(நண்பரும் தோழருமான சந்துவை நினைவு கூர்வது என்ற தலைப்பில் Kavita Krishnan (CPI -ML – Liberation) கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் எழுதியது.)

சந்து என்று அன்புடன் அழைக்கப்பட்ட சந்திரசேகரை கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் நம்மிடமிருந்து பிரித்தது 31 மார்ச் 1997 அன்று. இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துபோய்விட்டன.

comrade chandrasekarவிடுதியிலிருந்த என்னை, எனது கட்சி அலுவலகத்திலிருந்து அழைத்து ''சந்து கொல்லப்பட்டார்'’ என்று சொன்னபோது, என்னால் நம்பமுடியவில்லை என்பது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. சந்திரசேகரும், மற்றொரு இளைஞர்கள் தலைவரான ஷியாம் நாராயணன் யாதவ்வும், தெருமுனைக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர். அவசர நிலை காலத்தின்போது, ஜனநாயகத்திற்காகப் போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் பெயரில் அமைந்த இடத்தில்தான் அந்தப் படுகொலை நடந்தது. ஒரு ரிக்ஷா தொழிலாளி பூட்டலி மியான் என்பவரும் பறந்த குண்டுகளில் ஒன்றால் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவர்கள் RJD MPயும் கொள்ளைக் கூட்டத் தலைவருமான முகமது சகாபுதீனின் அடியாட்கள்.

1997ன் வசந்த காலத்தின்போது, JNU வளாகத்தின் மரங்கள் பூத்துக்குலுங்கிய நாள் ஒன்றில் சந்து எங்களிடமிருந்து விடைபெற்றார். அவர் இரண்டுமுறை JNU மாணவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். (அவர் இரண்டாவது முறை தலைவராக இருந்தபோது நான் இணை செயலாளராக இருந்தேன்.) அதன்பின் அவர் தனது சொந்த ஊரான சிவானுக்கு சிபிஐஎம்எல் கட்சியின் முழுநேர ஊழியராகத் திரும்புவது என்று முடிவு செய்தார். முழு நேர ஊழியராக மாறுவது என்ற முடிவை அவர் வெகு காலத்துக்கு முன்னரேயே எடுத்திருந்தார். சம்பளம் வாங்கும் ஒரு வேலையில் சேர்வதற்கு மாறாக, ஒரு செயல்வீரராக மாறுவது ஒன்றும் தியாகமில்லை என்று சந்து கருதினார் என்பது அவரின் நண்பர்களுக்குத் தெரியும். செயல்வீரர் ஆவதைத்தான் அவர் விரும்பினார். தான் சமுதாயத்திற்குக் கடன் பட்டிருப்பதாக அவர் நினைத்தார்.

சிவானுக்குத் திரும்புவது என்பது மிகவும் கடினமான முடிவு. டெல்லியிலோ, அல்லது பாட்னாவிலோ அவருக்கு வேலை தருவதற்குக் கட்சி தயாராக இருந்தது. ஆனால், சந்து சிவானைத் தேர்ந்தெடுத்தார். சிவானில் உள்ள சிபிஐ எம்எல் தோழர்களைக் கொன்று குவித்து, சகாபுதீன் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்தான் என்று சந்துவுக்குத் தெரியும்.சிபிஐஎம்எல் தலைமை தாங்கி நடத்திய கிராமப்புர வறியவர்களின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் மாபெரும் பாய்ச்சல்களின் முன்னேறிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு சகாபுதின் ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்தபோதும், கட்சியின் செயல்வீரர்களை, ஆதரவாளர்களை அச்சுறுத்த அவன் கடும் முயற்சி எடுத்தபோதும் எதிர்ப்புப் போராட்டம் முன்னேறிக்கொண்டிருந்தது. சிவான் தோழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று சந்து நினைத்தார். அவர்களின் போராட்டத்தின் ஓர் பகுதியாக இருப்பது தான் பட்ட கடன் என்று அவர் நினைத்தார். அவர் தன் அன்னைக்கு மிக நெருக்கமானவர். சிபிஐ எம்எல் கட்சியின் முழு நேர ஊழியர் ஆவது என்ற சந்துவின் முடிவை அவரின் தாய் ஆதரித்தார். ஆனாலும், சிவானில் சந்து இருந்தால் தன் பிள்ளையை அடிக்கடி பார்க்க முடியும் என்றாலும், ‘சிவானைத் தவிர வேறு எங்காவது வேலை செய்’ என்று அவர் சந்துவிடம் சொன்னார். சிவானில் மகனின் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று அந்த தாய் பயந்தார். சந்து திறந்த கண்களுடன்தான் சிவானில் நுழைந்தார். தனக்காகக் காத்திருந்த ஆபத்துகளை அறிந்துதான் அவர் அங்கு சென்றார். ஜேஎன்யூ மாணவர் விடுதியில், அவர் அறையில் நாங்கள் அவரை வழியனுப்ப கூடியிருந்தோம். ''பத்திரமாக இருங்கள்'' என்று நான் அவரிடம் சொன்னது நினைவில் இருக்கிறது. எனக்கு தைரியம் ஊட்டும் வகையில் அணைத்துக்கொண்டு அவர் சொன்னார், ''கவலைப் படாதே.. நான் உன்னை சீக்கிரம் பார்ப்பேன்.. ஏப்ரலில் டெல்லியில் நடக்கவிருக்கும் பேரணியில் சந்திப்பேன்''.

காத்திருந்த அபாயங்களுக்கு அப்பால், சிவானுக்குத் திரும்புவது வேறு பல காரணங்களினாலும் கடினமான முடிவுதான். சந்துவுக்கு நூலகங்கள் பிடிக்கும். புத்தகங்கள் பிடிக்கும். திரைப்பட விழாக்கள் பிடிக்கும். டெல்லியின் நகர வாழ்க்கையில் கிடைக்கும் இந்த அம்சங்களை விட்டு விலகுவது மிகவும் சிரமம் என்று அவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார்.

சந்துவின் நண்பர்கள் பலருக்கும் அவரிடமிருந்து கடிதங்கள் வந்தன. அவருக்கே உரிய அழகான கையெழுத்தினால் எழுதப்பட்ட கடிதங்கள். அவர் இ-மெயில் பயன்படுத்தியிருப்பாரா என்று நான் யோசிப்பதுண்டு. அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்பு, சிவானிலிருந்து வந்து ஜேஎன்யூவில் படித்த ஒரு மாணவருக்கு, சிவானின் அரசியல் வீரியம் பற்றி விளக்கிக் கடிதம் எழுதியிருந்தார். இரவு 9 மணிக்கு துடிப்புடன் விழிக்கும் ஜேஎன்யூவிற்கு மாறாக, இரவு 9 மணிக்குத் தூங்கிவிடும் சிவானில் இருப்பது வினோதமாக இருக்கிறது என்று எழுதியிருந்தார்.

துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும் ஒரு இராணுவ வீரன் அல்லது மக்களைக் காக்கும் கதாநாயகன் ஒருவன் என்பதாக நாம் தைரியமிக்க மனிதனைக் கற்பனை செய்துகொள்வது வழக்கம். ஆனால், சந்துவின் வகைப்பட்ட துணிச்சல்காரர்கள் வேறு வகைப்பட்டவர்கள். சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை பற்றிய உணர்வுடன், அபாயமும் வறுமையும் நிறைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த அந்த இளைஞன் மிகத் துணிச்சலானவன். ஆர்ஜேடி அரசின் பாதுகாப்புடன், ரண்வீர் சேனா தலித்துகளைப் படுகொலை செய்வது பற்றி, சிவானின் அறிவிக்கப்படாத தடை உத்தரவை மீறி, அந்த சிறு நகரத்தின் தெருவொன்றில், தனக்கான ஆயுதமாக, கையில் வெறும் மைக் மட்டும் ஏந்தி நின்ற அந்த இளைஞனின் துணிச்சலை என்னவென்று சொல்வது?

சந்துவின் பயணம்

ஏழ்மையான கொய்ரி (ஒரு விவசாய சாதி) குடும்பமொன்றில் சந்து பிறந்தார். அவரின் அப்பா ராணுவ வீரர். சந்து சிறாராக இருந்தபோதே அவர் தந்தை இறந்துபோனார். டில்லையாவில் உள்ள சைனிக் பள்ளியில் படித்தார். அதன் பின் அவருக்கு ராணுவப் பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால், வெகு சீக்கிரம் அங்கிருந்து வெளியேறினார். ராணுவப் பள்ளியிலிருந்து ஏன் வெளியேறினார் என்பது குறித்து விளக்கி 1983ல் தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். ''தேசிய ராணுவப் பள்ளியிலிருந்து நான் விலகியதால் நீங்கள் கவலை அடைந்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். வேறு எங்கு படித்தாலும் நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால், நான் டியூஷன் எடுக்கிறேன். அதனைக் கொண்டு என் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டிக்கொள்வேன்'', என்று எழுதிய சந்து, ''எந்தத் தனியொரு நபரும் கெட்டவர் அல்ல. மாறாக, பொருளாதாரக் கட்டமைப்பின் மேல் அமர்ந்திருக்கின்ற சமூக அமைப்பும், உணர்வும்தான் கெட்டவை. அம்மா.. உங்களுக்கும் மானுட உணர்விருக்கும் என்றால், நீங்களும் என்னைப் போலவே சிந்திப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்... இந்த சமூகக் கட்டமைப்பு மீது நான் பகையுணர்வு கொண்டுள்ளேன். அதன் சித்திரவதைகளை நான் அனுபவித்திருக்கிறேன். என் தாயாகிய நீங்களும் அதன் சித்திரவதையை அனுபவிப்பதை நான் பார்க்கிறேன். நமக்கான அரசியல் சட்ட உரிமைகளைக் கூட மறுக்கின்ற ஒரு நாட்டின் விடுதலைக்காக நாம் போராடியிருக்கவில்லை என்பது உறுதி. நாம் போராடியது நாம் மகிழ்ச்சியாக வாழ்வதைச் சாத்தியமாக்கும் ஒரு நாட்டுக்காகத்தான்'', என்று எழுதிய சந்து ''செவ்வணக்கம், உங்கள் மகன் சந்திரசேகர்'' என்று கடிதத்தை முடித்திருந்தார். அந்த கடைசி வாசகங்கள் வீர வார்த்தைகள் அல்ல. மாறாக, அன்னையிடம் தோழமையையும், தாயின் அங்கீகரிப்பைக் கோரும் வேண்டுதலாகும். ஆண்கள் தங்கள் தாயை நேசிக்கின்றனர். ஆனால், தங்களின் மாறி வரும் கருத்துகள் பற்றி, முடிவுகள் குறித்து, குறிப்பாக, அவர்களின் அரசியல் தேர்வுகள் குறித்து அன்னைக்கு அல்லது அவர்களின் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு விளக்குவது தேவையானது என்று ஆண்கள் நினைப்பதில்லை. சந்து, இளமையின் அகந்தையைத் தன் தாயிடமும் காட்டியதில்லை.

அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதங்களைப் படித்தால் நாம் இளகிப் போவோம். அரசியல்- சமூக உணர்வு பெறத் துவங்கியிருந்த ஒரு இளைஞனின் கடிதங்கள் அவை. மிகுந்த நேசத்திற்குரிய தன் தாய்க்கு தனது கருத்துகள் மாறிவருவதை அவர் புரிந்துகொள்ள உதவும் வகையில் மிகுந்த சிரமம் எடுத்து எழுதப்பட்ட கடிதங்கள் அவை. ''பிணம் எண் 1084ன் தாய்'' (Hajar Churashir Maa ) என்ற படத்தின் நாயகன் பார்த்தியின் தாய் போல, தன் மகன் கொல்லப்பட்ட பின், அவனை ஏன் கொன்றார்கள் என்று தேடிக்கொண்டிருக்கும் சிரமம் சந்துவின் தாய்க்கு ஏற்படவில்லை.

1989ல், ஜேஎன்யூவில் சேர்வதற்கு முன்பு சந்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தை ''எனது செல்ல அம்மாவுக்கு, நானில்லாததால் நீ வருத்தத்தில் இருப்பாய். நீயில்லாமல், நானும் வருத்தத்தில் இருக்கிறேன்'', என்று துவங்கியிருந்தார். அந்தக் கடிதத்தில் எம் ஏ, எம்பில் படிப்பதற்கான செலவை சம்பாதிப்பதற்கான தன் திட்டத்தை விளக்குகிறார். பின்னர் இப்படி முடிக்கிறார்... ''உன் பிள்ளையின் மீது நம்பிக்கை வை. நான் நிறைய உறுதியெல்லாம் கொடுக்க மாட்டேன். ஒருவன் யோக்கியனாக வாழ வேண்டும். பெரிய வீடு அது இது எல்லாம் ஒன்றுமில்லை. எதிர் நீச்சல் போடுபவனின் வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும். ஒருவரின் மனம் உயிர்ப்புடனும், உணர்வுடனும் இருந்தால் அவன் மகிழ்ச்சியாக வாழ முடியாதா என்ன?.''

சந்திரசேகர் படுகொலையைக் கண்டித்து நடந்த இயக்கம்

சந்துவின் மரணத்துக்குப் பின்பு தங்களின் வாழ்க்கையை அவர் தொட்டிருக்கிறார் என்பதைப் பலரும் உணர ஆரம்பித்தனர். ஜெஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும், AISA செயல் வீரர் என்ற முறையிலும் அவர் இந்திய திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (FTII ), அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவற்றிற்குச் சென்றிருக்கிறார். அந்த நிறுவனங்களில் நடைபெற்ற தனியார் மயத்துக்கு எதிரான போராட்டங்கள், வளாக ஜனநாயகப் போராட்டங்களுக்கு உதவியாகச் செயல்பட்டிருக்கிறார். நர்மதா பாதுகாப்பு இயக்கத்தினரைச் சந்தித்திருக்கிறார். ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளான சுகாதாரப் பணியாளரும் தலித்துமான பன்வாரி தேவிக்கான நீதிப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார். முஜாபர்நகரில் உத்தர்கண்ட் மாநிலக் கோரிக்கைக்காகப் போராடிய செயல்வீரர் போலீசின் பாலியல் வன்முறைக்கு ஆளான போது நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கங்களில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.

அவரின் மரணத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள்- ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, AMU, FTII போன்ற பல வளாகங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியை நிறைத்தார்கள். சகாபுதீனைத் தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். ஏப்ரல் 1997ல் ஐக்கிய முன்னணி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் சகாபுதீன் அரசுக்கு ஆதரவு அளித்திருந்தார். பல்வகைப்பட்ட மக்கள் இயக்கங்களின் செயல்வீரர்கள் சந்துவுக்கு நீதிகோரும் போராட்டத்தில் திரண்டனர்.

சந்துவை இதுவரைச் சந்தித்திருக்காதவர்கள், அல்லது தெரிந்திருக்காதவர்கள் கூட போராட்டத்தில் திரண்டனர். மிக நீண்ட குற்ற வரலாறு கொண்டு ஒரு அரசியல்வாதியை அவனின் சொந்த ஊரிலேயே எதிர்த்து நின்ற ஒரு இளைஞன் என்ற முறையில் அனைவரையும் ஈர்ப்பவராக சந்து இருந்தார்.

1997 மார்ச் 31 அன்று டெல்லியின் பீகார் பவனில் மாணவர்கள் திரண்டனர். உள்ளேயிருந்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் வெளியே வந்து தங்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். அந்த மாணவர்கள் எல்லாம் 'போதை மருந்து ஏற்றிக்கொண்ட மேல் ஜாதி நிலப்பிரபுத்துவ இளைஞர்கள்' என்று லாலு பத்திரிகையாளர்களிடம் அப்போது சொன்னார். (அவர் அப்படி பேசியது கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தியது. சந்துவைப் பற்றி பீகார் என்ன நினைக்கிறது என்பதை பின்னர் புரிந்துகொண்ட லாலு, சந்துவின் பெயரில் கல்வி உதவித் தொகையொன்றை அறிவிக்க முயன்றார். ஐக்கிய முன்னணி அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சிபிஐ கட்சியின் இந்திரஜித் குப்தா சந்துவின் தாயாருக்கு ரூ1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த சந்துவின் தாய், என் பிள்ளைக்கான நீதி கிடைக்க வேண்டும். அதனைத் தவிர எதனையும் பெற மாட்டேன் என்று அறிவித்தார். ஐக்கிய முன்னணியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் சகாபுதீனோடு உள்ள உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்றார்.)

அந்த சமயத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவராக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். யூனியனின் மற்ற பொறுப்புகளில் அகில பாரத வித்யாத்திரி பரிஷத்தினர் இருந்தனர். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர்களும் அப்போது பீகார் பவனில் இருந்தனர். போராடும் மாணவர்களை, வேறுவழியின்றி வழிநடத்த அரை மனதாக முயற்சித்தனர். ஓர் குறிப்பிட்ட கட்டத்தில் RSS தலைவர் கோவிந்தாச்சார்யா (அப்போது அவர்தான் பீகாருக்கான RSS பொறுப்பாளர்) வந்திருப்பதாகவும் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற விரும்புவதாகவும் சொன்னார்கள். ''சந்துவின் மரணத்தை அரசியல்படுத்தக் கூடாது'' என்றும், ''அவர் ஜேஎன்யூவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர்'', என்றும் ABVP தலைவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போது என்னைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று சண்டைபோட்டு வெற்றி பெற்று, பேசினேன். 'நமது சமூகத்தில் ஆளும் வர்க்கங்களும், ஆளும் சாதிகளும், ஆதிக்கம் செய்யும் பாலினமும் இருக்கிறது' என்று நான் என் பேச்சில் குறிப்பிட்டேன். மேலும், ''ஹோலி தினத்தன்று ரன்வீர் சேனாவால் தலித்துகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடக்கவிருந்த பீகார் பந்துக்காக பிரச்சாரம் செய்யப்பட்ட போது தான் சந்து கொல்லப்பட்டார். ரன்வீர் சேனா தலித் படுகொலைகள் பலவற்றைச் செய்திருக்கிறது. தலித் பெண்களை, ஒடுக்கப்பட்ட பெண்களைத் தாக்கியிருக்கிறது. பீகாருக்கான RSS பொறுப்பாளர் கோவிந்ததாச்சார்யாதான். ரன்வீர் சேனாவும், RSSம், பிஜேபியும் மிக நெருக்கமான உறவில் உள்ள அமைப்புகள். இங்கே முதலைக் கண்ணீர் வடிப்பதற்காக கோவிந்தாச்சார்யாவை எப்படி அழைப்பீர்கள்? ரன்வீர் சேனாவும், சகாபுதீனும் பிகாரின் நிலப்பிரபுத்துவ சக்திகளைக் காப்பவர்கள். சிபிஐ எம்எல் கட்சியினால் தலைமை தாங்கி நடத்தப்படும் ஏழைகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக நிற்பவர்கள்'', என்று என் உரையில் நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் கரவொலி எழுப்பி என் கருத்தை வரவேற்று கோவிந்தாச்சார்யாவிற்கு ஆதரவில்லை என்பதை வெளிப்படுத்தினர்.

இயக்கத்தின் போக்கில் மதச்சார்பின்மையின், ஜனநாயகத்தின் இயல்பு என்ன? உள்ளடக்கம் என்ன? என்று மாணவர்கள் பாரிய கேள்விகளை எழுப்பினர். ஜேஎன்யூ மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லலாம் என்று முன்வைத்தபோது (அப்போதிருந்த ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருந்த சிபிஐ எம் கட்சியின் மாணவர் அமைப்பாகிய) SFIயும், அந்த அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவரும் மறுத்துவிட்டார்கள். அப்படிச் செய்வது மதச்சார்பற்ற அரசுக்கு எதிரான போராட்டமாக ஆகிவிடும் என்று காரணம் சொன்னார்கள். பல்கலைக்கழக பொதுப் பேரவை நடைபெற்ற போது, நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற வேண்டும் என்று மாணவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தனர். SFIசெயல் வீரர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகள் இவைதான்: ''மதச் சார்பின்மை பிஜேபிக்கு எதிர் என்பது மட்டுமா? அதாவது, பிஜேபியைத் தவிர்த்த மற்ற அனைத்து கட்சிகளும் மதச்சார்பற்ற கட்சிகளா? மதச் சார்பின்மை என்பது கட்டுறுதியான ஜனநாயகம் இல்லையா? சிவானில் நிலப்பிரபுத்துவத்தைக் காத்து நிற்பது சகாபுதீன் என்றால், போஜ்பூரில் அதே வேலையைச் செய்வது பிஜேபியின் ஆதரவுடன் இயங்குகிற ரன்வீர் சேனா அல்லவா? சகாபுதீனையும், ரன்வீர் சேனாவையும் ஆதரிக்கின்ற ராஷ்டிரிய ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சியா? கட்டுறுதியான மதச்சார்பற்ற ஜனநாயகத்தை நாம் கோருவோம் என்றால், சகாபுதீனை ராஷ்டிரிய ஜனதா வெளியேற்ற வேண்டும் என்றும், அவரின் எம்பி பதவியைப் பறிக்க வேண்டும் என்றும் நாம் ஏன் கோரக் கூடாது?''

மாணவர்கள் இயக்கத்துக்கு சந்து அளித்த புதிய வடிவம்

இடதுசாரியாக இருப்பது ஒரு பேஷனாக இல்லாத காலத்தில் இடதுசாரி செயல்வீரராக சந்து இருந்தார். அப்போதுதான் சோவியத் யூனியன் வீழ்ந்திருந்தது. அனைத்து வகுப்புகளிலும் பின் நவீனத்துவம் பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்தது. மாணவர் இயக்கங்களின் கதையும், கம்யூனிஸ்ட் அமைப்புகளின் காலமும் முடிந்து போய்விட்டது என்று பத்திரிகைகள் இரங்கல் பா பாடிக்கொண்டிருந்தன. மண்டலுக்கு எதிரான குரல் வலுவாக இருந்தது. அதேசமயம் இந்து மதவெறி இராமர் கோவில் பிரச்சனை முன்னுக்கு வந்து போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தது. இப்படியான சூழலில், வலதுசாரிப் பாலைவனத்துக்குள்ளே ஒரு சோலையாக ஜேஎன்யூ வளாகம் இருக்கவில்லை. அங்கேயும் வலதுசாரிப் பிற்போக்கு தலை தூக்கியிருந்தது.

ஜேஎன்யூவில் சேர்க்கை நடைபெறும்போது இழப்புப் புள்ளிகள் (deprivation points) என்றொரு முறை இருந்தது. ஒரு மாணவரின் சமூக- பிராந்திய- பாலின அடிப்படையில் அவரின் பின்தங்கிய நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அது அவரைச் சேர்த்துக்கொள்வதற்கான சாதக மதிப்பெண்ணோடு சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது பின்தங்கிய கிராமப்புர மாணவர்கள் ஜேஎன்யூவில் சேர்வதற்கு உதவியாக இருந்து. இந்த முறை 1983ல் கைவிடப்பட்டது. 1994ல், இழப்புப் புள்ளிகள் முறையை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று சந்து போராட்டங்களைக் கட்டமைத்தார். அப்போதுதான், ஜெஎன்யூ மாணவர் சங்கத் தலைமையை, முதன்முறையாக, AISA கைப்பற்றியிருந்தது. 1994ல் இழப்புப் புள்ளிகள் முறை மீட்டெடுக்கப்பட்டது.

1995ல், மாபெரும் அளவில் மாணவர்கள் திரண்ட போராட்டம் ஒன்றை சந்து கட்டமைத்தார். கட்டண உயர்வு கொண்டு வரவும் தனியார் மயமாக்கத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. பின்தங்கிய சமூகப் பிரிவுகளுக்கு ஜேஎன்யூ சேர்க்கையில் உள்ள வாய்ப்புகளை முறியடித்துவிட மோடி அரசு வெறியுடன் முயற்சியெடுக்கும் இன்னாட்களில் 1990களின் போராட்டங்களை நினைவு கூர்வது பயன் தருவதாக இருக்கும்.

என்னைப்பொறுத்தவரை, ஒரு செயல்வீரராக இருப்பதில் உள்ள கடினமான விஷயம் அந்தரங்கம் (privacy) பறிபோவதுதான். அந்தரங்கம் பறிபோவதால் எனக்கு ஏற்பட்ட தயக்கத்தை உடைக்க சந்து உதவியாக இருந்தார். மற்றவர்கள்- மாணவர்கள், பொதுமக்கள், முன்பின் தெரியாதவர்கள் என்று அனைவரும், எனது நேரத்தை, எனது மன வெளியை, எனது அறையைப் பகிர்ந்துகொள்ள நான் அனுமதிப்பதற்கான முன்மாதிரியாக சந்து இருந்தார்.

தயக்கமின்றி உரையாடும் சிறப்புத் தகுதிகொண்ட மற்றொரு ஜேஎன்யூ தலைவர் என்று சந்துவைக் கருதிவிடாதீர்கள். மிக ஆழமான மனித நேயம், பரிவு, மானுடர்களிடம் அன்பு காட்டுவதற்கான பாரிய திறன் கொண்டவராக சந்து இருந்ததால், அவரைப் போன்ற பலரிடமிருந்து வேறுபட்டவராக விளங்கினார். அவருக்கே உரிய தனித் திறன்கள் இவை என்று சொல்லமாட்டேன். ஆனால், மற்ற பலருக்கு இவை இல்லை. இதயம் நொறுங்கிப் போனவர்கள், கல்வியில் ஏற்பட்ட நெருக்கடியால் மன பாதிப்புக்கு ஆளானவர்கள், எதனையோ விவாதிக்க விரும்பும் மாணவர்கள், பிரச்சனையொன்றிற்கு தீர்வு தேடும் வேறு பல்வேறு மாணவர்கள்- சாதாரண தொழிலாளர்கள் அவரைத் தேடி வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் அவரின் அறைக் கதவு திறந்தே இருக்கும். அவர் ஓர் ஆணழகன் அல்ல. வழக்கமான கவர்ச்சிகரமான தலைவரும் அல்ல. அவரின் இதயம் மிக மெல்லியது, நுண்ணிய உணர்வு வாய்ந்தது. நகைச்சுவை உணர்வும், எளிய புன்னகையும் கொண்ட சாதாரண மனிதர் அவர்.

சிபிஐ எம்எல் கட்சியில் சேருவதற்கு என்னை இணங்க வைத்தது சந்துதான் என்பதை நான் என் நெஞ்சில் வைத்துப் போற்றுகிறேன். 1996ல் ஜேஎன்யூ வளாகத்தில் நீண்ட தூரம் நடந்தபடியே பேசிக்கொண்டிருந்தோம். அவர் எனது பெண்ணிய நம்பிக்கைகள் பற்றி என்னிடம் விசாரித்தார். அந்த வருடம் ஜூலையில் பதானி தோலா என்ற பீகார் கிரமத்தில் 21 பேர் கொல்லப்பட்டது பற்றி பேசினோம். அவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும். அவர்களைக் கொன்றது ரன்வீர் சேனா. ரன்வீர் சேனாவின் ஒடுக்குமுறையையும் பிரபுத்துவ தாக்குதலையும் எதிர்கொள்ளும் அந்தப் பெண்களிடமிருந்து பெண்ணிய அரசியல் கற்றுக்கொள்வதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன என்று மென்னயத்துடன் சொன்னார்.

கம்யூனிஸ்ட் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்றால் என்ன பொருள்? என்பனவற்றை நானும், என் தலைமுறையைச் சேர்ந்த பலரும், சந்துவிடம் மிக நெருக்கத்தில் இருந்து கற்றுக்கொண்டோம். அவரைப் பொறுத்தவரை கட்சி என்பது முகமற்ற ஓர் இயந்திரம் அல்ல. மாறாக, அது, வாழும் ஓர் உயிர். அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட கட்சியென்பது செயல்படும் ஜனநாயக இயக்கம். நீங்கள் அங்கே உங்கள் வேறுபட்ட கருத்தைச் சுதந்திரமாக வெளியிட்டு தைரியமாக விவாதிக்கலாம். அங்கே கருத்துகள் வடிவமெடுக்கும், மாற்றம் பெரும். கட்சித் தலைவர்கள் சிலருக்காக அல்ல, மாறாக, ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்காகவும், ஒவ்வொரு செயல்வீரருக்காகவும் உயிருள்ள, சுவாசிக்கின்ற கட்சி உருவாக்கப்பட்டது என்பதை அவருடனான ஒவ்வொரு நாள் பொழுதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

ஜேஎன்யூ தலைவர் தேர்தலின்போது நடந்த விவாதத்தில் பேராசைகொண்டவர் ( ambitious) என்பதால், நீங்கள் ஜேஎன்யூ தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. சந்திரசேகர் சட்டென்று பதில் சொன்னார்: ''ஆம். நான் பேராசைகொண்டவன். பகத்சிங் போல வாழவேண்டும், சே குவேரா போல சாக வேண்டும் என்ற பேராசைக் கொண்டவன்''. அவர் சொன்னது வெற்று வாய்ச்சவடால் அல்ல. அவர் எழுத்துக்கு எழுத்து அதைத்தான் பொருள்படுத்தினார்.

அவர் எங்களிடம் கேட்டார்: ''வரப்போகும் தலைமுறை நம்மிடம் ஒரு கேள்வி கேட்டு பதில் ஒன்றை எதிர்பார்க்கும். புதிய சமூக சக்திகள் கட்டுடைத்து எழுந்தபோது நீ எங்கிருந்தாய் என்று கேட்கும். ஒவ்வொரு கணத்திலும் செத்து செத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய போது நீ எங்கிருந்தாய்? சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர் தங்கள் குரலை எழுப்பிய போது நீ எங்கிருந்தாய்? அவர்கள் நம்மிடம் தங்கள் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பார்கள்.''

நமக்கு முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்: ''சமத்துவமான, மதச்சார்பற்ற, முற்போக்கான இந்தியாவுடன்'', ''பிற்போக்கான-மதவெறி-பாசிச இந்தியா'' போட்டியிடுகிறது. நீங்கள் இவற்றில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

சந்து வரையறுத்துச் சொன்ன அந்த தேர்வு இன்று நம் எதிரே நிற்கிறது. எப்போதையும் விட இப்போதுதான் அது முதன்மை பிரச்சனையாக மாறியிருக்கிறது.

சந்துவின் இழப்பு ஈடுகட்ட முடியாதது, மறக்க முடியாதது. அத்துடன் மன்னிக்கவும் முடியாதது.

(https://kafila.online/2017/03/31/remembering-chandu-friend-and-comrade-kavita-krishnan/)

தமிழாக்கம் - சி.மதிவாணன்