில் சிலவற்றுக்கு அவர்கள் இணையப் பக்கங்கள் மூலம் விளக்கங்கள் தந்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானவை. அவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

(இந்த விஷயத்தில் மேலதிகத் தகவல்களையும், விவாதங்களையும் http://www.tamillinux.org/venkat/mylog/ என்ற என்னுடைய வலைப்பதிவில் காணலாம்.)

- வெங்கட்ரமணன்

(நன்றி: பாமரன் மற்றும் திண்ணை)