இதற்கு மேல் விவசாயிகள் எப்படி தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க முடியும் என்று தெரியவில்லை. பிச்சை எடுத்து, மொட்டை அடித்து, மீசையை எடுத்து, கடைசியில் தங்களிடம் மிச்சமிருந்த மானத்தையும் டெல்லியில் நாட்டின் பிரதமர் அலுவலக வாசலில் விட்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய தன்மானத்தையும், சுயமரியாதையும் இழக்கத் துணிய மாட்டான். அதிலும் நிலத்தோடு பிணைக்கப்பட்ட விவசாயிகள், தங்களுடைய உயிருக்கு நிகராக மானத்தைக் கருதுபவர்கள். அதனால் தான் இந்தியாவில் மற்ற துறை சார்ந்த தொழிலாளர்களின் தற்கொலையைக் காட்டிலும், விவசாயிகளின் தற்கொலை என்பது மிக அதிகமாக உள்ளது. எந்த விவசாயியும் வாங்கிய கடனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வாங்குவது கிடையாது. விவசாயம் என்பது நிகழ்தகவு போன்றது. எப்படி வேண்டும் என்றாலும் நிலை மாறலாம், அனைத்திற்கும் வாய்ப்புள்ளது.

farmers protest at delhi

இந்தியாவைப் பொருத்தவரை கால நிலையும், விவசாயிகளை ஒரு மனிதப் பிறவிகளாகவே கருதாத ஆட்சியாளர்களும் அவர்களுக்கு எப்போதுமே எதிரிகளாகவே உள்ளார்கள். இரண்டுமே அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்தே வந்திருக்கின்றன. நல்லபடியான லாபகரமான விவசாயம் என்பதெல்லாம் பெரும்பாலும் அவர்களுக்குத் தங்கள் வாழ்வில் எப்போதாவது நடக்கும் எதிர்பாரத நிகழ்வுதான். பெரும்பாலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் நஷ்டத்தில் இருந்து, பெரும் நஷ்டத்தில்தான் விழுகின்றார்கள். இதனால் தான் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், வட்டி செலுத்த முடியாமல் வங்கியாளர்களின் அருவருப்பு நிறைந்த பேச்சுக்குப் பயந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்குக் கயிறுகளுக்குள் முடித்துக் கொள்கின்றார்கள்.

 புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட பின் இதுவரை இந்தியாவில் 3 லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள். மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை என்பது காங்கிரசு மற்றும் பிஜேபி ஆட்சியில் நடந்தவைதான். ஆனால் இதற்கான எதிர்வினையாக அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், தம் பங்கிற்கு இன்னும் இன்னும் கூடுதலான விவசாயிகளைத் தங்களுடைய நாசகார பொருளாதாரக் கொள்கைகளால் கொன்று போட்டதுதான். விவசாயிகளை எப்படியும் விவசாயத்தில் இருந்து விரட்ட வேண்டும், நகரங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் ஆளும்வர்க்க அயோக்கியர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது இருக்கின்றது. அவர்கள் திட்டப்படிதான் இன்றுவரை அனைத்தும் நடந்து வருகின்றது.

இந்தியாவின் கிராமபுற மக்கள் தொகை என்பது இன்று பாதியாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடமும், தொழில் நிறுவனங்களிடம் வந்த விலைக்கு விற்றுவிட்டு நகர்ப்புறங்களில் கூலித்தொழிலாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். ஆனால் உலக பெருந்தொழிற் நிறுவனங்களின் அடியாட்களான இந்திய ஆளும் வர்க்க கைக்கூலிகள் இன்னும் பெரிய அளவில் விவசாயிகளின் அழித்தொழிப்பை நிகழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள்.

பல லட்சம் கோடிகள் வரிச்சலுகையை பெருமுதலாளிகளுக்கு எந்தவித மனவருத்தமும் இன்று மகிழ்ச்சியோடு வாரி வழங்கியும், வங்கிகளில் இலட்சக்கணக்கான கோடிகள் கடன் பாக்கியைக் கட்டாமல் இந்திய மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்களுடன் சிரித்துப் பேசி கைகுலுக்கி, அவர்களுக்கு மேலும் கடனை வாரி வழங்கும் அயோக்கியர்கள் இன்று விவசாயிகளின் நிர்வாணக் கோலத்தைப் பார்த்த பின்பும், எந்தவித குற்ற உணர்வுக்கும் ஆட்படாமல் இறுமாப்போடு விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பில்லை என்று சொல்கின்றார்கள். அதானியையும். அம்பானியையும், டாடவையும், மிட்டலையும் நக்கிப் பிழைக்கும் விலங்குகளுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்கவே நேரம் ஒதுக்க முடியவில்லை. டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பற்றி தமிழகத்தில் உள்ள பார்ப்பனக் கூட்டம் தொடர்ந்து விஷமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றார்கள். அவர்களையும் அவர்களது போராட்டத்தையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி தாங்கள் மலத்தைத் தின்று உயிர்வாழும் உயிரினங்கள் என்பதைக் காட்டி வருகின்றார்கள். மனிதாபிமானம், சகமனிதன் மீதான பரிவு என்பதெல்லாம் காலம் காலமாக உழைக்காமல் தொந்திவளர்க்கும் பார்ப்பன கூட்டத்திடமும், அவனை அண்டிப்பிழைக்கும் மானங்கெட்ட சூடுசுரணையற்ற பிறவிகளிடமும் நாம் எதிர்ப்பார்க்க முடியாது என்பதைத்தான் இது காட்டுகின்றது.

 இந்திய மக்கள் மிக மோசமான கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற ஒரு கொலைவெறி பிடித்த கொடுங்கோலனைத் தனது பிரதமராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கின்றார்கள். விவசாயிகள் மட்டும் அல்லாமல், இந்தியாவில் யார் அழுதாலும், எவ்வளவு நேரம் அழுதாலும் அழவிட்டு வேடிக்கை பார்த்து ரசிக்கும் ஒரு மனநோயாளியாக இன்று மோடி இந்திய மக்களால் உணரப்பட்டிருகின்றார். இந்தியாவின் ஒவ்வொரு கைப்பிடி மண்ணையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் தீயாக தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருக்கும் மோடி, இடை இடையே மக்களை ஏமாற்ற ஆடம்பரமான கோட்டு சூட்டுகள், அலங்காரங்கள், டிஜிட்டல் கதை அளப்புகள், வெற்றுச் சவடால்கள், செல்பி புகைப்படங்கள் என தன் இருத்தலை மலிவான உத்திகளைப் பயன்படுத்தி பூர்த்திசெய்து வருகின்றார். இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்திலும் தோற்று ஒரு கோழையைப்போல ஓடி ஒளிந்து, பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் திராணியற்றும், தனது கேவலமான தோல்வியை மூடி மறைக்க ‘மான் கீ பாத்’ என்று வானொலியில் உளறிக்கொண்டும் வாழ்ந்துகொண்டிருக்கும் மோடி, விவசாயிகளை சந்திக்க மறுப்பதன் நோக்கம் அவரிடம் அவர்களுக்குக் கொடுக்க எதுவும் இல்லை என்பதுதான்.

modi 280‘இந்தியாவையே புரட்டிப் போட்டு அதிசயம் நிகழ்த்திவிடுவேன்’ என்று தனது புஜபல பராக்கிரமத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த மோடி அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை தோல்வி அடையச் செய்திருக்கின்றார். அதனால்தான் அவர் நேரடியாக விவசாயிகளை சந்திக்க மறுக்கின்றார். ஆனால் அய்யாக்கண்ணு இந்தக் கோழையை சந்தித்துக் கேள்வி கேட்காமல் விடமாட்டேன் என அவரை துரத்திக்கொண்டே இருக்கின்றார். மோடியை சந்திப்பதால் நிச்சயம் விவசாயிகளுக்குப் பத்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் ஏற்படப் போவதில்லை. மோடி ஒரு டம்மி பீஷ் என்பதும், அவரால் சுயமாக முடிவெடுக்க முடியாது என்பதும் தான் உண்மை. விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதெல்லாம் உலகவங்கியின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் வழிமுறைகள் என்பதால் நிச்சயம் மோடி விவசாயிகளின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றப் போவது கிடையாது.

 அவரால் இப்போதைக்கு முடிந்த விஷயம் என்னவென்றால், நடிகைகளையும், சாமியார்களையும் சந்திக்க நேரம் ஒதுக்குவது, ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தூண்டிவிட்டு, தலித்துகளின் மீதும் சிறுபான்மையின மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது, தனக்குப் பிடிக்காத தனது கொள்கைகளை மயிரளவுக்குக் கூட மதிக்காத மாநிலத்தின் பொருளாதார நிலையை முடக்குவது, ஆட்சியைக் கலைக்க வருமானவரி சோதனைகளை நடத்தி மிரட்டிப் பணிய வைப்பது என சின்ன சின்ன சித்துவேலைகளைச் செய்வதுதான் இப்போதைக்கு அவரால் முடியும். விவசாயம் பற்றியோ, இல்லை விவசாயிகளைப் பற்றியோ அவருக்கு ஒன்றும் தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் புராணப் புளுகு பிளாஸ்டிக் சர்ஜரி, ஆகாய விமான தொழில்நுட்பம் போன்றவை மட்டுமே. இன்று அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் சொகுசு வாழ்க்கையை அவரின் கைக்குக் கொண்டுவந்து கொடுத்தது அதானியும், அம்பானியுமே ஒழிய சாமானிய விவசாயிகள் கிடையாது. நாய்கள் எப்போதும் எலும்புத்துண்டுகள் போடும் எஜமானனுக்குத் தான் விசுவாசமாக இருக்கும் என்பதுதான் உலக நடப்பு. இதை இனிமேலாவது விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

 பிர்னாம் காடு டன்சினான் மலையை நோக்கி நகர்ந்து வரும் வரை மேக்பெத்தை யாரும் வெல்ல முடியாது என ஷேக்ஸ்பியரின் மேக்பெத் கதையில் வரும் ஆவிகள் மேக்பெத்திடம் உறுதியளிக்கும். ஆனால் கதையின் முடிவில் மால்கம்மின் படைவீரர்கள் மரங்களின் கிளைகளை வெட்டி, அதைக் கைகளில் பிடித்துக்கொண்டு டன்சினான் கோட்டையை நோக்கி நடந்து வருவார்கள். அதைப் பார்த்த மேக்பெத் பிர்னாம் காடுதான் நகர்ந்து வருவதாக நினைத்து, தனது இறுதி முடிவு நெருங்கிவிட்டதை உணர்வான். அப்படித்தான் இன்று விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் இந்தியா முழுவதும் விவசாயிகளின் நிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது. பெரும் முதலாளிகள் கொடுத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நம்பி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த மோடியை நோக்கி ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக, கோடி கோடியாக விவசாயிகள் நிர்வாண கோலத்தில் வருவது போன்று மோடிக்குத் தோன்றுகின்றது. அதை மோடி தன்னளவில் உணரத் தொடங்கிவிட்டார், தனக்கும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ்க்குமான அழிவு காலம் நீண்ட தொலைவில் இல்லை என்பதை. டன்சினான் கோட்டையை நோக்கி பிர்னாம் காடு நகர்ந்து வந்ததைப் போன்று டெல்லி கோட்டையை நோக்கி சாரைசாரையாய் விவசாயிகள் அம்மணமாய் வருகின்றார்கள். கதையில் மேக்பெத்திற்கு இறுதியில் என்ன ஆனது என்று நாம் மோடியிடமே பிறகு கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

- செ.கார்கி