எங்கள் பகுதியில் ஒரு ஊர்ப்பொதுக்கோவில் உள்ளது. ஒவ்வொரு திருவிழாவின் போதும் எங்கள் மக்கள் வெள்ளைத் துணியுடுத்தி, பட்டினி விரதம் இருந்து திருவிழா சமயத்தில் ஊர்முழுக்க அரிசியை மடியில் வாங்கிப்பெற்று, எங்கள் கோவிலில் இருந்து வரிசையாகச் சென்று, நாயக்கர்களின் பகுதியில் இருக்கும் மற்றொரு பெரிய கோவிலில் படையலிட்டு, திரும்புவது வழக்கம். நாயக்கர்களின் கோவில் என்றால் அது கோவிலல்ல, அதன் வாசல் வரைக்கும்தான் எங்கள் மக்களுக்கு அனுமதி. இருந்தும், காலம்காலமாக திருவிழாக்களில் மேளதாளங்களுடன் எங்கள் மக்கள் அந்தக் கோவிலுக்குச் சென்று படையிலிட்டு வந்தபடிதான் இருந்தார்கள்.

காலங்களின் உருண்டோடலில், எங்கள் பகுதி முழுக்க முழுக்க நகரமாகவும், எங்கள் மக்களுக்கு கொஞ்சமே, கொஞ்சம் கல்வியறிவும் வந்தபிறகு, வாசலில் நின்றுதான் கும்பிட வேண்டுமா? என நாயக்கர்கள் பெரிய கோவிலில் வைத்திருந்த தற்காலிக தடுப்புச் சுவரைத் தாண்டி மக்கள் கோவிலுக்குள்ளும் சென்று தரிசனம் பெற்று வந்தனர். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இப்படியாகத் தொடர்ந்தது. எங்கள் சின்னக் கோவிலிலும் அந்த ஆதிக்கசாதி பெரிய கோவிலிலும் ஒரே சமயத்தில்தான் திருவிழா நடக்கும், எங்கள் ஊர் மக்களுக்கும், நாயக்கர் இன மக்களுக்கும், திருவிழா சமயத்து புறத்தோற்றங்களில் பெரியதாக எந்த வித்தியாசமும் இராது. மேலும் எங்கள் பகுதி முழுக்க நகரமாக மாறிவிட்டதால், எங்கள் மக்களும் நகரத்து சாயல்களை தருவித்துக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற சின்னச்சின்ன காரணங்களால் நாயக்கர்களுக்கு இவையெல்லாம் தெரியாமல் இருந்து வந்தது.

இருந்தும் சாதியவெறிதான் இரத்தத்தில் ஊறிய சமாச்சாரம் ஆகிற்றே? எப்படியோ கண்டுகொண்டார்கள். எங்கள் ஊர் கோவில் நிர்வாகிகளை அழைத்து, கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக வந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். எவனும்/எவளும் இங்கே வந்து படையிலிடத் தேவையில்லை என்றார்கள். மீறினால் வன்முறை என மிரட்டவும் செய்தார்கள். அவர்களுக்கு கட்டுப்பட்டு அந்த பாரம்பரிய வழக்கம் அந்த ஆண்டு முதல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இப்போதெல்லாம் நாயக்கர்களின் கோவிலுக்குச் செல்லாமல் எங்கள் ஊர் கோவிலிலேயே அந்தப் படையல் படைக்கப்படுகிறது. இருந்தும் திருவிழா சமயங்களின் போது மட்டும்தான் எங்கள் மக்கள் அந்தக் கோவிலுக்குச் செல்வதில்லை. மற்ற எல்லா விசேசங்களுக்கும் அந்தக் கோவிலுக்கும், கோவை சுற்றுவட்டாரத்திலிருக்கும் மற்ற எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தபடிதான் இருக்கிறார்கள். எந்த நாயக்கனுக்கும் தெரியாது இவர்கள் இந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் என்று. நகர வாழ்வு எங்களவர்களின் புறத்தோற்றத்திலிருந்து (மட்டும்) சாதியத்தை முழுமையாக சிதைத்துவிட்டது.

தொட்டியப்பட்டி வன்முறைச் சம்பவமும், அதையொட்டிய பேஸ்புக் விவாதங்களும், கிராமத்தில் மட்டும்தான் சாதியக்கட்டுமானங்கள் இறுகிக் கிடக்கின்றன என்பது போலான வாதங்களும், எங்கள் ஊர்த்திருவிழாவில் நாங்கள் எதிர்த்து நிற்கமுடியாத வரலாற்றை நினைவுக்கு கொண்டு வந்தது. இதில் கருத்தில் கொள்ளவேண்டியது எதுவெனில், கிராமம் போல நகரங்களில் சாதியக்கட்டுமானம் இறுகிக் கிடக்கவில்லை என்கிற கூற்று மேலோட்டமானது என்பதுதான். உண்மையில் நகரங்களில் எதிர்ப்புணர்வுதான் அறவே இல்லை. அதற்கடிப்படை காரணமாக பொருளீட்டலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு நகரும் நகரத்து வாழ்வே காரணமாக இருக்கலாம். ஆனால், ஆதிக்க சாதியினரின் சாதியவெறி என்பது காற்றுபோல எல்லா இடங்களிலும் பரவித்தான் கிடக்கின்றது. அதை எதிர்க்கிறோமா? அடிபணிகிறோமா? என்பதுதான் இங்கே தலையாய கேள்வி.

தொட்டியப்பட்டி மக்கள் ஆதிக்கச்சாதி வெறியை எதிர்த்து, சமூகநீதியை நிலைநாட்ட முற்போக்காளர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். நகரங்கள் சாதியத்தையும் தாண்டி அடுத்தவேளை உணவுக்கு, அடுத்தநாள் உடைக்கு, மாதச் சம்பளத்திற்கு அலையும் மக்களுக்கு உரித்தானதாக ஆகிவிட்டது. நகரங்களிலும் சாதியம் இருக்கிறது. ஆனால், கிராமங்களில்தான் அது முழுமையாக வாழ்கிறது. ஆதிக்கசாதி வெறிக்கெதிரான எதிர்ப்புணர்வை கிராமங்களிலிலேயே முழுமூச்சாக முழங்குவோம்.

மூலையில் வாழ்கிற சாதியத்தை பிற்பாடு கொல்லுவோம், முச்சந்தியில் இருக்கிற சாதியத்தை முதலில் கொல்லுவோம்.

- கர்ணாசக்தி