இனப் படுகொலையை நடத்தி முடித்த ராஜபக்சே, மீண்டும் இலங்கையின் அதிபராக, சிங்களர்களால் சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். பெருமளவு தமிழர்கள் ராஜபக்சேவுக்கு பாடம் புகட்டுவதற்காகவே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து ராஜபக்சேவுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் அளித்த வாக்கு, ராஜபக்சேவுக்கு காட்டிய எதிர்ப்பே தவிர, பொன் சேகாவுக்கு ஆதரவானவையாகக் கருதிட முடியாது.

தமிழர்களின் இந்த நியாயமான கோபத்தை, அங்கீகரிக்காமல் ராஜபக்சேயின் வெற்றியை இந்தியாவின் ஆளும் வர்க்கமும், பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். பார்ப்பன நாளேடான ‘இந்து’, ராஜபக்சே முதிர்ந்த அரசியல்வாதி என்று புகழ்மாலை சூட்டி, தலையங்கம் தீட்டுகிறது. ராணுவ தளபதி திடீரென்று ஜனநாயகத் தேர்தல் களத்துக்கு வரலாமா என்று கேள்வி எழுப்புகிறது. ராஜபக்சே, கடந்த காலங்களில் நடத்தியது ஜனநாயக ஆட்சியா, ராணுவ ஆட்சியா என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.

ராஜபக்சே மீண்டும் அதிபராகிவிட்டதாலேயே அவர், இனப்படுகொலைக் குற்றத்திலிருந்து தப்பித்து விட முடியாது. சர்வதேச சமூகம் தனது மவுனத்தைக் கலைத்து, உண்மைகளைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இரண்டு செய்திகளை குறிப்பிட விரும்புகிறோம்.

இத்தாலி நாட்டின் மிலன் நகரை மய்யமாகக் கொண்டு செயல்படும் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’, அயர்லாந்து தலைநகர் டப்ளினில், கடந்த ஜன. 14, 15 தேதிகளில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தியது. இறுதிகட்டமாக, தமிழர் பகுதியில் முள்ளி வாய்க்கால், வட்டு வாசல் பகுதியிலிருந்து தப்பி வந்தவர்கள், நேரடியாக ஆணையத்தின் முன் சாட்சியமளித்துள்ளார்கள். போர் நடைபெற்ற பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மருத்துவமனை மீது நடந்த தாக்குதல்கள் எல்லாவற்றையும் ஆணையம் பரிசீலித்தது.

ராணுவப் பிடியில் இருந்த தமிழ் இளைஞர்களை, நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி, ராணுவம் சுட்டுக் கொன்ற கொடூரமான படுகொலைகளை, இலண்டனிலிருந்து ஒளி பரப்பாகும் ‘சேனல்-4’ தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது, அவை போலியான படங்கள் என்று ராஜபக்சே ஆட்சி மறுத்தது. ஆனால், அவை உண்மையான படங்கள் தான் என்று அய்.நா.வில், சட்டப்புறம்பான செயல்பாடுகளைப் பதிவு செய்யும் பிரிவு தலைவர் பிலிப் ஆல்ஸ்டன் அந்தப் படங்களை உரிய ஆய்வுக்கு உட்படுத்தி, அறிக்கை அளித்து விட்டார். உரிய சாட்சிகள், ஆவணங்களோடு தீர்ப்பாயம், இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் மீது மேலும், புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று, தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளதோடு, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பன்னாட்டு சமூகமே, குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்துமே காரணம் என்று கூறியுள்ளது.

இத் தீர்ப்பாயம், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதாகும். 1967 முதல் இத்தகைய விசாரணைகளை நடத்தும் இந்த அமைப்பு, முதலில் ப்ரஸ்ஸல்ஸ் தீர்ப்பாயம் என்று அழைக்கப் பட்டது. வியட்நாம் மக்களுக்கு எதிராக, அமெரிக்க படைகள் இழைத்த மனித உரிமை மீறல்களை, விசாரணை நடத்தி, முதன்முதலில் உறுதி செய்த பெருமை, இந்த அமைப்புக்கு உண்டு. அதே அமைப்புதான் ராஜபக்சேயை இப்போது குற்றவாளி என்று முதன்முதலாக கூண்டில் ஏற்றிருக்கிறது.

2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 34 பேர். இதில் 3 பேர் சிங்களர்கள். ஒருவர் முஸ்லீம். 30 பேர் தமிழர்கள். இது தவிர ஆஸ்திரியா (1), ஆஸ்திரேலியா (3), கனடா (3), டென்மார்க் (4), பிரான்சு (12), ஜெர்மனி (4), இந்தியா (5), மலேசியா (1), நெதர்லாந்து (2), நேபாளம் (2), சுவிட்சர்லாந்து (16), லண்டன் (10), அமெரிக்கா (2), நாடுகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். (அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. வெளியேறிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை) ‘சண்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்த விக்ரமசிங்க (இவர் இலங்கை அரசால் தான் கொல்லப்படலாம் என்று முன்கூட்டியே மரண சாசனமாக எழுதி வைத்தவர்) கொல்லப்பட்டு, பல மாதங்களாகியும் அது தொடர்பாக எந்த ஒரு விசாரணையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.

இதை பல்வேறு ஊடக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியுள்ளன. இலங்கை அரசுக்கு எதிராக எழுதிய சிங்கள பத்திரிகையாளர்கள் 11 பேர், சாட்சியின்றி, வெள்ளை வாகனத்தில் தடுத்து படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சி, இந்தியா உட்பட, பல வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வெளிநாட்டுத் துறை, அந் நாட்டின் நாடாளுமன்றத்தில், 2009 சனவரியி லிருந்து மே மாதம் வரை 120 நாட்களில் ஈழத்தில் நடந்த போர்க் குற்றங்களை விரிவாக விளக்கி, அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. பாதுகாப்பான பகுதி என்று சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் உயிர்ப் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்தவர்கள் மீதே 55 முறை குண்டுகளை வீசி, 4027 தமிழர்களை படுகொலை செய்ததையும், 5074 தமிழர்கள் படுகாயமடைந்ததையும் மருத்துவமனைகளிலேயே 40 முறை குண்டுவீசித் தாக்குதல் நடத்தி 258 நோயாளிகளை படுகொலை செய்து 2807 நோயாளிகளை படுகாயப்படுத்தியதையும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த 1500 தமிழர்களை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கி யதையும், ஆக 191 தாக்குதல் சம்பவங்களில் 13,373 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 13,675 தமிழர்கள் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை விரிவாக ஆதாரத்துடன் முன் வைத்துள்ளது அமெரிக்க வெளிநாட்டுத் துறையின் அறிக்கை.

இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபோது அளித்த பேட்டியில், ராஜபக்சேயின் இனப் படுகொலைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இலங்கையின் குடிமகனாக தாம் இருப்பதற்கு வெட்கப்படுவதாகக் கூறியுள்ளார். ராஜபக்சேயுடன் இன படுகொலையில் கைகோர்த்து நின்ற முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இப்போது, ராஜபக்சே, போர்க்குற்றங்களை ‘அப்ரூவராகி’ப் பேசுகிறார்.

Pin It